நாள் முழுக்க மழை நசநசவெனப் பெய்துகொண்டே இருந்தது. குடைகளற்ற மனிதர்கள் பெரும்பாலும் பஜாரில் நடமாடவே இல்லை. வழக்கமாக காய்கறி விற்கும் நடைபாதை வியாபாரிகள் ஒரு குடையையும் ஒரு கோணிச் சாக்கையும் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்கள். போன வரம் பெய்த மழை கத்தரிக் காய்களையும் வெண்டைக் காய்களையும் இழுத்துக்கொண்டு தெருவழியே ஊர்கோலம் போனது. போனதுபோக மிச்சமாவது விற்கட்டும் என்று உட்கார்ந்திருந்தவர்களில் ஒரு அம்மா, தனது கத்தரிக்காய் குமியில் இருந்து பக்கத்துக் கடைக்கார அம்மாவின் குமிக்கு உருண்டு போனதற்கு ஒருமணிநேரம் சண்டையிட்டார்.
ராமநாதபுரம் எங்கும் மீன்கள் கிடைக்கும் கருவாடு கிடைக்கும் என்பதுதான் எல்லோருக்குமான பொதுப்புத்தி. ஆனால் பச்சைப்பசேலென குவிந்துகிடக்கிற புத்தம் புது காய்கறிகள் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தையும் உண்டாக்கும். மிகச்சரியாக நான்கரை மணிக் கெல்லாம் அந்த நியான் விளக்கின் அடியில் நூற்றுக் கணக்கான பெண்கள் வந்து டாடா ஏசியில் இறங்குவார்கள். கூடவே அவர்களின் காய்கறிகளும் இறங்கும்.
பொதுவாகவே இரவு ஒன்பதுமணிக்குள் அடங்கிவிடுகிற ராமநாதபுரம்.பத்துமணிக்கு சாப்பாட்டுவிடுதிகள்,பெட்டிக்கடைகள் ஏன் மருந்துக் கடைகள் கூட அடைத்து விடுகிற ராமநாதபுரத்தில். கோழிகள் கூவாத அந்த மூன்றாம் சாமத்தில் விழித்துக் குழுமிக்கொள்வது வியப்பாக இருக்கும். அதுவும் பெண்கள் உழைக்கிற, கிராமத்து விவசாயப்பெண்கள் குழுமியிருப்பது எதிர்மறையான ஒன்று. தலையில் கவிழ்ந் திருக்கிற முக்காட்டைச் சரிசெய்துகொண்டே காய்கறி மூடைகளைச் சுமந்து வரும் இஸ்லாமியப்பெண்களும் அதில் இருப்பார்கள். எல்லாம் வயிற்றுக்காக அது எல்லாவிதமான கோடுகளையும்,வரப்புகளையும் இலக்கணங்களையும் உடைத்துக்கொண்டு வெளியேறும்.
சாத்தூருக்கு நிகராக வெள்ளரி விளைவதும் அது ராமநாதபுரத்து பேருந்து நிறுத்தங்களில் கூறுகளாகத்தாகம் தீர்க்க காத்துக்கிடப்பதும் சொல்லியாகவேண்டிய ஒன்று. ஆனால் சாத்தூர் ராமநாதபுர,திருமங்களம்,சென்னை என வித்தியாசமில்லாமல் அதை விற்கிற பெண்களின் கண்களில் அந்த நாளின் கொதிக்கப்போகும் அரிசியின் ஏக்கம் ஒரே மாதிரித்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்துதான் வர்க்கம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் மட்டுமே வர்க்கம் தலைதூக்க முடியாதபடி வர்ணக் குழம்பு அமுக்கிவிடுவதுதான் பரிதாபம்.
நீங்கள் தமிழகத்தின் எந்த நகரம் அல்லது பெருநகரங்களுக்குப் போனாலும் அங்கே ஒரு புராதனமான,பிரதானத்தெரு இருக்கும். அங்குதான்
அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடக்கும், நாடகங்கள், கச்சேரிகள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் துவங்கும், அங்குதான் நடைபாதை வியா பாரிகள் வியாபித்திருப்பார்கள், அங்குதான் பெரும்பாலும் இறுதி ஊர்வலம் வந்து நின்று பின் வேகமெடுக்கும்,அங்குதான் ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் வந்து தங்களை ஆசுவாசப் படுத்தியிருக்கும். ஒரு இருபது ஆண்டுகளில் நகரங்களின் முகங்கள் முற்றிலும் மாற்றி யமைக்கப்பட்ட போதிலும் இன்னும் தனது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அங்கே. எதாவது ஒரு ஸ்தூபி, நினை விடம், நடுகல், இல்லை ஒரு கொடி மரம் நின்று கொண்டு தன் மக்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும்.
பொதுவீதிகள்,பொட்டல்கள்,விளையாட்டுமைதானங்கள்,பொதுச்சொத்துக்களான,கல்விக்கூடங்கள்,பொதுத்துறைநிறுவணங்கள்,ஏன் நடைபாதைகள்,கோவில்கள்( ஒரு சில) கூட அடித்தட்டு மக்களை அகலக் கைவிரித்து வரவேற்கும் கருணைப்பிரதேசங்கள்.அங்கே அத்துமீறுவபர்கள் ஒருபோதும் தண்டிக்கப்படுவதில்லை.
ஒரு திரைப்படத்தில் விவேக் தனது அறிவார்ந்த விகடத்தை காவலர்களிடம் சொல்லுவதாக இப்படிச்சொல்லுவார்.
‘டேக் டைவர்சன்,இந்தப்பக்கம் போகக்கூடாது
ஏன் சார்
போராட்டம் நடக்கு,நடைபாதைவியாபாரிகள் போராட்டம் நடத்துறாங்க
நடைபாதையின்னா நடக்குறதுக்குத்தான...ஙே....
என்று சொன்னதும் தமிழகம் தன்னை மறந்து சிரிக்கும்.அதில் நடைபாதை வியாபாரிகளும் கூட சேர்ந்து சிரிப்பார்கள்.
இதே விவேக் வாழ்கிற தேசத்தில்தான் பொதுத்துறைப் பங்குகள் ஊளைமோர் விலைக்கு விற்கப்படுகிறது. நிலஅபகரிப்புகள், நிலஆக்ரமிப்புகள், ஊகபேரவர்த்தகங்கள்,என நடந்தேறிக்கொண்டிருக்கும் அது குறித்த எந்த எள்ளலும் அவர் சிந்தனைவட்டத்துக்குள் வருவதில்லை.மாறாக ஊனமுற்றவர்கள்,வயதான மூதாட்டிகள்,பாலியல்தொழில்நடத்துவோர், திருநங்கைகள், விளிம்புநிலைமக்கள், சேரித்தமிழர்கள், பிச்சை யெடுப்போர்,குஷ்டரோகிகள் நகரசுத்தித் தோழர்கள் என இவர் விகட எல்லைக்குள் வருகிற ஜனங்கள் எல்லாமே அடித்தட்டுமக்களும் அவர்தம் இயலாமை மற்றும் இல்லாமையும் கேலிப்பொருளாகும்.
கடைசிப் பேருந்தைத் தவறவிட்ட கிராமத்தார்கள்,வந்த இடத்தில் தங்க நாதியில்லாமல் ஏங்கிவரும் பயணிகள் காலையில் வரும் தொடர்வண்டியில் ஏறக்குடும்பத்தோடு வந்து காத்திருக்கும் முபதிவுசெய்யமுடியாத ஏழைகள். இவர்கள் எலோரும் தலைசாய்த்துப்படுக்கிற பேருந்து நிலையங்களும்,ரயில்நிலையங்களும் கருணையோடு கதவு திறந்துவைத்திருக்கின்றன. பின்னிரவுநேரத்தில் மதுரை ரயில் நிலையச் சந்திப்புக்குப் போனால் நடைபாதை தொடங்கி முன்பதிவு இடம் வரையில் கால்மாடு தலைமாடாகப் படுத்திருக்கும் ஜனங்கள் வேறெங்கே போவார்கள். ஏக்கர் கணக்கில் விரிந்துகிடக்கிற தனியார் நிறுவண வாசலிலும் ஐந்துநட்சத்திர விடுதிவாசலிலுமா போய்ய்ப்படுக்க முடியும்?.றயில்வே ஸ்டேசன்கிறது ரயில்ல பயணஞ்செய்யத்தானே.....என்று ஒவ்வொன்றுக்கும் விகடஞ்செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்.
எண்பதுகளின் மத்தியில் ஈழத்தமிழ் போராட்டங்கள் ஊக்கிரமாக இருந்த காலத்தில் கள்ளத்தோணிகளில் கூட்டம் கூட்டமாய்ச்சனங்கள்
ராமேஸ்வரம் தொடங்கி நரிப்பையூர் வரையான கடற்கரையில் வந்து இறங்குவார்கள். அவர்கள் கண்களில் அநாதரவாய் விட்டுவந்த பண்ணைவீடுகளும் தென்னந்தோப்புகளும்,எண்ணெய் ஆலைகளும் முங்கிக்கிடக்கும். சட்டப்படி அவர்களிடம் எந்த அரசும் கடவுச்சீட்டுக் கேட்பதில்லை. நம்பிகைகள் தளர்ந்து புகலிடம் தேடி வரும் மனிதர்களை அரவணைக்கிற முகாம்கள் கருணையினால் ஆனது.
அப்படிக்கருணைமுகங்கள் அரசிடமே இருக்கும் போது கலைஞனிடம் தொலைந்து போவது வேதனையின் உச்சமல்லவா தோழர்களே?
நீங்கள் ராமநாதபுரத்துக்கு வரநேர்ந்தால் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் ஆகிய லேண்ட்மார்க்குகளுக்குகள் தானே உங்களை இழுத்துச் செல்லும். ஆனால் அந்த மூன்றாம் சாமத்து வேளையில் அரண்மனைவாசலில் வந்திறங்கும் காய்கறி லாரிககளும்,மீன்லாரிகளும்
அவைகளின் பின்தொடரும் சில்லறை மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகளியும்,அவர்களுக்குள் நடக்கும் சில்லறைச்சண்டைகளும் ரம்மியமானது. அவர்களுக்கென திறந்து வைத்திருக்கிற ஆவிபறக்கிற டீக்கடைகளும்,அங்கே அதிகாலையிலேயே சூடு பறப்பிக்கிடக்கும் முட்டைக்கோஸ் உருண்டைப்போண்டாக்களும் இனிப்பானவை.
அங்கிருந்து கொஞ்சம் விலகிப்போனால் மொத்தம் மொத்தமாய் பெண்களும் ஆண்களும் மங்கிய வெளிச்சத்தில் மங்கிய ஊதாச்சேலயும், காக்கிச்சடையும் போட்டுக்கொண்டு எதிர்ப்படுவார்கள்.சொல்லிவைத்தது போல எல்லோர் தோளீலும் ஒரு குத்தாலத்துண்டு மடித்துக் கிடக்கும். ஐந்தரை மணிக்குள் தாங்களுக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களுக்கான ஏவலை மேஸ்த்திரியிடம் தெரிந்துகொண்டு துடைப்பங்களோடு கிளம்புவார்கள். தீராத இந்த தேசத்துக் குப்பைகளைக் குறிவைத்தபடி.
3 comments:
//இந்தியாவில் மட்டுமே வர்க்கம் தலைதூக்க முடியாதபடி வர்ணக் குழம்பு அமுக்கிவிடுவதுதான் பரிதாபம்//.வர்ணத்தில் அடைபடாத பஞ்சமர்கள் அல்லது சண்டாளர்கள் இந்த தேசத்தில் நாலில் ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். ஒரு பிணத்தைகத்தூக்கக்கூட நாலு பேர் வேண்டியிருக்கிறது. இந்தசமுதாயம் என்ற உயிர் நிலையைத்தூக்கிச்சுமக்கவும் கூட அதுதான் நிலைமை. அப்படி இருக்கையில் அந்த நாலில் ஒரு பகுதியினரை கைவிட்டு விட்டு எப்படி ஒரு பயணம் சாத்தியம்?
நன்றி தோழர் ....
பெண்களின் கண்களில் அந்த நாளின் கொதிக்கப்போகும் அரிசியின் ஏக்கம் ஒரே மாதிரித்தான்
சரியாய் சொன்னீங்க சார்.. ஒவ்வொரு ஊருக்குள்ளும் எத்தனை கதைகள் ?
Post a Comment