26.2.12

வியாரா வெறி விழுங்கிச் செரித்த பழய்ய பொது வாழ்க்கை.

பரபரப்பு வேகம் நிலகொள்ளாமை எதையும் நம்பாமை என்கிற நகரப்புழுதிகளோடு குழைந்துகிடக்கும் வாகனப் புகைகலந்த வாழ்வில் இருந்து தப்பிக்க வழியிருக்காவெனத் தெரியவில்லை. சற்றுக் கண்ணயர்ந்து பின்னுக்குப் போனால் நொடிகளில் வந்து விடுகிறது நூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் பழய்ய வாழ்க்கை. நடந்து வந்த நெடுந்தொலைவில் பால்யத்தோடு தூரக்கிடக்கிறது மாசுபடாத புழுதிவாழ்க்கை. டவுசர் போட்டுக் கொண்டு ஹோவெனக்கத்திக்கொண்டு தெருவில் ஓடத்துடிக்கிறது மனசின் கால்கள்.கடந்த காலம்  பசுமை யாகவும் எதிர்காலம் சிகப்பாகவும் எழுதிக்கிடக்கிற வர்ணங்களை வாசிக்க வாருங்கள்.

ஊதாவும் கருப்பும் கலந்த வர்ணத்தில் தெப்புதெப்பெனக்கிடக்கும் சுப்பையாத் தாத்தாவின் கிணற்றுத்தண்ணீரை திரும்பவும் நீங்கள் வேறெங்கும் பார்த்திருக்க முடியாது. அந்த பம்புசெட் ரூமின் மேலேறிக் குதிக்கிற சாகசத்தை எழுத்தில் எப்படி முயன்றும் கொண்டுவர முடியாது. குளிக்க வரும் மதினிமார்களின் நல்ல மச்சினர்களாக ஒதுங் கிப்போய் காத்திருக்கும் தருணங்கள். இல்லை பெண்கள் வராத அடுத்த பம்புசெட்டுக்கு சுதந்திரக்குளியல் தேடி நடக்கும் தருணங்களில் மனசு பின்னுக்கிழுத்துக் கொண்டு ஓடிப்போய் எட்டிப் பார்க்கிற  குறு குறுப்பானதும் தான் திரும்ப முடியாத அந்தத் தொலைந்த வாழ்க்கை. காடுதிரிந்து வரும்போது மிளகாய்செடிக்கு ஓடும் வாய்க் காலின் ஓரம் மண்டியிட்டுக் குடிக்கும் தண்ணீரின் குளிர்ச்சி தொண்டையில் இன்னும் ஜில்லென நிலைத்திருக் கிறது.

இந்தத் தண்ணீரைப் பேசும் போதெல்லாம் ஊர்களுக்கிடையே யான நடைபாதைகள் நினைவுக்கு வந்துவிடும். மாட்டு வண்டிகள் நடந்து நடந்து உருவான அந்த நாற்கர சாலைகளில் நடந்துபோகும் போது நம்மோடு கூடவே வரும் சனங்களின் சுகதுக்கங்கள். பக்கத்து டவுனில் நடக்கும் திரைப்படமோ,அருகாமை ஊரில் நடக்கும்  தெருக் கூத்து நாடகமோ,அகாலத்தில் இறந்து போன சொந்தங்களின் மரணமோ ஊரை நடத்திக் கூட்டிக் கொண்டு போகும். எழுதாமல் அழிந்துபோன வரலாறும் வாழ்க்கையும், பதிவுறாமல் காற்றில் கறைந்து போனது பாட்டும் கூத்தும் சொலவடைகளும் அந்தக் கூட்டத்தோடு பேசிபேசி வளரும். பரமவைரிகள் போல முடிபிடித்துச் சண்டை யிட்டவர்கள் திரும்பிவரும் போது தோளில் கை போட்டுக் கொண்டு வருமாறு இளக வைத்துவிடும் இயல்பு உண்டு. நடந்துபோகிற நாற்பது பேரில் முன்னே போகிற பாதத்தில் முள் குத்தினால் பின்னே வரும் கால்கள் மருந்து சொல்லும். வழியை மறிக்கிற இடர்களில் எப்போதாவது தான் பாம்புகள் குறுக்கே வரும்.ஆனால் எல்லா நேரமும் பாம்புக் கதைகள் கூட வந்துகொண்டே இருக்கும். அப்போது நாம் மனிதர் தெரிந்த அத்துணை பாம்பின் வகைகளையும் அதன் குணங் களையும்  அறிந்து கொள்ளலாம்.

அத்தோடு கூட அமானுஷ்ய கற்பனைகளோடு ஐந்து தலைப் பாம்புகளும் வரும். அவை, ரத்தினத்தை  வயிற் றுக்குள் வளர்க்குமாம். உடலில் அதற்கு ரோமங்கள் முளைத்துவிடுமாம். ராக்காலங்களில் ரத்தினத்தை வாந்தி யெடுத்து,அந்த ஒளியில் இறைதேடுமாம். அந்த அரத்தினத்தின் மேல் சாணத்தைப் போட்டு மறைத்து விட்டால் கண் தெரியாமல் தரையக் கொத்தி கொத்திச் செத்துப் போகுமாம். ஆனால் கொம்பேறி மூக்கன் கொத்திவிட்டு பனைமரத்தில் ஏறிக்கொள்ளுமாம். மறுநாள் சுடுகாட்டில் புகை தெரிந்தால் தான் கீழிறங்குமாம். சாரைப் பாம்பு விரட்டினால் குறுக்கும் நெடுக்குமாக ஓடனும் நல்ல பாம்புவிரட்டினால் நேராக ஓடவேண்டும் என்கிற உபாயக் கதைகளும் கிடைக்கும். இந்தக் கதைகளைத் தாண்டி பாம்பு கடித்து விட்டால் ஊருக்கே விஷமேறிக் கொள்ளும்.

ஆளாளுக்கு மருந்து சொல்ல,மருந்து தயாரிக்கக் கிளம்பிவிடுவார்கள். அன்று இரவு கட்டாயம் பாம்பாட்டிக் காளியப்பத் தாத்தாவின் உடுக்கைச் சத்தம் ஊரைத் தூங்கவிடாது. அண்ணம்மாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே என்று பாடிக்கொண்டே கூட்டத்துக்குள் மச்சினிச்சிகளைத் தேடும் அவரது கண். ஒரு இரவு முழுக்
கப் பாடிக்கொண்டே இருக்கிற அவரது குரலில் உழைக்கும் மக்களுக்கான புராண கதைகள் கிடைக்கும்.  விராட பர்வம்,விக்கிரமாதித்த கதைகளை அதற்குப்பிறகு வேறெங்கும் கேட்கமுடியவில்லை. அதுபோலவே  மணிக் குறவன், தீச்சட்டிக் கோவிந்தன் பாடல் கதைகளும் சொல்ல ஆளில்லாமல்  தொலைந்து காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது. இச்சிப்பட்டை ராப்பட்டை,மதுரைவீரன்,அம்பிகாவதிஅமராவதி,காத்தவராயன் போன்ற கதைகளில் ஊடுசரடாய்க்கிடக்கும் மேல் கீழ் முரணை மனதுடைக்கும் குரலில் அறிமுகப்படுத்திய  நாட்டுப் புறப்பாட்கர்களும் பாடலும் இனி கிடைக்கப்போவதில்லை. 

கிராமங்களின் காலையும் மாலையும் பொது இடங்களுக்கானது இரவும் மட்டுமே வீடுகளுக்கானது. விடிந்தபிறகு அவை  காடுகளில் பரந்து விரிந்து கிடக்கும். விதைப்புக் காலங்களில் கலப்பை மாடு கடகப் பெட்டியோடும்,செடி வளர்ந்த காலங்களில்  களை யெடுப்பு செதுக்கிகளோடும், அறுப்புக் காலங்களில்  பண்ணையறுவாள் களோடும் மக்கள் காட்டுக்குள்ளே தான் திரிவார்கள். காடு அவர்களுக்கு வெறும் தானியங்களை மட்டும்  தருவ தில்லை. அத்தோடு கூட பயிர்வளர்க்கும் அறிவியல் நுணுக்கங்களையும்,பயிர்களோடு அண்ணாந்துபார்த்து வெயில்,மழை வரும் காலநிலைகளையும் சொல்லிக் கொடுக்கும். தாளப்பறக்கும் நெய்க் குருவிகளையும்,  தட்டாரப் பூச்சியைம் பார்த்துவிட்டால் மாடியில்,களத்தில் காய்கிற தானியங்களை மழைபடாத இடத்துக்கு மாற்றுகிற வேலை தொடங் கும். அதுகூட தேவைக்காகநடந்ததென்று சொல்லலாம் பறித்த நிலக்கடலை ஆய்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அந்தவழியாய் நடந்துபோகும் யாரையும் இந்தா கொஞ்சம் கடலை  திண்ணுட்டுப் போங்க என்று சொல்லுகிற வாஞ்சையை நிலம்போலே மனிதரும் வாய்க்கப்பெறுவது அலாதி குணம்.

அப்போதெல்லாம் காட்டுமரக் கிளைகளில் வகை வகையாய் தூக்குச்சட்டி தொங்கும் அதிசயம் நடக்கும். அந்த சட்டிகளுக்குள் குடியிருந்த புளிப்பேறிய கஞ்சி வகைகளைச் சொன்னால் கணினி விசைப் பலகையில் எச்சில் கட்டாயம் சிதறும். வரகரிசி, திணையரிசி, குதிரைவாலி, காடக்கண்ணி,காலக்கம்பு,சோளாச்சோறுகள் தின்று செழித்த காலங்கள் எல்லாம் கற்காலங்கள்  போலாகிப் போனது. அதை விளைவிக்க மட்டுமல்ல பதப்படுத்த, பாதுகாக்க, இடித்துப், புடைத்துச், சமைக்கக்கூட உடல் உழைப்புத் தேவையாயிருந்தது. ஆதலால்தான் ஊரில் திரும்புகிற திசையெல்லாம் உரல்கள் நிறைந்திருந்தது.

ஆதலால்தான் அந்த உரல்கள் ஆரம்பக் கல்வியின் அரிச்சுவடியிலே இடம்பிடித்துக் கொண்டிருந்தது. அந்த உரல்களுக்குள் அப்போது வெறும் தானியங்கள் மட்டும் கொட்டி இடிபடாது. ஊர்க்கதைகள் எல்லாம் சேர்ந்த்தே இடிபடும். இடிக்கப்பெரும்பாலும் குமரிகளே வருவார்கள். இடிபடுகிற கம்புத்தவசம் மாரிக்கண்ணுசித்தி  வீட்டில் தான் சோறாகும் ஆனால் சுத்தியிருக்கிற கொமருகளெல் லாம் சேர்ந்து கம்பு குத்தும் அந்நியோன்யம் இனி எங்கும் கிடைக்கவே கிடைக்காது. அவர்கள் ஆள் மாத்தி ஆள் இடிக்கிறபோது ஊரே அதிரும். அது பார்த்த அந்த அதிர்வைக்கேட்ட எந்தக்கொம்பனும் பெண்கள் இழைத்தவர்கள் என்று ஒருபோதும் வாய்திறக்கமாட்டான். என்றா லும் பெண்கள் எப்போதும் உரல்மேல் உட்காருவதில்லை.ஆனால் அதொன்றும் மநுஎழுதிவைத்த விதியுமில்லை . திங்கிற சோத்துக்கு பெணகள் தரும் மரியாதை அவ்வளவே. ஆனால் எளவட்டங்கள் தூக்கமுடியாத உரல்களை சுலுவாகத்தூக்கி எறிவாள் கல்லுடைத்து கஞ்சிகுடிக்கிற கன்னிமரியாக்கா.

2 comments:

ஓலை said...

Pazhaiya kiraama vaazhkkai evvalavu elimaiyaa inimaiyaa irukku. :-)

Mahi_Granny said...

நம் பிள்ளைகள் இந்த வாழ்க்கையை வாசித்தாவது தெரிந்து கொள்வார்கள். எழுதுங்கள் அந்த புழுதி படாத வாழ்க்கை பற்றி அவ்வப்போது .