இந்த இரண்டு மாத அவகாசத்தில் மூன்று முறை பழனி போக நேர்ந்தது.பழனி மலைகுறித்த கேள்வி ஞானத்தைக்காட்டிலும் சீர்காழி கோவிந்தராஜனின் இசைக்குரல் வழி அறிந்து கொண்டது ஏராளம்.முன்னமும் பல தடவை அந்தவழியாக பயணித்த போதும் மலையேறவில்லை.மலையேற முடிவு செய்து இழுவை ரயிலுக்காகக் காத்திருந்தோம்.நொடி நொடியாய் ஒண்ணரை மணிநேரம் கழிந்ததது.நின்ற இடத்திலிருந்து இரண்டடி கூட முன்னேற முடியவில்லை.இனி இந்த பெரும் வரிசையைக் கடந்து ரயிலேறி மேலேறி அங்கேயும் இரண்டுமணி நேரக் காத்திருப்பை மிஞ்யிருக்கும் பொழுதுக்குள் முடிக்கமுடியாது என்று மலைத்துத் திரும்பினோம்.வருகிற போது இரண்டு நடைபாதைகள் இருப்பதாகவும் அதில் ஒன்று யானைப்பாதை கிட்டத்தட்ட சமவெளியில் நடக்கிற மாதிரித்தான் இருக்கும் எனவும் எங்களோடு திரும்பி வந்த ஒருவர் சொன்னார்.
முதன் முதலாக ஆறாம் அவகுப்பு படிக்கும் போது சித்தியின் கல்யாணத்துக்கு முக்கூட்டு மலை போனோம்.கல்யாணமும் பந்தியும் பிந்திப்போக மலை என்னை நிற்கவிடாது அழைத்தது.ஆறுபேர் பத்து நிமிடத்தில் உச்சிக்கு போய் விட்டோ ம்.பயமறியாப் பருவம்.தேடி வந்த பெற்றோர்கள் கொடுத்த அடிகளோடு நினைவிருக்கிறது முதல் மலையேற்றம்.
நானும் அவளும் சட்டென ஏறத்தொடங்கி, கிட்டத்தட்ட முக்கால் மணிநேரப்பயணத்தில் மலைமுகட்டுக்கு வந்துசேர்ந்தோம்.வழிநெடுக மனிதர்களின் உற்சாகமும், களைப்பும். ஆங்கங்கே போடப்பட்டிருக்கும் பட்டியல் கல்லில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வதும் பிந்தியவர்கள் வரும் வரை காத்திருந்து கதைபேசி, புரணி பேசி,ஃபாண்டாக்குடித்து,இளசுகள் உரசி நகர்ந்த மனிதக் குவியலில் கேரளத்து பக்தர்களும் கணிசமாகக் கலந்திருந்தார்கள்.ஆவினன்குடியில் கல்யாணம் முடித்த ஜோடிகளில் ஒன்று கைகளை இறுகப் பற்றிக்கொண்டு மெலேறிவந்தது. ஒரு புரிதலுக்கான இடைவெளியில் மாப்பிள்ளை பெண்வீட்டார் தொடர்ந்து வந்தார்கள்.வெயிலும் நடையும் எல்லோர் மேலேயும் வியர்வையை அள்ளி ஊற்றியது.கிராமத்துச் சிறுவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒவ்வொரு வளைவையும் கடந்து போனார்கள்.மனிதர்கள் கூட்டமாக கூடிவிட்டால் சவால்களைச் சௌஜன்யமாக்கி விடுகிறார்கள்.இன்னும் கால்வாசி பாதை பாக்கி இருக்கும் போது ஒரு வளைவில் குளிர்பாணக்கடை வந்தது.கால்கள் கடும் வலியெடுத்ததால் இருவரும் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்திருந்தோம்.
இன்னும் கொஞ்சம் உட்கார்ந்திருக்கலாம் என்று கால்கள் கெஞ்சுகிற போது ஒருவர் மூன்று அட்டைப்பெட்டிகள் நிறைய்ய குளிர்பாணப் பாட்டில்களை அடுக்கிச்சுமந்து கொண்டு வந்தார்.அவருக்காகக் காத்திருந்த ஒப்பந்தக்காரார் 'என்ன இவ்வளவு நேரமா' என்றார் 'கூட்டமா இருக்கு வேகமா ஏறமுடியல' 'சரி சரி கிளம்பு இன்னும் ரெண்டு நடை கொண்டுவரணும்'அந்த நடுவயது சுமை துக்கி விடுவிடுவெனக் கீழிறங்கிப் போனார்.தாண்டுகிற அவரது கால்களின் கெண்டைச் சதை மண்டைத் தண்டியாக இருந்தது.நான் கடவுள் திரைப்படமும் அதற்கு எதிரும்புதிருமாக வந்த வலை விமரிசனங்கள்,அப்போது கிடைத்த பழனி மலைத்தரவுகள் ஒவ்வொரு வளைவிலும் நினைவுக்கு வந்தது.ஆனால் அப்படிப் பிச்சை மாந்தர்கள் யாரும் தட்டுப்படவேயில்லை, அந்த ஏமாற்றம் சந்தோசமாக இருந்தது.
மலையுச்சியில் எதிர்பார்த்ததைவிட ஜனத்திரள் அதிகம்.இத்தனை மாந்தருக்கு ஒரு கோயில்போதாது என்ற டிஎம்மெஸ்சின் குரலும் ஞாபகத்திற்கு வந்தது.கூடவே எனது தகப்பனாரும் நினைவுக்கு வந்தார்.அப்படியொரு முருக பக்தர்.காலண்டர்,தீப்பெட்டி,கிழிந்த பேப்பர் எதில் முருகன் படமிருந்தாலும் கிழித்துக்கொண்டுவந்து சாமி படமாக்கிவிடுவார்.காட்டுக்கு விறகொடிக்கப்போகும் போதோ வேலைக்குப் போகும்போதோ மயிலிறகுகிடைத்தால் புதையல் கிடைத்த சந்தோசத்தில் கொண்டுவந்து கூரை முகட்டில் சொருகிவிடுவார் அவர்.ஊரில் நடக்கும் லோக்கல் கச்சேரிகளில் அவர் தான் முருக பக்திப் பாடல்கள் பாடவேண்டுமென்கிற எழுதாத விதியிருந்தது.ஒருமுறை அவரைக்கூட்டிக் கொண்டுவந்து காட்டவேண்டும்.
பிரகாரம் திறக்க ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமாம். மலையைசுற்றினோம்.நாலா பக்கமும் பசிய பள்ளத்தாக்குகள் செழித்திருக்க திரும்புகிற பக்கமெல்லாம் மலைகள் தெரிந்தது.வீடுகள்,ஓடைகள்,மரங்கள் புள்ளிகளாக,கோடுகளாக,செடிகளாக காட்சிப்பிழை தரும் உயரம். அவ்வளவு உயரத்தில் நின்று கொண்டு எதுவும் வேண்டாம் என்கிற துணிச்சல் வந்ததெப்படி முருகனுக்கு.தனித்திருக்கப் போனவரை இவ்வளவு ஜனத்திரள் தேடிப்போவதும்,போகிற சாக்கில் தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவுமான ஒரு உயரமான ஆசுவாசத்தளம்.
இப்போதும் கூட அந்த சுமைத்தொழிலாளி ஜிங்கு ஜிங்கென மூன்று அட்டைப் பெட்டிகளை சுமந்து கொண்டு ஏறிக்கொண்டிருந்தார்.கீழிறங்கும் போதும் அதே பட்டியல் கல் பலகையில் வேறு வேறு மனிதர்கள் அமர்ந்து கொண்டு விடுபட்டுப்போன லௌகீகங்களைத் தொடர்ந்தார்கள்.சினம் தனிந்த கோபக்காரன் எப்போதோ மக்களோடு இறங்கியிருக்கக் கூடும். மிச்சமிருப்பது முருகப்பெருமான் மட்டுமே.
13 comments:
நல்ல பகிர்வு.
வித்தியாசமான பயணம்:)
/சினம் தனிந்த கோபக்காரன் எப்போதோ மக்களோடு இறங்கியிருக்கக் கூடும். மிச்சமிருப்பது முருகப்பெருமான் மட்டுமே./
ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை:)
கடைசி பஞ்ச் நச்! மிகவும் அருமை!
கூடவே நாங்களும் வந்தது போல இருந்தது! நல்லாருக்கு - கடைசி வரிகளும்!
//சினம் தனிந்த கோபக்காரன் எப்போதோ மக்களோடு இறங்கியிருக்கக் கூடும். மிச்சமிருப்பது முருகப்பெருமான்//
சரியா சொன்னீங்க !
நல்ல பகிர்வு :)
சரியாக எழுதி உள்ளீர்கள். அவர்களுக்கு கை கொடுத்து உதவுபவர்கள் இல்லை என்று அறியும் போது கடினம்தான்
//அந்த ஏமாற்றம் சந்தோசமாக இருந்தது//
ரொம்ப ரசிச்ச வரி
அருமையான பகிர்வு
பழநி மலையை நினைக்கும் பொழுதே உற்சாகம் தொற்றிக்கொள்கிறது எனக்கு. பழநிக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். ஊரிற்குச் செல்லும் பொழுதெல்லாம் பழநிக்குச் செல்வதை வழக்கமாக்கியிருக்கிறேன். எனது உடல்நிலையை (Fitness) எத்தனை நிமிடங்களில் மலையேறுகிறேன் என்பதை வைத்துக் கணக்கிடுவேன். கல்லூரிக்காலத்தில் 12 நிமிடம்... தற்பொழுது 15 நிமிடம்.. ஆனால் புதிதாக வருபவர்களுடனோ, குடும்பத்துடன் வரும்பொழுதோ மெதுவாகச் செல்வதுண்டு.
பழநிமலைக்குச் செல்லும் பொழுது வரும் உற்சாகத்துடன் ஒரு வகை சோகமும் கவ்விக்கொள்ளும். காரணம் உடல் நலம் குன்றியவர்கள் ஏராளமானோர் வழியெங்கும் யாசிப்பது :(( நான் கடவுள் படத்தில் காட்டிய மனிதர்கள்/விசயங்கள் இப்பொழுது பழநியில் குறைந்திருப்பது உண்மையே..
நல்ல பதிவு.
nice writing, thanks for sharing.
After reading your post, the desire has come to go to Palani.
நல்ல பகிர்வு.
/சினம் தனிந்த கோபக்காரன் எப்போதோ மக்களோடு இறங்கியிருக்கக் கூடும். மிச்சமிருப்பது முருகப்பெருமான் மட்டுமே./
தமிழ்மணத்தில் இந்தவார நட்சத்திரமாக அறிமுக படுத்தப் பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள் அண்ணா.
அருமையான பகிர்வு காமராஜ் அண்ணா.
பழனிமுருகன் தான் எங்கள் குலதெய்வம் .வருடா வருடம் போக இயலாமல் போய்,போன வருடம் பழனி சென்றோம் .சென்றது காலை 10 மணி .மேல போக வின்ச் இல்லை .நடந்து போகலாம் என்றால் வெயில் .யோசனை செய்து கொண்டிருக்கும் போது தெரிந்தது அன்று நவராத்திரி கடைசி நாள் என்பதால் முருகன் அடிவாரம் வந்து விடுவாராம் .அவர் வர ஆயதங்கள் செய்ய கோவிலையே சாத்தி விட்டனர் .உடனே திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்ததால் பஞ்சாமிர்தம் மட்டும் வாங்கிகொண்டு ,கீழே வேறொரு முருகனை தரிசித்து விட்டு வந்து விட்டோம் .
எனக்கு மிகவும் குறை .என்று அழைக்க போகிறானோ தெரியவில்லை !
நல்லா பதிவு சார்.கூடவே வந்தது போல் இருந்தது
நல்ல பகிர்வு.
நான் ஒரு தடவை பழநிமலை வந்திருக்கிறேன்.ஏறும்போது வின்ச்சிலும் இறங்கும்போது படியாலும் இறங்கினோம்.
Post a Comment