அகில இந்திய மாநடுகளில் எல்லாம் பகல் பொழுதுகளில் அறிக்கைகள்,கோரிக்கைகள் விவாதங்களை ஈடுகட்டித் தாக்குப்பிடிப்பது பெரும் சவாலாக அமைந்துவிடும்.17 டிகிரிக்கும் குறைவான சீதோஷ்ணம் இருக்கையிலேயே தூக்கத்தைக் கொண்டுவந்து டோ ர்டெலிவரி செய்துவிட்டுப் போய்விடும். சிலநேரம் யாராவது உலுக்கிவிடுகிற மாதிரி சோகங்களை,போராட்டத்தை டமாரென்று பொட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.அது இன, மொழி எல்லைகளைத்தாண்டி வந்து இதயத்துக்கருகில் அமர்ந்துகொள்ளும்.அப்படி மேடையில் முழங்கிய தோழர்கள் அந்த மூன்று நாட்களில் எல்லோரையும் ஈர்த்துக்கொள்வார்.
ஒரு மாநாட்டின் சிறப்புபேச்சு,அதில் விரிவாகத்தருகிற உலகமயமாக்களின் பின் விளைவுகள், பக்கவிளைவுகள் எல்லாம் ஒரு சேர பார்வையாளர்களைத் தாக்கமுடிவதில்லை.ஆனால் எங்கள் தோழன் மறைந்து போன இசைப் பாடகன் சுகந்தனின் குரலில் 'அடகு போகுதடா' என்கிற பாடல் எதிர்க்கருத்துக் காரர்களையும் இழுத்துக்கொண்டு வந்து கூட்ட நடுவில் போட்டு கருத்தை மாற்றும் வல்லமை கொண்டதானது கலைவடிவம்.
இரவு நேரங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் மட்டும் நடு இரவுவரை கூட்டம் கொட்டக்கொட்ட முழித்திருக்கும். கஞ்சி போட்டுத்தேய்த்த மடிப்புக்குழையாத உர்ர் அதிகாரிகள் கூட நெகிழ்ச்சியான உடல்மொழியோடு குதூகலிப்பார்கள்.பஞ்சாப் தோழர்களின் பாங்க்ரா,அஸ்ஸாமித் தோழர்களின் பிகு நடனம்,மலையாளிகளின் சேர்ந்திசை,என அந்தந்த மாநிலத்தின் கிராமியì கலைகளை பெருமித்தத்தோடு பங்கு வைத்துவிட்டுப் போவர்கள்.தமிழகத்தின் சார்பில் அப்படியேதும் கைவசம் இல்லாதது போல வெறும் பார்வையாளர்களாய் இருந்து விட்டு வருவோம்.அல்லது சினிமாப் பாடல்களுக்கு ஆடிவிட்டு வருவோம்.
இந்த முறை ராஜஸ்தானின் சிக்கார் நகரத்தில் பிப்ரவரி 21 முதல் 23 வரை நடந்த மாநாட்டு கலை நிகழ்வில் ராஜஸ்தான் நாடோடிகளின் மகுடி இசையும் நடனமும் அறிமுகமனது.அஸ்ஸாமில் எங்களை வியப்பிலும் சந்தோசத்திலும் முழுகவைத்த பிகு நடனத்துக்கு இணையானது இந்த ராஜஸ்தான் நாடோடி இசை.மகுடிக்கருவியின் சுரைக் குடுக்கையிலிருந்து நீள்கிற இரண்டு குழல் வித்தியாசமானதாக இருந்தது.ஷெனாய் இசைக்கு மிக அருகில் வைக்கக்கூடிய நாதம் அதிலிருந்து வழிகிறது.துள்ளிசை போலத் தோன்றினாலும் அதில் சோகம் அடிநாதமாக இருக்கும்.
இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் கிராமிய இசைகளின் விதிப்படியே மெதுவாக ஆரம்பித்து இறுதியில் வேகமெடுக்கிற லாவகம்.அந்த இசைக்கு நடனமாட இரண்டு பெண்கள் வந்திருந்தார்கள்.ஒருவர் கறுப்பு நிறம் இன்னொருவர் கலர்.அந்த கறுப்பு நிற நடனக்காரரின் அசைவுகள்,பறவையைப்போல கைகளை விரித்துக்கொண்டு மார்பைக் குலுக்கிய படி நகரும் போது இதயத்தில் கயிறு போட்டு இழுத்துக்கொண்டு போனது.நேரம் ஆக ஆக அவருக்குஉடல் முழுக்க வியர்வை கோட்டியது.ரோமக் கண்ணளவுகூட முகமலர்ச்சி மாறாமல் தொடர்ந்தார்.
உதட்டோ ரத்தில் பிதுங்குகிற மோனப் புன்னகை ஆடலின் முத்திரையா அல்லது,சற்று தூக்கிய தெத்துப்பல்லின் வசீகரமா என்கிற பட்டிமன்றம் ஆடலின் பக்கமே சாயும்.நழுவும் துப்பட்டாவையும்,முகம்படரும் கூந்தலையும் சரிசெய்கிற லாவகத்தில் ஆடலின் ஆகிருதி கூடிக்கொண்டே போனது.கூட்டத்துக்குள் வீசியெறியும் பார்வையின் சிதறல்களை கையில் விழுந்த சிதறுதேங்காய் போல,மஞ்ச நீராட்டில் த்ரேகத்தில் தெறிக்கிற சிலீர்த்துளிபோல ஏந்திப்பொத்திக்கொள்ளவைக்கும்.ஒரே மெட்டிலான அந்த இசையை மீண்டும் மீண்டும் இசைத்தபோதும் சுவைகுறையாது கடந்து போனது. குதூகலம் ஓய்ந்து இறங்கி மேடைக்கு ஒதுக்குப்புறத்தில் போய் கருப்புநிற பாவாடை,கம்மீஸோடு அவர் பீடி பற்றவைத்த போதும் கூட அதே பரவசம் தொடர்ந்தது.
ஊர் விழாக்களில் நரிக்குறத்திக் கூத்தில், பெண் வேடமிட்டவர்கள், கட்டபொம்மு நாடகத்தில் வெள்ளையம்மா வேடமிட்ட சகமாணவன்,விடுதி விழாவில் சினிமாப்படலுக்கு ஆடிய பாலாண்டி,குணாவின் நெருக்கம், பாண்டுகுடியில் உரசியபடியே அலைந்த சுரேஷ் விட்டுசென்ற கோகுல் சாண்டலின் மணம், திருநங்கைகளின் பறவையாடும் கண்கள் என எல்லாவற்றையும் குழைத்துக் கொண்டு வந்து சேர்த்தது அந்த சிக்கார் இரவு.உருவப்பட்ட விலா எழும்பு அந்தரத்தில் நிற்க ஆதாமும் ஏவாளும் ஒரே சாயலில் மயங்கிக்கிடக்கிறார்கள்.
நாயனக்காரரோடும்,தவில்காரரோடும் தெருக்கூத்து ஸ்ரீபார்ட்டுக்கள் நடத்துகிற முகபாவங்களும் சேஷ்டைகளும் கதைக்குள் கதையாகத்தொடரும்.தனி ஆவர்த்தனத்தில் பம்பை மேளக்காரர் எல்லையைத்தாண்டிக் கிந்திக்கிந்தி வந்து ஆட்டக்காரியின் எதிரில் நின்று நெருங்குகிற தருணங்கள் கலைகளுக்குள் இருக்கும் பிணைப்பை உறுதி செய்கிறவையாகும். பெரும்பாலும் ஆட்டக்காரர்களும் மேளக்காரர்களும் வேறு வேறு ஊராகவே இருப்பார்கள்.இருந்தும் அவர்களுக்குள் இருந்து தெறிக்கும் அன்னியோண்யம்,தாளத்துக்கும் பாட்டுக்கும்,ஆடலுக்குமான ஒருங்கிணைப்பு வியப்பானதாக இருக்கும்.
ஆனால் எங்கள் தோழர் பாவலர் ஓம் முத்துமாரி அப்படியில்லை. அவருக்கு தகரத்தொண்டை. அப்படியே உறுமலை திரித்து பேச்சாக்கினால் கிடைக்கும் வாக்கியங்கள் போலிருக்கும் அவரது குரல். எம் ஆர் ரந்தாவின் அடிக்குரலை நான்கைந்து மடங்காக்கி சேர்த்து வைத்த சுருதி.ஜிப்பாசட்டை,சிகப்புத் துண்டு,லேஞ்சிக் கொண்டை,பொக்கை வாய் அதில் பீடி வைக்கத் தோதுவான மடிப்பு விழுந்த உதடுகள். நக்கலும் நையாண்டியும்,ரெட்டை அர்த்தச் சொல்லாடல்களும் சேர்ந்து கிறக்கம் கொடுக்கிற அந்தக் கலையில் நடுவே சிகப்பு வர்ணத்தின் அடர்த்தியான குரலோடு மக்கள் பிரச்சினைகளைப் பாடும் மகத்தான கலைஞன்.ரெண்டாவது துவக்கத்தில் காதுவளத்து பாம்படம் தொங்க தலையைச் சிலுப்பிக்கொண்டு அவர் களம் புகுந்தால் ஜனம் ஆரவாரம் கொள்ளும். தன் மாராப்பை ஒதுக்கும் போது ஆங்காரமெடுத்த கிழவியொருத்தியின் ஏளனம் மையம் கொள்ளும் பார்வையாளர் பகுதியை நோக்கி.
3 comments:
தலைப்பு அருமை. ராஜஸ்தான் சென்று வந்தது போல் உள்ளது. வாழ்த்துக்கள்.
பாவலர் ஓம் முத்துமாரி அவர்களின் பாடலை என்று தணியும் ஆவனப்படத்தில் பார்த்த போதே மனது உருகிப்போனது
என்னமாதிரியான அனுபவங்க இது... ப்ச்ச்ச்... எழுத்தோடு அசைபோடுவதுகூட சுகம்தான்போலும்.
Post a Comment