சாமக்கோடாங்கி பற்றி இன்னும் விடுபடாத புதிர்களை கிராமங்கள் அடைக்காக்கின்றன. அவர் நேராக சுடுகாட்டிலிருந்து தான் வருவார். மண்டையோடுகளில் மாந்த்ரீகம் செய்து அதை மாலையாக்கி அணிந்திருப்பார். அவர் ஊரில் நடமாடும்போது யாரும் எதிர்ப்படக்கூடது, அவர்கண்ணில் படுவது மகாப்பாவம். தப்பித்தவறி யாரும் எதிர்ப்பட்டு விட்டாலோ ச்சூ ச்சூ வெனச் சொல்லிக்கொண்டு தன்னை மறைத்துக் கொள்வார். இப்படி ஊரிலுள்ள ஒட்டு மொத்த மக்களுக்குமான பூச்சாண்டியாக அவர் உருவகப்படுத்தப்படுவார். எதிர்க்கேள்வி கேட்கும் இளவட்டங்களை அதட்ட ஊரே ஒட்டுமொத்தமாக திரண்டுவரும். வழிபடத் தகுந்தவராக இல்லாமல் வழிவிட்டு ஒதுங்குக்கிற ஒரு பயம் அவர்மேல் கவ்வி இருக்கும். காலபைரவன் என்னும் பெயர் கொண்ட சாமக்கோடாங்கி.
இந்த பயமும் அறியாமையும் மட்டும்தான் இன்னும் கூட கிராமங்களில் சாமக்கோடாங்கிகள் புழங்குவதற்கான சூழலை ஏற்படுத்தித்தருகிறது. ஒரு இருபத்தைந்து வருடம் வாழ்ந்த போது வந்துபோன சாமக்கோடாங்கிகள், நகர வாசம் வந்த பிறகு அவர்கள் ஒரு இரவைக்கூட அலைக்கழிக்க முயலவில்லை. இங்கே அலைக்கழிக்கப் படுவதற்கு வேறு வேறு காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன.
முழித்துக்கிடக்கும் ஜோடிகள் சபித்துக்கொள்ளும். முழித்துவிட்ட ஜோடிகள் வாழ்த்திக்கொள்ளும். இடம் மாறி வகையறாக்கள் பதட்டம் கொள்ளும். சிறுவர்களுக்கு பயமும் ஆர்வமும் முளைத்துக்கொள்ளும். ஒரு மனிதனின் வரவால் ஒரு இரவே தலை கீழாக்கப்படும். அந்த இரவின் ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொண்டு அவர் திரும்பிவிடுவார். அதற்குப்பிறகான இரவு இருள் கவிழ்ந்த பகலாகிவிடும்.
பகலில் திரும்ப வரும் போது, இரவில் அவர் சொன்ன அருள்வாக்குளின் பதவுறை பொழிப்புறை கேட்டுத்தெரிந்து கொள்வார்கள். பெரும்பாலும் கெட்டவைகள் எதிர்வரும் என்கிற எச்சரிக்கை மட்டுமே அவரது அருள் வாக்காக இருக்கும். அப்படி சொன்ன வீடுகள் அதற்கான பரிகாரம் செய்தே தீரவேண்டும். பசியும் வறுமையும் மிகுந்த அந்த மனிதன் பரிகாரப்பொருள்களை வாங்கிக்கொண்டு திரும்பிப்பாரமல் போய்விடுவார்.எதிர்முனையில் காத்திருக்கும் சாமக்கோடாங்கியின் குடும்பத்துக்கு கொஞ்ச நாள் பசியில்லாமல் கழியும்.
இது பரனில் இருந்து எடுத்து துடைத்து வைத்த பதிவு.
9 comments:
நடுயிரவில் புழுக்கத்துடன் அப்பிக்கொள்ளும் குடுகுடுப்பைகாரனின் (சாமக்கோடங்கி) மீதான பயமும், எங்கள் வீட்டுக்குச்சொல்வதைவிட அடுத்தவீட்டுக்கு அவன் சொல்லும் குறியை அம்மா கதவிடுக்குகளின் வழி கேட்பதும் இன்றும் நினைவினில் இருக்கிறது.
மறுநாள் காலையில் கிடைக்கும் ஒரிரு ரூபாய்ககாகவோ, அல்லது 1 டம்ளர் அரிசிக்காகவோ அவனின் நாவாக்குகள் தலைவணங்காது சென்றுவிடும்.
நினைவுகளை புரட்டிப்போடுகிறது இந்த இடுகை...
//இது பரனில் இருந்து எடுத்து துடைத்து வைத்த பதிவு. //
இருந்தாலென்ன? இப்படி இருக்கிறார்கள் என்பதே மறந்துவிட்ட காலம் இது.
/முழித்துக்கிடக்கும் ஜோடிகள் சபித்துக்கொள்ளும். முழித்துவிட்ட ஜோடிகள் வழ்த்திக்கொள்ளும். இடம் மாறி வகையறாக்கள் பதட்டம் கொள்ளும். சிறுவர்களுக்கு பயமும் ஆர்வமும் முளைத்துக்கொள்ளும். ஒரு மனிதனின் வரவால் ஒரு இரவே தலை கீழாக்கப்படும். //
சிரித்து மாய்ந்தாலும் இந்த உண்மை வெகுவாய் வித்தியாசம் காட்டும்.
நன்றி காமராஜ்
விழித்திருக்கும் இரவுகளில் சாமக்கோடாங்கிகளின் குரல் கேட்டு கதவைத் திறந்தால் அம்மா கோபித்துக்கொள்வார். அவர்களைப் பார்க்கவே கூடாது என்பது நியதியாம். மறுநாள் காலையில் காசு வாங்க வரும்போது பார்த்தால் ஆச்சர்யமாகயிருக்கும், ஒரு இரவையே தனதாக்கிக்கொண்ட மனிதர் இவர்தானா என்ற ஆச்சர்யம். மாலை வேளைகளில் ஊர் மண்டபத்திலிருந்து மேக் அப் சகிதம் இவர்கள் தயாராவதைப் பார்ப்பதும் சிறுவயதின் வசீகரங்களில் ஒன்றுதான். அந்த நாட்களை நினைத்துப்பார்க்கும்படி ஒரு பதிவு. மிக்க நன்றி காமராஜ் அண்ணா.
சாமக்கோடாங்கி பற்றிய எஸ்.ஷங்கரநாராயணன் சிறுகதை ஒன்று இருக்கிறது. அதுவும் நினைவுக்கு வந்தது.
நகரத்துப் பக்கம் , காண அரிதாகிப் போனக் காட்சி! பழைய நினைவுகளை அசை போட வைத்த பதிவு. நன்றிங்க.
சாமக்கோடாங்கி...இப்படிதான் இருப்பாரா அண்ணே...
//முழித்துக்கிடக்கும் ஜோடிகள் சபித்துக்கொள்ளும்.முழித்துவிட்ட ஜோடிகள் வழ்த்திக்கொள்ளும்.//
ஆஹா ....ஹி,,ஹி,,ஹி,,ஹி,,
////வழிபடத் தகுந்தவராக இல்லாமல் வழிவிட்டு ஒதுங்குக்கிற ஒரு பயம் அவர்மேல் கவ்வி இருக்கும். காலபைரவன் என்னும் பெயர் கொண்ட சாமக்கோடாங்கி.
/////
உண்மைதான் இருட்டில் தெரியும் ஏதோ மரத்தின் நிழலைக் கூட பார்த்து பாட்டி சொன்ன சாமக்கோடாங்கிதானோ என்ற பயந்த நாட்களை மீண்டும் கண்முன் நிறுத்தியது உங்களின் பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி
சாமக்கொடங்கி வீட்டில் அடுப்பெரியக் கூடாதாம்.அதனால்தன் பகலில் சோறேடுக்க வருகிறார்.
அமானுஷ்யம் கலந்த தெய்வீகத்தைப் பூசி தன் தேவை தன் குடும்பத்தின் தேவை ஆகியவற்றை மறக்க வைத்துவிடுகிறார்கள்.வித விதமான ஒடுக்கு முறைகள் எப்படியெல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன? சமூகவியலார் ஆராய்ச்சிக்கு உட்படுத வேண்டிய இடம்...காஸ்யபன்
அண்ணே இப்பல்லாம் அவர்கள் வருவதே கிடையாது..
தலைச்சன் புள்ள அவன் கண்ணுல படக்கூடாதுன்னு என்ன பொத்தி பொத்தி வைப்பாங்க என் அம்மா ..என்னவோ இப்போகூட அவன பாத்தா ஒரு பயம் தான் ...இருந்தாலும் அந்த வேஷம் போட்டு தான் மாறுவேடத்தில முதல் பரிசு வாங்கினேன் கல்லூரியிலே
Post a Comment