பாட்டெனக்கு கிறுக்கு.ஒற்றைக்கை நெரிசலில் பேருந்தில் நிற்கையில்கூட பேருந்துக் கூரையில் தாளம் போடவைக்கும் இந்தச் சினிமாப் பாட்டுக்கள்.அடுத்து நிற்கும் விடலைப்பெண் முறைத்த பிறகும் கால்கள் தரைதட்டி சுதி சேர்க்கும்.தானியங்கி எந்திரத்தோடு போட்டி போட்டு பணம் எண்ணும் காசாளன் எனக்கு எதிர்க்கடையில் இசைக்கும் இளையராஜாவின் புல்லாங்குழல் கேடு விளைவிக்கும். எண்ணுதல் இடற முன்னப்பின்னக்கூடும் பணத்தாள்கள்.அன்று கூட என்னோடு மல்லுக்கு நின்றவனின் அலைபேசியில் ஒலித்த சிறுபொன்மணி அசையும் பாடலில் கறைந்து கோபம் குறைந்து போனது. கேதவீட்டின் முன்பந்தலில் இணையும் பம்பை மேலத்தின் வேகமும் முகாரிப்பாடலின் சோகமும் என்னை அனுதாபம் மறக்கச்செய்யும்.
அந்த மனநலக்கப்பகத்தில் கூட ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து சோகம் குறைத்துக் கொண்டிருந்தார்கள்.ராப்பகலாக் கண் முழிச்சி படிச்ச மாணவன் மதிப்பெண் குறைந்ததால் பிறழ்ந்து போனான் எஞ்சினியர் கனவிலிருந்து.
எந்த நேரமும் பேனாவும் கையுமாக உட்கார்ந்து கிறுக்கிக்கொண்டிருக்கும்ப அவனது பெற்றோரின் கண்களின்னாழத்தில் கிடக்கிறது இறை நம்பிக்கையும் மருத்துவ நம்பிக்கையும் குழைந்து.தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசாங்க ஊழியன் சோறுதண்ணி ஏதும் கேட்கவில்லை அவனுக்கு ஒரு நாற்காலி இருந்தால் மட்டும் போதும் அதை கழிப்பறைபோகும்போது கூட கூடக்கொண்டுபோவான்.பிள்ளையில்லாதவள்,கணவனால் கைவிடப்பட்டவள் என்று பெண்கள் தான் பெரும்பகுதி இருந்தார்கள்.ஒவ்வொருவருடைய பெற்றோரும் பாதுகாவலரும் அடுத்தவர் சோகத்தின் கணத்தை எடைபோட்டு தங்களை இலகுவாக்கிக்கொண்டார்கள்.
அப்படித்தான் வந்தாள் தங்கலட்சுமி 'மதியச்சாப்பாடு வாங்கணும்லா என் ஏனத்தக் காங்கல ஒங்க ஏனத்த செத்த கடங்குடுங்க சாத்தூர் பாட்டி'.வல்லநாட்டுப் பக்கத்துல ஏதோ சின்னக் கிராமம். தங்கலச்சுமி வந்ததும் எல்லோரும் குஷியாகிவிட்டார்கள்.ஒவ்வொருத்தரும் ஏட்டி இங்க வா,ஏட்டி சாந்திப்பாக்கு ரெண்டு இனுக்கு தாயேன்,இன்னைக்கு பூரா ரஜினி பாட்டுத்தான்,ஏட்டி கோழி பிடிச்ச கதபோடேன் ஆளாளுக்கு அவளை தங்கள்கிருக்கைக்கு அழைத்தார்கள்.'என்னப்பாத்தா ஒங்களுக்கு கிறுக்கச்சியாத் தெரியுதாக்கும் காங்கவுட மாட்டிக்கியவ' என்று சொல்லிவிட்டு வெடுக்கெனத் திரும்பிப்போனாள்.
வந்துருவா பாருங்க என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பிரசன்னமானாள். 'சார் எனக்கு அஞ்சு சாந்திப்பாக்கு தருவியளா நாம் பாடுதன்' என்று கேட்டாள்.'சரி சொல்லுங்க சரி சொல்லுங்க' என பக்கத்திலிருந்தவர்கள் என்னை அந்த குழாமுக்குள் இழுத்துவிட்டார்கள்.அத்தனையும் காதல் தோல்விப் பாடல்கள், காதலின் தீபமொன்று ஏற்றினாளே,உச்சி வகிடெடுத்து பிச்சிப்பூ வச்சகிளி.நோயாளி பார்வையாளர்கள்,தாதிப்பெண்கள் எல்லோரும் கேட்டுக்கிறங்கிக் கொண்டிருந்தார்கள்.கடைசியாய் 'ஒத்தையடிப்பாதையில ஊருசனம் போகயில' என்கிற பாட்டைப் படிக்கும்போது பொல பொலவென அவள் கண்ணிலிருந்து உப்புச்சரம் உதிர்ந்தது.'எனக்கு சாந்திப்பாக்கும் வேண்டாம் ஒரு நோனியும் வேண்டா' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடுவிடுவென நடந்து மறைந்தாள்.
உருகி உருகிக் காதலித்தவன் இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டானாம்.இவள் காட்டுவேலை சித்தாள் வேலை பார்க்கும் பொழப்புக்காரி.அவன் அவளைவிடவும் கொஞ்சம் ஒசத்தியாம்.இப்படி மேலோட்டமான காரணக்கதைகளையும், சொல்லாத காரணங்களையும் வயிறு சொல்லுகிறது.அவள் கூட வளரும் இன்னொரு உயிரும்.
14 comments:
கடந்த இரண்டு பதிவுகளில் உள்ள இறுதி வரிகளை கடக்கும் பொழுது உடல் அதிர்வுகளை கடக்கிறது...!
உயிர் கொலை அந்நிமிடம் மட்டுமே..!
மனங்களை கொலை செய்வது சிறுக சிறுக சித்ரவதை செய்து கொல்வதர்கீடு..!
அன்பு காமராஜ்,
ஆசுவாசமாய் படிக்க எத்தனை நாட்கள் தேவைப்படுகிறது... பாட்டுக்காரி தங்கலட்சுமி, படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது எனக்கு... இளையராஜாவை வாசித்து, நேசித்து, சுவாசித்து கிடக்கும் என்னை போன்றவர்களுக்கு இது ஒரு கிரியா உக்கி... ஒரு விதமான துள்ளலுடன் கூடிய மெல்லிசை கிறங்கடிக்கும், எல்லா துக்கங்களையும் மறக்க செய்யும் மாய வித்தைக்காரனின் இசை என்னையும் இது போல பைத்தியம் பிடிக்க செய்திருக்கிறது... எங்காவது ஜெயச்சந்த்ரனோ அல்லது பாலசுப்ரமநியனோ வாசிக்கும் இளையராஜாவின் சுவரச்தானங்களில் மீது ஊர்ந்து வரும் இசை என்னை இழுத்து அனைத்து நிறுத்தியது உண்டு... பட்டியலில் அடங்காமல் கிடக்கும் பாடல்கள் எத்தனை... ரோசாப்பு ரவிக்கைகாரியில் வரும் என்னுள்ளில் ஏனோ... மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்... பெண் குரலில் சோலோவில் இளையராஜாவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்றே நினைக்கிறேன்... வசந்த கால கோலங்கள்... தூரத்தில் நான் கண்ட உன் முகம்... மாதாவின் கோயிலில் மணி தீபம்... மாமன் மச்சான்... ஆனந்த ராகம், சோலைக்குயிலே.. என்று ஜானகி, ஜென்சி, வாணி ஜெயராமும், சைலஜா, உமாரமணன், சசிரேகா என்று இவர்கள் நிரப்பிய தடாகத்தில் எருமைகளாய் கிடந்த காலங்கள் மறக்க முடியாது...
மலேசியா வாசுதேவனின் குரலில்... கோடை கால காற்றே... ஒரு தங்க ரதத்தில்... பொன்மானத்தேடி... என்று
தனியா ஒரு பதிவே போடும் அளவு தூண்டுகிறது... எழுதுகிறேன்...
அன்புடன்
ராகவன்
இதே வயிற்றுடன் தங்கலச்சுமிகள் சிலரை கண்டிருக்கிறேன்... ஒரு வித்யாசம் காணலாம், மனப்பிறழ்வுக்கு பிறகு காமக்காதலுக்குட்படுவர்கள் இவர்கள்..
இந்த பதிவும் முந்தைய பதிவும் என்னவோ செய்கிறது மனதை.
நண்பரே!
உங்க ஒவ்வொரு போஸ்டிலும் அப்படியே நிக்க வெச்சு மனசை ஒரு இறுக்கி பிடிக்கறீங்க. ராகவன் பின்னோட்டம் பழைய பாடல் எல்லாம் நம்மை சுற்றி சுற்றி வருகிறது.
சில இடுகைகளை எல்லாம் வாசிக்கும்போது தோன்றும்' என்ன எழுதப் போற இதுக்கு மேல . சும்மா இருடா பயலேன்னு உங்க இடுகைல ராகவன் ' இடுகைல' இருக்குற பாட்டெல்லாம் கேட்டுக்கிட்டே கெடக்கலாம் தூரத்தில் நான் கண்ட உன் முகம்லாம் கேக்குறவிங்க இன்னும் இருக்க்காயங்க்களா நம்பலாட்டம்னு திருப்தி பட்டுக்குது மனசு
/இளையராஜாவை வாசித்து, நேசித்து, சுவாசித்து கிடக்கும் என்னை போன்றவர்களுக்கு இது ஒரு கிரியா ஊக்கி./
எனக்கும்!
கடைசி வரியில் உறைஞ்சு போச்சு மனசு. ம்ம்.
//'ஒத்தையடிப்பாதையில ஊருசனம் போகயில' என்கிற பாட்டைப் படிக்கும்போது பொல பொலவென அவள் கண்ணிலிருந்து உப்புச்சரம் உதிர்ந்தது//
நிதர்சனத்தையும் நிஜத்தையும் தாண்டி அவரின் மனதில் கொக்கி போட்டு இழுத்து பிடித்திருக்கு சில வடுக்கள் ...அவர் பாட்டுக்காரி மட்டும் இல்லை........
அழகான வர்தைகையாடல் அண்ணே...வாழ்த்துகள்..
ஒவ்வோரு சோக ராகத்தின் பின்னாலும் தங்கலச்சுமியின் சோக கதை ஒளிந்து கிடக்கிறது.
ராகவன்,
நானும் ஒரு பாட்டு பைத்தியம்தான்.
உங்கள் இடுகைக்காக காத்திருக்கிறேன்.
அப்பப்பா... வாழ்க்கை எத்தனை கனமாய்
பள்ளித்தெரு திரும்பினா பார்த்துறலாம் காமு, அக்கா குருவி மாதிரியான கோசலையை. கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
"நானே நானா, யாரோ தானா?"
"செவ்வந்தி பூக்களில் செய்த வீடு. வெண் பஞ்சு மேகமே கோலம் போடு"
"தேரே மேரே பீச் மே..ஓ..ஓ.." என்று கசிவாள்.
சிகரெட் குடிப்பாள். எல்லாக் கடையிலும் அவளுக்கு சாப்பாடு கிடைக்கும். மற்றதை விடுங்கள், இந்த, "தேரே மேரே பீச் மே..' தான் ரொம்ப குழப்பும். எப்படி இவளுக்கு என? அவள், இவள் என்கிற என் ஏக வசனம் கூட ஒரு ப்ரியம் சார்ந்ததாக எடுங்கள் காமு.
ஒரு முழுமையான மனுஷியை எப்படி அழைத்தால்தான் என்ன? இந்த இடுகையில், அங்க போயிட்டேன்.
லேபில்: 'மனநல மனிதர்கள்" எவ்வளவு பொருத்தம்!
anbu kaamaraaj,
oththaiyadi paathaiyile... Deva's composition.
Regards,
Ragavan
Post a Comment