| இளம் புரட்சியாளர் ராகுல் காந்தி உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் சாப்பிட்டார் என்பதை தினமலர் நாளேடு புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டிருந்தது. இதைப்படித்த பக்கத்து வீட்டுப்பாட்டி " ஒருத்தர் வீட்ல இன்னொருத்தர் சாப்டறதெல்லாமா போடுவாங்க, என்னடா இது எழவாப்போச்சு" என்று நாளேடை மடித்து வைத்து விட்டுக் கிளம்பிவிட்டார். அம்பானிகளின் வீட்டிலும், ஐ எம் எஃப் போடுகிற எச்சிலிலும் கைநனைக்கிறவர்களுக்கு உழைக்கும் மக்களின் வீட்டில் சாப்பிடுவது கட்டாயம் புரட்சிதான் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும். அல்லது உழைக்கும் மக்கள் உழுது பயிரிட்டு வேர்வை கலந்து கொடுக்கிற தாணியங்கள்தான் ஆள்பவகளுக்கும் உணவாகுது, ஆண்டவனுக்குக் கூட நெய்வேத்தியம் ஆகுது என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டியதிருக்கிறது. அவரது தந்தை ஓய்வெடுக்க அந்தமான் தீவுகளுக்குப் போனபோது திருவணந்தபுரத்திலிருந்து பாயாசமும், தஞ்சாவூரிலிருந்து நெய்யும் விமானம் மூலம் தருவிக்கப்பட்டது என்பதை தினமலர் அப்போது வெளியிடவில்லை. அல்லது ராகுல் காந்தியின் ஒரு நாள் செலவு என்ன, ஒரு நேரச் சாப்பாட்டின் விலையென்ன என்பதையும் சேர்த்து புள்ளிவிபரத்தோடு எழுதியிருந்தால் கூட தினமலர் போன்ற நாளேடுகளுக்கு ஓரளவு ஒட்டியிருக்கிறது என்று நம்பலாம். ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் உதுத்தவர்கள். உதுத்தது ஊருக்கெல்லாம் பெருசு. இன்றைய செய்தி நாளைய வரலாறு. இன்றைய செய்திகளில் வராத எத்தனையோ நல்ல செய்திகள் நாளைய வரலாற்றில் இடம்பெறாமல் போகும். அப்படிப்போன ஒருவர்தான் தோழர் சீனிவசராவ். சுதந்திரப் போராட்டத்தோடும், உழைக்கும் மக்கள் எழுச்சியோடும், விவசாயிகளின் ஒற்றுமையோடும் அவரது வாழ்வு பிணைக்கப்பட்டிருந்தது. வெண்மணிப் படுகொலைகளில் தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் ஆதர்சமாகவும், அரணாகவும் இருந்தவர். ஆந்திரத்திலிருந்துவந்து பொதுவுடைமையை விதைக்க வந்த அவர், அதை விவசாயிகளின் மனதிலும், விவசாயக்கூலிகள் மனதிலும் ஆழமாக ஊன்றிவைத்தார்.தனது தலைமறைவுக் காலம் முழுக்க ராமநாதபுரம் மாவட்ட உழைக்கும் மக்களின், தலித்துகுகளின்குடிசைகளில் மட்டும் தங்கியிருந்தார் என்பது இந்த நேரத்தில் அவரது நினைவுநாளில் நினவு கூறவேண்டியது. அதுபோலவே 1946 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் வத்திராயிருப்பில் விவசாயிகள், விவசாயக்கூலிகள் இணைந்துஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் என்பது படிக்கிற போது ஆச்சரியமும் வியப்பும் கூடவே பெருமிதமும் அளிக்கிறசெய்தி. வத்திராயிருப்பு காவல் நிலையத்தை முற்றுகை செய்து மாநிலத்தை உலுக்கியது அந்த எழுச்சி.அதற்குப்பெயர் ''சுத்தவாரப்போராட்டம்'' என்பதும், ஜாதிகடந்து பல்லாயிரம் தோழர்களை ஒருங்கினத்த அந்தப் போராட்டத்தில் சங்குப்பிள்ளை சோனைத்தேவர் ஆகிய இருவரும் களப்பலியானார்கள் என்பதும் புல்லரிக்கச் செய்யும் பக்கத்து வீட்டுக்கதை. வீரபாண்டியக் கட்டபொம்மன், வாஞ்சிநாதன், வ உசி , திருப்பூர் குமரன், என்கிற பட்டியலோடு முடிந்து போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் தமிழக சுதந்திர வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் பங்கு வெகுவாக மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. சிவகாசிக்குப் பக்கத்திலிருக்கும் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த தியாகி பி.ராமச்சந்திரன் என்பவர் சுத்தவாரப் போராட்டதில் தலைமை தாங்கியர்களில் ஒருவர் என்பதையும், அவர் தோழர் சீனிவாசராவோடு பெரும்பகுதி தலைமறைவாய் அலைந்தவர் என்பதும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிஜ வரலாறு. |
30.9.09
இன்றய புரட்டுச் செய்திகள், நாளைய போலி வரலாறு
29.9.09
புதுவிசை வாசகர் சந்திப்பும் பதிவுகளும்.
| புதுவிசை 25 வது இதழ் வெளியானதின் பொருட்டு 9.9.2009 அன்று மாலை சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் ஒரு வாசகர் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. தமுஎச பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் பிரபஞ்சன், பெண்ணிய ஆர்வலர் முனைவர்- ஆய்வாளர் வ.கீதா, கவிஞர் குட்டிரேவதி, இதழியலாளர்- உயிர் எழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில், முனைவர் ரவீந்திரன், இந்தியமாணவர் சங்க செயலாளர் செல்வா, நாடக ஆசிரியர் பிரளயன், பன்முகக் கலைஞன் புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், ஆசிரியர் குழுவிலிருந்து பெரியசமி, ஆதவன்தீட்சண்யா பங்கேற்பு செய்தார்கள். முதலில் பேசிய தோழர் ச.தமிழ்ச்செல்வன் விசை ஆரம்பிக்கப்பட்டதையும் அது தொடர்ந்து வெளிவர நேர்ந்த சிக்கல்களையும்விவரித்தார். கூடவே புதுவிசை பேசுகின்ற விஷயங்கள் தமிழ் எழுத்துலகில் அடர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும். தாங்கள் ஆசைப்பட்ட அளவு இலக்கிய முகம் இல்லை எனவும் சுருக்கமாகத் தனது கருத்துக்களை முன்வைத்தார். புதுவிசையை திருமங்கலத்தில் ஆரம்பித்தோம் எனும் தகவலைச் . 25 இதழ்கள் கடந்துவந்த புதுவிசை பல சிறுகதை எழுத்தாளர்களை, கவிஞர்களை உருவாக்கியிருக்கிறது. எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் நான், புதுகை சஞ்சீவி, அருள் எழிலன், ஸ்ரீவில்லிப்புத்தூர் சிவகுமார், தஞ்சை சாம்பான் இப்படி பல அறிமுக எழுத்தாளர்களை ஊக்குவித்த வரலாறு ஜஸ்ட் லைக்தட் நிராகரிக்கப்பட்டதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. இதை எங்கள் அன்புச்சகோதரி கவிஞர் குட்டி ரேவதியும் கூட கடந்து போனதுதான் மனதுக்கு நெருடலான சங்கதி. அங்கிருந்தே எனக்கு அந்த விழா மீதான நெருடல்கள் ஆரம்பித்திருந்தது. நான் மேடைப்பேச்சின் மீது மிக மிக எதிர்க் கருத்து வைப்பதற்கு ஏதுவான கருத்துக்கள் துவங்கியிருந்தது. ஆம் மேடையில்பேசிய முனைவர் வ.கீதா, குட்டி ரேவதி, முனைவர் ரவீந்திரன் ஆகியோர் புது விசை குறித்துப்பேச எடுத்துக்கொண்டது மிகக்குறைவு. அவர்கள் முழுக்க முழுக்க ஈழப்பிரச்சினை குறித்த விவாதங்களையே வெகுவாக முன்வைத்தார்கள். எழுத்தாளர் பிரபஞ்சன் தமுஎகச மாநில மாநாட்டில் சொன்ன கதைகளையே மூன்றாம் முறையாக மீண்டும் சொன்னார். முனைவர் வ.கீதா 24 மற்றும் 25 வது இதழ்களில் வந்த கட்டுரைகளில் இரண்டு அல்லது மூன்றை அடிக்கோடிட்டு விட்டு விசைசார்ந்த உரையாடல்களைச் சுருக்கிக் கொண்டார். எனவே மேடைப்பேச்சு என்பது நபர் சார்ந்த இசம் சார்ந்த மயக்கங்களின் வெளிப்பாடாகவே பெரும்பாலும் சுருங்கிப்போவதை தவிர்க்க இயலவில்லை. ஆம் இவ்வளவு மகாமித்யங்கள் பொருந்திய மாடு இந்த கொம்பிலே தான் கட்டப்பட்டிருந்தது என்று முடிப்பதுதான் மேடைப்பேச்சின் சாமர்த்தியமாகிறது. உலகின் மனிதாபிமானமுள்ள யாரும் நிராகரிக்க முடியாத ஜெனோசைட் ஈழப்பிரசினை. யாரும் காதுகொடுத்துக் கேட்க இயலாத அவலம் மூன்று லட்சம் தமிழகதிகளின் வாழ்நிலை. இதற்கெதிராக பேசும் யாரும் மனிதாபிமான விரோதிகள் என்பதில் இரண்டு கருத்தில்லை. ஆனால் ஒரு சிற்றிதழின் வாசகர் சந்திப்பில் உரையாடல்களே இல்லாமல் பேச்சாளர்கள் கருத்தாக்ரமிப்பு மட்டுமே மிஞ்சிப்போனது தான் கஷ்டமாக இருக்கிறது. தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி. ஆதவன் தன் ஆசிரியர் உரையில் பேசிய விஷயங்களில் வெகுவாக ஈர்த்தது, தமிழ்நதி - ஆதவன் விவாதத்தில் பெண்ணியம் சார்ந்த சில சில சொல்லாடல்கள் குறித்து அவர் பகிரங்க மன்னிப்புக் கோரியவாத்தை. அவரது தர்க்க ஞாயத்தையும், ஒடுக்கப்பட்டவர்களின் குமுறலையும், ரசிக்கத்தக்க நையாண்டியையும் தாண்டி அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுதான். தலைவிரி கோலமாய், மூக்கைச் சிந்திக்கொண்டு போன்ற சொல்லாடல்கள் ஆதவன் எழுத்தில் ஊடுபயிராவதைச் சொன்னார்வ.கீதா. அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு ஆதவன் மண்ணிப்புக் கோரியது தான் நான் சொல்ல வந்தது. பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு கருத்தில், தனது எழுத்துக்களில் வந்த பிறழ்வு குறித்து மறுபரிசீலனை செய்வது அலாதியான விஷயம்.அவர் பகிரங்க மன்னிப்புக் கோரியது இலக்கிய உலகில் கவனம் பெறத்தக்கது. ஒரு முழு இரவு நானும் தோழன் மாதுவும் இந்தப் பிரச்சினை குறித்து தொலை பேசியில் ஆதவனிடமும், தமிழ்நதியிடமும் பேசியதையும் நேர்மையாக நினைவு கூர்ந்தார். கீழ்நிலை மக்களுக்காக எழுதுபவன் பெண்கள் குறித்த ஆணாதிக்க அடிப்படை வாதச் சொல்லாடல்களை எழுதக்கூடாது என்று சொன்ன எங்கள் இருவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதள்குள் அது தேசம் நெட்டில் பிரசுரமாகிவிட்டது. அந்த வெப்பத்தில் கண்டு கொள்ளப்படாதது என்னுடைய மற்றும் தோழன் மாதவராஜின் குறுக்கீடு. அந்த விவாதம் வேறு திசை நோக்கிப் பயணமான போது நான் வெளியிட்ட பதிவு மிகத் துச்சமாக ஒதுக்கப்பட்டது. காரணம் இங்கே எல்லாம் பிரபலத்தின் மூலமே கணக்கிடப்படுகிறது. ஆம் தோழர் தமிழ்நதி எனக்கெழுதிய பதில் பதிவில் ஒரு காமராஜ் சொல்லுவதற்கும், ஒரு ரஜினி சொல்லுவதற்கும் அளவுகோல் மாறுபடும் என்கிற கருத்தில் தனது தர்க்கத்தை வைத்தார். தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை. இருக்கிறது என்று எவரேனும் வாதிட வந்தால் எழுதுவதை நிறுத்திவிட்டு வாருங்கள் . அது தான் உங்கள் வாதத்துக்கு நீங்களாவது உண்மயாய் இருப்பதாகும். இன்னொன்று சாகும் வரை இது போன்ற விவாதத்துக்கு ரஜினி ( ரஜினி இமேஜ் உள்ள எழுத்தாளர்களும்) வரமாட்டார் என்பது தான் கசக்கும் நிஜம். அதுதான் க்ராப்ட்மென்ஷிப், அல்லது தக்கவைத்தல். தேசம் நெட்டிலும், கீற்றுவிலும் இந்த இரண்டு கட்டுரைகளுக்கும் இடையில் வந்த எனது கட்டுரை ஜாய்சில் ஒதுக்கப்பட்டு விட்டது. காரணம் சண்டையைத் தூண்டிவிடும் எந்த வார்த்தையும் அதில் இல்லை என்பதுதான். அது தான் இன்றைய பெரிய்ய பிரச்சினை. எழுத்து என்பது வெறும் WWF மட்டுமல்ல என்கிற எனது வெள்ளந்திக் கருத்து போய்யாகிப் போகலாம். எழுத்து பொய்யாகிப் போவதில்லை. அரங்கத்தின் குளிரும் அமைப்பும் மேடைப் பேச்சாளர்களின் பேச்சைப் போலவே ஒட்டாமல் இருந்தது. உயிர் எழுத்து ஆசிரிய சுதிர் செந்தில் சொன்னது போலவே பார்வையாளர் பகுதி இறுக்கமாகவே இருந்தது. பார்வையாளர் பகுதியிலிருந்து அதாவது வாசகர் பகுதியிலிருந்து கேள்விகள் விவாதங்கள் வருமென எதிர்பார்த்த எனது ஆவல் திடுமெனக்கழிந்தது. இதுகாறும் வெளியில், புதுவிசைகுறித்த பல ஹேஸ்யங்கள், கேள்விகள், நெருடல்கள் போன்றவற்றை முன்வைத்த பெரும்பாலான வாசகர்கள் வந்திருந்த போதும் கூட அரங்கில் கேள்விகள் வரவில்லை. மேடைப்பேச்சின் கூறுகள் அறியாத நானும், பெரியசாமியும் மைக்கைத் தொட்டுவிட்டு திரும்பி ஓடிவந்து விட்டோம். எதிர்பார்த்த அளவு தனது பங்களிப்பைச் செலுத்தமுடியாமல் தோழர் பிரளயனும் பார்வையாளர்களும் திரும்பிப்போக நேர்ந்தது, நிகழ்வின் முடிவில் |
28.9.09
கமல் ஒரு காமன் மேன் இல்லை.
| கோவில்பட்டி தியேட்டருக்கு போகும்போது ஒரு பரபரப்பு இருந்தது. நுழைவுச்சீட்டு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பரபரப்பு. வரிசையில் கடைசி ஆளாய் நின்ற போதும் அந்தப்படபடப்பு குறையவில்லை. இந்த முப்பது வருடங்களில் எத்தனை முறை ஹவுஸ்புல் பலகை தொங்கியதைப் பார்த்துவிட்டு, நுழைவுச்சீட்டு கொடுப்பவரிடத்தில், காவலாளியிடம், சைக்கிள் ஸ்டாண்ட் காப்பாளரிடம் தொங்கோ தொங்கென்று தொங்கியிருக்கிறோம். அதன் நீட்சியாகப் பரபரப்பு இருந்ததில்ஆச்சரியம் இல்லை. நுழைவுச்சீட்டுக் கிழிக்குமிடத்தில் அரசியல் கலப்படமில்லாத தொழிற்சங்கச் செயலாளர் ஒருவர் கௌரவ மேலாளராகி கிழித்துக்கொண்டிருந்தார். பெண்களுக்கு ரூ 10ம் ஆண்களுக்கு ரூ40ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இது ஒன்றும் மானியமோ, ஒதுக்கீடோ இல்லை. இப்போதெல்லாம் பெண்கள் தியேட்டர் பக்கமே வருவதில்லையாம். அதுதான் இந்தச்சலுகை. ஆனாலும் கூட பின்னிருக்கைகள் மட்டும் நிறம்பியிருக்க சினிமாக்களில் வரும் பாழடைந்த பங்களா மாதிரித் தியேட்டர் தெரிவதைத்தடுக்க முடியவில்லை. மாற்றம். ஆனால் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்பரபரப்பு. ஒரு டூயட் இல்லை. இரும்புக் கம்பியைக்கட்டித் தொங்கவிட்டு அந்தரத்தில் குட்டிக்கரணம் போட்டு சண்டையிடுகிற காட்சிகள் இல்லை. கதாநாயகி இல்லை. கடைசி வரையில் கதாநாயகனுக்குப் பேரில்லை. படம் சுவாரஸ்யக் கண்ணிகளைத் தொடுத்துக்கொண்டே வேகமெடுக்கிறது. இதுவும் தமிழ்திரையுலகம் சந்தித்திருக்கிற மாற்றம். மூன்று தீவிரவாதிகள் வெடிகுண்டு வெடித்துச் சாகிறவரையில் கமலஹாசனை கண்டுபிடிக்க போலீஸ் அவிழ்க்கிற முடிச்சுகள் அவரை ஒரு முஸ்லீம் என கருதவைக்கிறது.தான் ஒரு முஸ்லீம் இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார். தீவிரவாதி ஒருவன், ஆரிப் என்னும் காவல் அதிகாரியிடம் சொல்லும் கதையை மீறி அவர் கடமை மிக்கவராக மட்டும் முன்னிறுத்துவதும், கமல் சொல்லும் கதைகேட்கிற ஆய்வாளர் முதல் முதன்மைச் செயலாளர் வரை ஏன் கமிசனர் மோகன்லால் கூட மனம் மாறுவதான சித்தரிப்பு திரைக்கதையில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். இது நாயகன், இந்தியன், ரமனா, மலையூர் மம்பட்டியான் போன்ற நெகடிவ் ஹீரோக்களை வெகுமக்கள் கப்பாற்றுவதான இமேஜ் பில்டிங் சித்தரிப்பு.ஆக இந்தப்படத்தில் கமல் ஒரு காமன் மேன் இல்லை. ஒரு கைதியின் டைரி போன்ற படங்களோடு கூடிய நாயகன் தான். அப்புறம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் பொறுப்பிலிருக்கிற இன்ஸ்பெக்டர் கேனையாக சித்தரிக்கப்படுவதும் முதல் முறையல்ல. அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் தொடங்கி பல படங்களில் இவருக்கு இதுதான் வேலை. இதில் பெண்களைக் கிண்டலடிக்கும் தத்துவ காமெடி கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட கேனை இன்ஸ்பெக்டர் இறுதிக் காட்சியில் தான் உருவமைத்த கணினி ஓவியத்தைத் தானே மறுதலிக்கிறார். தமிழ்ச் சினிமா உலகத் தரத்துக்குப் போனாலும் புளிமூட்டை ராமசாமி, போன்ற ஐம்பது வருட தமிழ்சினிமா கதை சொல்லலிருந்து தடம் மாறவில்லை என்பது நிரூபணமாகிறது. நிருபராக வரும் நாதசா புகை பிடிப்பவராகக் காட்டவேண்டிய அவசியம் என்ன என்பதும் துருத்திக் கொண்டிருக்கும் கேள்வி. படம் முடிந்து திரும்பி வரும்போது மோகன்லால் மாதிரியே ஐம்பது பர்வையாளர்களும் தியேட்டரைக் காலி பண்ணிக் கொண்டு திரும்ப வேண்டியதிருக்கிறது. அதற்குப்பிறகு வெற்றுத் தியேட்டரில் மோகன்லாலின் வாய்ஸ் ஓவர் அசரீரி போல் கேட்டுக் கொண்டிருக்கிறது. ரீல் ஓடி முடிந்த பின்னர் தானே, ஆபரேட்டர் படத்தை நிறுத்த முடியும். துடைத்துச் சுத்தப்படுத்திசாமி கும்பிட்டுவிட்டு பொங்கல் ,பொறி, தேங்காய், சுண்டல் வீட்டுக்கு எடுதுக்கொண்டு போகமுடியும். அவர் முஸ்லீமாக இருந்தால் கூட. |
Subscribe to:
Posts (Atom)