27.11.09

ஒரு போராளிக் கவிஞனின் டைரிக்குறிப்பு - ஜோஸ் மார்த்தி - 2 ( JOSE MARTI )




1853 ல் பிறந்து வெறும் நாற்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து க்யூபாவின் விடுதலைக்கும் லத்தின் அமெரிக்க இலக்கியத்துக்கும் ஆயுதமும்,அதைஏந்துகின்ற வீரமும் கொடுத்துவிட்டுப்போன போராளிக்கலைஞன் ஜோஸ் மார்த்தி.க்யூபா அப்போது ஸ்பானிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்தது. பின்னர் அவர்கள் அதை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டுப் போனார்கள். நாடுகள் பண்டங்களாகப் பாவிக்கப்பட்ட காலம் அது. கிட்டத்தட்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவைஅடிமைப்படுத்தியிருந்த காலம் அது.


ஏழு தங்கைகளுக்கு மூத்தவனான மார்த்தி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தான். 1866 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனப்படுகொலை செய்யப்பட்ட புரட்சிக்காரன் ஆப்ரஹாம் லிங்கத்தின் மரணம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஜோஸ் மார்த்தியை அலைக்கழித்தது. அடிமை முறையை ஒழிக்கப்போராடிய ஒரு அண்டை நாட்டு ஆளுமைக்காக மௌன அஞ்சலிக்கூட்டத்தை நடத்தினான் ஜோஸ் மார்த்தி. 1868 ஆம் ஆண்டில் முடிவுற்ற பத்தாண்டு ஸ்பானியப் போரினால் க்யூபாவின் நிலைமை மிக மோசமடைந்தது. அப்போது க்யூபா ஸ்பானியக் காலணியாகவே இருந்தது. இது குறித்து விசனப்பட்ட க்யூபத்தேசிய வாதிகள் ஒருங்கிணைப்பு நடந்தது. மார்த்தியும் அவரது நண்பர் ஜெர்மினும் இதற்கு தலைமை தாங்கினார்கள்.


அதற்கான பிரச்சாரம் முழுக்க ஜோஸ் மார்த்தியின் கவிதைகளும் கட்டுரைகளுமாகவே இருந்தது. 1869 ஆம் ஆண்டு தனது முதல் அரசியல் கட்டுரையை எல் டியாப்ளோ என்கிற செய்தித்தாளில் வெளியிட்டார். பிரபலமான நாடகமான அப்தலா வையும் அதே ஆண்டு வெளியிட்டார். நூபியா என்னும் கற்பனை நாட்டின் விடுதலைப்போராக சித்தரிக்கப்பட்ட அந்த நாடகம் அந்த நாளில் விடுதலையின் வெப்பத்தை ஊதிவிட்டது.
அக்டோபெர் பத்தாம் நாள் என்கிற பிரபலக் கவிதையும் அதே ஆண்டு வெளியானது. அந்த ஆண்டிலேதான் அவன் படித்த பள்ளியை ஸ்பானிய ஆதிக்க அரசு இழுத்து மூடியது. 1869 ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் மார்த்தி ஸ்பானிய அரசால் சிறப்பிடிக்கப்பட்டான். ஸ்பானிய அரசினை ஏமாற்றி லஞ்சம் வாங்கியதாக பொய்க்குற்றம சுமத்தப்பட்டான். நான்கு மாதம் கழித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டணை வித்திக்கப்பட்டு சிறயிலடைக்கப் பட்டார். மார்த்தியின் தாய் தனது மகன் சிறுவன் அவனை சிறையிலடைக்க வேண்டாம் என ஸ்பானிய அரசுக்கு கருணை மணுச் செய்தார். அவரது தந்தை வழக்கறிஞரை அமர்த்தி வாதாடிப்பார்த்தார் ஒரு ஆதிக்க அரசை ஏழைத்தாய் தந்தையின் கண்ணீரால் என்ன செய்ய முடியும்.


கொடுமையான அடக்குமுறையும் கால் விலங்குகளால் உருவான ஆறாத காயமும் அவரது உடல் நிலையை பாதித்தது அங்கிருந்து க்யூபாவின் இஸ்லாபியோன் பகுதிச்சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை ஸ்பெயினுக்கு நாடுகடத்த தீர்மானித்தது ஸ்பானிய அரசு. அங்கு அவரது கல்யியைத் தொடரவும் அனுமதித்தது. ஸ்பானிய அரசுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் எனும் நிபந்தனையோடு.


1871 ஆம் ஆண்டு மாட்ரிட் நகரை அடைந்த மார்த்தி அங்கே தனது சிறைச்சாலை நண்பன் கார்லோசைச் சந்தித்தார். மார்த்தியின் வசிப்பிடம் நாடுகடத்தப்பட்ட க்யூப அகதிகளின் சந்திப்பிடமாக மாறியது. அந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி காஸ்டில்லோ என்னும் அவரது கட்டுரை காடிஸ் நகரின் லா சொபரினியோ நேசனல் எனும் பத்திரிகையில் வெளியானது. சிறையில் சந்தித்த சக கைதி ஒருவன் அனுபவித்த சிறைக்கொடுமையை வெளி உலகுக்கு அறியத்தரும் அதிர்ச்சித் தகவலாகியது அந்தக்கட்டுரை. தன்னை மாட்ரிட் நகரின் சட்டக் கல்லூரியில் தனி மாணவனாகப் பதிவு செய்து கொண்டபின் துணிந்து ஸ்பானியப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்தார். அதில் க்யூபாவின் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பட்டியலிடப்பட்டது.


1871 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏழுபேர் பொய்க்குற்றம் சுமத்தி ஹவானாவில் தூக்கிலிடப்பட்டார்கள். தனது பத்திரிகையில் இதை எழுதிய மார்த்தியின் நண்பன் ஜெர்மினும் ஆறுவருடம் சிறைத்தண்டனை பெற்று ஸ்பெயினுக்கே அனுப்பி வைக்கப்பட்டான். ஸ்பெயினில் ஜெர்மினும் மார்த்தியும் மீண்டும் இணைந்தார்கள். நவம்பர் மருத்துவக் கல்லூரி சம்பவம் மீண்டும் மார்த்தியின் வார்த்தைகளில் எழுதப்பட்டு மாட்ரிட் நகரிலிருக்கும் க்யூப மாணவர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டது. நவம்பர் சம்பவத்தின் முதலாண்டு நினைவாக மாட்ரிட் நகரில் ஒரு, அடக்கச் சடங்கும் மௌன ஊர்வலமும் நடத்தப்பட்டது.


1873 ஆம் ஆண்டு தான் தங்கியிருந்த அறையின் முகப்பில் க்யூப தேசியக் கொடியைப் பறக்கவிட்டார் ஜோஸ்மார்த்தி.அப்போது புதிதாக நிறுவப்பெற்ற ஸ்பானியக் குடியரசு க்யூபாவை அதன் இன்னொரு அங்கமாக அறிவித்தது.இதை எதிர்த்து மார்த்தி ஸ்பானியப் பிரதமருக்கு ஒரு கண்டனக்கடிதம் அனுப்பினார். ஸ்பானியக் குடியரசும் க்யூபவிடுதலையும் எனும் அந்தக் கடிதத்தில் தன்னை ஒரு மக்களாட்சி அரசாகப் பிரகடப் படுத்திக்கொள்ளும் ஸ்பானியப் பொறுப்பாளர்கள் க்யூபாவை மட்டும் அடிமையாக நீடிக்க வைப்பது அதிகார வெறியின் மிகச்சிறந்த உதாரணம் என எழுதியிருந்தார்.
தனது எழுத்துக்கள் அணைத்தையும் நியூயார்க்கிலுள்ள நியூயார்க் மத்திய புரட்சிகர அமைப்பின் உறுப்பினர் நோஸ்ட்டர் போன்சுக்கு அனுப்பிவைத்தார். கியூப விடுதலை முயற்சிக்கு தனது ஆதரவை அந்த அமைப்பு பிரகடனப்படுத்தியது.1874 ஆம் ஆண்டு தனது சட்டப்படிப்பை முடித்துகொண்டு அங்கிருந்து பாரிசுக்குப் போனார். பாரிசில் ஆகஸ்ட் வகவுரி எனும் கவிஞரையும் விக்டர் ஹுயுகோவையும் சந்தித்தார். அங்கிருந்து மெக்சிகோவுக்கும், க்வட்டமலாவுக்கும் பயனமானார். 1875 முதல் 1878 வரை மெக்சிகோவிவின் கால் மொனெடோவில் தங்கினார். அங்குதான் மனுவேல் மெர்கடோ எனும் ஆப்த நண்பரின் சிநேகம் கிடைத்தது. அங்குதான் ஒரு க்யூப முதியவரைச் சந்திக்கிற பல நாட்கள் அலைந்தார். முதியவரின் மகளையும் சந்திக்கிற தங்கநிறத் தருணங்கள் அங்கேதான் கிடைத்தது. அவரது மகள் கார்மென் ஜயாஸ் பின்னாளில் மார்த்தியின் துணையானார்.


1877 ல் ஜுலியொ ப்ரெஸ் என்று பெயர் மாற்றிக்கொண்டு ஹவானாவுக்குப் பயணமானார் மார்த்தி. ஹவனாவிலிருந்த குடும்பத்தை மொத்தமாக மெக்சிகோவுக்கு மாற்றும் திட்டத்தோடு போனாலும் திரும்புகிற வழியில் மார்த்தி க்வட்டமாலாவில்ஒரு வீடு பார்த்து தங்கிவிட்டார். அங்கே ட்ராமா இண்டியானொ ( இந்திய நடகம்) - தேசமும் விடுதலையும் என்னும் நாடகத்தை உருவாக்கினர். அந்த மாகாணத்தின் ஆளுநரைச் சந்தித்தார் அதன் விளைவாக ஆங்கிலம்,இத்தாலி,ப்ரெஞ்ச், மற்றும் ஜெர்மன் இலக்கியங்களுக்கான பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பாடம் நடத்தும் லாவகத்தில் அவரிடம் மாணவர்கள் கிறங்கிக் கிடந்தார்கள். அதில் முக்கியமானவர் மரியா கார்சியா க்ரேனடோஸ். க்வட்டமெலாவின் ஆளுநர் மிக்கேல் கார்சியா க்ரேனடோஸின் மகளான அவர் மார்த்தியின் மேல் பைத்தியமாகக் கிடந்தார். எனினும் மெக்சிகோ சென்று கார்மெனையே மணந்தார்.


1878 ஆம் ஆண்டு க்வட்டமாலா திரும்பிய மார்த்தி க்வட்டமாலா என்னும் நூலை வெளியிட்டார். அதே காலத்தில் நுறையீரல்நோயால் பாதிக்கப்பட்டிருந்த மரியா கார்சியா மரணமடைந்தார். அவள் நினைவில் வாடிய மார்த்தி 'காதாலால் மரணமான க்வட்டமாலாப் பெண்' எனும் புதினத்தை எழுதினார். மரியாவின் இழப்பால் மனதொடிந்துபோன மார்த்தி அங்கிருந்து க்யூபா திரும்பினார். அங்கே பத்தாண்டுப்போரின் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திட்டார். போர் முடிவடைந்த போதும் ஸ்பானியக் காலனி நீடிக்க, க்யூப விடுதலை அப்படியே கிடந்தது. அங்கிருந்து 1880 ஆம் ஆண்டு வெனின்சுலா சென்றார் அங்கு அவர் வெனின்சுலா ரிவியூ எனும் பத்திரிகை ஆரம்பித்தார். அவரின் எழுத்துக்களால் ஆத்திரமடைந்த வெனின்சுலா அதிபர் மார்த்தியைக் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றினார். நியூயார்க் வந்த மார்த்தி மீண்டும் அங்கே க்யூப விடுதலை அமைப்பை உருவாக்கினார் ப்ரூனோ ஏர்ஸ் பத்திரிகையின் பொறுப்பாளராக இருந்தார்.


பத்தாண்டுப்போரில் தளபதிகளாக இருந்த கோமெஸ், அந்தோணியோ இருவரும் ஒரு உடனடி ராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டனர் அதற்கு மார்த்தியின் ஆலோசனையையும் நாடினார்கள். மார்த்தி ராணுவக் கலகம் செய்து க்யூபாவை மீட்க விருமபவில்லை. தவிரவும் அதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்படாததால் அந்த முயற்சி சிறுபிள்ளைத்தனமானது என்று வாதிட்டார். 1891 ஆம் ஆண்டு மார்த்தியின் மனைவி,குழந்தைகள் அவருடனே தங்குவதர்காக நியூயார்க் வந்தார்கள். மார்த்திக்கு க்யூப விடுதலையை விட குடும்பதின் மீது அக்கறையில்லாதது வந்த சிறிது காலத்தில் தெரிந்துபோனது. கார்மென் குழந்தைகளோடு மீண்டும் ஹவனாவுக்கு கிளம்பினார். அதன் பின்னர் மார்த்தியை அவர்கள் சந்திக்கவே முடியாமல் போனது. வெனின்சுலாவில் விடுதி நடத்திக்கொண்டிருந்த கார்மென் மாரிய மாண்டில்லாவுடன் வாழ்ந்தார். மாண்டில்லாவின் பேரன் புகழ்பெற்ற நடிகர் சீசர் ரொமெரோ பின்னாட்களில் தன்னை மார்த்தியின் பேரனாகவே பிரகடனப்படுத்திக்கொண்டார்.


1892 ஆம் ஆண்டு க்யூப புரட்சிகரக்கட்சியை நிறுவினார். 1894 வரை ப்ளோரிடா,பிலடெல்பியா,டொமினிக்ககுடியரசு, மத்திய அமெரிக்க,ஹயத்தி,ஜமைக்கா,நிகரகுவா போன்ற அயல்நாடுகளில் வாழ்ந்த க்யூப மக்களிடம் சென்று கூட்டங்கள் நடத்தினார் அவர்களிடம் இயக்கத்துக்கான நிதியையும் திரட்டினார். 1895 ஆம் ஆண்டு க்யூப எழுச்சிக்கான வரைவு அறிக்கையை உருவாக்கினார். 1895 ஏபரல் 1 ஆம் தேதி க்யூபாவுக்கு கிளம்பும் முன் ஒரு இலக்கிய சாசனம் எழுதி கன்சோலாவிடம் ஒப்படைத்தார். கோமெஸ், ஏஞ்சல்,ப்ரான்சிஸ்கோ,சீசர்,மர்கோஸ் ஆகியோருடன் க்யூப விடுதலைப்போருக்குக் கிளம்பினார். ஏப்ரல் 11 ஆம் தேதி க்யூபாவை அடைந்தார்கள். அங்கிருந்து நாட்டுக்குள் இருந்த புரட்சிப்படைக்கு தூது அனுப்பினார்கள். ஸ்பானியத் துருப்புக்களுக்கு எதிரான தாக்குதல் நடந்தது. மார்த்தியின் புரட்சிப்படை முன்னேறி மே 13 ஆம் தேதி டாஸ் ரியோ வை அடைந்தது. அங்கே அடர்ந்த பனைகளை அரணாகக் கொண்டுள்ள ஸ்பானியத் துருப்புக்களை எதிர்கொள்வதில் சிரமம் இருந்ததால் கோமெஸ் படைகளைப் பின்வாங்கச் சொன்னார். ஆனால் இந்த தகவல் கிடைக்காத மார்த்தி தனித்துவிடப்பட்டார். 1895 மே 19 ஆம் தேதி மதிய நேரம் ஒரு குதிரைவீரன் வருவதைப் பார்த்து 'இளைஞனே தாக்கு' எனக்குரல் கொடுத்தார். எப்போதும் கருப்புச்சட்டை அணிந்து வெள்ளைக் குதிரையில் அமர்ந்து வரும் மார்த்தியின் தனித்த அடையாளமே அவரை இலகுவாக குறிவைக்க ஏதுவாக இருந்தது.


கொலை செய்யப்பட்ட விடுதலைக்காரர்களின் உடலை கொடுக்காமல் தாங்களே அடக்கம் செய்கிற அதிகாரவெறியோடுஸ்பானிஸ் அரசு அவரைப்புதைத்தது. பின்னர் மீளத் தோண்டியெடுத்தாலும் அவரை எறிக்கத் தடை செய்தது. சண்டியாகோ டி க்யூபா வில் அடக்கம் செய்யப்பட்டார்.


ஒரு ராஜத் துரோகியைப் போல
என்னை இருளில் புதைக்கவேண்டாம்.
நான் சுத்தமான போராளி
நான் சூரியனைப் பார்த்துக்கொண்டே
உயிர் துறப்பேன்.


இந்தக் கவிதை வரிகள் நிஜமாக அவர் க்யூப விடுதலையை சூரியனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டுப்போனார். சூரியன் தகிக்கிற காலம் முழுக்க சுதந்திர வேட்கை எறிந்துகொண்டிருந்தது. அதிலிருந்துதான் ஒரு தீர்க்கமான தீப்பந்தம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தார்கள் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும்.


கிட்டத்தட்ட சேகுவேராவின் வாழ்கைக்குறிப்பைப் போல இருக்கும் மார்த்தியின் வரலாறு. லத்தீன் அமெரிக்க இலாகியத்தின் அப்போஸ்தலர் என வர்ணிக்கப்படும் அவருக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நியூயார்க் மெக்சிகோவிலும் அழிக்கமுடியாத இலக்கியச் செல்வாக்கு பரவிக்கிடக்கிறது. 1959 ஆம் ஆண்டு நியூயார்க் மத்தியப்பூங்காவில் மார்த்தியின் சிலையை அமைத்துக் கௌரவப் படுத்திருக்கிறார்கள். 1869 ஆண்டு முதல் வெளியான அப்தலா தொடங்கி தனது இறுதி நாளில் உருவாக்கிய க்யூப விடுதலைப்ப்போரின் வரைவு அறிக்கை வரை 45 வகையான எழுத்துச் சொத்துக்களை இந்த உலகத்துக்கு விட்டுச்சென்றிருக்கிறார் மார்த்தி.


கவிஞன்,ஓவியன்,கட்டுரையாளர்,நாடகஆசிரியன்,பேராசிரியன்,
குழந்தைஎழுத்தாளன்,மொழிபெயர்ப்பாளர்,பத்திரிகைநிருபர்,
பத்திரிகைஸ்தாபகர்,அரசியல்தத்துவவாதி,ஆயுதம் ஏந்தியபோராளி
எனும் மலைக்கவைக்கும் சாகசக்கரனாக வாழ்ந்து மறைந்தவன்மார்த்தி.தனது நாற்பத்திரண்டு ஆண்டு வாழ்க்கையில் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குமேல் நிலையாக எங்கும் தங்கியிருக்காதஓடுகாலி நமது மார்த்தி.லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் திருப்புமுனையாக இன்றும் போற்றப்படுகிற எழுத்துப்பாணிக்கு சொந்தக்காரன் மார்த்தி. நிகரகுவாக் கவிஞன் ரூபன் டாரியோவுக்கும், சிலிக்கவிஞன் காப்ரியெல்லா மிர்ஸ்டல்லுக்கும் ஆதர்சமாக விலங்கியவை மார்த்தியின் எழுத்துக்கள்.

24.11.09

பேனாவையும் துப்பாக்கியையும் ஒருசேர ஏந்தியவன் - ஜோஸ் மார்த்தி








பனைகள் போல நிமிர்ந்து நிற்கும் தேசத்தில்

வளர்ந்த நான் ஒரு நேர்மையானவன் .

மடியுமுன் எனது ஆவியின் படலை

பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் .



எனது பாடல் தெளிந்தபசுமை
எனதுபாடல் கருஞ்சிவப்பு தீப்பிழம்பு

எனது பாடல் காயம்பட்ட காயம்பட்ட மான்

எனது பாடல் மான் தேடும் வனப்புகலிடம்.



என்னை நோக்கி கரங்கள்

நீட்டும்உண்மையான நண்பனுக்காக.

ஜூலையிலும் அதே போல ஜனவரியிலும்நான்

வெள்ளை ரோஜாவை நடுகிறேன்.



நாம் வாழும் எங்கள் இதய தேசத்தை

கிழிக்கிற குரூர மனிதர்களுக்காக

கம்பிவேலிகளையும் முட்செடிகளையும்

நான் நடப்போவதில்லை

நான் வெள்ளை ரோஜாவையே நடுகிறேன்.



இந்த மண்ணில் வாழும் ஏழைகளோடேஎன்

சொந்த வாழ்வைப்பகிர்ந்து கொள்வேன்

மலையினின்று வழியும் சிற்றருவி

கடலைக் காட்டிலும் சந்தோசம் தரும்.



0



க்வாண்டமேரா என்றழைக்கப்படும், இது கியூபாவின் தேசியப்பாடல். கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கும் எனது மொழியாக்கம். ஒரு கவிஞனாக, ஒரு சிறுகதைப் படைப்பளியாக, நாவலாசிரியராக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட போதும் அவனது தேசத்தின் கால்களில் பிணைக்கப்பட்டிருந்த அடிமைச்சங்கிலிக் கண்ணிகளை உடைக்கும் சம்மட்டிகளாகவே அவை உருமாற்றமடைந்தது. ஓய்வில்லாத அலைச்சல் அதில் கிடைத்த தேடல் எல்லாமே விடுதலைக்கான திசையாகவே இருந்தது அவருக்கு. சட்டமும் படித்தார் சர்வகாலாசாலையில் ஓவியமும் படித்தார். தனது கல்வி கேள்வி அணைத்தையும் விடுதலைக்கான ஆயுதமாக்கியவர் இறுதியில் ஆயுதமேந்திப் போர்க்களம் போனார்.



கியூப விடுதலையின் வீரஞ்செரிந்த விதையாக அறியப்படும் தேசியக் கவிஞன் ஜோஸ் மார்த்தி. நெற்றியில் புரளும் கற்றை முடியோடு ஒரு புரட்சியின் நட்சத்திரம் தரித்த சேகுவேராவுக்கும்-பிடலுக்கும் முன்னத்தி ஏர் இந்த ஜோஸ்மார்த்தி. உலக வரலாற்றில் காணப்படும் விடுதலை வீரர்களோடும், இலக்கியவாதிகளோடும் ஒருசேரத் தனது இருப்பை பதிய வைத்துள்ள போதும் கவிஞனாகவே அடையாளமாகிறான் ஜோஸ் மார்த்தி.

சிறுபிள்ளைகள் என்னருகே வர தடைசெய்யாதிருங்கள்



'' ஏய் இங்க என்னடா பண்றீங்க ''அந்த மூன்று பேரும். ரோட்டை ஒட்டிய பாலத்துச்சுவரில் உட்கார்ந்து காலாட்டிக்கொண்டு முந்திய இரவு பார்த்த சினிமாவைப்பற்றியோ, குடித்த சிகரெட்டைப்பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள். அலட்சியமாகத் திரும்பிப்பார்த்தார்கள். மாடத்தி டீச்சரை அங்கு துளியும் எதிர் பார்க்கவில்லை.'' டே பேச்சிமுத்து, வீடெங்க இருக்கு.. ஸ்கூலுக்கு வராம... ராஸ்க்கல் ''


மாடத்தி ரோட்டை விட்டு இறங்கி அவர்களை நோக்கி நகரவும், குதித்து ஓடி, தெரு முடிவிலிருந்த சுவரில் ஏறிக்குதித்து தண்டவாளப்பக்கமாய் மறைந்துபோனார்கள். துரத்தி ஓடமுடியாத ஆத்திரமும், காந்திநகருக்கு அலையாய் அலைந்து சேர்த்த ஒருவன் வீனாப்போனதும் சகிக்கமுடியவில்லை எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறாள் அவனை பேர் சேர்க்க. தீப்பெட்டி ஆபீசுக்கு போக இருந்தவனை நிறுத்தி குடும்பத்தாரிடம், வெள்ளத்தால் அழியாது, வெந்தனழால் வேகாது என்று கல்வியின் பெருமை சொன்னபோது அவன் வேலைக்குப்போகலைன்னா அடுப்புல சோறு வேகாது என்று அவனது தாயும் தகப்பனும் பதில் சொன்னர்கள். நிப்புக்கம்பெனி மூடியதால், பழைய பேப்பர், பிளாஸ்டிக், பழைய பாட்டில் வாங்கி விற்கும் அப்பா.தீப்பெட்டிக்கட்டு வாங்கி ஒட்டும் அம்மா. வாஸ்த்துப்பாத்து கட்டிய படிகளைப்போல வரிசையாய் ஆறு குழந்தைகள். அவர்களின் வயிறு நிறைக்க முடியாமல் ரெண்டுபேர் சம்பாத்தியம் நொண்டியடித்தது.


பிள்ளைகள் படிப்பார்கள் பேரெடுப்பர்கள் கை நிறையகொண்டு வந்து கொட்டுவார்கள் என்கிற கனவுகள் தோற்றுப்போய் எதார்த்த வறுமை எட்டு வயசிலேயே பையனை வேலைக்கனுப்ப வைத்தது. இந்தக்கதையெல்லாம் செல்லாதபடிக்கு திரும்பத் திரும்ப படிப்பினால் உயர்ந்தோரின் பட்டியலைச்சொன்னார்கள். படிக்கிறவயசில் சிறார்களை வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்று லேசாக கலங்கடித்தார்கள். மசியவில்லை. மாசம் நூறு ரூபாய் ஸ்டைபண்ட் கொடுப்பார்கள் மதியம் சாப்பாடு உண்டு என்று சொன்னதும் கண்கள் லேசாக விரிந்தது. யோசிக்க ஆரம்பித்த தாயை மடக்கி ஒரு எதிர்கால கம்ப்யூட்டர் எஞ்சினீயரை மீட்டெடுத்தார்கள். அதற்கென நாலு நாள் சாயங்காலம் செலவானது, இருட்டிய பின்னால் வீட்டுக்கு வந்தார்கள் .


விளக்குப்போடக்கூட ஆளில்லாமல், பூட்டிக்கிடந்த வாசலில் மாடத்தியின் மகன் வீட்டுப்பாடம் எழுதமுடியாமல் காத்துக்கிடந்தான். சிவகாசி அச்சுத் தொழிற்சாலையில் கணக்கெழுதுகிற கணவன் பதினோருமணிக்கு வந்தபோது பையன் சொல்லியதைக்கேட்டு வீட்டில் ஒருவாரம் சண்டை நடந்தது. இவ்வளவு மெனக்கெட்டுச் சேர்த்த பேச்சிமுத்து மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டான். எல்லாம் வீனாகிப்போனது. கோபம் கோபமாக வந்தது மாடத்தி ட்டீச்சரின் கணவன் நாகரீகமாகக் கேட்ட சில கேள்விகள் இப்போதுகூட முள்ளாகக்குத்தியது.


அந்த அதிகாலை வேலையில் காளியம்மன் கோவிலுக்குப்போய்விட்டுத்திரும்பி வந்த சந்தோசம் கானாமல்போனது. உடனடியாக ஐந்து புள்ளிக்கு ரத்த அழுத்தம் கூடியது. கூட வந்த வார வட்டி முருகேசன் மனைவி '' போனாப்போகட்டும் விடுங்க டீச்சர், அவன் படிக்கலைன்னா அவனுக்குத்தானே நட்டம் ''என்று சொன்னாள். அவளுக்கென்ன தெரியும் இப்படியே நாலைந்து பேர் வராமல் நின்றுபோனால் இவளுக்கு கிடைக்கிற ஆயிரத்து ஐநூறும் நின்னுபோகும் என்று அவளுக்கெப்படித்தெரியும். உண்மையைச்சொன்னால் ஆத்திர அவசரத்துக்கு கிடைகிற இருநூறு ஐநூறு கைமாத்தும், டீச்சர் பட்டமும் பறிபோகும் என்று மாடத்தி பயந்தாள். அந்த உண்மை, " பேரு பெத்த பேரு தாக நீலு ரேது " என்பது போலத்தான். ஊரும், பிள்ளைகளும் அவளை டீச்சர் என்று கூப்பிடுவார்கள். எதிர்ப்படுகிற தீப்பெட்டியாபீஸ் பெண்களெல்லாரும் மரியாதைகொடுத்து ஒதுங்கிப்போவார்கள்.அது மட்டும் தான் இப்போது ஆசுவாசமாக இருக்கிறது. எண்பத்தெட்டாம் வருசம் பதிந்து வைத்த பட்டப்படிப்பு, தட்டச்சு பட்டயப்படிப்பு, ரெண்டும் சேர்ந்து எப்போதாவது வேலை தருமென்கிற நம்பிக்கை சுத்தமாக மண்மூடிப்போனபோது. ஜீவனம் தள்ள இந்த இடத்துக்கு வந்தாள்.


இதற்கும் கூடப் பெரும்போட்டி , சில பேர் வட்டிக்கு வாங்கி பத்தாயிரம் லஞ்சமாகக் கொடுத்தார்களென்று பேசிக்கொண்டார்கள். ஒரு காலத்தில் முறைசாராக்கல்வி என்று பேயரிடப்பட்டு கல்லூரியில் படிக்கிற என் எஸ் எஸ் மானவர்களைக்கொண்டு சேவை நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வேலையில்லா ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இப்போது தொண்டு நிறுவணங்களின் கையில் அந்தப்பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடைகோடிக்கும் கல்வி போக வேண்டுமெனும் உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் இப்போது ரொம்ப பிரபலம். கொள்கைகள் சுருக்கமாக வெளிப்பக்கம் எழுதப்பட்ட டாடா சுமோவின் உள்புறத்தில் குளிரூட்டப்பட்டிருக்கும், எப்போதும் மாறாத செண்டு வாசம் வாகனம் முழுக்க பரவியிருக்கும். செண்டு வாசத்தோடு தொண்டு நிறுவனத்தலைவர் வருவார். '' நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேர'' பாட்டுப்போட்டு பிள்ளைகளை டிரில் வாங்கி, ஆடவைத்து குஷிப்படுத்தவேண்டும். அவரோ பிள்ளைகளைப் புழுக்களைப்பார்ப்பது போல் பார்ப்பார். அவர் வந்து போகிற வரை ஆசிரியைகள் உட்பட எல்லோரும் கைகட்டிக்கொண்டு கால்கடுக்க நிற்கவேண்டும். படியளக்கிற புண்ணியவானாச்சே?. சம்பளம் எண்ணூரில் ஆரம்பித்து இந்தப்பத்து வருசத்தில் ஆயிரத்து ஐநூறில் வந்து நிற்கிறது. இந்த ஆயிரத்து ஐநூறு சம்பளத்துக்கு வாரத்தில் ஐந்து நாள் இன்ஸ்பெக்சன் நடக்கும், மாதத்தில் ஐந்து நாள் மீட்டிங் நடக்கும். அந்த கூட்டங்களில் நாடு போற்றும் பேச்சாளர்கள் வந்து பேசுவார்கள். வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், குழந்தை தொழிலாளர் அவலம், எல்லாம் பிரதானப்பொருளாகப் பேசப்படும். சில நேரம் நாடகங்கள் கூடப்போடுவார்கள்.


அரை மணிநேரம் தாமதமாகப்போனாலோ தலைவலி காய்ச்சல் என்று மத்தியானம் வீட்டுக்குப்போனாலோ, அந்த நாளுக்குறிய சம்பளம் கழிக்கப்படும். வேலை என்பது ஊரிலுள்ள குடிசைப்புறத்து வீடுகளாகப்போய் படிப்பு பாதியில் நின்று போன குழந்தைகள் தேடவேண்டும். அந்தப்பிள்ளைகள் படிப்பதற்கு வெறும் ஐநூறு ரூபாயில் வாடகைக்கட்டிடம் தேட வேண்டும். மழைக்காலத்தில் ஒழுகும் ஓட்டுக்கூரைக்கடியில் நனையாமல் குழந்தைகளைக் காக்க வேண்டும். அந்த ஐம்பது பிள்ளைகளுக்கு சாப்பாடு போட அரிசி பருப்பு தேட வேண்டும். நிர்வாகியின் பிரதிநிதி வந்து '' என்ன செய்வீகளோ ஏது செய்வீகளோ குழம்புச்செலவு ஒரு நாளைக்குப் பத்து ரூபாய்க்கு மேலே போகக்கூடாது, போனால் சம்பளத்தில் பிடிச்சிருவேன்''என்று சொல்லிவிட்டு விறைப்பு மாறாமல் பைக்கில் ஏறிப்பொய்விடுவார்.


சம்பளமும் மூனு மாசம் நாலு மாசம் சேர்த்து சேர்த்துத்தான் பட்டுவாடா பண்ணப்படும். அது வரை ஏதாவது நகைகளை அடகு வைத்துத்தான் அடுப்பெரிக்க வேண்டும்.அதுவுமில்லாதவர்கள் அண்டை அயல் வீடுகளில் குறைந்த வட்டிக்கு வாங்கி காலம் தள்ளவேண்டும். இதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு டவுசர் கிழிந்த பிள்ளைகளுக்குப்பாடம் சொல்லித்தரவேண்டும். ஐஸ் விற்கிறவனையும், வடை விற்றுக்கொண்டுபோகிற பெண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கிற அவர்களைக் கம்பெடுத்து அடிக்கவேண்டும். அடிவிழுந்த இடத்தில் வலி குறைவதற்குள் அவர்களுக்கு ஆறுவது சினம் சொல்லிக்கொடுக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு காலையும் ஸ்கூல் வாசல் நுழகிற போது நாற்பது சுரத்தில் சேர்ந்து குட்மார்னிங் டீச்சர் சொல்லும் போதும், எங்காவது பொது இடங்களில் பார்க்கும் போது எழுந்து நின்று மரியாதை செய்யும் போதும் உருவாகிற போதையில் இந்தப்புலப்பமும் வலிகளும் தீர்ந்துபோகும்.


பேசிமுத்து வராதது ஒரு வாரத்துக்கு திக் திக்கென்று இருந்தது. அந்தப்பக்கமாகக் கடந்து போகிற எல்லா ஜீப்பும், பைக்கும் லேசான உதறலை உண்டுபண்ணிப்போனது. வேலிக்காட்டுக்குள் சாராயம் காச்சுகிறவர்கள் கூடக் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க முடியும். இந்த நூறு ரூபாய் பள்ளிக்கூடத்தில் எந்த நேரமும் நெருப்பைக்கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். வேலை அப்படி.போக்குவரத்து துறை தவிர, தமிழக அரசின் முக்கால் வாசி இலாக்கக்களிலிருந்து ஆய்வுக்கு வருவார்கள்.புதிதாக வந்த சப்கலெக்டர் ஒரு வெளிமாநிலத்துக்காரர். இளம்பெண் அதிகாரி. அந்தப்பக்கமாக போன ஜீப்பை நிறுத்தி மடமடவென உள்ளே வந்தது. இந்தமாதிரி ரொம்பப்பேர் வருவாங்க. வெளிநாட்டு, உள்நாட்டு தொண்டு நிறுவணங்கள். அப்புறம் மனித வள மேம்பாட்டுத் துறையிலிருந்தெல்லாம் வருவார்கள்.புரியாத மொழியில் புரியாத விஷயங்கள் பேசிவிட்டு.கையடக்கமான வீடியோ கேமராவில் ஒளியற்ற முகங்களைப்படம் பிடித்துக்கொண்டு போவார்கள்.
அதுபோலத்தான் அந்த சப்கலக்டெர் வந்தது. பசங்களிடம் கேள்வி கேட்டது தமிழுக்கே தரிகனத்தான் போடுகிற பிள்ளைகள் இங்கிலீஸுக்கேள்விகளால் நிலைகுலைந்து போனார்கள்.அவ்வளவுதான் அம்மா வேபங்கொலையில்லாமல் சாமியாடியது. தாட் பூட், கக்கிரி,புக்கிரி என ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஏதேதொ திட்டியது. பசங்களுக்கு அந்த மொழி புதிராக இருந்தது.மனநிலை சரியில்லாத காதர் என்கிற நாலாவது படிக்கிற பையன் சப்கலெக்டருக்கு பதில் சொல்லுகிற மாதிரி அவனும் இஷ்ட மிஷ்ட டிரிங்,புரிங் என்று சொல்லவும் பிள்ளைகள் ஒட்டுமொத்தமாக சிரித்துவிட. அம்மா ஓட்டைச்சேரில் உட்கார்ந்து மெமோ எழுத ஆரம்பித்தது அதுவரை பேசாதிருந்த உதவியாளர் அவரது ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார்.


பேச்சிமுத்துவை முற்றிலுமாக மறந்துபோயிருந்த ஒரு நாளில் கலை இலக்கிய இரவு பார்க்கப்போனாள் மாடத்தி டீச்சர். நிகச்ழ்சி ஆரம்பிக்கும் முன்னாள் கூட்டத்திற்குள் ஒரு சிறுவன் சம்சா விற்றுக்கொண்டு அலைந்தான். தூரத்திலிருக்கும் வரை காட்சியாக இருந்த அவன் பக்கத்தில் வந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அவன் பேச்சிமுத்துவே தான். கூப்பிட்டு விசாரித்தபோது அப்பாவுக்கு தீராத வயிற்று வலியெனவும் வேலைக்கு போகவில்லை அதனால் சம்சா விற்க வந்துவிட்டேன் என்றும் சிரித்துக்கொண்டே சொன்னான். ஹோமியோபதி டாக்டரிடம் காட்டச்சொல் ஐம்பது ரூபாய்க்குள் சொஸ்தமாகிவிடும் என்று பேருக்கு சொல்ல மறுநாள் பேச்சிமுத்துவின் அப்பா ஸ்கூலுக்கே வந்து விட்டார். டீச்சர்கள் எல்லாம் சேர்ந்து ஆளுக்குப் பத்துரூபாய் போட்டு அவரை ஹோமியோ டாக்டரிடம் அனுப்பி வைத்தார்கள். ஒருவாரத்தில் ஆச்சரியம் ஒன்று நடந்தது. சைக்கிளின் முன்பக்கம் உட்காரவைத்து அவரே பேச்சிமுத்துவைக் கூப்பிட்டு வந்தார். வயித்து வலி சரியாப்போச்சு டீச்சர் என்பதை வார்த்தைகளிலும் நன்றியைக்கண்களிலும் சொல்லிவிட்டு பின்னாலிருந்த மரப்பெட்டியிலிருந்து ஐந்து கொய்யாப் பழங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்.அன்றைக்குப் பூராவும் டீச்சர்கள் பேச்சிமுத்து வந்த சந்தோசத்தில் அவனைப்பற்றியும்,அவனைக் கூப்பிடப்போன சம்பவங்களையும் அசைபோட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.


இப்பொதெல்லாம் காலை எட்டுமணிக்கே பேச்சிமுத்து வந்துவிடுகிறான். மூணுதெரு தள்ளியிருக்கும் குளோரி டீச்சர் வீட்டுக்குப்போய் சாவி வாங்கி வருவது.அவனே திறந்து அந்த கைப்பிடி போன பெருக்குமாறால் பள்ளிக்கூடத்தை பெருக்குவது. ஒவ்வொரு டீச்சர் வரும்போதும் ஓடிப்போய் பையை வாங்கி வருவது. எங்காவது கடைக்குப் போகச்சொன்னால் அடம்பிடித்து சண்டைபோட்டு முந்திக்கொண்டு தானே போவது. டீச்சர்கள் இல்லாத பொழுதுகளில் பிள்ளைகளைக்கவணிப்பது என்று அந்த பள்ளிக்கூடத்தில் அவன் எல்லாமுமாகிப்போனான். கொடைக்கானல் சுற்றுலாவுக்கு கூட்டிக்கொண்டு போனப்பிறகு அவன் இன்னும் கூடுதல் பிரியமானவனாக மாறிப்போனான். ஒருமாதத்துக்கு முன்னமே கொடைக்கானல் போகிறோம் வேன் செலவுக்கு ஆளுக்கு ஐம்பது தரவேண்டும் என்று சொன்னதிலிருந்தே அவன் சுறு சுறுப்பாகி விட்டான்.ஒவ்வொரு நாளும் மாடத்தி டீச்சரிடம் ஒரு ரூபாய் கொடுத்து சேர்த்து வைத்தான். ஐஸ் வண்டி வரும்போது வெளியே வராமல் உள்ளேயே இருந்து புஸ்தகம் படிப்பதாகப் பாவனை பண்ணிக்கொண்டான். கொடைக்கானல் போக இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்பதையும், எவ்வளவு பணம் சேர்க்கவேண்டு மென்பதையும் தினம் தினம் மாடத்தி டீச்சரிடம் நச்சரிப்பான். அப்போது அவன் கண்களில் இருக்கிற ஏக்கம் அதள பாதாளங்களையும் தாண்டிய பாதாளத்தில் இருக்கும். பிறகு அவனே மனதுக்குள் ஒரு கணக்குப் போடுவான் பிறகு சோர்ந்து போவான்.


கொடைக்கானல் போக இன்னும் நான்கு நாட்கள் தான் இருந்தது. அப்போது அவன் கணக்கில் இருபத்தி எட்டு ரூபாய் தான் இருந்தது. அதைக்கேட்டதிலிருந்து மிகவும் சோர்வாய்க் காணப்பட்டான். எந்த நேரமும் மற்ற பிள்ளைகளை அதட்டிக்கொண்டும், அடித்து அழவைத்துக்கொண்டுமிருக்கிற பேச்சிமுத்து இப்போது மூலையில் உட்கார்ந்து நிறையச்சிந்திக்க ஆரம்பித்து விட்டான். பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து அவனைக்கேலி செய்ய அழுதுகொண்டிருந்தான். கனகா டீச்சரிடம் 'துட்டு கொறைய்யாக்குடுத்தா கொடைக்கானல் கூட்டிக்கிட்டு போகமாட்டீங்களா டீச்சர் ' என்று கேட்டான் " டிக்கட்டுக்கு ஐம்பது செலவுக்கு வேற பணம் இருக்கு அதனால எழுபது ரூபாயாச்சும் இல்லாயின்னா நீ கிடையாது " என்று கட்டன் ரைட்டாச் சொல்லியயதும் சுத்தமாக நொறுங்கிப்போனான். கொடைக்கானல் போவதற்கு இன்னும் இரண்டு நாள் தானிருந்தது. படந்தால் ரோட்டில் இருக்கிற இதேமாதிரியான இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு ஆள் அனுப்பி எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டியதிருந்தது. ஓட்டு கூறை வாய்பிளந்து கிடக்கிற அந்தப்பள்ளிக் கூடங்களில் தொலை பேசி என்பது எட்டாக்கனி.
தூதனுப்ப பேச்சிமுத்துவைத் தேடும்போது தான் அவன் ரெண்டு நாள் வராதது தெரிய வந்தது. பக்கத்து வீட்டு கனிமொழியைக் கேட்டதற்கு எங்கம்மாவுக்கும் அவங்கம்மாவுக்கும் சண்டை எனக்குத்தெரியாது என்று சொல்லிவிட்டாள். சிவக்குமாரை அனுப்பி கூடிவரச்சொன்னதற்கு பள்ளிக்கூடத்துக்குத்தான் போயிருப்பதாக அவன் அம்மா சொன்னதாகச் சொன்னான். இதைக்கேட்டதும் டீச்சர்மாரெல்லாம் ஆடிப்போனார்கள். நாளைக்கு தாய் தகப்பன் வந்து பிள்ளையைக்காணோம் என்று கேட்டாள் என்ன செய்ய எனும் உதறல் வந்தது. கொடைக்கானல் போக இன்னும் ஒரு நாள் தானிருந்தது இந்த நேரத்தில் இதென்ன சோதனை என்று ஆளாலுக்கு அங்களாய்த்தார்கள். மறு நாள் மதியச் சாப்பாட்டுக்கு பிள்ளைகள் தயாராகிகொண்டிருக்கும்போது ஒண்ணுக்கிருக்கப்போன பக்கத்து வீட்டுக் கனிமொழி ஓடி வந்து மூச்சிறைக்க ' டீச்சர் டீச்சர் பேச்சிமுத்து ' என்று சொல்லி நிறுத்தினாள். பள்ளிக்கூடம் மொத்தமாகத் திரும்பிப்பார்த்தது. திரும்பவும் டீச்சர் டீச்சர் பேச்சிமுத்து என்று சொன்னாள். ஆயாம்மாதான் ' ஏ சொல்லுடி ஒடைஞ்ச ரிக்காடு மாரி சொன்னதெயே சொல்லிக்கிட்டு ' என்று அரட்டினார்கள்.


ரோட்டில் தையல் கடை நிழலில் பேச்சி முத்து இருப்பதைச்சொல்லியதும் அப்பாட என்றிருந்தது. பையன்களை அனுப்பிக்கூட்டி வரச்சொன்னதற்கு பயந்து கொண்டு வரவில்லை. மாடத்தி டீச்சர் போய்பார்த்தது. வெண்டைக்கய் மாதிரி வதங்கி அழுக்குச்சட்டையோடு பிச்சைக்காரனைப் போலிருந்தான். மாடத்தி டீச்சரைப் பார்த்ததும் கண்கள் நிரம்பியது. சாப்பிட்டிருக்கமாட்டான் என்று தெரிந்தது " சாப்பிட்டயாடா " கேட்டதற்கு ஆமாம் எனத் தலையாட்டினான்." இல்ல வா சாப்பிட " என்று சொல்லித் தலையைத் தொட்டதும் கேவிக்கேவி அழுதான். ரெண்டு நாள் பள்ளிக்கூடம் போகிறேனென்று சொல்லி விட்டு சம்சா விற்கப்போயிருக்கிறான் அவனுக்கு சரக்குக்கொடுக்கமாட்டேனென்று கடைக்காரர் சொல்லியதோடல்லாமல் " நீங்க தான் படிச்சு கம்ப்யூ..ட்டர் எஞ்சினீராகப் போறீகள்ள போங்க " என்று குத்தலாகப்பேசியது அவன் கண்முன்னே இன்னொரு பேச்சிமுத்துவுக்கு சம்சா எண்ணிப்போட்டது. பிறகு தேவி தியேட்டருக்குப்போய் கெஞ்சிக் கெதறிக் கேட்டு இண்டர்வெல்லில் முறுக்கு விற்றது. பேப்பர் பொறுக்கி கடையில் போட்டது எல்லாம் சொல்லிவிட்டுப்பைக்குள் கைவிட்டு பதினைந்து ரூபாய் சில்லறையாக மாடத்தி டீச்சரிடம் நீட்டினான்.


" இத வச்சிக்கிட்டு என்னியக் கூட்டிக்கிட்டுப் போங்க டீச்சர், நா எப்டியும் சேத்து வச்சி ஒங்களுக்கு மிச்சத்துட்ட தந்துருவேன் "
சொன்னதும். மாடத்தி டீச்சருக்கு மட்டுமல்ல அங்கிருந்த பிள்ளைகளும் ஆயாவும் வார்த்தைகள் மறியல் பண்ண கண்ணைக் கசக்கிக்கொண்டு நின்றார்கள்.
சமூகம்,குழந்தைத்தொழிலாளர்,சிறுகதை