தேசிய நெடுஞ்சாலை ரெண்டாய்ப்பிளக்கும் நகரம் சாத்தூர்.வைப்பாறு படுத்திருக்கும் வடகரையில் அமர்ந்திருக்கும் வளரா நடு நகரம்.ஒருகாலத்தில் மணல் பெருக்கெடுத்தோடிய பெருமையுடைத்து நம்ம வைப்பாறு.ஹார்வி( மில்லும்)பஞ்சாலையும்,மதுரா கோட்சும் இங்கிருந்தது என்று சொன்னால் என்னைக் கல்லால் அடிக்க வர்லாம்.ஆனால் அதன் எச்சங்களான வேதக் கோயில் கோபுரமும்,இந்து.... பாடசாலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கிற எத்தல்ஹார்வி,எட்வர்டு பெயர்கள் கட்டாயம் காரணம் சொல்லும். வேதக் கோயில் கோபுரம் எத்தனைமைல்கல்லுக்கு அப்பாலிருந்து பார்த்தாலும் சிலுவையோடு தெரியும்.கரிசல் கிராமங்களின் காலை நேரங்களில் சூரியன் பட்டுத் தெறிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும்.மாலைநேரத்து மஞ்சள் வெயில்பட்டுத் தெறிக்கும் வேதக்கோயில் கோபுரமும் பால்யத்தில் பொதிந்து கிடக்கும் நினைவுகளில் ரொம்ப உசரமானவை.
'அடே காமராசு, காலைல ஏறுனா சாய்ங்காலம் ஆகிறும் கோவரத்து உச்சிக்கு போக தெரியுமா ?' என்று சொன்னபடி தன் டவுசரை ஏத்தி விட்டு அண்ணாக் கயிறால் இறுக்கிக் கட்டிக்கொண்டு நிற்கும் கந்தசாமி தான் அப்போது எங்கள் அறிவு டார்ச்.அவன் எது சொன்னாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.அவனோட அக்கா புருசன் வெவரக்கார சாமிதாசுதான் ஊரிலிருந்து சாமியாரைப் பார்க்க வாராவாரம் போய்வரும் ஆள்.
பதிலுக்கு சாமியார் வருசா வருசம் பண்டியலண்ணிக்கு(க்ரிஸ்துமஸ்) வருவார்.அன்னைக்குத்தான் குள்ளிப்பிளசர்(அம்பாசடர் கார்) ஊருக்கு வரும்.அதைத்தொட்டுப் பார்க்கவும்,கார்க் கண்ணாடியில் பல்லைக்கட்டிச் சிரிக்கவும் பசங்க கூட்டத்தில் அடிபுடி நடக்கும்.ஆனால் எனக்கு அதிலேதும் நாட்டமிருந்ததில்லை.தூசி படிந்த பின்புறத்து கண்ணாடியில் சிவாஜி வாழ்க,எஸ்கேஆர் இப்படி எழுதினால் தான் தூக்கம் வரும்.அல்லது சாமியாருக்கு பக்கத்தில் நின்றபடி 'அருள் நிறைந்த மரியே வாழ்க' மணப் படமாகச் சொல்லி அவர் பாராட்டுவாங்கவேண்டும்.கன்னத்தைப்பிடித்து கிள்ளி மலையாளம் கலந்த தமிழில் என் பெயெரென்னவெனக் கேட்க வேண்டும். இது நடந்து ரெண்டு நாளைக்கு நான் தற்காலிகத் தலைவ னாகிவிடுவேன்.பழைய்ய தலைவன் கந்தசாமி எங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கமாட்டான்.
சாமியாரைப்பற்றி பல மயிர்க்கூச்செறியும் ஹேஸ்யங்கள் சொல்லுவான்.அவர் சாப்பிடவே மாட்டாராம் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும் போதே மானத்திலிருந்து பன்ரொட்டியும் பாலும் வருமாம்.அவர் போட்டிருக்கிற வெள்ளைஅங்கி அழுக்காகவே ஆகாதாம்.அப்படியே ஆனாலும் சம்மணசுகள் ( தேவதைகள்) வந்து சரிசெய்துவிடுமாம்.பகல்பூராம் பார்க்கமுடியுமாம். ராத்திரியானால் ரூமுக்குள் போய் ஆவியாகி காணாமல் போய்விடுவாரம்.இதையெல்லாம் சொல்லும் போது எல்லோரும் டவுசரைக் கழற்றிக்கொண்டு ஓடையில் இருந்தோம்.அதனால் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. கேட்டேன்.'சாமியப்பத்தி தூஷனமாவா கேக்க இரு செம்பட்ட...' என்று சொல்லிக்கொண்டே கழுவாமல் ஓடிப்போய் அவனுடைய மாமனிடம் சொல்லிவிட்டான்.சாமி கண்ணக்குத்திப்புடும் என்கிற பயம் ஒரு பக்கம். சாமியின் சேவகன் அடித்துவிடுவானென்கிற பயம் இன்னொரு பக்கம். ஒரு வாரம் அவன் வீட்டு வழியே போகாமல் ஒரு தெரு சுற்றித்தான் பள்ளிக்கூடம் போனேன்.
ஒரு ராத்திரி நேரத்தில் சுற்றிப்போகத் தெம்பில்லாமல் அவன் வீட்டு வழியே போனேன்.வீட்டு முற்றத்தில் சப்பிட்டு விட்டு மொழுகுநீட்டி உட்கார்ந்து வளமை பேசிக்கொண்டிருந்தார்கள்.சரஸ்வதியும் இருந்தாள்.ஏதோ நடக்கப் போகிறது என்று தலையைக்கவிழ்ந்து கொண்டு நடந்தேன்.என் தலை தெரிந்ததும் ஒரே சிரிப்புச்சத்தம். எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவளும்தான். திடுத்திடுவென ஓடிவந்துவிட்டேன். ஏன் சிரித்தார்கள்.?
செம்பட்ட....கெட்டவார்த்தையில் என்னைத் திட்டிக்கொண் டலைவான். மூன்றாம் நாள் சாயங்காலம் கூப்பிட்டு வா தலைமையேற்றுக் கொள், மலங் காட்டுல ராத்திரி ராத்திரி ஏன் தீப்பிடிக்கிறது சொல் எனக்கேட்போம். கொஞ்ச நேரம் பிகுப் பண்ணிவிட்டு 'அப்ப நீ ஏண்ட மன்னிப்பு கேலு' என்பான். மண்ணிச்சிக்கோ ஆனா புருடா மட்டும் விடக்கூடாது என்பேன்.விசுக்கென எழுந்து குண்டி வரை கழன்ற டவுசரைத் தூக்கிவிட்டுக்கொண்டு கிளம்புவான். கூட்டம் என்னைக் கெட்டவார்த்தையில் திட்டும்.எல்லா வசவுகளையும் வாங்கிச் செரித்துக்கொள்வேன் சரஸ்வதிக்காக.அவள் கந்தசாமியின் தங்கச்சி.அவ கெடக்கா விடுங்க. சிரிக்கும்போது பச்சரிசிப்பல் தெரியும். குளிச்சமஞ்சளின் வாசம் சாத்தூர் தாண்டி வீசும்.கணக்குப்பாடம் சந்தேகம் கேட்கும் போது அவள் கூழுக்கு கடித்த வெங்காயத்தின் வாசம் கட்டாயம் மணக்கும்.பெயரும் பெயரும் அருகிருக்கும் அழகு பார்த்து மகிழ்ந்து போன அது மயிலிறகுக் காதல்காலம்.அது எதுக்கு இப்போ?.
அந்த தேவதைக்காக கந்தசாமிசொல்லும் பேய்க்கதையை நம்புகிற மாதிரி முகத்தை வைக்கவேண்டும்.ரெண்டுவார்த்தை சொல்லிவிட்டு என்முகத்தை உற்றுப்பார்ப்பான்.கொள்ளிவாய்ப்பிசாசுகள் தான் மலங்காடுகளில் ராத்திரி நேரம் தீயாக வேசம் போட்டுக்கொண்டு அலையும் என்பான்.அதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.ஏனென்றால் அவனது பெரியம்மா வீடு மூணாறு எஸ்டேட்டில் இருக்கிறது.உடனே தமிழ்சினிமாவில் வரும் கண்ணாடி பங்களாவை கற்பனை செய்துகொள்ளவேண்டாம்.வீடு குடிசை வீடுதான். தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு பங்களாவா கட்டித்தருவான் மொலாளி. ஒரு தரம் அங்கே கல்யாணத்துக்கு போய்விட்டு வந்தான் கந்தசாமி. ஆகிற படியால் அவன் பேயை நேரடியாகப் பார்த்திருப்பான் என்று எங்கள் கூட்டம் நம்பியது.
பேய்க்கதை கேட்டண்ணிக்கு ஏழுபேரும் ஒருத்தன் கையை ஒருத்தன் பிடிச்சபடித்தான் அலைவோம்.அதிலும் கந்தசாமி கையைப்பிடிப்பதற்கு கடும் போட்டி நடக்கும்.பேயைப்பார்த்ததும்,சூலாயுதத்தை நீட்டலாம், இரும்புக் கம்பியைக்காட்டலாம், தீக்குச்சி எடுத்து பொருத்தலாம்.இதுல எதாச்சிலும் செய்தால் பேய் காத தூரம் ஓடிப்போகும் என்பான்.அதுக்காக பையில் எப்போதும் ரெட்டைக் கிளித் தீப்பெட்டி வைத்திருப்பான்.தடுக்கி விழுந்தால் தீப்பெட்டிக் கம்பெனிகள் இருக்கிற ஊரல்லவா. எல்லோர் பையிலும் கிடக்கும் தீப்பெட்டியை நானும்கூட எடுத்து டவுசர் பைக்குள் போட்டுக்கொண்டு அலைந்தேன்.அதனால் பீடிகுடிக்கத்தான் வைத்திருக்கிறேன் என்று நினைத்த என் தாய்மாமன்களிடம் அடிவாங்கியதுதான் மிச்சம்.
இந்த அடிகளும்,கெட்டவார்த்தை வசவுகளும்,பயம் கலந்த பால்யமும் அடுக்குப்பானைக்குள் ஒளித்து வைத்த தினைமாவைப்போல் வாசமும் இனிப்புமாக முகத்திலடிக்கிறது.
10.11.10
8.11.10
குழந்தையும் தெய்வமும்.
மதுரை டவுன்ஹால் ரோட்டின் தீபாவளிக்கு முந்திய வாரம். அந்த பாட்டா செருப்புக் கடையின் வாசலில் ஒரு பெரிய தூக்குப் பையோடு வந்தாள் அவள். வயதுக்கு மீறிய சுமை.இறக்கிவைத்து விட்டு கையை நீட்டி உதறிக் கொண்டாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்த இடத்தில் உட்கார்ந்து விட்டாள்.
சரி உடன் வந்த அம்மா அப்பா வருகிற வரை அங்கே உட்கார்ந்திருப்பாள் போல என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது பையின் ஜிப்பை திறந்தாள்.சதுர சதுரமான ப்ளாஸ்டிக் பைகளை எடுத்து கீழே போட்டாள். அதிலிருந்து ஒன்றை எடுத்து நுனியில் வாய் வைத்து ஊதினாள்.ஆஹா கிடைத்த சிறிது நேரத்திலும் தன் விளையாட்டுப் புத்தியை விடவில்லையே,குழந்தைகள் குழந்தைகள் தான் என்று சந்தோஷமாக இருந்தது.
ஊதிப்பெருக்கிய பொருள் ஒரு காற்றுத்தலையணையானது.பின்னர் ஒவ்வொன்றாக எடுத்து பத்துப்பதினைந்து காற்றுத் தலையணைகளை உருவாக்கி அதை எல்லாம் இணைத்து கட்டி பாதசாரிகளின் பார்வையில்படும்படி வைத்துவிட்டு தெருவை வெறித்தாள் அந்தச்சிறுமி.
ஒரு குட்டி லட்சுமி மிட்டல் டவுன்ஹால் வீதியில் தனது வியாபாராப் பயணத்தை ஆரம்பிக்கிறாள். இந்த உலகமயமாக்களில் அவளின் அன்றைய வியாபார இலக்கு என்னவாக இருக்கும்.இந்த போட்டிகள் நிறைந்த வியாபார உலகில் அவளின் உடனடி போட்டியாளர் யாராக இருக்கும்.யோசித்து வையுங்கள்.
முதல் நபர் வந்து விலைகேட்டார் ஹிந்தியில் நாற்பது ரூபாய் என்று சொன்னது.பேரம் பேசினார் உறுதியாக மறுத்து முதல் போனியை ஆரம்பித்தது.பணத்தை எண்ணி சரிபர்த்து முகத்தில் ஒற்றிக்கொண்டு பிரார்த்தனை பண்ணியது. பார்த்துக்கொண்டிருந்த நமக்கே பதற்றமாக இருந்தது.அந்தக் கடவுள் என்னவாக ஆகியிருப்பார்.

7.11.10
ஓபாமாவிடம் கேட்கப்பட்ட அசட்டுக்கேள்வி.
தீபாவளிக்காக கரியாக்கப்பட்ட பொருளாதாரத்தைவிட அதிகம் திரு.பாரக் ஓபாமாவின் வருகைக்காக இந்தியா ஒதுக்கியது.செலவுக்கதிகமான எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் கூடிக்கொண்டே போனது. எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள்,கருத்து மோதல்கள் என ஊடகங்களின்மூலம் அல்லோல கல்லோலப்பட்டது தேசம்.சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் விளம்பர நேரத்தில் இடம் பிடிக்காதது மட்டும் தான் குறை. எல்லாம் ஒரு அமெரிக்க அதிபர் சம்பிரதாய வருகைக்காக.
வந்தவர் மும்பை புனித சேவியர் கல்லூரியின் மாணவர்களோடு உரை யாடினார். கேள்விகளும் பதிலுமான அந்த நேரத்தை உலகம் உற்றுக் கவனிக்கிறது. ஒரு மாணவி 'ஏன் பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாக அறிவிக்கவில்லை, ஏன் இன்னும் நீங்கள் நட்பு பாராட்டுகிறீர்கள்' என்று கேட்டிருக்கிறாள். இந்தக்கேள்வியும் அதற்கு திரு.பாரக் ஓபாமா சொன்ன பதிலும் தான் இந்த நிமிஷத்தின் தலைபோகிற பிரச்சினையாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. நல்ல வேளை ஜாவேத் அக்தாரை மெல்லமாக பந்துவீசச் சொல்லுங்கள் என்று கேட்கவில்லை.
'டைம்ஸ் நௌ' தொலைக் காட்சியின் நேரலையில் மும்பைத் தாக்குதலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கபட்டுக் கொண்டிருக்கிறது.பிரதம செய்தியாளர் மும்பை,டெல்லி போன்ற நகரங்களின் நிருபர்களோடு தொடர்பு கொள்கிறார் நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவர்களும் பதறுகிறார்கள்.அங்கிருந்து இஸ்லாமாபாத்துக்கு தொடர்புகொண்டு பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலாளரிடம் பேசுகிறார்.தொழில் நுட்பத்தின் சகல தகிடு தத்தங்களையும் உபயோகித்து அவரது பதிலை ஒரு எறிகிற பிரச்சனையாக்குகிறது தொலைக் காட்சி வியாபாரம்.
அடிப்படையில் அமெரிக்கா ஒரு ஆயுதவியாபார தேசம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டாவது பாகிஸ்தானைக் 'கிள்ளுகிறான் முள்ளுகிறான்' என்று சொல்லி பிராது கொடுக்கிற அளவுக்கு அமெரிக்கா ஒன்றும் சட்டாம்பிள்ளையில்லை.அது ஒரு உலக நாட்டாமையும் இல்லை.உலகத்துக்கே நீதிசொல்லுகிற அளவுக்கு மனிதவளமும், அறிவுத் திறனும் இருக்கும் 117 கோடி ஜனத்தொகை கொண்டவர்கள் நாம்.அதை மறந்து அமெரிக்காவிடம் நியாயம் கேட்கிற அளவுக்கு இந்தியா கையறுநிலைக்குப் போய்விட்ட காரணம் என்ன?பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து விடுவதன் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்.லாபமிருக்கா இல்லையா வெனத்தெரியாது.ஆனால் அறிவித்தால் அது அமெரிக்காவுக்கு எவ்வளவு நஷ்டம்.
போபால் விஷ வாயுக் கசிவினால் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் அவலம்,பிடி கத்திரிக்காய்,காப்புரிமை,அனு ஆயுதபரவல், சந்தைப் பொருளாதாரம் போன்றவை குறித்து அமெரிக்காவிடம் கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரமாயிரம் இருக்கிறது.அது பற்றி அந்தப்பெண்ணுக்கு தெரியுமோ தெரியாதோ.
இதையெல்லாம் தெரியாத ஒரு மாணவியின் அசட்டுக்கேள்வியை இந்த தேசத்தின் கோரிக்கையாக்கப் பார்ப்பது எவ்வளவு கபடம் நிறைந்தது. இது ஒரு மாணவியின் அசட்டுக் கேள்வி மட்டுமல்ல ஒரு 63 ஆண்டுகாலம் ஊட்டிவளர்த்த வெறுப்பின் பிரதிபலிப்பு.ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்ட இந்த பகைக்குப்பின்னாடி மிகப்பெரிய மேல்மட்ட அரசியல் இருக்கிறது. அதற்குப் பின்னாடி சர்வ நிச்சயமாக ஊடகங்கள் இருக்கின்றன.(அந்தக்கேள்விக்கு ஒரு நீண்ட பதிலைச்சொல்லிய திருமிகு ஓபாமா இறுதியில் 'இரு நாடுகளும் உட்கார்ந்து பேசித்தீர்க்கவேண்டிய விடயம் இது' என்று சொல்லுகிறார்.)இந்த ஊடக நாடகத்தின் தொடர்ச்சியாக இன்று மாலை அரசு முறைச் சந்திப்பாக பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை சந்திப்பதையும், 20 நிமிட நேரம் தனியே உரையாடுவதையும் அறிவிக்கிறது. ஆறு அம்ச ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகிறது என்பதை போகிறபோக்கில் சொல்லி விட்டுக் கடந்துவிடுகிறது.
சாமான்யன் முதல் அறிவு ஜீவி வரை எதிரும் புதிருமாக அடித்துக்கொண்டு பொழுதுபோக்க புனித சேவியர் கல்லூரி மாணவியின் கேள்வி.மேல்மட்ட இந்தியா இன்னும் கொழிப்பதற்கு தங்கு தடையில்லாத ஒப்பந்தங்கள்.

Subscribe to:
Posts (Atom)