6.9.15

நான்கு நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கிறோம்


பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கிறது சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்துச்சொன்னார் கலிலியோ. பூமிதட்டையானது என பைபிளில் சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு சிதைப்பதால் மத நம்பிக்கைக்கு எதிரானது இந்த கண்டுபிடிப்பு என்று பிரகடனப்படுத்தியது கத்தோலிக்கசபை.  திருச்சபையின் உயர்மட்டக்குழு கலிலியோவை ரோமுக்கு அழைத்தது. போப் உள்ளிட்ட மதகுருமார்களுக்கு தனது கண்டுபிடிப்பை விளக்கிக் கூற வாய்ப்பளித்து நீதிசெய்தது நானூறு ஆண்டு களுக்கு முந்தைய மூடநம்பிக்கை.  கத்தோலிக்க கார்டினல்களில் பலபேர் கலிலியோவின் அபிமானிகளாய் இருந்த காரணத்தால் அவரது வாதம் பின்னாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்து மதத்தின் முடைநாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைகளை,ஜாதீயக்கட்டுமானங்களை எதிர்த்துக்கிளம்பிய இயக்கங்கள் ஏராளம், அதற்கு ஆணீவேராய் இருந்தது புத்தமதகொள்கைகள்.ஜைனம்,வீரசைவம்,சமணம்,சீக்கியம்,சூவ்பித்ததுவம்,ஆகிய இந்திய புராட்டஸ்டண்டுகள் உருவாவதற்குக் காரணமாக இருந்ததும் புத்தமதம். படையெடுத்துக் கைப்பற்றியதை விட அசோகன் புத்த மதத்தை போதித்துச் சம்பாதித்து அதிகம்.அதனால்தான் கிட்டத்தட்ட 28 முறை போதிமரம் வெட்டப்பட்டது.நாலந்தா பல்கலைக்கழகம் தரைமட்டமாக் கப்பட்டது, நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அதனால் தான் இன்றுவரை ஒருகுண்டூசியைக் கூட சொந்தமாக கண்டுபிக்க இயலாத கபோதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதோ இந்த 2105 ஆம் ஆண்டில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை எழுதியதால் கல்புர்கி கொல்லப்பட்டிருக்கிறார். ஷீனா போராவுக்கு கொடுக்கப்படுகிற ஊடக முக்யத்துவம்,சாக்‌ஷி மகராஜின் மேல் விழுகிற ஊடகவெளிச்சம் இந்த அறிவுப்படுகொலை யின்மேல் விழமறுத்துவிட்டது. மேலை தேசத்தில் போட்டி விளம்பரத்துக்காகவேணும் இவ்வாறான செய்திகள் எதிர்முகாம்களால் பெரிதுபடுத்தப்படும். அந்தோ இங்கு எல்லோரும் தங்களைத்தற்குறியாக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். அதானல் தான் எல்லா ஊடகங்களும் இதை ஒருவரிச்செய்தியாக்கிக் கடந்துபோய்விட்டன. விலங்குகளுக்கு, பறவைகளுக்கு,சிலைகளுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு,களவாணிகளுக்கு,கொள்ளையடிப்பவனுக்கு,போலிச்சாமியார்களுக்கு இந்ததேசத்தில் இருக்கிற பாதுகாப்பில் 10 ஒரு பங்கு கூட அறிஞர்களுக்கு இங்கே கிடையாது. அதுவே தீராத சாபம்.

4.7.15

ஒரு போராளிக் கவிஞனின் டைரிக்குறிப்பு - ஜோஸ் மார்த்தி - 2 ( JOSE MARTI )

1853 ல் பிறந்து வெறும் நாற்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து க்யூபாவின் விடுதலைக்கும் லத்தின் அமெரிக்க இலக்கியத்துக்கும் ஆயுதமும்,அதைஏந்துகின்ற வீரமும் கொடுத்துவிட்டுப்போன போராளிக்கலைஞன் ஜோஸ் மார்த்தி.க்யூபா அப்போது ஸ்பானிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்தது. பின்னர் அவர்கள் அதை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டுப் போனார்கள். நாடுகள் பண்டங்களாகப் பாவிக்கப்பட்ட காலம் அது. கிட்டத்தட்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவைஅடிமைப்படுத்தியிருந்த காலம் அது.

ஏழு தங்கைகளுக்கு மூத்தவனான மார்த்தி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தான். 1866 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனப்படுகொலை செய்யப்பட்ட புரட்சிக்காரன் ஆப்ரஹாம் லிங்கத்தின் மரணம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஜோஸ் மார்த்தியை அலைக்கழித்தது. அடிமை முறையை ஒழிக்கப்போராடிய ஒரு அண்டை நாட்டு ஆளுமைக்காக மௌன அஞ்சலிக்கூட்டத்தை நடத்தினான் ஜோஸ் மார்த்தி. 1868 ஆம் ஆண்டில் முடிவுற்ற பத்தாண்டு ஸ்பானியப் போரினால் க்யூபாவின் நிலைமை மிக மோசமடைந்தது. அப்போது க்யூபா ஸ்பானியக் காலணியாகவே இருந்தது. இது குறித்து விசனப்பட்ட க்யூபத்தேசிய வாதிகள் ஒருங்கிணைப்பு நடந்தது. மார்த்தியும் அவரது நண்பர் ஜெர்மினும் இதற்கு தலைமை தாங்கினார்கள்.

அதற்கான பிரச்சாரம் முழுக்க ஜோஸ் மார்த்தியின் கவிதைகளும் கட்டுரைகளுமாகவே இருந்தது. 1869 ஆம் ஆண்டு தனது முதல் அரசியல் கட்டுரையை எல் டியாப்ளோ என்கிற செய்தித்தாளில் வெளியிட்டார். பிரபலமான நாடகமான அப்தலா வையும் அதே ஆண்டு வெளியிட்டார். நூபியா என்னும் கற்பனை நாட்டின் விடுதலைப்போராக சித்தரிக்கப்பட்ட அந்த நாடகம் அந்த நாளில் விடுதலையின் வெப்பத்தை ஊதிவிட்டது.

அக்டோபெர் பத்தாம் நாள் என்கிற பிரபலக் கவிதையும் அதே ஆண்டு வெளியானது. அந்த ஆண்டிலேதான் அவன் படித்த பள்ளியை ஸ்பானிய ஆதிக்க அரசு இழுத்து மூடியது. 1869 ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் மார்த்தி ஸ்பானிய அரசால் சிறப்பிடிக்கப்பட்டான். ஸ்பானிய அரசினை ஏமாற்றி லஞ்சம் வாங்கியதாக பொய்க்குற்றம சுமத்தப்பட்டான். நான்கு மாதம் கழித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டணை வித்திக்கப்பட்டு சிறயிலடைக்கப் பட்டார். மார்த்தியின் தாய் தனது மகன் சிறுவன் அவனை சிறையிலடைக்க வேண்டாம் என ஸ்பானிய அரசுக்கு கருணை மணுச் செய்தார். அவரது தந்தை வழக்கறிஞரை அமர்த்தி வாதாடிப்பார்த்தார் ஒரு ஆதிக்க அரசை ஏழைத்தாய் தந்தையின் கண்ணீரால் என்ன செய்ய முடியும்.

கொடுமையான அடக்குமுறையும் கால் விலங்குகளால் உருவான ஆறாத காயமும் அவரது உடல் நிலையை பாதித்தது அங்கிருந்து க்யூபாவின் இஸ்லாபியோன் பகுதிச்சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை ஸ்பெயினுக்கு நாடுகடத்த தீர்மானித்தது ஸ்பானிய அரசு. அங்கு அவரது கல்யியைத் தொடரவும் அனுமதித்தது. ஸ்பானிய அரசுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் எனும் நிபந்தனையோடு.

1871 ஆம் ஆண்டு மாட்ரிட் நகரை அடைந்த மார்த்தி அங்கே தனது சிறைச்சாலை நண்பன் கார்லோசைச் சந்தித்தார். மார்த்தியின் வசிப்பிடம் நாடுகடத்தப்பட்ட க்யூப அகதிகளின் சந்திப்பிடமாக மாறியது. அந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி காஸ்டில்லோ என்னும் அவரது கட்டுரை காடிஸ் நகரின் லா சொபரினியோ நேசனல் எனும் பத்திரிகையில் வெளியானது. சிறையில் சந்தித்த சக கைதி ஒருவன் அனுபவித்த சிறைக்கொடுமையை வெளி உலகுக்கு அறியத்தரும் அதிர்ச்சித் தகவலாகியது அந்தக்கட்டுரை. தன்னை மாட்ரிட் நகரின் சட்டக் கல்லூரியில் தனி மாணவனாகப் பதிவு செய்து கொண்டபின் துணிந்து ஸ்பானியப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்தார். அதில் க்யூபாவின் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பட்டியலிடப்பட்டது.

1871 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏழுபேர் பொய்க்குற்றம் சுமத்தி ஹவானாவில் தூக்கிலிடப்பட்டார்கள். தனது பத்திரிகையில் இதை எழுதிய மார்த்தியின் நண்பன் ஜெர்மினும் ஆறுவருடம் சிறைத்தண்டனை பெற்று ஸ்பெயினுக்கே அனுப்பி வைக்கப்பட்டான். ஸ்பெயினில் ஜெர்மினும் மார்த்தியும் மீண்டும் இணைந்தார்கள். நவம்பர் மருத்துவக் கல்லூரி சம்பவம் மீண்டும் மார்த்தியின் வார்த்தைகளில் எழுதப்பட்டு மாட்ரிட் நகரிலிருக்கும் க்யூப மாணவர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டது. நவம்பர் சம்பவத்தின் முதலாண்டு நினைவாக மாட்ரிட் நகரில் ஒரு, அடக்கச் சடங்கும் மௌன ஊர்வலமும் நடத்தப்பட்டது.

1873 ஆம் ஆண்டு தான் தங்கியிருந்த அறையின் முகப்பில் க்யூப தேசியக் கொடியைப் பறக்கவிட்டார் ஜோஸ்மார்த்தி.அப்போது புதிதாக நிறுவப்பெற்ற ஸ்பானியக் குடியரசு க்யூபாவை அதன் இன்னொரு அங்கமாக அறிவித்தது.இதை எதிர்த்து மார்த்தி ஸ்பானியப் பிரதமருக்கு ஒரு கண்டனக்கடிதம் அனுப்பினார். ஸ்பானியக் குடியரசும் க்யூபவிடுதலையும் எனும் அந்தக் கடிதத்தில் தன்னை ஒரு மக்களாட்சி அரசாகப் பிரகடப் படுத்திக்கொள்ளும் ஸ்பானியப் பொறுப்பாளர்கள் க்யூபாவை மட்டும் அடிமையாக நீடிக்க வைப்பது அதிகார வெறியின் மிகச்சிறந்த உதாரணம் என எழுதியிருந்தார்.

தனது எழுத்துக்கள் அணைத்தையும் நியூயார்க்கிலுள்ள நியூயார்க் மத்திய புரட்சிகர அமைப்பின் உறுப்பினர் நோஸ்ட்டர் போன்சுக்கு அனுப்பிவைத்தார். கியூப விடுதலை முயற்சிக்கு தனது ஆதரவை அந்த அமைப்பு பிரகடனப்படுத்தியது.1874 ஆம் ஆண்டு தனது சட்டப்படிப்பை முடித்துகொண்டு அங்கிருந்து பாரிசுக்குப் போனார். பாரிசில் ஆகஸ்ட் வகவுரி எனும் கவிஞரையும் விக்டர் ஹுயுகோவையும் சந்தித்தார். அங்கிருந்து மெக்சிகோவுக்கும், க்வட்டமலாவுக்கும் பயனமானார். 1875 முதல் 1878 வரை மெக்சிகோவிவின் கால் மொனெடோவில் தங்கினார். அங்குதான் மனுவேல் மெர்கடோ எனும் ஆப்த நண்பரின் சிநேகம் கிடைத்தது. அங்குதான் ஒரு க்யூப முதியவரைச் சந்திக்கிற பல நாட்கள் அலைந்தார். முதியவரின் மகளையும் சந்திக்கிற தங்கநிறத் தருணங்கள் அங்கேதான் கிடைத்தது. அவரது மகள் கார்மென் ஜயாஸ் பின்னாளில் மார்த்தியின் துணையானார்.

1877 ல் ஜுலியொ ப்ரெஸ் என்று பெயர் மாற்றிக்கொண்டு ஹவானாவுக்குப் பயணமானார் மார்த்தி. ஹவனாவிலிருந்த குடும்பத்தை மொத்தமாக மெக்சிகோவுக்கு மாற்றும் திட்டத்தோடு போனாலும் திரும்புகிற வழியில் மார்த்தி க்வட்டமாலாவில்ஒரு வீடு பார்த்து தங்கிவிட்டார். அங்கே ட்ராமா இண்டியானொ ( இந்திய நடகம்) - தேசமும் விடுதலையும் என்னும் நாடகத்தை உருவாக்கினர். அந்த மாகாணத்தின் ஆளுநரைச் சந்தித்தார் அதன் விளைவாக ஆங்கிலம்,இத்தாலி,ப்ரெஞ்ச், மற்றும் ஜெர்மன் இலக்கியங்களுக்கான பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பாடம் நடத்தும் லாவகத்தில் அவரிடம் மாணவர்கள் கிறங்கிக் கிடந்தார்கள். அதில் முக்கியமானவர் மரியா கார்சியா க்ரேனடோஸ். க்வட்டமெலாவின் ஆளுநர் மிக்கேல் கார்சியா க்ரேனடோஸின் மகளான அவர் மார்த்தியின் மேல் பைத்தியமாகக் கிடந்தார். எனினும் மெக்சிகோ சென்று கார்மெனையே மணந்தார்.

1878 ஆம் ஆண்டு க்வட்டமாலா திரும்பிய மார்த்தி க்வட்டமாலா என்னும் நூலை வெளியிட்டார். அதே காலத்தில் நுறையீரல்நோயால் பாதிக்கப்பட்டிருந்த மரியா கார்சியா மரணமடைந்தார். அவள் நினைவில் வாடிய மார்த்தி 'காதாலால் மரணமான க்வட்டமாலாப் பெண்' எனும் புதினத்தை எழுதினார். மரியாவின் இழப்பால் மனதொடிந்துபோன மார்த்தி அங்கிருந்து க்யூபா திரும்பினார். அங்கே பத்தாண்டுப்போரின் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திட்டார். போர் முடிவடைந்த போதும் ஸ்பானியக் காலனி நீடிக்க, க்யூப விடுதலை அப்படியே கிடந்தது. அங்கிருந்து 1880 ஆம் ஆண்டு வெனின்சுலா சென்றார் அங்கு அவர் வெனின்சுலா ரிவியூ எனும் பத்திரிகை ஆரம்பித்தார். அவரின் எழுத்துக்களால் ஆத்திரமடைந்த வெனின்சுலா அதிபர் மார்த்தியைக் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றினார். நியூயார்க் வந்த மார்த்தி மீண்டும் அங்கே க்யூப விடுதலை அமைப்பை உருவாக்கினார் ப்ரூனோ ஏர்ஸ் பத்திரிகையின் பொறுப்பாளராக இருந்தார்.

பத்தாண்டுப்போரில் தளபதிகளாக இருந்த கோமெஸ், அந்தோணியோ இருவரும் ஒரு உடனடி ராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டனர் அதற்கு மார்த்தியின் ஆலோசனையையும் நாடினார்கள். மார்த்தி ராணுவக் கலகம் செய்து க்யூபாவை மீட்க விருமபவில்லை. தவிரவும் அதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்படாததால் அந்த முயற்சி சிறுபிள்ளைத்தனமானது என்று வாதிட்டார். 1891 ஆம் ஆண்டு மார்த்தியின் மனைவி,குழந்தைகள் அவருடனே தங்குவதர்காக நியூயார்க் வந்தார்கள். மார்த்திக்கு க்யூப விடுதலையை விட குடும்பதின் மீது அக்கறையில்லாதது வந்த சிறிது காலத்தில் தெரிந்துபோனது. கார்மென் குழந்தைகளோடு மீண்டும் ஹவனாவுக்கு கிளம்பினார். அதன் பின்னர் மார்த்தியை அவர்கள் சந்திக்கவே முடியாமல் போனது. வெனின்சுலாவில் விடுதி நடத்திக்கொண்டிருந்த கார்மென் மாரிய மாண்டில்லாவுடன் வாழ்ந்தார். மாண்டில்லாவின் பேரன் புகழ்பெற்ற நடிகர் சீசர் ரொமெரோ பின்னாட்களில் தன்னை மார்த்தியின் பேரனாகவே பிரகடனப்படுத்திக்கொண்டார்.

1892 ஆம் ஆண்டு க்யூப புரட்சிகரக்கட்சியை நிறுவினார். 1894 வரை ப்ளோரிடா,பிலடெல்பியா,டொமினிக்ககுடியரசு, மத்திய அமெரிக்க,ஹயத்தி,ஜமைக்கா,நிகரகுவா போன்ற அயல்நாடுகளில் வாழ்ந்த க்யூப மக்களிடம் சென்று கூட்டங்கள் நடத்தினார் அவர்களிடம் இயக்கத்துக்கான நிதியையும் திரட்டினார். 1895 ஆம் ஆண்டு க்யூப எழுச்சிக்கான வரைவு அறிக்கையை உருவாக்கினார். 1895 ஏபரல் 1 ஆம் தேதி க்யூபாவுக்கு கிளம்பும் முன் ஒரு இலக்கிய சாசனம் எழுதி கன்சோலாவிடம் ஒப்படைத்தார். கோமெஸ், ஏஞ்சல்,ப்ரான்சிஸ்கோ,சீசர்,மர்கோஸ் ஆகியோருடன் க்யூப விடுதலைப்போருக்குக் கிளம்பினார். ஏப்ரல் 11 ஆம் தேதி க்யூபாவை அடைந்தார்கள். அங்கிருந்து நாட்டுக்குள் இருந்த புரட்சிப்படைக்கு தூது அனுப்பினார்கள். ஸ்பானியத் துருப்புக்களுக்கு எதிரான தாக்குதல் நடந்தது. மார்த்தியின் புரட்சிப்படை முன்னேறி மே 13 ஆம் தேதி டாஸ் ரியோ வை அடைந்தது. அங்கே அடர்ந்த பனைகளை அரணாகக் கொண்டுள்ள ஸ்பானியத் துருப்புக்களை எதிர்கொள்வதில் சிரமம் இருந்ததால் கோமெஸ் படைகளைப் பின்வாங்கச் சொன்னார். ஆனால் இந்த தகவல் கிடைக்காத மார்த்தி தனித்துவிடப்பட்டார். 1895 மே 19 ஆம் தேதி மதிய நேரம் ஒரு குதிரைவீரன் வருவதைப் பார்த்து 'இளைஞனே தாக்கு' எனக்குரல் கொடுத்தார். எப்போதும் கருப்புச்சட்டை அணிந்து வெள்ளைக் குதிரையில் அமர்ந்து வரும் மார்த்தியின் தனித்த அடையாளமே அவரை இலகுவாக குறிவைக்க ஏதுவாக இருந்தது.

கொலை செய்யப்பட்ட விடுதலைக்காரர்களின் உடலை கொடுக்காமல் தாங்களே அடக்கம் செய்கிற அதிகாரவெறியோடுஸ்பானிஸ் அரசு அவரைப்புதைத்தது. பின்னர் மீளத் தோண்டியெடுத்தாலும் அவரை எறிக்கத் தடை செய்தது. சண்டியாகோ டி க்யூபா வில் அடக்கம் செய்யப்பட்டார்.


ஒரு ராஜத் துரோகியைப் போல

என்னை இருளில் புதைக்கவேண்டாம்.

நான் சுத்தமான போராளி

நான் சூரியனைப் பார்த்துக்கொண்டே

உயிர் துறப்பேன்.


இந்தக் கவிதை வரிகள் நிஜமாக அவர் க்யூப விடுதலையை சூரியனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டுப்போனார். சூரியன் தகிக்கிற காலம் முழுக்க சுதந்திர வேட்கை எறிந்துகொண்டிருந்தது. அதிலிருந்துதான் ஒரு தீர்க்கமான தீப்பந்தம் எடுத்துக்கொண்டு தொடர்ந்தார்கள் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும்.

கிட்டத்தட்ட சேகுவேராவின் வாழ்கைக்குறிப்பைப் போல இருக்கும் மார்த்தியின் வரலாறு. லத்தீன் அமெரிக்க இலாகியத்தின் அப்போஸ்தலர் என வர்ணிக்கப்படும் அவருக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நியூயார்க் மெக்சிகோவிலும் அழிக்கமுடியாத இலக்கியச் செல்வாக்கு பரவிக்கிடக்கிறது. 1959 ஆம் ஆண்டு நியூயார்க் மத்தியப்பூங்காவில் மார்த்தியின் சிலையை அமைத்துக் கௌரவப் படுத்திருக்கிறார்கள். 1869 ஆண்டு முதல் வெளியான அப்தலா தொடங்கி தனது இறுதி நாளில் உருவாக்கிய க்யூப விடுதலைப்ப்போரின் வரைவு அறிக்கை வரை 45 வகையான எழுத்துச் சொத்துக்களை இந்த உலகத்துக்கு விட்டுச்சென்றிருக்கிறார் மார்த்தி.

கவிஞன்,ஓவியன்,கட்டுரையாளர்,நாடகஆசிரியன்,பேராசிரியன்,

குழந்தைஎழுத்தாளன்,மொழிபெயர்ப்பாளர்,பத்திரிகைநிருபர்,

பத்திரிகைஸ்தாபகர்,அரசியல்தத்துவவாதி,ஆயுதம் ஏந்தியபோராளி

எனும் மலைக்கவைக்கும் சாகசக்கரனாக வாழ்ந்து மறைந்தவன்மார்த்தி.தனது நாற்பத்திரண்டு ஆண்டு வாழ்க்கையில் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குமேல் நிலையாக எங்கும் தங்கியிருக்காதஓடுகாலி நமது மார்த்தி.லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் திருப்புமுனையாக இன்றும் போற்றப்படுகிற எழுத்துப்பாணிக்கு சொந்தக்காரன் மார்த்தி. நிகரகுவாக் கவிஞன் ரூபன் டாரியோவுக்கும், சிலிக்கவிஞன் காப்ரியெல்லா மிர்ஸ்டல்லுக்கும் ஆதர்சமாக விலங்கியவை மார்த்தியின் எழுத்துக்கள்.


16.3.14

தகிக்கும் கேள்வி நெருப்போடு பயணமாகிற தோழன். ( விமலன் என்கிற மூர்த்தி)



தமுஎச வின் பேனர்களை பார்க்கிற பொழுதெல்லாம் தொண்டைக்குள் ஒரு உருவமில்லாத உருண்டை உருளும்.ஒரு கடைக்கோடி கிராமத்தில்பிறந்து தெருப்புழுதியில் வளர்ந்து,தெருவிளக்கில் படித்து வங்கி ஊழியனாகிற வரை எனக்கொரு பாத்திரம் இருந்தது.எப்பொழுது தோழர் பீகேவைச்சந்தித் தேனோ அப்போதிலிருந்து ஒரு இயக்கத்தின் பிரதிநிதியாக மாறிப்போனேன். பிரதிநியாக மட்டும்.

எண்பத்தி ஐந்தாம் வருடம் சாத்தூருக்கு திரும்பிவந்தபோது.ஒரு மொய் நண்பர்கள்களுக்குள் தள்ளிவிடப்பட்டேன்.அந்தக்கூட்டத்துக்குள் தான் என் தோழன் மாது இருந்தான்.அவன்கூடவே மூர்த்தியும் இருந்தான்.ஒரு அழுக்கேறிய நான்குமுழ வேஷ்டியோடு வந்து என்கையைப்பற்றிக் கொண்டான் மூர்த்தி.அவனும்கூட என்னைப்போலவே ஒரு கருசக்காட்டுப் புழுதிக்குள் கிடந்து வந்து  இந்த நட்பு இனிப்புக்குள் திகட்ட திகட்டவாழ்ந்து பிரமித்தவன்.

42 பி என் எஃப் தெருவில் அந்த பிஜிபிஇஏ சங்க அலுவலகம் இருந்தது.அங்கு ஒரே அறையில் கிடந்த நாங்கள் எதாவது எழுதிக் குமிக்க முயற்சிசெய்து கொண்டிருந்த போது, அவன் மட்டும் மூன்று பத்தி மாடியில் இருக்கும் சமயற்கட்டில் ஏதாவது வரைந்து கொண்டிருப்பான்.அண்ணன் ஜீவா அதைப்பார்த்து விட்டு ’மூமா (அப்போது அதுதான் அவனது செல்லப்பேர்) என்ன வரிஞ்சிருக்கியோ அதோட பெயரைக் கீழே எழுதிரு” என்பார் .அவனும் சேர்ந்து சிரிப்பான்.ஒரு கடைநிலை ஊழியன் மேல் குவிகிற இந்த அதிகாரப் படிநிலையின் ஆதிக்கம் கொடூரமானது.அதை தகர்க்கிற பெருஞ்சம்மட்டியாய் பீகே இருப்பார்,அவரது நீளமான கை தோளில் விழுகிற போது கோடுகள் துவங்கி இடியாத பெருஞ்சுவர்கள்வரை இற்று இடிந்து போகும்.அவரது பேச்சை விடவும் காந்தத்தன்மை கொண்டது அவர் சகதோழர்கள் மீது காட்டு கிற பிரியம்.சாத்தூர் வீதிகளில் ஆறடி உயரத்தில் நடந்து போக அருகே நடப் பது எங்களுக்கு பெருமிதமான பயணமாகும்.

அந்தக்காலங்களில் தான் நாங்கள் பெரும்பசியோடு புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தோம்.பீகே தான் ஒவ்வொரு புத்தகமாய் கொண்டுவந்து கொட்டுவார் நானும் மாதுவும் போட்டிபோட்டு இரவுகளில் படிப்போம். அப்போது எங்கள் வயதொத்த ஊழியர்கள் அலுவலர் ஆவதற்கும்,சிஏஐஐபி படிப்பதற்கும் மெனெக்கெட்டுக்கொண்டிக்க நாங்கள் இலக்கியப் புத்தகங் களைக் கிறுக்குப் பிடித்துபடித்துக் கொண்டிருந்தோம்.நானெப்படி மாதுவை அகலக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேனோ அதைப்போலவே மூர்த்தி எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தான்.அப்போதெல்லாம் நாங்கள் அவனைப்பகடி செய்வதிலேயே குறியாக இருந்தோம்.அவன் சைன்ஸ் ஜாதாவுக்கு பேர்கொடுத்து அவர்களோடு ஒரு காவி வேட்டியைக் கட்டிக் கொண்டு அலைந்தான். ஒரு தீவிர அறிவொளி இயக்கத்தொண்டனாய்த் திரும்பிவந்த அவனுக்குள் பெரு நெருப்பு குடிகொண்டு இருந்தது.அத்தோடு

கூடவே ஒருகாதலும் அவனுக்கிருந்தது.

தொழிற்சங்கத்தில் ஒரு தலைமுறை போய் இன்னொன்று உருவெடுத்தபோது மூர்த்தியும் எங்களோடு செயற்குழு உறுப்பினரானான்.விடிகிற வரை நடக்கிற செயற்குழுக்கூட்டத்தில் முதன்முதலில் அவனைத்தான் பேய் பிடித்துஆட்டும். அப்புறம் என்னை.எங்களை உசுப்பிவிடுவதிலே குறியாய் இருப்பார் தோழர் சோலைமாணிக்கம்.அங்கேயும் கூட பெரிய இலக்கு ஏதும் இல்லாத ஒரு பிரதிநிதியாக இருந்தான்.நான் கூட சிலநேரத்தில் சபலப்பட்டு இருந்தேன். அவனுக்கு பதவிமோகம் துளியும் கிடையாது.எல்லா சங்கப்பொதுக்குழு விலும் அவனுக்குத்தான் கொடிக்கம்பம் தயாரிக்கிற,தியாகிகள் ஸ்தூபி தயாரித்து சிகப்பு பேப்பர் ஒட்டுகிறவேலைகாத்திருக்கும்.ஆனால் அந்த கொடியை மடக்கிகட்டிவைக்கத் திணறு வான்.அப்போது அவனுக்கு நானும் நாசரும் கூட இருக்கவேண்டும்.கொடியேற்றிக்கொடுத்துவிட்டு நான் நாசர் மூர்த்தி  மூவரும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கடைசிப்பெஞ்ச் கோஷ்டியாகி விடுவோம்.ஆதலினாலே இந்த இருபத்தைந்து வருட தொழிற்சங்க பதிவு களில் எங்கள் புகைப்படம் எதாவது கூட்டத்துக்குள் கரைந்து போயிருக்கும்.

அதுபோலவே தமுஎசவிலும் எங்களோடு பயணித்தவன் மூர்த்தி.இங்கேயும் கூட பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இலக்கிய புல்லரிப்பில் அலைபவர் கள்நாங்கள்.எண்பதுகளில் என்னையும் அவனையும் தான் குற்றாலம் சிறு கதை பட்டறைக்கு அனுப்பிவைத்தார்கள்.அங்கிருந்து வந்து ஒரு வரிகூட என்னால் எழுத முடியவில்லை.ஆனால் மூர்த்தி எழுதி எழுதிக்குமித்து விட்டான்.அதை முதலில் என்னிடம் மட்டும்தான் காட்டுவான்.அவனது கையெழுத்து காற்றுக்கு வளைந்த நானற்கூட்டம் போல் நீண்டு வளைந்து இருக்கும்.எழுதிக்கட்டாக கட்டி என்னிடம் அனுப்பிவிடுவான்.படித்தது படிக்காதது என அவனது கையெழுத்துப்பிரதிகள் அலமாரியில் கணிசமான இடத்தை அடைத்து இன்னும் கிடக்கிறது. மாது ராஜகுமாரன் என்கிற சிறுகதைத்தொகுப்பு போட்டு,சில கட்டுரைத்தொகுதி வெளியிட்ட பிறகு நானும் தக்கி முக்கி எழுதி  ஒரு தொகுப்பு போட்டேன்.அதே வேகத்தில் அடுத்து மூர்த்தியின் முதல் தொகுப்பு வந்தது.நான் எப்படி மாது மட்டும் தான் எனக்கு முன்னுரை எழுத வேண்டும் என்கிற உறுதியில் இருந்தேனோ அதேபோல எனக்கு முன்னுரை எழுதுகிற வாய்ப்பைக்கொடுத்தது மூர்த்தி.
    
என்பதுகள் தொடங்கி இன்று வரை ரெண்டு முறையாவது அது என்ன இது என்ன என்று அவன் கேட்கிற கேள்விகளில்தான் அந்த பெரு நெருப்பு குடி கொண்டிருந்தது.எனக்குத்தெரிந்து ஆங்கிலப்பு புத்தகத்தை கையில் தொடாமல் எழுத்தில் ஜெயித்த எங்கள் அன்புத்தோழர் மேலாண்மையை மாதிரியே மூர்த்தியும். ஒரு சின்ன துணுக்குகூட ஆங்கிலத்தில் படித்திருக்க வாய்ப்பில்லாதவன் மூர்த்தி.நானும்கூடத்தான்.ஆனால் எனக்கு பாடப்புத்தகம் வழியே ஆங்கிலம் அறிமுகமாகி இருந்தது.கல்லூரியில் லே மிசரபிள் போன்ற நான் டிடெய்ல் புத்தகங்தொட்டிருக்கிறேன் அப்படி வாய்ப்பில்லாத அனுபவப் படிப்பை மட்டும் கைப்பற்றி நண்பர்களை அருகிருந்து நோக்கி எழுதியவன் தோழன் மூர்த்தி.

மூர்த்தியின்எழுத்தைப்பேச,சிலாகிக்கவேண்டியதைவிடவும்.அவனைச்சிலாகிப்பதே பெருங்கடமை.பெரிய கல்விப்பின்புலம்,எழுத்துப்பின்புலம் இல்லாததோழமை யும் நட்பும் துணைகொண்டு எழுதிகிற மூர்த்தி சிலாகிக்கப்படவேண்டியவர்(ன்).

14.3.14 ல் விருதுநகரில் நடந்த அந்த விழாவில் பங்கேற்க முடியாத தடைகளை இந்த வரிகள் சரிசெய்யும்.எங்கள் பிரியத்தோழர் முத்துக்குமாருக்காகவாவது அதில் கலந்திருக்கவேண்டும்.எங்களைப்போலவே அவரும் எளிய தோழர். மூர்த்தியைப்புரிந்து கொண்டு சரியாக விழா எடுத்த அவர்,அங்கே போகமுடியாத என்னையும் புரிந்துகொள்வார்.