8.8.16

கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.



மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம்
மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள்

மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும் 2.33 சதவீதம் மட்டுமே பங்குவகிக்கிறது, தலித்துக்களுக்கெதிரான வன்கொடுமைகள்  50 சதமானத்துக்குமேல் அங்குதான் தலைவிரித்தாடுகிறது.

மாட்டுத்தோல்வைத்திருந்ததாக பழிசுமத்தி நான்கு தலித் இளைஞர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு எதிராக எழுந்த பொறி இப்போது தேசமெங்கும் பற்றிப்படர்கிறது.குஜராத் தலித்துகளுக்கு இது முதல் வலியல்ல.அதன் வரலாறு நெடுகிலும் ரணங்களும் அவமானங்களும்,வன்கொடுமைகளாய் சிதறிக்கிடக்கிறது. வர்ணாசிரமப்பாடுகளின் பின்புலத்தில் அசுத்தமானவர்களாக ஒதுக்கப்பட்ட தலித்துகள் சந்திக்கும் கொடுமைகள் ரத்தக்கண்ணீர் வரவழைப்பவை என்று சாடுகிறார் குஜராத் பகுதியின் தலித் மனித உரிமைப்போராளி, நவசர்ஜன் அமைப்பின் ஸ்தாபகர் மார்ட்டின் மக்வான்.
1986 ஆம் ஆண்டு தலித் கூலித்தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி நில உரிமைகேட்டும், கூலிச்சுரண்டலை எதிர்த்தும் போராட்டம் நடத்திய மார்ட்டின் மக்வானின்சக ஊழியர் 1986 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.தனது தோழனின் உயிரிழப்பை உரமாக்கி 1988 ஆம் ஆண்டு நவசர்ஜன் என்கிற அமைப்பை உருவாக்கினார் மக்வான்.

2012 ஆம் ஆண்டு சுரேந்திரநகர், தாங்கத் என்கிற ஊர் திருவிழாவில் கடைகள் போட தடைவிதித்த பார்வார்ட் ஜாதியினருக்கும்,தலித்துகளுக்கும் இடையே  மோதல் உருவானது. குஜராத் காவல் துறையின் துப்பாக்கிமுனைகள் தலித்துகளின் மார்பை மட்டுமே குறிவைத்தன.நான்கு தலித்துகள் அரசபயங்கரவாதத்துக்குப் பலியாகினார்கள்.அதற்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்னமும் முடிந்தபாடில்லை.சாட்சிகள் கலைக்கப்பட்டதால் தீர்ப்பெழுத தினறுகிறது நீதிமன்றம். நீதித்துறையும் அரசாங்கமும் காட்டுகிற ஓரவஞ்சனையால் மதர்த்துப்போன ஆதிக்க மனோபாவம்தான் நடுத்தெருவில் கட்டிவைத்து உதைக்க ஊக்கம்கொடுக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேசீய ஆணையம், மற்றும் தேசியகுற்றப்புலனாய்வு நிறுவணம் ஆகிவற்றின் அறிக்கைப்படி குஜராத்தில் வசிக்கும் தலித்துகளின் எண்ணிக்கை மொத்த இந்திய தலித்துகளில் வெறும் 2.33 சதவீதம் மட்டுமே. ஆனால் அவர்கள் மீது ஏவப்படும் வன்கொடுமை மொத்த இந்திய வன்கொடுமைகுற்ற எண்ணிக்கையில் பாதிக்குமேல் இருக்கிறது.எனில் குஜராத் என்ன மாதிரியான மாநிலம் என்பது தெளிவாகிறது. மாநிலம் முழுவதும் 1569 கிரமங்களில் திரட்டப்பட்ட98000 சாட்சியங்களின் ஊடாக,தீண்டாமையைத்தெரிந்துகொள்வோம் என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 98 வகையான வன்கொடுமைகள் நிகழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வில் சமர்ப்பிக்கப்பட்ட பாகுபாடுகளை சரிசெய்யாமல் மாநில அரசு அஹமதாபாத்திலுள்ள cept பல்கலைக்கழகத்தின் உதவியோடு அது ஒரு எதிர் ஆய்வுக்கு உத்தரவிட்டது. அந்தக் கண்துடைப்பு ஆய்வு தலித்துகள் வசிக்காத சில ஊர்களில் விசாரித்துவிட்டு தீண்டாமை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அறிக்கை சமர்ப்பித்து கோப்பை மூடிவிட்டது.
ஜாதிய அடிப்படையிலான துப்புறவு ஒழிக்க அரசியலமைப்புச்சட்டம் வலியுறுத்திய போதிலும் குஞராத்தில் அது அதிகரிக்கவே செய்கிறது.கல்வியின் வழியே வேலைவாய்ப்பு என்பது அங்கு அர்த்தமற்றதாகிப்போனது.தாழ்த்தப்பட்ட்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட 64000 பணியிடங்கள் நிறப்பப் படாமலே வீணடிக்கப்பட்டது. 54 சதமான அரசுப்பள்ளிகளில் தலித்த் மாணவர்களுக்கு தனி இருக்கை ஒதுக்கப்படும் அவலம் தொடர்கிறது.பெரும்பாலான பள்ளிகளில் தலித்குழந்தை கள் கழிப்பறைகளை கழுவ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இப்படிக் கல்விக்கூடங்களில் கடைப் பிடிக்கப்படும் பாகுபாடுகளால் இடைநிற்றல் பெருகுகிறது.அதனால் மறுபடியும் சாதி சார்ந்த இழிதொழிலுக்கு போயே தீரவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.

11.7.16 அன்று உனா- மோட்டா சமிதியாலாவில் பசுத்தோலை வைத்திருந்ததாக் குற்றம் சுமத்தி நான்கு இளைஞர்களை பசுபாதுகாப்பு கமிட்டி இழுத்துவந்தது.சந்தடி மிகுந்த சந்தையின் நடுவில் ஒரு வாகனத்தின் முன் கட்டிவைத்து இரும்பு குழாய்களால் அடித்துக்கொடுமைப் படுத்தியிருக் கிறார்கள்.பார்வைபடும் தூரத்தில் காவல்நிலையம் வேறு இருந்திருக்கிறது. பசு ரட்சக சேனை என்கிற பெயரில் குஜராத்தில் சுமார் 200 குழுக்கள் உருவாகியிருக்கிறது. பிரபல கேடிகளும் ரவுடிகளும் உறுப்பினராக உள்ள இந்தக்குழுக்களுக்கு ஆளும் அரசின் ஆசி கிடைக்கிறது. அவர்கள் சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் மீது திட்டமிட்ட வன்முறைய பிரயோகிக்கிறார்கள். கொடுங்கோல் மன்னராட்சிக்காலத்தில் கூட கேள்விப்பட்டிராத இந்த வகைக்கொடுமை முகநூலில் காட்சிப்படுத்தப்பட்டதும் அதுவரை கனன்று கொண்டிருந்த கோபம் போராட்டமாகியிருக்கிறது.

ஜூலை 12 ஆம் தேதி உனாவில் தன்னெழுச்சியான போராட்டம் உருவாகி ஆர்ப்பாட்டம்.  கதவடைப்பு நிகழ்த்தப்பட்டது.அதன் பின்னர்அமரேலியில் நடந்த எதிர்ப்புபேரணி கலவரமாக மாறியது.மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்பட்டு குஜராத்தின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திங்களன்று 1500 பேர் கொண்ட தலித் போராட்டக்காரர்கள் இறந்து போன மாடுகளின் உடலை லாரிகளில் ஏற்றி வந்து தெருக்களில் வீசி எறிந்தார்கள். உங்கள் புனிதப்பசுக்களை நீங்களே எடுத்துப்புதையுங்கள் என்று கோஷமிட்டார்கள்.
சுரேந்தர்நகர்,அகமதாபாத்தை தொடர்ந்து இந்த அதிர்ச்சியளிக்கும் போராட்ட வடிவம் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவியது.
குஜராத் வன்கொடுமைகளுக்கெதிரான கோபம் 2004 ஆம் ஆண்டே கொப்பளித்திருக்கவேண்டும்
காவல்துறையின் அடக்குமுறையால் நீர்த்துப்போனது. செவ்வாய்க்கிழமை 16 பேர்களடங்கிய தலித் போராட்டக்குழு தர்கொலையை போராட்டவடிவமாக அறிவித்தது போராட்ட முடிவில் ஒருவர் இறந்துபோனார். இது ஜனநாயக இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு அதிர்வை ஏற்படுத்திய மணிப்பூர் பெண்களின் போராட்டத்திற்கு ஈடானது என்று தலித் போராளி மோவானி கூறுகிறார்.
இந்த இரண்டு நாள் எழுச்சி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உதவித்தலவர் ராஹுல் காந்தியும்,டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவாலும் உனாவுக்கு புறப்படத்தயாரானார்கள்.அமெரிக்க பத்திரிகை தனது கடும்கண்டனத்தை பதிவுசெய்தது. உதறலெடுத்த குஜராத் அரசு உடனே நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது,பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் உதவித் தொகையாக அறிவித்தது.கொழுந்துவிட்டு எரியும் போராட்டம் இந்த கொப்பளித்த நீரில் அணைந்துவிடவில்லை.

அரசியல் சார்பற்ற தலித் இயக்கங்களும் அரசியல் கட்சிகளில் உள்ள தலித் பிரிவுகளும் ஒன்றிணைந்தன. பிஜேபி, காங்கிரஸ் ஆகிய தேசியக்கட்சிகளின் தலித் பிரிவுகள் கூட
தலித் போராட்டக்கூட்டணியில் அங்க வகிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.ஜுலை 25 ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் உள்ள அம்பேத்கர் சிலை முன்னால் கூடி இரண்டுமணிநேர அமைதிப்போராட்டம் நடத்த கூட்டணிஅறைகூவல் விடுத்தது.நாடெங்கிலும் உள்ள முற்போக்கு இயக்கங்களும்,அரசியல் கட்சிகளும் கண்டன அறிக்கையை காத்திரமாகப் பதிவுசெய்தன. பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்ப்பு வலுவாக எழுந்தது.முதல்வர் ஆனந்திபென் ராஜினாம செய்யநேர்ந்தது.

350 கிலோமீட்டர் தொலைவைக் கடக்கும் பேரணி ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டு ராஹுல்சர்மா தலைமையில் மூன்றாவது நாளாகப்பயணிக்கிறது. கயர்லாஞ்சி கொடூரத்திற்கு எதிராக உருவான தலித் எழுச்சியைவிடவும் கூடுதல் வீரியத்தோடு இந்த முறை களம் காணுகிறது கூட்டியக்கம்.

10.1.16

யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914


அயோத்திதாசர் தமிழை அடித்தள மக்களின் நிலைப் பாடுகளிலிருந்து வாசித்தார். கால அடிப்படையில் சைவத் தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை எனத் தமிழ் இலக்கியச் சான்று களின் வழி அவரால் நிரூ பிக்க முடிந்தது. பூர்வத் தமிழின் அறம், காப்பிய மரபுகள், இலக்கணம், இலக் கிய மரபுகள் ஆகியவற்றைச் (அதாவது மொத்தத் தமிழ்ப் பண்பாட்டை) சமண, பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின எனப் பண்டிதரால் எடுத்துக் காட்ட முடிந்தது.

பூர்வத் தமிழ் மரபு சாதி யில்லாச் சமூக அடிப்படை யில் அமைந்திருந்தது என்ற அயோத்திதாச பண்டிதரின் நிலைப்பாடு தமிழ் வரலாறு குறித்த அடிப்படையானதொரு விவாதத் தைத் தொடக்கி வைத்தது.  விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டுப் போனவர்கள்தான் சாதி அமைப்பைத் தமிழில் அறிமுகப்படுத்திப் பாடுபடும் விவசாயச் சாதிகளை இழிவு படுத்தினர் என்ற வாதத்தை பண்டிதர் முன்வைத்தார்.

அயோத்திதாசர் எல்லா வழிகளிலும் உழைப்பை முன்னிறுத்தினார். அதுவே தனது இயக்கத்தின் மிகமுக்கியமான புள்ளியாகவும் கருதினார்.மேட்டிமைச் சாதிகள் உடல் உழைப்பை நினைத்துப் பார்க்கவே முடியாது. அவர்கள் ஒருபோதும் உழைக்கத்தயாரக இருந்ததில்லை. ஆதலால் உழைப்பை அவர்கள் சிறுமைப்படுத்தினார்கள். எனவே அயோத்திதாசர் தனது ஆதிவேதம் என்கிற நூலில், உழைப்பிலிருந்து வந்ததுதான் சிந்தனை, உழைப்பிலிருந்து வந்ததுதான் கண்டுபிடிப்புகள் என்பதையும் உழைப்பிலிருந்து வந்ததுதான் கலாச்சாரங்கள் எனவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதற்கான வாழ்வியல் ஆதாரங்களியும் முன்வைத்தார்.

அயோத்திதாசரின் இந்த ஓயாத பரப்புரைதான் தமிழ்ச்சூழலில் தனித்தமிழ்,சாதியற்ற தமிழகம்,உழைப்பாளர்களை போற்றுகிற சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது.

நன்றி அயோத்திதாசர் வலைத்தளம், மற்றும் முத்துமோகன்


6.1.16

இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.

இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.

வடக்கே போ,மேற்கே போ,தெற்கே கூடப்போ
உயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.
எதற்கம்மா என்ன தீமை இருக்கிறது எனக்கேட்பான்
தீமைகள் இல்லையப்பா பூச்சாண்டி இருக்கிறான் என்பாள்.

இல்லையம்மா கிழக்கே தான் என் நண்பன் இருக்கிறான்
இல்லையம்மா கிழக்கே தான் நம் வயல் இருக்கிறது
இல்லையம்மா கிழக்கே தான் சூரியன் உதிக்கிறது
இல்லையம்மா கிழக்கே தான் நம் பசுமாடு மேய்கிறது

சொன்னாக்கேளு எதுத்துபேசினால் சூடு வைத்துவிடுவேன்
வடக்கே போ மேற்கே போ தெற்கே கூடப்போ
உயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.