17.1.09

ஓளியும், இருளும்




பளபளக்கிறகாரில் 'அழகி"ய மனைவியோடும், கொலு கொலு குழந்தையோடும் அவர்கள் வருவார்கள். பல்பொருள் அங்காடிக்குள் நுழைவார்கள். பெண்குழந்தை விலையுயர்ந்த பொம்மையைப் பார்த்து கை நீட்டும். தாய் அதட்டுவாள். குழந்தை சோகமாகும். தகப்பன் வருவான். அடுத்தகணம் ஒரு கிரெடிட் கார்டை எடுத்து நீட்டுவான். விஸ்க்கென்று ஒலி. எட்டாத பொம்மை கைகளிலும், புன்னகை முகத்திலுமாக அந்தக் குழந்தை. ஒவ்வொரு பொருளாய் கைநீட்ட நீட்ட கிரெடிட் கார்டு விஸ்க் விஸ்க்கென்று ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும். வாங்கும் சக்திக்கும், பொருளின் விலைக்கும் குறுக்கே நிற்கிற திரைகள் அறுக்கப்படுகின்றன.
கார் நிறைய பொருட்களோடு அவர்கள் புறப்படுவார்கள். வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த அந்த பெரு நகர வெளியில் நிலா தெரியும். குழந்தை அதையும் கைநீட்டி காண்பிக்கும். கிரெடிட் கார்டு விஸ்க்கென்று ஒலியெழுப்ப முழுக்குடும்பமும் சிரிக்கிற காட்சியோடு விளம்பரம் உறையும்.


எல்லா விளம்பரங்களும் சந்தோஷச் சிரிப்போடுதான் முடிகின்றன. உடல் குலுங்கி, முகம் மலர்ந்து, பற்கள் தெரிய சிரிக்கிற அந்தக் கணங்களில், விளம்பரப் பொருளின் பேர்களை வயது வித்தியாசமின்றி பார்வையாளனின் மனதில் பதிய வைக்கிற செப்படி வேலை இது. நிறைவேறாத ஆசைகளை நிஜமாக்குகிற அற்புத விளக்குகளாக கிரெடிட் கார்டு உன்னதப்படுத்தப்படுகிறது. மாயக்கம்பளமாக விரிகின்றன தொலைக்காட்சி விளம்பரங்கள். நிலாவையும் தரையிறக்கத் துடிக்கும் பத்து சதவீதத்துக்கும் குறைவான இந்தியர்களை முன்னிறுத்துகிறது மாய்மால வெளிச்சம்.

இன்னொரு புறம் சாதாரண மக்களின் மீது அடர்ந்த இருட்டுதான் விழுந்து கிடக்கிறது. அந்தப் பேருந்து நிலைய வாசலில் அந்த இருட்டின் குரலாய் ஒரு குழந்தையின் அழுகை கேட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்த போது எண்ணெய் வழிகிற முகங்களோடு இறுக்கிப் பின்னிய ஜடையோடும் மூன்று குழந்தைகளின் தாய் நின்று கொண்டிருந்தாள். இடுப்பில் இருந்த அந்தக் குழந்தை தாயின் காது வளையத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. இன்னொன்று மணலில். நான்கு வயதுள்ள அடுத்த குழந்தை பழக்கடையை குறிவைத்து அழுது கொண்டிருந்தது. இரவு ஏழு மணிக்கு அடுக்கி வைத்திருந்த பழங்களின் அழகால், குழந்தையின் பசி கூடுதலாயிருக்க வேண்டும். நிலாவைக் காட்டினாள். பஸ்ஸைக் காட்டினாள். அழுகையை திசை திருப்ப முடியவில்லை. "புளிக்கும்" "சளி புடிக்கும்" என மழுப்பிப் பார்த்தாள். அப்பா வந்ததும் வங்கித் தருவதாய் பிரச்சினையை தள்ளிப் போடப் பார்த்தாள். அழுகை உக்கிரமானது.


இப்போது சுற்றி நின்ற அனைவரின் பார்வையும் அந்தத் தாயின் பக்கம். அவமானமாக இருந்திருக்க வேண்டும். குழந்தையை இழுத்துக் கொண்டு நகர முயன்றாள். தோற்றுப் போனாள். ஒரு ஆரஞ்சுப்பழம் அஞ்சு ருபாய்க்கும், கால் கிலோ திராட்சை ஆறு ருபாய்க்கும் வாங்கலாம். பத்து ருபாய் இருந்தால் ஒரு ஆப்பிள் கூட வாங்கலாம். அதற்குக் கூட வக்கில்லாத வாழ்க்கையின் குரூரம் கோபமாய் கொப்பளித்து அழுகிற குழந்தையின் முதுகில் அப்பியது. அடித்துத் தரையில் தள்ளி விட்டாள். புழுதியில் புரண்ட குழந்தையின் அழுகுரல் சுற்றி நின்ற அணைவரின் நெஞ்சையும் பிசைந்திருக்க வேண்டும். அவமானம், வறுமை, இயலாமையோடு குழந்தையின் அழுகையும் சேர்ந்து தாயின் கண்களில் நீராய் கோர்த்து நின்றது.


கனவாக, காதலாக, குழந்தையின் அற்புத உலகின் ஊற்றுக்கண்ணாக காலந்தோறும் ஒளிரும் நிலவைக்கூட விலை பேச தயாராகிறது ஒரு உலகம். சவத்துக் கிடக்கும் பழங்களும், மூன்று வேளைச் சோறும் கூட நிலாவை விட தூரமாகிவிட்ட இன்னொரு உலகம். முரண்பட்டுக் கிடக்கிறது இந்த தேசம். ஏக்கமும், பெருமூச்சும் பெருகிப் பொங்கும் வேளையில் ஒளி எங்கிருந்து வரும்?


நன்றி : bank workers unity : மாத இதழ்

No comments: