7.12.09

முகம் காட்ட மறுத்தான்

            வெளியே எங்காவது சுற்றிவிட்டு காலை எட்டரை மனிக்குமேல் வீடு திரும்புகிற நடுத்தரக் குடும்பத்து ஆடவனைப்பற்றி சொல்வதற்கு நிறெய்ய இருக்கிறது. பெரும் தாக்குதலை எதிர்கொள்ளும் அத்துனை உபாயங்களையும் அசைபோட்டபடி சாலையில் பயணிப்பான். எதிர்ப்படுகிற தெரிந்தவர்களை, நண்பர்களை கவனிக்காதவன், திமிர் பிடித்தவன் கௌரவக்காரன் என்கிற பழிபாவம் தன்மேல் குவிகிற விஷயம் தெரியாத அப்பாவியானவன். அதிலும் இரண்டுபேரும் வேலைக்குப் போகிறவர்களாயிருந்தால்  ஐஸ்வர்யாராயும் அப்துல்கலாமும் எதிரே வந்தால் கூட அலட்சியப்படுத்திவிட்டுப் போவான்.

மே மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடக்க இருக்கும் கலை இரவுக்கான பேனரை முக்குலாந்தக்கல்லில் தூக்கிக் கட்டியிருந்தார்கள். மூன்று இரவுகள் தூங்காமல் பார்த்துப்பார்த்து அழகர்சாமி உருவாக்கிய பிரம்மாண்டம் .நாயகனும் நாயகியும் காமக்கிளர்ச்சியை கூவிக்கூவி விற்கிற சினிமா போஸ்ட்டர்களும்  வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் கட்சிக்காரர்களின் மனக்குமுறலோடு பிறந்தநாள் வாழ்த்துச் சுவரொட்டிகளும் ஆக்ரமித்துக் கொண்டிருந்த இடத்தில் பாசாங்கில்லாத ஓவியம் செருக்கோடு நின்றிருந்தது. வாசல் படியில் உட்கார்ந்து   சிறுமிகள் இருவர் பேன் பர்க்கிற நிஜத்தின் பிம்பம். அசல் புகைப்படத்திலிருந்த முகபாவங்கள் மாறிப்போயிருந்தபோதும் வேறு கோணத்தில் அதன் உணர்வுகளை அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தது. கடந்துபோன யுகத்துக்குமான ஏழைப்பெண்களின் ஒட்டுமொத்தப் பதிவாக அந்த முகத்தில் ஒரு இறுக்கம் மேலோங்கியிருந்தது. இரண்டு டீயும் இரண்டு சிகரெட்டும் தீர்ந்து போனபின்னும்பேச்சு தீராமலிருந்தது. பள்ளிக்கூடத்தில்   வரைந்த  பொங்கல் பானை கரும்பு   ஓவியம் தொடங்கி மோனலிசாவின் மர்மப்புன்னகை, சோவியத் புத்தகங்களில் பார்த்த ஓவியங்களின் நுணுக்கமான முகபாவங்கள், கீழே கிடக்கும் காய்ந்த சருகுகளில் கூடப் பிரதிபலிக்கும் சூரிய ஒளி பற்றியெல்லாம் பேசப்பேச நேரம் தெரியாமல் முங்கிக்கிடப்பது. லீவா என்ற கேள்வியின் உசுப்பலில் சுதாரித்துக்கொண்டு தலைதெறிக்கக் கிளம்புவது வாடிக்கையானது. வீட்டில் அதற்கு கிடைக்கும் எதிர்விளைவுகள் அலாதியானது.

"விடிஞ்சும் விடியாமப் போயி அப்பிடி எந்தக் கோட்டயைப் பிடிக்கப் போறீங்களோ?" விடியுமுன்னே கண்முழிக்கிற எல்லோருக்கும் கோட்டை பிடிபட்டுவிட்டால் பால்காரர்கள், டீக்காடைமாஸ்டர்கள், பேப்பர் போடுகிற பையன்கள் எல்லாம் இந்த தேசத்தில் கிரீடங்களோடு அலைவார்கள். இந்தக் கேள்விகளோடும் பதில்களோடும் போனபோது வீடு வேறு பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருந்தது. முகம் தெரியாத மனிதரொருவர் ஊர்க்காரன் என்று சொல்லிக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்திருக்க அடுப்பு வேலையும் கவனிக்காமல் வந்த மனிதனிடமும் பேசாமல் தத்தளித்துக்கொண்டிருந்தாள்.                 

பையன் வேறு வீட்டுப்பாடமும் எழுதமுடியாமல், அம்மாவிடம் ஸ்கெட்ச் பேனா வேணும் புதுப்பை வேணும் என்று கேட்கமுடியாமல் அந்த ஆளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். வந்தவரும் விருந்தாளிக்குண்டான லச்சணமில்லாமல் நாற்காலியில் உட்காராமல் வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்து இனம் புரியாத பயம் வரும்படிக்கு அலைந்துகொண்டிருந்தார். அடையாளம் கண்டுகொள்ள எனக்கே சில மணித்துளிகளானது. பாட்டிவழியில் தூரத்து சொந்தக்காரன் மாரியப்பன். என்வயதுக்காரனாயிருந்தாலும் கிராமத்து வறுமையில் கிழட்டுத்தொற்றம் ஏறிப்போயிருந்தது. கிழிந்த அழுக்குச்சட்டை, பரட்டைத்தலை, குளிக்காத உடம்பு, ஒரு பிச்சைக்காரனைப் போலிருந்தான். அவனது வருகையின் நோக்கத்தை கனிக்கமுடியாதவனாகித் தவித்துக்கொண்டிருந்தேன். பொதுவாக ஊரிலிருந்து வருகிறவர்கள், மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு பாத்திரங்கள், வென்னீர், பழைய போர்வை கேட்டு வருவார்கள். விசேச வீடுகளுக்கு பத்திரிகை வைக்க, இனி எதுவும் வழியில்லை என முடிவாகி பெரிய எதிர்பார்ப்பில் கடன் கேட்டு, ஊர்காரியங்களுக்காக நன்கொடை கேட்டு, இப்படித்தான் இந்தப் பதினைந்து வருடத்தில் ஊர்க்காரர்களுடனான தொடர்பு இருந்தது. மருமகன், பேரன், பால்ய காலத்துச் சேக்காளி பந்தமெல்லாம் மங்கிப்போய் அரசாங்க வேலைக்காரன் கிராமத்துக்கூலிக்காரன் என்கிற மாயத்திரை விழுந்திருந்தது. எதுவும் கேட்காதவர்களின் முகமும் கண்களும் கூட ஏக்கத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு வீசும்.   

இது எதிலும் அடங்காத முகபாவத்தோடு மாரியப்பன் இருந்தான். உட்காரச் சொன்னதற்கு நாற்காலியைத் தவிர்த்து மெத்தையைத் தேர்ந்தெடுத்தான். முதல் வார்த்தையிலே ஏன் வந்தாய் என்றுகேட்க மனம் தயங்கியது. தகுதிக்கு மீறிய கோரிக்கையாக எதுவும் கேட்டு   இல்லையென்று சொல்லும் தைரியம் குறைந்தவனாயிருந்தேன். ஊரில் மழை தண்ணி எப்படி, பொழப்பு எப்டி இருக்கு, பயங்க என்ன செய்றாங்க... வழமையான விசாரிப்புகளுக்கு அவனது பதில்கள் சம்பந்தமில்லாமல் இருந்தது.

"பொங்கலுக்கு நம்மூர்ல பட்டிமண்டகம் போடனுமப்பா ஐயோனி நல்லாச் சிரிக்கச் சிரிக்க பேசுராம்ப்பா', "ஒங்கய்யனச் சத்தம்போட்டு வை ஓவராத்தண்ணியப் போட்டுட்டு வந்து அக்காட்ட சண்ட போடுராரப்பா","இன்னிமேக்கொண்டும் ரெட்டெலைக்கு ஓட்டுப் போடக்கூடாது இங்க பாரு தன்னியத்துட்டுக்கு விக்கிர கொடுமையெ" பேசிக்கொண்டிருக்கும் போதே அடுப்படிக்கு போய் தானே தண்ணீர் எடுத்துக் குடித்துக்கொண்டான். திரும்பிவந்து டீவிப்பெட்டிக்கருகில் உட்கார்ந்து முறைத்துப்பார்த்தான். போடுவதற்க்கு எத்தனித்துத் தோற்றுப்போனான். இந்த அத்து மீறல் ஒட்டுமொத்தமாக எல்லொருக்கும் எரிச்சலை உண்டு பண்ணியது. அடுப்படியில் இருந்து நீ உட்பட உங்கள் ஊர் மனிதர்களே இப்படித்தான் என்று கடுங்குற்றம் சுமத்துகிற பார்வை பார்த்தாள்.  சைகையாலே என்ன நடக்குது என்று கேட்டுவிட்டு மீண்டும் ஸ்கூல் கிளம்புகிற வேலைகளில் முங்கிப்போனான் பாரதி. இனியும் தாமதித்தால் பையனை பள்ளிக்கூடத்தில் விடுவது ஒன்பதேகால் பஸ்ஸைப் பிடிப்பது தாமதமாகிப்போகலாம்.

"ச்செரி என்னசோலியா வந்தெ பயல போயி உடனும்"அவசரப்படுத்தினேன். "அவுக இவுகமாரி வாங்குன கடனக்குடுக்காத ஆளில்ல, கடம்னா நமக்கு கை கூசும் சொந்தக்கரன் ஓண்ட கேக்காம வேரார்ட்டக்கேக்க' பலமான பீடிகையோடு ஆரம்பித்தான் அடுப்படியைப் பார்க்காமல் தவிர்த்துத் தோற்றுப்போனேன். ஆயிரம் ஐனூறு என்று கடன் வாங்கிப்போன ஊர்க்காரர்களைப் பார்வையால் பட்டியல் போடுவது தெரிந்தது. தவிரவும் வாங்கும்போது கடனாகப்பேர்கொள்ளும் காசு, நாள்பட நாள்பட இனாமாக மாறிப்போகும் வரலாறுகளையும் நினைவூட்டுகிறமாதிரி தெரிந்தது. மாத நடுவில் காசுபணம் கையிலிருக்காத விஷயத்தை விளக்க ஆரம்பித்தேன்.

"கடங்காரங்க மானத்த வாங்குறாங்க, நாக்கப்பிடுங்கிக்கிர்ராப்பயிருக்கு, ஒரு தடவ நீ இந்த ஒதவியச்செய்யி திரிப்பித்தர மிடியாட்டாலும் நீ வீடு கட்டம்போது கொத்த வேல செஞ்சி கழிச்சிர்ரனப்பா"

"இந்தா வச்சிக்க ஏண்ட்ட இப்பக்கடங்குடுக்ற அளவுக்கு காசில்ல' சட்டைப்பையிலிருந்து நூறுரூபாயை எடுத்து  நீட்டினேன்.

வடக்கடைக்கு எட்டு ரூவா, சோமண்ணங்கடக்கி பீடி வாங்குன பாக்கி ஆறு, ஆருமுகச்சாமி மோலாளி கடயில குருனயரிசி வாங்குன கடன் பன்னண்டு, பஸ்ஸுக்கும் பீடிச்செலவுக்குமாச்சேத்து முப்பத்தஞ்சி போதும்" சொல்லித்திடுக்கிட வைத்தான். "முப்பது குடு சில்லரை மாத்தி சாயங்காலம் திருப்பித்தரேன்"

தயங்கித்தயங்கி அவளிடம் போய்க்கேட்டேன். அங்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. "நூறையும் கொடுத்துருங்க" காசை வாங்கிக்கொண்டு மருகி மருகி நின்னவனிடம் டீக்கொடுத்து, பிறகும் தயங்கி நின்னவனிடம் சாப்பிடச்சொல்ல மடமட வென உட்கார்ந்து சாப்பிடத் தயாராகிவிட்டான். போகும்போது மறக்காமல் இரண்டு பழய சட்டைகளை கேட்டு வாங்கிக்கொண்டு போனான்.

என் விளையாட்டுப்பருவத்தின் மையப்புள்ளியாக இருந்தவனா, சதா சர்வகாலமும் ஏழெட்டுப்பையன்களோடு ஊரைச்சுற்றிவந்தவனா. எந்த விளையாட்டிலும் தனது பிரவேசத்தால் தோல்வியை அனைவருக்கும் மொத்தமாக வினியோகம் பண்ணுகிற மாரியப்பனா இவன். அப்போதெல்லாம் அவனை ஒரு தரம், ஒரே ஒருதரம் ஜெயித்துவிடத் துடிக்கிற வெறிகொண்டலைந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த வெறியே அவனது மூலதனம். பரபரப்பு, நிலைகொள்ளாமை, இலக்கைத்த் துல்லியப்படுத்தமுடியாமல், சிதறிப்போகும். அவனோ நிதானமாகக் குறிவைப்பான்.இடது கைப்பெருவிரலை தரையில் ஊன்றி பாம்புவிரலின் நுனியில் கோலிக்குண்டை வைத்து அந்த விரலை வில்லாக வளைத்து, உருவிவிடும்போது சுற்றி நிற்கிற அத்தனைபேரும் குறிதவர வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருப்ப்பார்கள், சொடீரென்று எதிராளியின் கோலிக்குண்டில் அடிவிழ எல்லோரது வேண்டுதலும் தகர்ந்து போகும். காக்கை நோக்கறியும் கொக்கு டப்பறியும் என்னும் பழமொழியைத் தவிடுபொடியாக்கியவன் மாரியப்பன். பறவைகளில் காக்கைக்கு குறிப்பறியும் திறமை அதிகம், அதன் கண்களுக்கு நூற்றி அறுபது டிகிரி சுழலும் அசாத்தியம் இருப்பது மாதிரி,பின்னால் இருந்து கையை ஓங்கினாலும் சுதாரித்துக்கொண்டு பறந்து ஓடிவிடும். பறக்கிற வேளையிலும் கூட கல்லெறிந்தால் பசக்கென்று எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும். சாதாரணக் கவன்கல்லில் காக்காயைச் சாய்த்து விடுகிற வல்லமை கொண்டவன்.

புளியமரத்தின் உச்சிக்கொப்பில் காக்கைகளும், வேலிச்செடியின் தூருக்கு அடியில் குழிபறித்து காடைகளும் கவுதாரிகளும் மொட்டைப்பனயின் பொந்துகளில் கிளியும் மைனாக்களூம் கூடுகட்டும் என்கிற பறவைகளின் வாழ்க்கை முறை அவனுக்கு அத்துபடி. ராத்திரி நேரங்களில் வேதக்கோயில் முகட்டில் ஏறி இறங்கும் போது நாலைந்து புறாக்களோடு இறங்குவான். ஒருநாள்  மேகக்கலரில் திட்டுத்திட்டாக பழுப்பு, கருப்பு நிறப்புள்ளிகளோடு பத்துப்பதினைந்து முட்டைகளோடு வந்தான். பாட்டி கதைகளில் வரும்  சாகசக்காரனைப்போலவும், விளையாட்டுப்பிராயத்துக் கனவுகளில் வரித்துக்கொண்டிருக்கும் லட்சிய நாயகனைப்போலவும், அவனது வருகை இருந்தது. அது என்னபொருள் என்ற புதிர்போட்டியொன்று உடனடியாக அரங்கேறியது, முட்டையென்று இனங்கண்டுகொள்ள நெடுநேரம் ஆகியது. எப்போதாவது  ஊருக்கு வரும் மைக்செட்டை, தேர்தலுக்கு மட்டும் புழுதிபறக்க வரும் பிளசர் காரை, பொங்கலுக்கு வரும் கரகாட்டக்காரர்களை, தலைக்கு மேல் பஸ் போனது மாதிரித் தாழ்வாகப் பறக்கும் ஏரோப்பிளேனை, வேடிக்கை பார்க்கிற மாதிரி அந்த காடை முட்டைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

பள்ளிக்கூட லீவு நாட்களில் அவனோடு ஆடுமேய்க்கக் காட்டுக்குள் போவதற்கும் அவனோடு ஒட்டிபிறந்த பிரம்புக்கம்பை கையில் பிடிப்பதற்கும் கடும் போட்டிவரும். காடுகளின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்துக் காண்பிக்க வந்த தேவ தூதனைப்போல் முன்நடக்க பத்துப்பதினாறு வெற்றுப்பாதங்கள் ஆர்வக்கொந்தளிப்பில் தரை உரசிக்கிளம்பும். பொட்டக்கம்மாயை தாண்டியதும் பத்துப்பதினைந்து ஏக்கர் வேலிக்கரடு விரிந்து கிடக்கும் அங்கு எல்லோரும் அரவமில்லாமல் நடக்கக் கட்டளையிடுவான். முயல்களின் நடமாட்டம் அங்கு அதிகம் முள்புதர்களுக்குள் பிரவேசிக்கும்போது முயல் பார்க்கலாம் என்று துல்லியப்படுத்துவான் அது அப்படியே நடக்கும், தரையில் பறந்து போகிற மாதிரித்தோன்றும்  முயல்பாய்ச்சலைப் பார்க்கும்போது ஆச்சரியமும் பிரமிப்பும் ஒருசேரக்கிடைக்கும். மத்தியானப்பசிக்கு வெள்ளெலிகளும், அணில் பிள்ளைகளும் அடித்து உரித்து குடலெடுத்து அதன் வயிற்றுக்குள் சீனிக்கல்லை வைத்து சூட்டாம்போட்டுக் கொடுப்பான் ஐயரவோடு ஆரம்பிக்கிற ருசி கொண்டா கொண்டா என்று கேட்கும். கொப்பில்லாத மரத்திலும்,படியில்லாத கிணத்திலும், அனாயசமாக தரையில் நடப்பதைப்போல் ஏறி இறங்குவான். ஆடு மேய்ப்பன், களையெடுக்கப்பொவான், பெரியவர்களோடு போட்டிபோட்டு ஆஞ்சான் இழுக்கப்பொவான்.

அவன் விரும்பாத விளையாட்டும் ஒன்று உண்டு சோறு பொங்கி விளையாடும் அப்பா அம்மா விளையாட்டு. அவன் போகாத இடம் ஒன்று உண்டு அது அந்த ஊர்ப்பள்ளிக்கூடம். ஆனால் அதற்காக அவன் ஒரு வினாடி கூட வருத்தப்பட்டிருப்பானா என்பது சந்தேகமே. அந்த ஊர் நாட்டாமைக்காரரின் மகன் கூட காசு வேணும், பம்பரம் வேணுமென்று அழுது அடம்பிக்கப் பார்த்திருக்கிறோம். மாரியப்பன் மட்டும் மாறாத புன்னகையோடும், சுறுசுறுப்போடும் கவலையின் சுவடு தெரியாமல் அந்த ஊரைச் சுற்றிச்சுற்றி வருவான். அவன் மட்டுமா அந்தப்புல்லாங்குழல் சத்தமும் வருடல் நாதத்தோடு ஊரைச்  சுற்றிக்கொண்டிருக்கும்.

அதென்ன மாயமோ புல்லாங்குழலுக்கும், ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கும், கெட்டிப்படுத்தப்பட்ட யுகாந்திர பந்தத்தைச் சுமந்துகொண்டே காலம் நீள்கிறது. அவனது இடுப்புக்கும் டவுசருக்கும் இடையில் தனக்கென ஒதுக்கப்பட்ட வசிப்பிடம் போல் அந்தப்புல்லாங்குழல்  ஒட்டிக்கொள்ளும். உதடு குவித்து நெருங்கும் ஒவ்வொரு வேளையும் பிரியமானவளுக்கு கொடுக்கப்போகும் முதல் முத்தத்தின் ஆவலோடு அவனும், நீண்ட முத்தத்திற்கு காத்திருக்கும் ஏக்கத்தோடு எதிர்ப்படும் ஆதி இசைக்கருவூலமாக அந்த மூங்கில் குழலும் கலந்துபோவார்கள். சினிமாப்பாடல்களையும், வார்த்தைப்படுத்தப்படாத நாதத்தையும்  காற்று வழியே கலந்துவிடுவான், காற்றும் தனது குழந்தையைத் தோளில் தூக்கி நடப்பது போல் ஊரெங்கும் படர்ந்துவரும். உயர்ந்த இடத்திலமர்ந்து இசைக்கிற, எதிரிலமர்ந்து ரசிக்கிற ஏற்பாடுகளேதும் இல்லாமல் அவனும், ஊரும், காற்றும் தங்களின் அலுவல்களுக்கூடாக பரிமாறிக்கொள்ளும் இசையனுபவம் சிலாக்கியமானது. தடதடவெனச் சன்ன ஒலிக்கீற்று மேலேறித் தலைக்குமேல் வட்டமிடுகிற துள்ளலிசை. உறுமலைச் சுத்திகரித்துத் தயாரித்தது போல் அடிச்சுரத்தில் ஒரு ஓசை வரும். அது  கால அதிர்வுகளைச் சுமந்து கொண்டு தரைவழிப் பயணித்து நினைவுகளின் அந்தகாரத்தில் சஞ்சாரிக்கும்.

அந்த அதிர்வுகள் மட்டும் மிஞ்சிக்க்஢டக்கிற மாரியப்பனை மறுபடியும் இந்த நகரத்துக்குள் பார்ப்பேனென்று நினைக்கவில்லை. காலம் அலுவலக மேஜை நாற்காலிகளுக்குள் நகர்ந்தும், நகரத்து இரைச்சலில் விரைந்தும் கடந்துபோனது. பரீட்சை அட்டையைப் போட்டிபோடும் தடித்த  அழைப்பிதழின் மினுமினுப்புக்குப் பயந்து போகவா வேண்டாமாவெனத் தயங்கியிருந்தபோது நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அட்டக்கம்பெனி குணசீலன் வீட்டுக் கல்யாணத்துக்குப் போக நேர்ந்தது. மண்டப வாசலில் நறுமணமும் குளிர்காற்றும் சேர்த்துத் தெளிக்கிற கருவி நிறுத்தப்பட்டிருந்தது. மண்டப நடுவில் ஒரு செயற்கை வாழைமரம் வந்தவர்களைக் கவர்ந்துகொண்டிருந்தது. மண்டபம் முழுக்கச் செயற்கைச் சிரிப்புகளும், குதூகலமும் நிறைந்திருந்தது. பிரபலங்கள் தாங்கள் செய்துகொண்டு வந்திருந்த பாராட்டுவார்த்தைகளை ஒலிவாங்கியின் வழியே கூட்டத்துக்குள் தூவிக்கொண்டிருந்தார்கள். சீருடை அணிந்த சப்ளையர்கள் கையில் பாலித்தீன் உறைகளைச் கையில் சுற்றிக்கொண்டு பசியமர்த்தினார்கள்.

பசியைமட்டுமே அழைப்பாக ஏற்று கல்யாணத்துக்கு வந்து கூட்டத்தோடு கூட்டமாய் பந்தியில் ஊடுருவி விட்ட பிச்சைக்காரர்களைக் கண்டுபிடிப்பது கல்யாண வீட்டுக்காரர்களுக்கு சுலபமாக இருந்தது. அப்படி கண்டுபிடிக்கப்பட்டவர்களை அதட்டி விரட்டுவதைப் பார்ப்பதற்கும் தீர்ப்புச் சொல்வதற்குமாக  கூட்டம் கூடியது. பாதி சாப்பிட்ட கையோடும் கையும், களவுமாகப் பிடிபட்ட அவமானத்தோடும் நின்றுகொண்டிருந்தவனை இனங்கன்டுகொள்வது, எனக்கு சுலபமாக வந்த கனத்த பாரமாக இருந்தது. பேர்சொல்லிக் கூப்பிட்டு அருகில் போவதற்குள் அங்கிருந்து காணாமல்போனான். ஆறு சுவை உணவு வயிற்றுக்குள் கட்டையாக அழுத்தியது பின்னர் இரண்டு நாட்களுக்கு மனசும் வயிறும் சரியில்லாமல் போனது. அதற்குப் பிறகு பேச்சியம்மன் கோவில் அன்னதானக் கும்பலில், சிதம்பரம் நகரில் ஒரு பங்களாவின் வாசலில், மிச்ச வாழ்க்கையை யாசிக்கிறவனாகப் பார்க்கமுடிந்தது. அலுவலகம் கழிந்த ஒரு மாலை வேளையில், பேருந்து நிலைய வாசலில் இரக்க குணம் இருக்கிற முகம் தேடித்தேடி கை நீட்டிக்கொண்டிருந்தான். நெருங்கிப்போனபோது என்னைத்தவிர்க்க எத்தனித்துத் தோற்றுப்போனான். முதல்முதலாய் அவன் தோற்றுப்போனதைப் பார்த்தேன். எதிரே நின்ற என் முகம் பார்க்கக் கூசியவனாய் தரை பார்த்திருந்தான்.

வீட்டுக்கு அழைத்தேன் வேகமாக தலையாட்டிவிட்டான், ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாமென்று கூப்பிட்டேன் உறுதியாக மறுத்துவிட்டான். பேருந்துநிலையப் பரபரப்பையும், இரைச்சலையும் விழுங்கிய பெரும் மவுனம் நீடித்தது. அதை உடைத்துக்கொண்டு அவனே பேசினான், தன்னை இனி பார்க்க நேர்ந்தால் கண்டுகொள்ள வேண்டாமென்றும், அதுபற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாமென்றும் கேட்டுகொண்டான். மீண்டும் நான் கொடுத்த நூறு ரூபாயை நிராகரித்துவிட்டு வெறும் பத்து ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டு மறைந்துபோனான்.        

11 comments:

Esha Tips said...

தங்களின் கதை மிகவும் அருமையாக உள்ளது தாங்களி விரும்பினால் நமது தமிழ்த்தோட்டம் கதை பகுதியில் தங்களின் கதைகளை வெளியிட ஆவலாக உள்ளோம்...

http://tamilparks.50webs.com

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் நெகிழவைத்த கதை.

பொதுவாக ஊரிலிருந்து வருகிறவர்கள், மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு பாத்திரங்கள், வென்னீர், பழைய போர்வை கேட்டு வருவார்கள். விசேச வீடுகளுக்கு பத்திரிகை வைக்க, இனி எதுவும் வழியில்லை என முடிவாகி பெரிய எதிர்பார்ப்பில் கடன் கேட்டு, ஊர்காரியங்களுக்காக நன்கொடை கேட்டு, இப்படித்தான் //

மறந்தே போயிருச்சு இதெல்லாம், மீண்டும் ஞாபகப்படுத்திட்டீங்க.

சுந்தரா said...

கதை மனசை என்னவோ செய்கிறது...

அன்றைக்கு, பள்ளியிலும் கல்லூரியிலும் கூடப்படித்த துறுதுறுப்பான தோழியொருத்தி, சித்தம் தடுமாறித் திரிகிறாளென்ற செய்தி கேட்டபோது ஏற்பட்ட மனத்தடுமாற்றம்போல...

சந்தனமுல்லை said...

வாசித்து முடித்தபின்னும் வெகுநேரம் வலிக்கச் செய்கிற கதையும், நடையும்!

அன்புடன் அருணா said...

மனதை அள்ளிச் செல்கிறது கதை.

லெமூரியன்... said...

\\விடியுமுன்னே கண்முழிக்கிற எல்லோருக்கும் கோட்டை பிடிபட்டுவிட்டால் பால்காரர்கள், டீக்காடைமாஸ்டர்கள், பேப்பர் போடுகிற பையன்கள் எல்லாம் இந்த தேசத்தில் கிரீடங்களோடு அலைவார்கள்........//

என்ன ஒரு குறும்புத்தனம் :-) :-) இதே பதில அண்ணிகிட்ட சொன்னீங்களா ??? :-) :-)


முழுதாக வாசித்து முடித்த போது இனம் புரியா வலி மனதிற் பரவியது அண்ணா.....

காமராஜ் said...

நன்றி.

தமிழ்ப்பூக்கள்,
அமித்தம்மா,
அருணாமேடம்,
சுந்தரா,
ஞானசேகரன்,
லெமூரியன்,

காமராஜ் said...

நன்றி தமிழ்பூக்கள்,
எனக்கு சந்தோசமே.

இந்தச் சிறுகதை
'ஒரு வனதேவதையும் இரண்டு பொன்வண்டுகளும் '

என்கிற எனது தொகுப்பில் வெளியானவை.

இது உங்களின் கவனத்துக்கும், தகவலுக்கும்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

இந்த சிறுகதையை நாளைக்கு படித்துவிட்டு எழுதுகிறேன். இன்னைக்கு “உள்ளேன் ஐயா” சொல்ல வந்தேன்.

என்னை அவ்வப்போது அழைக்கும் அன்புக்கு பதிலாய் மேலும் அன்பு...

அன்புடன்,
ராகவன்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

இந்த சிறுகதையை நாளைக்கு படித்துவிட்டு எழுதுகிறேன். இன்னைக்கு “உள்ளேன் ஐயா” சொல்ல வந்தேன்.

என்னை அவ்வப்போது அழைக்கும் அன்புக்கு பதிலாய் மேலும் அன்பு...

அன்புடன்,
ராகவன்

நினைவுகளுடன் -நிகே- said...

மனதை வலிக்க வைத்த கதை
படித்து முடிந்த பின்னும் மனதில் நிற்கிறது .