20.1.10

கருசக் காட்டுக்குப் போனேன்.


பாடப் புத்தகத்தில் இருந்த உரல் வாழ்க்கைப் பக்கத்திலிருந்து வீசியெறியப்பட்டது. என் மகனுக்குக் அதைக் காட்ட நான் புதைபொருள் ஆராய்ச்சிக்குத் தான் போகவேண்டும்.உரல் தெரியாத அவனுக்கு உரப்பெட்டியை எப்படி அறிமுகப்படுத்துவேன்.அது நூடுல்ஸ் சிக்கலில் நுனிதேடும்  கதையாகும். அம்மியில் அரைத்த துவையலையும்,அம்மியைச் சுற்றி முளைத்துக் கிடந்த சீரகச் செடியையும் தேடித் திரும்ப ஊருக்குப் போனேன்.பெட்டிக்கடையில் தொங்கிய உடனடிப் புளிக்குளம்பு வாங்கி உடைத்து வைத்தாள் சோத்துக்குப் பக்கத்தில்.

மகன் வந்துவிட்டானென்று மடமடவென வேலைகள் நடந்தது அடுப்பிலிருந்து கோழிவாசம்,நகரத்தில் வீசும் அதே கறிக்கோழி வாசம். வேலை செய்யாம வீட்டில் இருந்து தொந்தி வச்ச எல்லோருக்கும் ஊரில் ஒரு பேருண்டு 'பொந்தாக் கோழி'.ரசத்தை ஊத்தி சாப்பிட்டு விட்டு காட்டுப்பக்கம் போனேன். மக்காச்சோளம்,  நித்தியகல்யாணி எனப்  புதுப் புதுப் பயிர்கள். மனதிலும் உடலிலும் பசியில்லை. பொழுதடையும் வரைத்டேடினேன் அது சிக்கவே இல்லை.

காடைக்கண்ணி.

தினையின் வலசலில் பிறந்த பயிர். கருசக்காட்டுக்கு ஏத்த செடி.கதிர் முத்தி திருகி எடுத்தால் சாக்கு நிமிர எங்கத்த மக கண்தெரியும். எண்ணெய் வழிகிற தலையிலிருந்து இறங்கும் அவள் சடையைப்போலவே கருது.காடுமுழுக்க இப்ப ஷாம்பூ வாடைமட்டும் மிஞ்சிக்கிடக்கு.அவளது கூந்தலில் செருகி மணத்துக்கிடந்த மருக்கொழுந்தை விரட்டிவிட்டு.

மொசைக் தரையைப்போட்டிக்கு இழுக்கும் வழுவழுப்பு காடைக்கண்ணியின் மேலே பூசியிருக்கும்.என்ன இருக்கு நெஞ்சுக்குழிக்குள் என்று கண்டுபிடிக்க முடியாதது போல ஏழு தோல் போர்த்தப்பட்ட வெள்ளைக்கடுகு காடைக்கண்ணி.குதிரைவாலி,சாமை,திணையைத்தெரியுமா உங்களுக்கு எல்லாம் அவளது சோட்டுப்பெண்கள். யாரையும் காணவில்லை இருந்த சுவடும் அங்கில்லை.
திரும்ப வந்தேன்  நூடுல்ஸ் நகரத்துக்குள்.

32 comments:

உயிரோடை said...

நாக‌ரிக‌ம், ந‌க‌ர‌ம‌ய‌மாத‌ல் என்ற‌ பெய‌ரில் நாம் என்ன‌வெல்லாம் தொலைத்துவிட்டோம். நானும் க‌ட்டிருக்கின்றேன் அப்பாயி/அம்மாயி வீட்டில் அம்மியோர‌த்து சீர‌க‌ச் செடிக‌ளை.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

காமராஜ்,

நமக்கு நெருக்கமான வாழ்வியல் விசயங்களை நம் கண்முன்னே இழந்துக்கொண்டிருக்கிறோம்.
இது நம் தலைமுறையின் சாபம் போல.
முந்தைய தலைமுறைக்கு இது நிகழவில்லை.அடுத்த தலைமுறை இதை பற்றியெல்லாம் கவலைப்பட போவதில்லை.

ஒரு முறை நண்பன் ஒருவனின் குழந்தைக்காக மரப்பாச்சி பொம்மை வாங்க அலைந்தது நினைவுக்கு வருகிறது.

- நூடுல்ஸ் பின்னல் உள்ளிருந்து
மார்த்தாண்டன்!

சந்தனமுல்லை said...

அருமையான இடுகை...எங்கள் ஆயா இன்னும் சில கீரை வகைகளையும் கொய்யா பழத்தில் ஒரு ரகத்தையும் சொன்னார். அவரது சிறுவயத்திற்கு அப்புறம் அவ்வகைகளை எங்குமே கண்டதில்லை என்று! எத்தனையை இழந்துவிட்டோம்! குதிரைவாலி யையெல்லாம் நாவலில் வாசித்ததோடு சரி! ஹ்ம்ம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பெட்டிக்கடையில் தொங்கிய உடனடிப் புளிக்குளம்பு வாங்கி உடைத்து வைத்தாள் சோத்துக்குப் பக்கத்தில்.// :)

ஆரூரன் விசுவநாதன் said...

சரியாச் சொன்னீங்க தோழர்....

இழந்ததை தேடுவது ஒருபுறமென்றால், மேழும் இழக்காமல் இருப்பதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை....

மிக அருமையான பகிர்வு

குப்பன்.யாஹூ said...

பதிவு அருமை.

இழந்ததை மட்டும் எழுதி உள்ளீர்கள்.

கிடைத்ததை எழுத வில்லை.
காரியாபட்டியில் உள்ள முத்து பேசி (muthu pechi) இன்று கலிபோர்னியாவில் வேலை பார்க்கும் தன் மவன் கருப்பையாவுடன் இணையத்தில் பேச முடிகிறது, அவனை பார்க்க முடிகிறது.

Karuppiah can transfer money to his mother bank account in one hour.

சாத்தூரில் இருக்கும் ராமையா தேவர் சென்னைக்கு ரயிலில் தன் இளம் பெண்ணை தனியாக வலி அனுப்பி விட்டு கவலை படுவதில்லை.,

நிமிடத்திற்கு நிமிடம் குரும்செய்தியும், கை தொலைபேசியும் மகள் சென்னை செல்லும் வரை பேசி கொண்டே இருக்கும் வசதி.

சொல்லி கொண்டே போகலாம்

க.பாலாசி said...

நூடுல்ஸ் நகரத்திலிருந்து அங்குசென்றால் வெறுமையைத்தவிற வேறென்ன மிஞ்சும். அதிக தூரம் பயனப்பட்டுவிட்டோம் என்றே எண்ணத்தூண்டுகிறது.

பா.ராஜாராம் said...

இங்கு இரண்டு நிதர்சன கவிதைகளை பார்க்க(உணர என எடுக்கலாம்) நேர்ந்தது காமு.

ஒன்று,இந்த பதிவு.

இரண்டு,

குப்பன்.யாஹூவின் பின்னூட்டம்.

Unknown said...

மாமா!இந்த நடை உங்களுக்கு மட்டுமே சொந்தமானது.அற்புதமாய் இருக்கிறது உங்கள் மொழி வீச்சு.உரலோடு சேர்த்து இந்த மொழியையும் தொலைத்து விட்ட சபிக்ககட்ட ‘நூடுல்ஸ்’ தலைமுறை நாங்கள்....வருத்தமாயிருக்கிறது.

காமராஜ் said...

லாவண்யா வாருங்கள் வணக்கம்.
இனி அது திரும்பப்போவதில்லை.
அந்த குதிரைவாலி அரிசியில் வரும் வாசம்,
கருப்பட்டி,சுக்கு தினை மாவு.
இனி நினைவுகளில் மட்டும் மணக்கும்.

காமராஜ் said...

ஆமா மார்த்தாண்டன்.
சென்னையில் இருந்து கிராமத்துக்கு வந்த உறவினர் ஒருவரின் பெண்குழந்தை
மூன்று மணிநேரம் அதை மடியைவிட்டு இறக்க வில்லை.ஆட்டுக்குட்டியை காரில் ஏற்றியே தீருவேன் என்று அடம் பிடித்தது.
பாவம் அது என்ன செய்யும்.

காமராஜ் said...

தினையரிசியில் செய்த மாவும்,பணியாரமும் தேடக்கிடைக்காதது முல்லை. அதன் வாசத்துக்குப் பக்கத்தில் நூடுல்ஸ் ..என்ன சொல்ல.

காமராஜ் said...

வணக்கம் குப்பன்யாஹூ சார்.
உண்மைதான்.அந்த வேகம்,விரல் நுனி உலகம்,
தொலைக்காட்சியில் சினிமா,செய்தி
இந்த வலை உரையாடல் எல்லாமே
வியப்பானதும் கூட. இதோடு கூட அதுவும் இருந்திருக்கலாம்.
அது இன்னமும் சிலாக்கியம்.காஸ் அடுப்பில் சுடுகிற பணியாரம்போல.

காமராஜ் said...

வாருங்கள் ராமலஷ்மி,நன்றி.

தோழர் அரூர் வணக்கம் நன்றி.

காமராஜ் said...

பாலாஜி எவ்வளவு நாளாச்சு.
ரொம்ப இடைவெளி,எல்லாப்பக்கத்துக்கும்
வரமுடியாத மனச்சோர்வு. அதைச்சரி செய்து நிமிர்ந்தால்
மீண்டும் பிரச்சினை... சரியாகும்.கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறது.
மீண்டும் பேசலாம் வலைவழியே.

காமராஜ் said...

வாங்க பாரா.
உங்க டச் அலாதியானது.ரசித்தேன்.

காமராஜ் said...

வாங்க பாரா.
உங்க டச் அலாதியானது.ரசித்தேன்.

காமராஜ் said...

வா மாப்ளே,எப்டி இருக்கே.
மகனக்கொஞ்சிக்கிட்டே பொழுது வேகமாய் நகருதா?
என்ன சொல்றான் சின்ன மாப்ளே.

மாதவராஜ் said...

அன்புத்தோழனே!

இதுதான் உன் மீது எனக்குள்ள விமர்சனமே! உக்கிரமாக ஒரு உண்மையை பதிவு எழுதிவிட்டு, குப்பன் யாஹூ ஒரு கமெண்ட் போட்டவுடன் சால்ஜாப்பு செய்யும் தொனியில், காஸ் அடுப்பு, பணியாரம் என்று ஏன் பூசுகிறாய். நம் விளைநிலங்கள், நம் விதைகள், நம் பயிர்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எதைக் காப்பாற்றப் போகிறோம்! வெளிநாடுகளுக்கு நம் சொந்தமெல்லாம் போய்விட்டதா? நகரங்களுக்கு உறவுகளையெல்லாம் அனுப்பிவிட்டு எஸ்.எம்.எஸ்ஸுக்காக ஊரே காத்து இருக்கிறதா?

பா.ரா இரண்டையும் கவிதையெனச் சொன்னதில் எனக்கு சம்மதமில்லை. இன்னும் எத்தனை பேர் கல்குவாரியில், மலக்கிடங்கில், பயர் ஆபிஸில் காலம் நேரம் பார்க்காமல் அமிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

குப்பன் யாஹூ மிடில் கிளாஸைப் பற்றி மட்டுமே பேசுகிறார்.. ஆனால் அவர்கள் மட்டுமே உலகம் இல்லை! இன்னும் கோடிக்கணக்கான் மக்கள் வேறு ஒரு சூழலில் இருக்கிறார்கள்!

அவர்களின் வேதனையும், வலியும் யாரறிவார்? உன் பதிவு அதன் நோக்கிச் சென்று, விலகிவிட்டது என்பதே என் தார்மீக கோபம்.

குப்பன்.யாஹூ said...

மாதவராஜ்

ஒருவேளை என் பின்னூட்டம், காமராஜின் பதிவின் பாதையை திசை திருப்பி இருந்தால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என் குறிக்கோள் அவர் பதிவின் பாதையை குறுக்கீடு செய்வது அல்ல.

சந்தை பொருளாதாரமும், தாராளமயமாக்கலும் , உலகமயமாக்கலும் கிராமத்தை முழுவதும் மாற்றி இருந்தாலும் (அழித்து இருந்தாலும்) , சந்தை பொருளாதாரத்தால் நெல் முனை அளவும் நnமை கிடைக்க வில்லை என்று கூற முடியாது.

வங்கி பாஷையிலேயே சொல்கிறேனே:

எட்டு வருடங்களுக்கு முன்னாள் மாரிமுத்து தேவர் பணம் எடுக்க வங்கிக்கு பத்து மணிக்கு வந்து இரண்டு மணி நேரம் கழித்து டோக்கன் வாங்கி பணம் எடுத்து முடிக்கும் போது மதியம் ஆகி விடும். இன்றோ அவர் ATM இல் இரண்டு நிமிடத்தில் பணம் எடுக்கிறார்.

சாத்தூரில் இருந்து சென்னைக்கு வியாபாரி பணத்தை கொண்டு செல்ல மிகுந்த பயம் , கவலை, டிமாண்ட் டிராப்ட் எடுக்க இருநூறு ரூபாய் கமிசன்.

இன்றோ சாத்தூரில் பணத்தை போடுகிறார், சென்னை ரயில் நிலையத்தில் ATM இல் பணம் எடுக்கிறார்.

காலை காப்பி குடித்து முடிக்கையில் நெட் பாங்கில் அன்றைய பண ஓட்டம், பண மேலான்மை செய்ய முடிகிறது.

even in farming, civil construction industries technology has helped a lot to reduce human pains.

மாதவராஜ் said...

குப்பன் யாஹு!
நீங்கள் ஏன் வ்ருத்தம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரியவில்லை. உங்கள் கருத்தை நீங்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

வருத்தம் காமராஜ் மீதுதான். அவனது கருத்தில் அவன் இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. அப்படியான விஷயம் இது.

அப்புறம் உங்கள் கருத்து சம்பந்தமாக..... உலகமயத்தால் எந்த நன்மையும் கிடைக்கவில்லையென நான் ஒருபோதும் சொல்லவில்லை. சொல்லமாட்டேன். ஆனால் யாருக்கு, எப்படி என்பது முக்கியம். அதுகுறித்து விரிவாக ஒரு பதிவு போடும் அளவு பேசலாம். பேசியும் இருக்கிறேன். பேசுவோம்.

காமராஜ் எழுதியது, காணாமல் போன அற்புதமான நம் பயிர்களைப் பற்றி. உணவைப்பற்றி. நீங்கள் சொல்வது தொழில்நுட்பம் பற்றி. யாருக்கு, எது முக்கியம் நண்பரே!

சுந்தரா said...

//காடைக்கண்ணி.குதிரைவாலி,சாமை,திணை??

:( இதையெல்லாம் நானே பார்த்ததில்லை...சந்ததிகளுக்கு எப்படி விளங்க வைக்க?

நெல்லு எப்படியிருக்கும்ன்னு கேட்ட என் மகனுக்கு கணினியில் படம்காட்டித்தான் புரியவைத்தேன்.

//பெட்டிக்கடையில் தொங்கிய உடனடிப் புளிக்குளம்பு வாங்கி உடைத்து வைத்தாள் சோத்துக்குப் பக்கத்தில்.//

இதெல்லாம் நம்ம ஊர் பெட்டிக்கடையில் கிடைக்குதா???
ரொம்பத்தான் முன்னேறிட்டாங்க நம்ம மக்கள் :)

அன்புடன் அருணா said...

/என் மகனுக்குக் அதைக் காட்ட நான் புதைபொருள் ஆராய்ச்சிக்குத் தான் போகவேண்டும்/
நான் கூட குழந்தைகளுக்குக் காட்ட அம்மிக்காக அலைந்திருக்கிறேன்!

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..

மாதுவின் கோபம் கூட அழகாகவே இருக்கிறது.மாதுவை அடையாளபடுத்துவது போல...

இரண்டையும் ரசிக்க முடியாவிட்டாலும் உணரத்தானே வேணும் மாது?..இரண்டும் நிஜம்தானே?

நானும் காமுவும் உணர்ந்துவிட்டோம்.நீங்கள் பிடிவாதமாய் முரண்டுவது அழகாய் இருக்கிறது.அனால் உண்மையாக இருக்கிறதா?

//காமராஜ் எழுதியது, காணாமல் போன அற்புதமான நம் பயிர்களைப் பற்றி. உணவைப்பற்றி. நீங்கள் சொல்வது தொழில்நுட்பம் பற்றி. யாருக்கு, எது முக்கியம் நண்பரே!//

வாஸ்த்தவம்தான் மாது..ஆனால் நிகழுதே..

"என்ன செய்யட்டும்?" என்கிற தொணிதான் காமராஜ் பதிவில் பார்க்க வாய்க்கிறது.

"ஒன்னும் செய்வதிற்கில்லை.வசதியாகத்தான் இருக்கிறது இந்த பரிணாமம்" என ஏற்கிறார் குப்பு.

ஏற்கத்தான் முடிகிறது என்னாலும்..ஏக்கங்கள் இருந்தாலும்,என் பாரதியாரே!

நிகழ்வுக்கு வாருங்கள்..

:-)

நல்ல விவாதம்தான் குப்பன்.எதுக்கு வருத்தமெல்லாம்?நமக்குள்தானே..

Radhakrishnan said...

பிரமாதமான பதிவு.

புது புது ரகங்களை கொண்டு வந்து நமது விளைநிலங்களுக்கு பெருமை சேர்ப்போம்.

நானும் கிராமத்திலதான் இருந்தேன். அப்ப எல்லாம் எல்லா பயிர்கள் பத்தியும் தெரிஞ்சிக்கனும்னு தோணலை, இப்பவும்தான். இருக்கறப்பவே தொலைச்சிட்டேன், இல்லாதப்ப எப்படி கண்டுபிடிக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது, ஆனால் தொழில் வளர்ச்சிதான் இல்லை.

காமராஜ் said...

ஆஹா,என்னோட பக்கத்தில் இத்தனை பின்னூட்டமா.
ஆனா நான் பேசாமல் இருந்தால் சபாஷ் சரியான போட்டின்னு சொன்ன மாதிரியாகிவிடும்.
என் தோழன்.
குப்பன் சார் எதுக்கு இதுக்கெல்லாம் போய் வருத்தம் தெரிவிச்சுக்கிட்டு.

காமராஜ் said...

அன்புத்தங்கை சுந்தரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

வாங்க ஆசிரியரே பெப்ருவரியில்.
பாலைவன மாநிலம் வருவோம்.

காமராஜ் said...

வாங்க ராதாகிருஷ்ணன் நன்றிங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதைப்படித்தபின் புரிகிறது, நிறைய இழந்திருக்கிறோம் என்பது :(

அன்புடன் அருணா said...

ஆஹா....february le சென்னைக்கா????வாங்க...வாங்க!

Anonymous said...

அதைப் பெற இதை இழந்திருக்க வேண்டியதில்லை. அதனுடன் இதுவும் இருந்திருக்கலாம் (இருந்திருக்கவேண்டும்). இதனைவிட அது உசத்தியானது என்ற நினைப்பு நம்முடைய தாழ்வு மனப்பான்மை மற்றும் அறியாமையே!

எதனைப் பேசுகிறேன் என்பது புரியவேண்டியவர்களுக்குப் புரியும்.