இதோ நூற்றி ஐம்பது பூக்கள். குதூகலம் குறையாத இரைச்சல். எல்லோரது பால்யகாலத்தியும் சட்டென இழுத்துவரும் இரைச்சல். 'சார் என்ன அடிக்கா, சார் இங்க பாருங்க டவுசர் பட்டணப்போடாம, சார் இவஞ் சினிமாப் பாட்டுப் படிக்கான் இப்படியான குற்றச்சாட்டுக்கள் கேட்டுக் கொண்டேயிருக்க எங்களை அது பின்னிழுத்துக் கொண்டு போனது. லூர்துமேரியின் கருப்புக் கண்கள் அவள் கொண்டு வரும் ஜவ்வு மிட்டாய், கல்கோனா, கடல்குச்சி, எச்சிதுப்பி அழித்த சிலேட்டுவாசம், அதில் எழுதிய அழியாத எழுத்துக்கள் மறுரூபம் எடுத்துத் திரிந்தது அந்தக் கூட்டத்துக்குள்.
அப்போதெல்லாம் ஐந்து பையன்கள் இருந்தால் ஒரே ஒரு பெண் படிக்கவருவாள்.அவளே எல்லாப்பாடத்திலும் முதலாவதாக வருவாள். 'ஒரு பொம்பளப்பிள்ள இத்தன மார்க் வாங்குறா,வெக்கமாயில்ல' வாத்தியார் பழைய்ய பண்ணையாராகி உசுப்பேத்துவார்.கடும்போட்டி நிலவும்.எட்டுவரை இந்தப் போட்டி நீடிக்க ஒன்பதாம் வகுப்புக்கு போகும்போது எதாவது ஒரு உருவத்தில் அவளை வறுமை முதலை இழுத்துக் கொண்டு போய்விடும். பதினாறு பதினேழு வயதிலே குடும்ப பாரம் சுமக்கப் போய்விடுவாள்.பிறகு பார்க்கும் போது ஒரு குழந்தையைக் கையில் துக்கிக்கொண்டு வந்து நமக்கு அறிவுசொல்லும் பெரிய மனுஷியாகிவிடுவாள்.முப்பத்தைந்து வயதில் பாட்டியாகிப் போகிற அவர்கள் காலத்தை முந்திக்கடந்து போவார்கள்.
இவள் என்னோட க்ளாஸ் மேட் என்று சொன்னால் யாரும் நம்பமுடியாத முதுமையை வலிய வாங்கிக்கொண்ட ஔவையார்கள் கிராமங்கள் தோறும் நிறைந்திருக்கிறார்கள். கல்வி அவர்களுக்கு சொகுசுக் கனவுகளைக் கொடுக்காது. ஆனால் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை கடைசிவரை வாழ்ந்து தீர்க்கிற அனுபவத்தையாவது தரும். இந்தக்கல்வி புத்தகத்தின் வாசனையை உள்ளிழுக்க,எழுத்தின் பலதரப்பட்ட சுவையை ருசிக்க கற்றுக் கொடுக்கும். உலகை ஓரளவு உணர்ந்து கொள்ள வாய்ப்புக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையின் ஒரு துவக்கம்.
அங்கே பாதிக்குமேலே பெண்பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் கண்களில் மிளிரும் நம்பிக்கையை முன்னெடுத்துக் கொண்டுபோக,அவர்கள் தேக்கிவைத்த கனவுக்கு வடிகால் கொடுக்க ஒரு அமைப்பு உருவாக்கியிருக்கிறோம். அதைச் செயல்படுத்தி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்.
21 comments:
மன்னிக்க. உங்க அனுமதி இல்லாமலேயே தமிளிஷில் இணைத்து விட்டேன்.
அருமையான பகிர்வு. எங்கே நடக்கிறது?
//எங்கே நடக்கிறது?//
எந்த இடத்தில் நடத்தப் படுகிறது என்றே படிக்க. எண்னாலாதை செயவும் விரும்புகிறேன்.
=வித்யா
வாழ்த்துகள். இந்த நிகழ்வு குறித்த முழு விபரம் தேவை. கல்யாண்குமார் உதவி ஆசிரியர் புதிய தலைமுறை 9500061604.
மிக நல்ல முயற்சி. உங்க அமைப்பில உதவி செய்ய என்னையும் சேர்த்துக்கோங்க.
மிக நல்ல முயற்சி...
நானும் எனது நண்பர்களும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி சிறு சிறு உதவிகள் செய்து கொண்டு இருக்கிறோம்.. முக்கியமாக பெண் கல்விக்கு...
கொஞ்சமாவது உங்களைப்போல நல்ல உள்ளங்கள் இருப்பதினாலே பூமியில் மழை பெய்கிறது , தொடரட்டும் உங்கள் பணி.................
நல்ல முயற்சி அண்ணா..தங்களுக்கும் அந்த இளைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துதல்கள்!
அருமையான முயற்சி காமராஜ் அண்ணா...!
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..!
ஒரு பெண்ணுக்கு கல்வி தருவது
ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதற்கு சமம் என்பார்கள். உங்கள் முயற்சி மேலும் சிறக்கட்டும்.
நல்ல முயற்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்.
கல்வியோடு கணினியும் சொல்லிக் கொடுங்கள்.
அன்பு காமராஜ்,
வஹிதாவைப் பார்த்தேன் சென்னையின் ஒரு பிள்ளைப்பேற்றிற்கான மருத்துவமனையில், நாங்கள் சிகிச்சைக்கு போயிருந்தபோது அவளும், அவள் அம்மாவுடன் வந்திருந்தாள்.என்னை அடையாளம் கண்டு கொண்டாள். என்னுடன் ஐந்தாவது வரை மட்டுமே படித்தவள், நான் ஆறாம் வகுப்பில் இருந்து ஆண்களுக்கான பள்ளியில் சேர்ந்து விட்டேன், அதன் பிறகு என் பிரிய சினேகிதியின் முகவரி கலைந்து போனது. ஏறக்குறைய 25 வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன். அவளின் இடது புருவத்துக்கு மேலான ஒரு சின்ன வெட்டுக்காயம் அவளின் அடையாளம் காண்பதற்கு பிரதான காரணமாய் இருந்தது. ஆனால் சிறிது தொப்பையுடன், அடர்ந்த மீசையும், உயரமும் தாண்டி நான் அவளுக்கு எதில் தெரிந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. என் மனைவியிடம் அறிமுகப்படுத்தினேன். அவளுடைய கணவர் வரவில்லை, மதுரையில் இருந்து அவளுடைய அம்மாவுடன் வந்திருந்தாள். இப்போது அவள் அம்மாவுடன் தான் தங்கியிருப்பதாகக் கூறினாள். கணவனின் விந்து அணுக்களை, முதலிலேயே எடுத்து வைத்து பதனப்படுத்தி வைத்திருப்பதால், இவளின் முட்டை வளர்ச்சியைப் பொறுத்து, அதனுடன் இனைக்கப்பட முடியும் என்பதால், அவர் வரணும்னு அவசியம் இல்லை என்ற போது கொஞ்சம் கவலையாய்த் தெரிந்தாள். குழந்தை பெற்றுக்கொள்ள விந்து மட்டுமே போதுமென்பது எவ்வளவு ஈரமற்ற உறவு. எல்லாம் நல்லபடியாப்போனா புருஷன் வீட்டுக்கு இல்லேன்னா, தலாக் தான், என்ன பன்றது, அவள் அம்மா பர்தாவை மீறி குலுங்கியதில் அதிர்கிறது குடும்பம் என்கிற கட்டுமாணம், அமைப்பு ஒரு உறவுதளம்.
நீச்சத்தொட்டிப் பள்ளியில் ஏழாவது படிக்கும்போது வயசுக்கு வந்துவிட்டதால், பர்தாவுக்குள் நுழைந்து விட்டது அவளது படிப்பும் ஏனைய பிறவும். மிக அருமையாக படிக்கும், ஒரு பெண்குழந்தை படிப்பை நிறுத்துவதற்க்கான காரணம் அவள் வயதுக்கு வருவது மாத்திரமே என்பது கொடுமையான விஷயமாக உறைத்தது. ஆட்டுக்கொட்டிலில் ஆடுகள் திடீரென்று காணாமல் போவது போல என்னுடன் விளையாடிய, போட்டியிட்ட புழுதிஅப்பிய பாவாடைக்காரிகள் காணாமல் போய் விடுகிறார்கள் பயணக்களைப்பின்றியே! எல்லோருமே இதற்கு ஒரு சாட்சியாக இருந்திருக்கிறோம் வெவ்வேறு காலகட்டங்களில். இப்படியான காலகட்டத்தில் இருந்து நாம் வெகு தூரம் வந்து விட்டோம் என்பது சந்தோஷத்துக்குரிய விஷயம், ஆனாலும் இழந்தவர்களின் வேதனையின் மீது திட்டு திட்டாய் காலப்புழுதி படிந்துவிட்டாலும் இரத்தம் கசிகிறது.
உங்களின், உங்களைப்போன்றவர்களின் முயற்சி போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள் காமராஜ்!
அன்புடன்
ராகவன்
இங்கே பின்னூட்டமிட்ட அணைவரின் ஆறுதலும் மிகவும் சிலிர்க்க வைக்கிறது.எல்லோருக்கும் என் அன்பும் வணக்கமும்.
அன்பின்
வித்யா,
லாவண்யா,
ரமேஷ்,
முல்லை,
அமித்தம்மா,
குப்பன் சார்,
சங்கவி,
ராகவன்,
மதார்,
நன்றி.
அன்பின்...
வித்யா,
லாவண்யா,
ரமேஷ்,
முல்லை,
அமித்தம்மா,
குப்பன் சார்,
சங்கவி,
ராகவன்,
மதார்,
நன்றி.
முதல் வருகைக்கு நன்றி திரு.கல்யாண்குமார்.
இது குறித்து விரிவாக உங்களோடு பேசுகிறேன்.
நான் எழுதிய ஒரு பதிவின் ஊடு வரியில் இருந்து இவ்வளவு சோகம் நிறைந்த வஹிதா வந்துபோவாள் என்பது அசாத்தியம். இதை ஒரு பின்னூட்டமாக மட்டுமே கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள முடிகிற ராகவன். உங்களைப்பார்த்து உண்மையில் பூரிப்பாக இருக்கிறது.
அருமையான பகிர்வு. நல்ல முயற்சி. இதைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் உண்டு.
/அவர்கள் தேக்கிவைத்த கனவுக்கு வடிகால் கொடுக்க ஒரு அமைப்பு உருவாக்கியிருக்கிறோம். அதைச் செயல்படுத்தி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்./
உன்னதமான சேவை.இதுக்கு வெறும் பூங்கொத்தோடு எப்படி? பூக்காடு!
/கல்வி அவர்களுக்கு சொகுசுக் கனவுகளைக் கொடுக்காது. ஆனால் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை கடைசிவரை வாழ்ந்து தீர்க்கிற அனுபவத்தையாவது தரும்./
எத்தனை அப்பட்டமான உண்மை..
//எந்த இடத்தில் நடத்தப் படுகிறது//
மேலும் அறிந்துகொள்ள ஆவல்.
/ஜவ்வு மிட்டாய், கல்கோனா, ../
இது என்ன நம்ம ஊரு ஸ்பெஷலா? ;)
/கடல்குச்சி, எச்சிதுப்பி அழித்த சிலேட்டுவாசம், .../
மலரும் நினைவுகள்...
Post a Comment