கடந்த சிலமாதங்களாக ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தபடியே இருக்கிறது. இதற்கு எதிரான மெல்லிய, நடுத்தர,தீவிர,உக்கிர கண்டனங்கள் அரசு அறிவித்த பின்னரும் நின்ற பாடில்லை.அயல் துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாகூட இதைக்காரணம் காட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்துவிட்டார். இது தோடர்பான எதாவதொரு செய்தி நம்ம கூகுளில் தினம் இடம் பெற்றுவிடுகிறது.
இப்படியான செய்தி இப்போது எல்லா தேசத்திலிருந்தும் வரத் தொடங்கி விட்டது. லண்டனில் படித்துக்கொண்டே உழைக்கப்போன 250 மாணவர்கள் அங்குள்ள குருத்துவாராவில் வழங்கப்படும் ஒருவேளை அன்னதான உணவிற்காக அங்கேயே தங்கிவிட்டார்கள் எனும்செய்தி கூட இந்தவகைதான். இது உலக மயம் தராளமயம் விரித்துவைத்த கவர்ச்சிவலையில் விழுந்த ஹைகிளாஸ் விட்டில்களின் நிலை. உலகமெங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில்,சொந்த மண்ணில் உள்ளவர்கள் சோத்துக்குச்சிங்கி அடிக்கையில் இது நிகழ்கிறது.
கடந்த 16.1.10 அன்றுகூட மெல்போனில் உள்ள டௌண்டவுனில் இருக்கும் மெல்போன் சென்ட்ரல் லயன் மதுக்கடையில் மூன்று இந்திய மாணவர்களை நுழையவிடவில்லை என்று ஒரு செய்திவந்தது.பதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான மாணவர் அகர்வால் இது குறித்து ஆஸ்திரேலிய காவல் துறையிடம் புகார் செய்தும் ஏதும் பலனில்லை என்று இந்திய ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை இனவெறி என்று முத்திரை குத்துகிறது.
இந்த தேசத்தில்,வந்தாரை வாழவைத்த இதே தமிழகத்தில் கடந்த 7.1.2010 திண்டுக்கல் மாவட்டம் அ.கோவில்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு வன்கொடுமை நடந்திருக்கிறதே அதுபற்றி யாருக்காவது தெரியுமா. செருப்புப் போட்டுக்கொண்டு நடந்ததற்காக காளியப்பன் என்கிற 24 வயது இளைஞன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறான். திண்ணியத்தில் நடந்தது போலவே ஓங்கரிக்கச் செய்யும் இன்னொரு பத்திரிகைச்செய்தி இது. மனித சமூகம் நினைத்துப்பார்க்க முடியாத,இல்லை இல்லை விலங்குகள் கூட்டத்தில் கூட காணமுடியாத நடைமுறை இது. சிறைச்சாலை என்கிற தமிழ்படத்தில் டினுஆனந்தின் வாயில் ஊற்றப்படுகிறபோது கேட்ட நாற்றம் கலந்த அலறலும், ஓலமும் இன்னும் இந்தியக் கிராமங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அதைவிடக்கொடூரம் இப்படிப்பட்ட புகார்களை எல்லாம் பத்துப் பதினைந்து நாட்கள் கழித்தேதான் வெளியுலகம் அறிந்துகொள்ள நேர்கிறது. அதையும் தாண்டிய அகோரம் காவல்துறையின் அனுகுமுறை. இதுபோன்ற வழக்கு களைச் சமாளிக்க அவர்கள் முன்கூட்டியே பாதிக்கப்பட்ட தலித்துகள் மீது ஒரு ஒப்பனைப்புகார் மனுவை தயாரித்து வைத்து விடுவதுதான். ஒருவேளை இதை காவல்துறைப் பயிற்சிகாலத்தில் ஒரு பாடத் திட்டமாகவே சேர்த்து விட்டார்களோ எனும் சந்தேகத்தை உருவாக்குகிறமாதிரி தேசம் முழுக்க ஒரே வகையான பாரபட்சம்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துணியை தேய்த்துக் கொடுக்கக் கூடாதென்று ஒரு வன்கொடுமை நடந்தது.அடிபட்டவர்கள் காவல் துறையில் சொல்லிவிடக் கூடதென்று ஊரைச்சுற்றி இரவுபகலாகக் காவல்.அதிலிருந்த தப்பிக்க சேலையை உடுத்திக்கொண்டு தப்பித்து வந்து சொன்ன பின்னும் மாவட்டக் காவல்துறை அசையவில்லை. பல போராட்டங்களுக்குப் பின்னால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விளைவு இப்போது பாதிக்கப்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியே.
இதுபோன்ற குற்றங்கள் ஒவ்வொரு பதினெட்டு நிமிடத்துக்கும் ஒன்று நடக்கிறது.ஒரு நாளைக்கு 27 வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்படுகிறது. ஒரு வருடத்திற்கு சுமார் 32000 குற்றங்கள் தன்னெழுச்சியாக நடக்கிறது. என தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள கிபி 2000 ஆண்டுப் புள்ளிவிபரம் நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இந்த வன்கொடுமையை அனுமதிக்கிற,அல்லது அதைப், பேசாப் பொருளாக விட்டுவிடுகிற,இதெல்லாம் சாதாரணம் என்று வாளாவிருக்கிற, தலித்தல்லாத ஒவ்வொரு இந்தியனுக்கும் மறைமுகத் தொடர்பிருக்கிறது என்று பல மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துச் சொல்லுகிறார்கள்.
ஆம், எனக்குக் கீழே யாரும் அடிமையில்லை என்பதை உறுதி செய்த பின்னர் மட்டுமே நாம் எழுப்பும் விடுதலைக்குரலுக்கு தார்மீக வலு இருக்கும். அர்த்தமும் இருக்கும்.எனவே எனது வீட்டில் சலவை செய்யும் மனிதரை,
எனது தெருவை சுத்தம்செய்யும் மக்களை,என்கிராமத்தில் ஒண்டித்திரியும் சகோதரர்களை அவமானப்படுத்தமாட்டேன், அதை அனுமதிக்கவும் மாட்டேன் என்று ஒவ்வொரு படித்தவரும் நினைக்காதவரை எல்லாம் நீடிக்கும். எப்போதாவது வெடிக்கும்.
8 comments:
கடைசி வரிகள் நச்.
என்ன சொல்வது என தெரியவில்லை.
வெள்ளைக்காரன் நம்மிடம் காட்டுவது இனவெறி என்றால் ஒடுக்கப்பட்ட மக்களிடம் நம் மக்கள் காட்டுவதை என்னவென சொல்வது.
நல்ல பதிவு
// இந்த வன்கொடுமையை அனுமதிக்கிற,அல்லது அதைப், பேசாப் பொருளாக விட்டுவிடுகிற,இதெல்லாம் சாதாரணம் என்று வாளாவிருக்கிற, தலித்தல்லாத ஒவ்வொரு இந்தியனுக்கும் மறைமுகத் தொடர்பிருக்கிறது என்று பல மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துச் சொல்லுகிறார்கள்.//
ம் எல்லாருக்குமே இதில் பங்கு இருக்கிறதுதான். எங்கோ நடக்குது எனக்கென்ன என்ற நிலைமை காணப்படுவதுதான் வேதனை அளிக்கும் நிகழ்வு :(.
Whatever you said are really true..but in India especialy tamilnadu....it will be here only. Nobody will change...That is damn sure........
சனாதன தர்மத்தின் எச்சமாக தீண்டாமை நம் மனதில் புரையோடிப் போயிருக்கிறது... கோவிலில் பிராமணர்கள் தங்களை சூத்திரர்கள் என்று சொல்வதை வாய் திறவாமல் கேட்டுக் கொள்ளும் பிற்படுத்தப்பட்டவர்கள், தங்களுடைய ஆதிக்க உணர்வை தலித்கள் மீது காட்டுகிறார்கள்.. எல்லா தளங்களிலும், வெவ்வேறு முறைகளில் சாதிய உணர்வு வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது... அந்த உணர்வு அணைந்து விடாமல் இருக்க விசிறிவிட்டுக் கொண்டே இருக்கும் அரசியல் கட்சிகள், சாதிய சங்கங்கள் உள்ள வரை தீண்டாமை தொடரத்தான் செய்யும்..
last sentence is nice,
what is the use of samattuvapurams then?
அருமையான இடுகை அண்ணா..
என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று மிகுந்த ஆயாசத்தைத் தருகிறது. என்னதான் எல்லோரும் சமத்துவமென்று பேசினாலும் நிகழ்வுகள் அப்படியில்லையென்று சொல்லிவிடுகின்றன. விரைவில் வெடிக்கட்டும்!
ஜாதிகள் இல்லையென்றால் தமிழனுக்கும் தமிழினத்துக்கும் அழிவு தொடங்கும்
என்றான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் மகனான என் தோழன்....
அவன் அப்படி சொன்ன பொழுது குற்றவுனர்வற்றவனாகவே இருந்தான்.......
காமராஜரும் , வா ஊ சிதம்பரமும் கூட இன்று ஜாதியின் அடிப்படையில் கொண்டாடபடுகிறார்கள்...
ஆத்திரமும் அருவெருப்பும் ஒருசேர வருகிறது.....!
ஒரு வன்கொடுமை வழக்கு பதிவானாலும் அந்த குறிப்பிட்ட பகுதி தேசிய தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்த பட்ட ஆணையம் கணக்கில் கொள்ளும் என்பதால்
காவல் துறை இவ்வழக்குகளை ஒரு தலை வலியாகவே கருதுகிறது....
மேலும் ஆதிக்க வர்க்கத்தின் பண பலம் முன்பு....இந்த மண்ணின் மைந்தர்கள் நிர்கதியாகின்றனர்.
இதற்க்கு தீர்வென்ன என்பது இன்றும் கேள்விக் குறியாய் அனைத்து மனங்களிலும்...
இன்றும் வளைந்து கொண்டுதான் நிற்கிறது அந்த சமூகம்...!
ஏக்கங்களாக மாறிப் போன மாற்றத்தை காண.
Post a Comment