13.1.11

தோல்வியின் நாயகிகள்

நீண்டநாள்கழித்து அதிகாலையில் அவர்களை அலைபேசியில் அழைத்தபோது  மறுமுனையில் தோ..ழ...ர் என்று கலப்படமில்லாத அன்போடு குரல்வந்தது. ஒரு பார்வையில் ஒரு சிரிப்பில் ஒரு மௌனத்தில் கலப்படமில்லாத அன்பைகுழைத்து தர மனசு வேண்டும்.அது வெள்ளந்திக் குணம் மிகுந்த எல்லோரிடமும் இருக்கிறது. அப்படி ஒரு பெண் அவர். சாத்தூர் தமுஎகச வின் முன்னாள் செயலாளர். பூ படத்தில் மாரியின் அம்மாவாக நடித்த முன்னாள் குணச்சித்திர நடிகை. எங்களுக்குச் சமதையாய் அலைந்து ஒவ்வொரு தமுஎகசவின் நிகழ்வுகளுக்கும் தனது எதிர்பார்ப்பில்லாத பங்களிப்பைச் செய்த உழைப்பாளி.

அவரோடு பேசிக்கொண்டிருந்த போது .

ஒரு மாதர்சங்க நிகழ்ச்சிக்காக நோட்டீசு கொடுக்க போயிருந்த எட்டுநாயக்கன் பட்டி பேருந்து நிறுத்தத்தில் அந்தப்பெரியவரைப் பார்த்தேன்.
நீண்ட நேரம் என்னை உற்றுப்பார்த்திருந்துவிட்டு நீ ரொம்ப புஸ்தகம் படிப்பியா தாயி என்று கேட்டார்.நா என்ன சொல்லிர்ப்பேன்னு நினக்கிறீங்க.
இல்ல நான் அவ்வளவா புக் படிச்சதில்ல என்று சொன்னப்பிறகும் இல்லதாயி ஒன்னப்பாத்தா புத்தக்ககளை முகத்தில் தெரியுது என்று சொன்னார்.
சொன்னதோடு நிக்காம அவர் இருந்த பம்புசெட்டுக்குள்ளாற போயி ஒரு சாக்குமூட்டையைக்கொண்டுவந்தார்.எதோகருணைக்கிழங்கோ,நிலக்கடலையோ கொண்டுவருகிறார் என்று பார்த்தேன். அடிப்பாகத்தை பிடித்துக்கொண்டு மூட்டையைக்கொட்டினார்.அத்தனையும் புத்தகங்கள்.அன்னை வயல் அன்னாகரீனா பரீசுக்குப்போ அழகிரிசாமி வேட்டி மார்க்சீயமெஞ்ஞானம் இப்படி நான் எதிர்பாரத புத்தகங்கள்.ஒரு மேல்சட்டைபோடாத சம்சாரியிடம் இத்தனை புதையலா என்இப்படித்தகவலைச்சொன்னார் அவர்று வியந்து போய் அப்போதிருந்து வெறிகொண்டு புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன்'.என்று சொன்னார்.


நீ பாடமல் விடியாது பெண்ணே. பூபாளராகம் பாடு; என்கிற அறிவொளிப் பாடலைப்பாடியபடி தமுஎசவில் அறிமுகமானார்.அப்புறமான ஒவ்வொரு நிகழ்சியிலும் மயில்போல பொண்ணு ஒண்னு என்கிற பாரதி படப்பாடலை அதீத கீச்சுக்குரலில் பாடுவார்கள்.சன்னஞ்சன்னமாய் தன்னை தமுஎகசவின்
உறுப்பினராக்கிக்கொண்டு பின்னர் செயற்குழு உறுப்பினாராகவும் ஆனார்.

மிகப்பெரிய கனவுகளோடு அவர்களை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்த போது கடும் எதிர்ப்புக்கிளம்பியது.அதை தனது தோளில் தாங்கிக்கொண்டு ஒரு பெண் தலைமைப் பொறுப்பேற்கவேண்டும் என்கிற வெறியோடு கலகம் செய்து உட்கார வைத்தார் தோழர் ப்ரியா கார்த்தி.நடு இரவு வரை நீள்கிற செயற்குழுக்கூட்டங்கள். தெருத் தெருவாய் அலைந்து நிகழ்சிக்கு பணம் சேகரிக்கிற வசூல். இப்படியான வேலைகளுக்கு ஒரு பெண் ஈடு கொடுக்க முடியுமா என்கிற சந்தேகத்தை உடைத்தெறிந்து எங்களோடு பல நிகழ்ச்சிகளை நடத்தினார் தோழர் ஜானகி. இரவு பதினோரு மணிக்கு மேலே அவரை நானோ இல்லை கார்த்தியோ சாத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் ஒதுங்கி இருக்கும் படந்தாலில் கொண்டுபோய் இறக்கி விடுவோம்.அதற்குப் பிறகு அவர் என்ன சமைப்பார் எப்படிச்சாப்பிடுவார் என்கிற கேள்வி யற்றுத் திரும்பி வந்திருக்கிறோம்.

ரொம்பத்தோத்துப் போயிருக்கேன் தோத்த கதையப் பூரா தோண்டித் தோண்டிப் பொதச்சிர்க்கேன்’ என்று சொன்னார். இது சொல்லமுடிந்த சொல்ல வாய்ப்பிருக்கிற ஒரு பெண் குரல். ஆனால் வெளிவராத குரல்கள் இந்த தேசமெங்கும் அடுப்படிகளில் புதைந்துகிடக்கிறது. அவர்கள் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. அவ்வளவு புதையலையும் உரமாக்கி ’அவமானம் படுதொல்வி யெல்லாம் உரமாகும்’ னு ஒரு சினிமாப்பாட்டு வரி இருக்கில்ல என்று சொன்னபோது அந்த வளமையான இனிமையான அவரது கீச்சுக் குரல் கானாமல் வெகுதூரம் போயிருந்தது.

7 comments:

kashyapan said...

தோழர் ஜானகியை சென்னை த.மு எ.ச. மாநாட்டில் சந்தித்தேன். என் துணைவியாரையும் அறிமுகப்படுத்தினேன்..அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள என் துணைவியார் விரும்பினார்.காமராஜ்! அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்.அவர் புதைத்து வைத்துள்ளவைகளை எழுத்தில் கொண்டுவர.வாழ்த்துக்கள் தோழர் ஜானகி---காஸ்யபன்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை.....

செ.சரவணக்குமார் said...

தோழர் ஜானகி அவர்களைப் பற்றி மாது அண்ணன் எழுதியதைப் படித்திருக்கிறேன். இப்போது உங்கள் எழுத்திலும் உயர்து நிற்கிறார். எனக்கு ஜானகி அம்மா சொன்ன சம்சாரியைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது காமு அண்ணா.

காஸ்யபன் அய்யா சொன்னது போல ஜானகி அம்மாளின் எழுத்துகள் வெளிவரவேண்டும். உங்களைப் போன்ற நல் நட்புக்களின் துணையுடன் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இனிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணா.

க.பாலாசி said...

ரொம்ப திடமான ஒரு பெண்மணியை கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள்.

//ஆனால் வெளிவராத குரல்கள் இந்த தேசமெங்கும் அடுப்படிகளில் புதைந்துகிடக்கிறது.//

உண்மைதான்...

அவரை உற்றுப்பார்த்த பெரியவர் என்ன நினைத்திருப்பார் என்று எண்ணுகிறேன்.

அன்புடன் அருணா said...

/ஆனால் வெளிவராத குரல்கள் இந்த தேசமெங்கும் அடுப்படிகளில் புதைந்துகிடக்கிறது./
உண்மைதான்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அபூர்வமாய் வெளிப்படும் இப்படிப்பட்ட ஆளுமைகள் பற்றிய பகிர்வு அருமை காமராஜ்.

என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் ஜானகி அவர்களுக்கு.அவரின் எழுத்துக்கள் சீக்கிரம் வரட்டும்.

Unknown said...

நல்ல பகிர்வுங்க. அந்த வீரத்தாய்க்கு என் வணக்கம்.