7.11.09

உலகைப் புரட்டிய ஓர்நாள் - The November 7, Remember today








நெருக்கடிகளின் அடர்த்தியில் தானாக முளைக்கிற எதுவும் புரட்சியின் அடையாளமாகும்.தொழிற் புரட்சிக்குப் பிந்தைய ரஷிய சமூக பொருளாதாரப் பின்னடைவுகளில் அங்கிருந்த 50 சதமான தொழிற்சலைகள் மூடப்பட்டன. கோடிக்கணக்கான தொழிலாளர் வேலையிலிருந்து விரட்டப்பட்டனர். மீதமிருந்த தொழிற்சாலைகள் அதையே காரணம் காட்டி வாங்கிக்கொண்டிருந்த கூலியில் 50 சதமானத்தை தட்டிப்பறித்தன. அதற்கெதிரான கிளர்ச்சியாக டான்பாஸ் சுரங்கத்தொழிலாளர்கள், யூரல் உலோகத்தொழிலாளர்கள், பக்கு எண்னெய் உற்பத்தித்தொழலாளர்களின், மத்திய ஜவுளி உற்பத்திக்கழக தொழிலாளர்களின் ஆர்ப்பட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நாடுதழுவிய உஷ்ணத்தை உற்பத்தி செய்தது.

1917 ஜூலை முதல் நாள் பெற்றோக்ரேடில் கூடிய ஐந்துலட்சம் ஆர்பாட்டக்காரர்களின் மேல் அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. கூலி உயர்த்திக்கேட்ட தொழிளார்கள் அறுபத்துநான்குபேரின் உயிர்தான் நவம்பர் புரட்சிக்கான முதல் முதலீடானது. அங்கு சிந்திய 650 பேரின் குருதியில் இறுதி வடிவம் நவம்பர் 7 நாளில் மாஸ்கோ பெட்றோக்ரேடில் போல்ஸ்விக்குகளின்புரட்சியாக மாறியது. ப்ரவின்சியல் அரசு தூக்கிவீசப்பட்டு உலகின் முதல் தொழிலாளர் அரசின் செங்கொடி அலையாடியது.

வறட்சி வந்தால் புரட்சி வரும் எனும் கிராமச் சொலவடையின் மகோன்னதமான நிஜம் நவம்பர் 7 புரட்சி.பெருகி வரும் வேலையிழப்பு, அரைப்பட்டினி-முழுப்பட்டினி, பட்டினிச்சாவுகள், சோகையான கர்ப்பவதிகள்,குழந்தை தொழிலாளர்கள், அவுட்சோர்சிங் என்கிற கணக்கிலடங்கா நெருக்கடிகள் நிறைந்திருக்கிறது இங்கே. தகிக்கும் தனலின் மேல் ஈரத்துணிகள் போர்த்தும் நவவஞ்சகம் ஜெயிக்கிற தேசத்திலிருந்து வலைமக்களுக்கு புரட்சி நினைவுகூறும் வாழ்த்துக்கள்.

5.11.09

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்.

ஒருகாலை வேலையில் கலைஞர் தொலைக்காட்சி சந்தித்த வேளை நிகழ்சியில் கண்ணதாசன் நற்பனிமன்றத்தலைவர் ஒருவரின் நேர்கானல் ஒளிபரப்பாகியது. அவர் பல முரணான தகவல்களைப் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போனார். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய பிறகுதான் தமிழ் மக்கள் இந்து மதம் என்ற ஒன்று இருப்பதாக அறிந்தார்களாம். அதிர்ச்சியாக இருக்கிறதா இன்னும் கேளுங்கள்.


உழைக்கிற மக்கள் திரளில் உள்ளவர்கள் படித்து பெரிய பெரிய சாப்ட்வேர் நிறுவன அதிகாரிகளாக மாறிவிட்டாகளாம் அதனால் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம். விஞ்ஞானம் நாற்று நட, கதிரறுக்க,என விவசாய எந்திரங்களைக் கண்டு பிடித்து விட்டதாகவும் கருத்து தெரிவித்தார். விவசாயம் நசிந்து வருவதற்கு பல காரணிகள் இருக்கிறது என்பதை மறைத்து பொதுவாகவே பல பிரபலங்கள் கூட இதையேதான் சொல்லுகிறார்கள்.கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது உண்மையா.? இல்லை.


இந்திய அரசு நிர்ணயித்திருக்கிற குறைந்த பட்சத் தினக்கூலி என்பது ரூ231.69பைசா. அதைக் கொடுக்க விவசாயிகளெல்லாம் தயாராகக் கையை நீட்டிக் கொண்டிருந்தது போலவும் அவர்கள் அதையெல்லாம் வேண்டமென்று உதறித் தள்ளிவிட்டு ஊதாரித் தனமாக விவயாக் கூலிகள் அலைகிற மாதிரியும் ஒரு மூட நம்பிக்கை பரப்பி விடப்படுகிறது. பெண்களுக்கு தினம் நாற்பது முதல் அறுபது ரூபாயும் ஆண்களுக்கு அறுபது முதல் எண்பது ரூபாயும் தான் விவசாயக் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. இந்த அறுபது ரூபாயை வைத்துக்கொண்டு என்னென்ன வாங்கிவிட முடியும்?. ஒரு படி நெல் அதுவும் பொக்குநெல் அதிகம் கேட்டதற்காகத்தானே வெண்மனியில் கருகியது நாற்பது உயிர்.


நிலப்பிரபுத்துவ முறையும், பண்ணையடிமை முறையும் ஆழ வேரூன்றிக் கிடந்த காலங்களில் பழைய கஞ்சியையும் ஊறுகாயையும் கொடுத்து மாட்டை விடக் கேவலமாக மனிதர்களிடம் உழைப்பை உறிஞ்சிய காலம் விவசாயிகளுக்கு பொற்காலம். விவசாயக் கூலிகளுக்கு ?. விவசாய இடுபொருள், உரம் இவைகளின் விலைகளை வெளிநாட்ட்டு முதலாளிகள் நிர்னயிப்பதும். விளைந்த பொருட்களின் விலையை உள்ளூர் முதலாளிகள் நிர்ணயிப்பதுமான சிக்கல்களில் விவசாயிகளின் கோவணங்கள் உருவப்படுகிறது. அதை மீட்கக்கிடைக்கும் மாண்யத்தையும் கடல்தாண்டிய உத்தரவுகள் தடுக்கிறது. இது பற்றி யோசிக்கத்தெரியாத, பேசத்தெரியாதவர்களின் அரை வேக்காட்டு பொருளாதாரத் தத்துவமே இப்படித்தான் இருக்கும்.


இன்னொரு வெடிகுண்டை வீசினார் அவர். அதுதான் ஹாலில் இருந்த என்னைத் தூக்கிவாரித் தெருவில் போட்டது. இப்படி,இப்படியேதான் இந்த உலகம் மாற்றங்களைச் சந்திக்கிறதாம் " மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றதெல்லாம் மாறிவிடும்" இதைக்கூட கவிஞர் கண்ணதாசன் தான் சொன்னாராம். அதுபடிதான் நடக்கிறதாம். அப்படியானால் அந்த தாடிக்கார மனுஷன் காரல் மார்க்ஸ் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் ஒலிநாடாவுக்கு உரை எழுதினாரா ?

4.11.09

நினைவுகளில் மட்டும் நெற்றிதொடும் பாசமலர்கள்.








வாங்கிய பண்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சிருசு பெருசெனும் போட்டியில் சண்டை போட்டுக் கொள்ளவும். எனது பழய்ய சட்டையைப் போட்டுக் கொள்ளவும். சின்னச்சின்ன தவறுகளை அப்பனிடம் போட்டுக் கொடுக்கவும். பாசி, ஸ்டிக்கர், பெண்கள்கைப்பை பார்க்கிற நேரங்கள் நினைவுக்கு வரும் அக்கா தங்கையில்லாத அனாதைக்கு. இல்லாத பொருள்கள் மீது வட்டமிடும் கனவுபோல எங்கிருந்தாவது வந்து அலைக்கழிக்கிறது எனது நாட்களை இந்தப்படம்.



ஆளில்லா நேரத்தில் கண்ணாடியின் முன்னாடி அல்லாடும் குருவியைப் போலவே. பிள்ளை விளையாட்டில் என் பிறப்பாக வந்த செல்லக்கனி. எட்டாம் வகுப்பில் ஜோடி போடும்போது எனக்குத் தங்கை முறையாக வந்த மைதிலி. பணியில் சேர்ந்த பின்னால் நடராஜன் மனைவி அம்மு, இன்னொரு .. இப்படி நான் எனக்கென வரித்துக்கொண்ட பிறப்புகள் ஏராளம்.



பாசமலர் பார்க்கிற நேரமெல்லாம் எங்கம்மாமேல் எனக்கு கோபம் வரும். அதையெல்லாம் இறக்கி வைக்கிற முதிர்ந்த பிறப்பாக,காற்றைக்,கடலை,காக்கைகுருவிகளைக் கைநீட்டும் யாரையும் உறவாக்கச்சொல்லியபடி கிந்திக் கிந்தி நடக்கும் அவள் தான் சின்னத் தங்கச்சி, பெரியக்கா.