5.4.11

சமூகச் சீர்கேடுகளைக் கிண்டல் செய்யும் தேர்தல் பகடிகள்


ஈரானில் 2009 ஜூன் 12 ல் நடந்த தேர்தலில் அதிபரின் சார்பில் போடியிட்ட மஹ்மூத் அஹ்மதியினைக்கிண்டல் செய்த தேர்தல் பகடிகள் இவை.நமது
நாட்டில் நடக்கிற நடப்புகளோடு ஒப்பிட்டால். அவர்களின்  பிரச்சினை யெல்லாம்  ஜூஜுபி.

1) அம்மா வீட்டுக்குப்போயிருந்த மனைவி கணவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

” அன்பே தக்காளி மட்டும் வாங்குங்கள் அவசரப்பட்டு உருளைக் கிழங்குகளை வாங்கிவிடவேண்டாம்,தேர்தல் நெருங்குகிறதல்லவா நமது வீட்டுக்கு அதிகப்படியான உருளைக்கிழங்குகள் வரும்”.

 =காதலோடு மனைவி.

தேர்தல் நேரத்தில் அகமதிநெஜானி இலவச உருளைக்கிழங்குகள் வழங்குவதாக  வந்த செய்தியை கிண்டல் பண்ணி வந்த பகடி.

0

2) ஏன் முசாவியைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு அவரது ஆதரவாளர்கள் அடித்த பிட் நோட்டீஸ்.

  அவர் வயோதிகர்,அதனால் நீண்ட நாட்கள் அவரது கொடுங்கோலாட்சியைப்பொறுத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தமில்லை

  அவரது மனைவி ஒரு படித்தவர்,அவர் ஒரு பேராசிரியை,ஆதலால் வேலை      நேரத்தில் அவரைத்தொந்தரவு செய்யமாட்டார்

  அவர் ஒரு போதும் அவரது உறவினர்களுக்கு அரசாங்க உத்தியோகத்துக்கு சிபாரிசு செய்யமாட்டார்

0

வலையில் சுட்ட அயல் தேர்தல் பகடிகள் மண்ணின் மணத்துக்கு மாற்றபொபட்டிருக்கிறது.

3) இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந் தார்கள். முதலாமவர் கீழே பார்த்துக்கொண்டே சொன்னார் " பாருங்க நான் ஆயிரம் ரூபாயைக் கீழே போட்டேனென்றால் பத்து வாக்காளர்கள் சந்தோஷப் படுவார்கள்"  என்றார்

இரண்டாமவர் சொன்னார்  ""நான் ஐயாயிரம் ரூபாயைக்கீழே போட்டேனென்றால் பத்துப்பேர் சந்தோஷப் படுவார்கள்" என்றான்.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த பைலட் பவ்யமாகக்கேட்டார்  " ஒட்டுமொத்த தமிழ்நாடே சந்தோசப்பட நான் ஒன்று சொல்லட்டுமா"

" சொல்லு சொல்லு"  என்றார்கள்

”ஒங்க ரெண்டுபேரையும் தூக்கிக்கீழே போட்டால் போதும் ” என்றார்.

0

4) தேர்தல் பிரச்சாரத்துக்கு போய்விட்டு நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்த வேட்பாளர் இருட்டில் ஒரே கூட்டமாக இருப்பதைப் பார்த்து வண்டியைத் திருப்பி அங்கே போகச் சொன்னாராம். போனப்பின்தான் தெரிந்தது அது பேய்களின்மாநாடு என்று. வந்தது வந்தாச்சு ஓட்டுக் கேட்டு விட்டுப் போவோம் என்று முடிவானது. லைட்டப்போட்டு மைக்கைப்பிடித்தார் வேட்பாளர்.

3.4.11

உலகக்கோப்பை வெற்றியையும் பூனம்பாண்டேயின் வாக்குறுதியையும் விற்றுக்கொண்டிருக்கிற ஊடகங்கள்.



நகைச்சுவை நடிகர் வடிவேலு சாத்தூருக்கு வந்தார்.


சுருளிராஜனுக்குப் பிறகு எல்லோர் மனதிலும் பசை போட்டு ஒட்டிக்கொண்ட நகைச்சுவைக் கலைஞன் வடிவேலு. தனது நகைச்சுவையில் சமூகத்தின் அடித்தள மக்களின் குமுறல்களை பகடியாக்கும் கருத்தை அடிநாதமாக வைத்துக்கொண்டவர்.அறிவார்ந்த நகைச்சுவையாக தெரிவு செய்து தன்னை ஒரு மேல் மட்டத்தவனாக காட்டிக்கொள்ளாத வெள்ளந்தி நடிகன் வடிவேலு. பாரவண்டியின் மேக்காலாக அழுத்துகிற புறச்சூழலைக் கடத்திவிட ஒரு பத்து நிமிடம் வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்தால் மனசு இதமாகும். சிலபொழுதுகளில் கண்ணில் நீர்கோர்க்கிற வரை சிரிக்கமுடிகிற அவரது நகைச்சுவையை ரசிக்காத மனிதர்களே இருக்க முடியாது.

அவர் நேற்று சாத்தூருக்கு வந்தார்.ஒரு கட்சியின் பிரச்சார பீரங்கியாக இல்லாமல் ஒரு சிரிப்பு பீரங்கியாக அவரைப்பார்க்க அலைபாய்ந்தது. மேலே ஒட்டிக்கொண்டிருந்த இலக்கியம்,அரசியல்,வங்கி ஊழியன் என்கிற பகட்டுக்களை உதறிவிட்டு எம் சகோதர சகொதரிகளோடு கூட்டத்துக்குள் கறைந்துபோக சித்தமாயிருந்தேன். ஆண்களை விடப் பெண்கள் கூட்டம் அதிகாமக இருந்தது. ஆறு மணிக்கு வருவார் என்ற வாக்குறுதி ஏழறை வரை நீட்டித்தது. சாத்தூர் எட்வர்டு மேநிலைப்பள்ளிக்கு எதிரில் உள்ள கைவண்டி தள்ளுவண்டி வியாபரிகள் அவர்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பூரித்துப் போயிருப்பார்கள். ஒரு அறை மணிநேரத்தில் இருநூறு சம்சா வை விற்றுத்தீர்த்த தள்ளுவண்டிக்காரரின் அருகில்தான் நானும் நண்பர் கணேசனும் நின்றிருந்தோம்.

தேதிமுக பிரமுகர் ஒருவர் கூடுகிற கூட்டத்தைப் பார்த்துக் கடுப்பாகி ”எலெக்சன் கமிஷன் காரன் என்ன..........றானா ” என்று கெட்ட வார்த்தையில் வசைபாடிக் கொண்டிருந்து விட்டு எத்தல் ஹார்வி ரோட்டிலிருக்கும் டாஸ்மாக்குக்குள் நுழைந்துவிட்டார். அந்தக் கூட்டத்திலிருந்த  எளந்தாரிகள் பத்துப்பேர் கிரிக்கெட் ஸ்கோரையும் ஓடிப்போய் பார்த்துக்கொண்டு அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக இருந்தார்கள்.நேரம் நெருங்க நெருங்க தெற்கே இருந்து வருகிற ஓவ்வொரு வாகன வெளிச் சத்துக்கும் கூட்டம் ஆரவாரம் செய்தது. ஏழுமணிக்கெல்லாம் ஆண்கள் பகுதியில் கூட்டம் அதிகரித்தது. எல் ஐ சி மேலாளர்,சத்யா ஓட்டல் சிப்பந்தி, நாலைந்து பஞ்சாயத்து தலைவர்கள்,ஐஓபி சிப்பந்திகள் எனத் தெரிந்த முகங்களாக நெருங்கி வந்தார்கள். அவரவர்க்கு ஒரு கட்சி பிடிப்பு இருந்தாலும் அவரது நகைச்சுவைக்காக வந்தோம் என்றார்கள்.

சத்தூரையே தூக்குகிற ஆரவாரத்தோடு வடிவேலுவின் வாகனம் வந்தது. பாதுகாப்புக்காக பிடித்திருந்த கயிற்றை கீழே போடும்  படிக்கேட்டுக் கொண்டார் தாய்மார்களை எதிரே வர அழைத்தார். அவன் இவன் நாயே பேயே என்றெல்லாம் யாரையும் திட்டவில்லை அவரது வழக்கமான மொழியிலேயே ரெண்டு நிமிடம் பேசிவிட்டு அங்கிருந்து கடந்துபோனார். அதனாலேயே யாருக்கும் ஓட்டுப்போடப் போவதில்லை என்கிற தன் மன உறுதியை தளரவிட்டுவிடாமல்,” வாடி இன்னும் இருபது க்றோஸ் அடைச்சாத்தான் நாளைக்கு காக்கிலோ கோழி எடுக்க முடியும்” என்று சொல்லிவிட்டு தீப்பெட்டியாபீசுக்குள் போன  அம்மாவின்  கையைப் பிடித்துக்கொண்டு போன பத்துவயதுச் சிறுமியிடம் இருந்த சந்தோசம் போலக்கூட்டம் கறைந்து போனது.

அந்த ஆராவாரமும்,கைதட்டலும்,விசிலும் வெறும் உணர்ச்சிகள் மட்டு மில்லை ஒரு கட்சிக்கானதாகவும் தோணவில்லை. எல்லோருக்குள்ளும் யாரையோ ஒரு ஆளைத் தேடுகிற ஆர்வம் மறைந்து கிடக்கிறது. தங்களின் சோகங்களைக் கடத்திவிடுகிற ஒரு தோளைத்தேடியபடியே காத்திருக்கிறது பாமரக்கூட்டம். அவர்கள் தேடுகிற சாயலில் ஆள் கிடைக்கிற வரை கூடிக்கூடி கலைந்து போய்க்கொண்டே இருப்பார்கள். கிடைக்காமலா போகும் ?