5.9.11

வற்றிய குளத்தில் கிணறு தோண்டும் கைகள்.


கேட்கலாம் என்று செதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கேள்வி
பகிர்ந்து கொள்ள நினைவில் வைத்திருந்த ரயில் பயண அணுபவம்
பகிர்ந்துகொள்ளமுடியாமல் யாருக்கோ விற்றுப்போன மதுப்புட்டி

தோளில் சுற்றிக்கொள்ளலாம் என்று காத்திருந்த கைகள்
வெளிநாட்டு சிகெரெட்டைப்பார்க்கும் பொழுது கிளர்ந்தெழுந்த ஞாபகம்
எல்லாமே எழுதமுடியாத கவிதை போல பதுங்கிக்கிடக்கிறது

யாரோ அருகில் வந்து எடுத்துக்கொடுக்கிறார்கள்
உனது வியர்வை வாடையின் சாயலையும்
முதல்வரி எழுத கொஞ்சம் கவிதை நினைவுகளையும்.

4.9.11

மனதில் கேடுள்ள மனிதனை எளிதில் பழக்கமுடியாது.


சில நேரம் விதி என்பது கூட உண்டோ என்கிற மாதிரி நிகழ்சிகள் அமைந்துவிடுகிறது. ஒரே சுற்றுச்சுவர் இருக்கும் ஜெகன் மினி ஜெகன் தியேட்டரில் காஞ்சனா,ரௌத்திரம் ஆகிய இரண்டு படங்கள் திரையிடப்பட்டிருந்தது. காஞ்சனாவில் நகைச்சுவையும் புதிதாக திருநங்கையர் குறித்த மாறுபட்ட தமிழ்சினிமா அனுகுமுறையும் இருப்பதாக நண்பர்கள் சொல்லியதால் அந்தப்படம் பார்க்கப்போய், தவறுதலாக ’ரௌத்திரம்’ டிக்கெட் எடுத்து உள்ளே போக நேர்ந்தது. விதி வலியது. கொடுத்த எழுபது ரூபாய்க்கு படம் பார்த்து தீர்ப்பது என்கிற முடிவு. சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொண்டது போலாகியது. ரௌத்திரம் என்பதற்கு பொத்துக்கொண்டு வருவது என்று பதவுறை எழுதியிருக்கிறார் உயர்திரு கோகுல் என்கிற இயக்குனர். சமீபமாக பார்க்கநேர்ந்த இப்படிக்கதைகள் மிகத்துள்ளியமாக ஒரு குறிப்பிட்ட மக்களை குரூர எதிரியாகச் சித்தரிக்கிறது. அப்படி சுட்டிக் காட்டப்படும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அதற்கு எதிராக எந்த சலலசலப்பும் எழுவது இல்லை. பெரும்பாண்மை மக்களை பெருமைப்படுத்தி கதை புனையப்படுவதால் அவர்களும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

கதாநாயகன் நடுத்தர குடும்பத்து உயர் ஜாதிக்காரனாக சித்தரிக்கப்படுகிறான்.போகட்டும்.அவன் நடுத்தெருவில் எதிரிகள் என்று சொல்லப் படுகிற ’கருப்பு நிற ’ ரவுடிகளை துவம்சம் செய்கிறான். வில்லன் வில்லனின் கையாட்கள்,அவர்களுக்கு உதவிசெய்கிற சட்டமன்ற உறுப்பினர் எல்லாமே கலப்படமில்லாத கருப்புநிறத்தில் இருப்பது போல தேர்ந்துகொண்டிருப்பது ஒட்டாமல் துருத்திக்கொண்டு தெரிகிறது. அந்தக்கதையின் தர்க்கத்தை நியாயப்படுத்த பாலாவின் படத்திலிருந்து ராஜ்கிரன் பேசுகிற வசனமாக சாமி நேர வராது அநியாயத்தை தட்டிக்கேட்கிற ஓவ்வொருத்தனும் சாமி தான் என்கிற வசனத்தை கோர்க்கிறார். அப்புறம் நடுத்தெருவில் இழுத்துக்கொண்டு போகும் பெண்ணைக் காப்பாற்றி அவள் அப்பனிடம் ஒப்படைக்கிறான். அவர் பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடாத நான் உன்னத்தான் சாமியாக்கும்பிடுகிறேன் என்று சொல்ல பின்னணியில்  வேத ஊச்சாடனங்கள் ஒலிக்க  பெருமாள் சிலை உயர்ந்து,அவர் உலாத் துவங்குகிறார்.

எல்லாமும் சரிதான். தவறு செய்கிறவன் எவனாயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் முக்கியமான ரவுடியும் அவன் சேரித் தெருவும்,அவன் அணிந்திருக்கும் சிலுவைக்குறியும் க்ளோசப்பில் காட்டுவதால் தப்பு செய்கிறவன் எல்லோரும் விளிம்பு நிலைக்காரன் என்கிற கேடுகெட்ட சினிமாப் புத்தியை பொதுவாக்க முயல்கிறார் திருவாளர் கோகுல். இது மாதிரியான காட்சியமைப்புகள் கிட்டத்தட்ட தமிழ் (அகோர)ஆக்க்ஷன் படங்களின் பொது விதி என்றே ஆகிவிட்டது. ஆங்கிலப்படங்களில் இருந்து திருடப்பட்ட இப்படிப்பட்ட காட்சி களை தமிழ் மயப்படுத்துகிற பாவனையில் அப்பாவி விளிம்புநிலை மனிதர்களை எதிரியாக்குகிற படங்களை திருப்பாச்சி,நான் மகான் அல்ல, போன்றவற்றை குறிப்பிட்டு வரிசைப்படுத்தலாம். தமிழ்நாட்டின் நிவியல்புகளையும், சாதிய அடுக்குகளையும், அவற்றுக்குள் ஏற்படுகிற முரண்பாடுகளையும், அங்கு நடந்தேறுகிற பயங்கரங்களையும் அறியாத வெறும் தொழில்நுட்ப மொன்னைகள் தான் தங்களைப் படப் பாளிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்ளுதுகள். இப்படிகதைகள் தயாரிப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதும், பிரம்மாண்டச் செலவில் உருவாகி விற்றுப்போவதும் விநோதமில்லை. ஒரு இயக்குநர் குறைந்த பட்ச சமூக சிந்தனையில்லாமல் எப்படி இருக்க முடியும் என்பது தான் இங்கே விநோதமாக இருக்கிறது.

ஒரு கால் நூற்றாண்டுகாலம் தமிழ்சினிமாவில் கொடிகட்டிப்பறந்த திருவாளர் எம்ஜியாரை எனக்குப் பிடிக்காது. ஆனால் அவர்  திரைப் படங்கள் எல்லாமே நலிந்த மக்களின் பக்கமும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் மட்டுமே இருக்கும். தவறியும் அதில் ஜாதிய அடையாமும் ஜாதிய துவேசமும் இருக்கது. மதங்களுக்கிடையிலான முரண்களில் குளிர்காய்கிற சில்லறைத்தனமும் பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் கண்டு பிடிக்கமுடியாது. அந்த ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே அவர் ஜெயித்தார். சிலநேரங்களில் ஆரம்பப்பாடசாலைச் சின்னப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லுகிற மாதிரி பாட்டும் வசனமும்,நடிப்பும் கூட இருக்கும்.அப்போதெல்லாம் நான்  அதைகேலி செய்திருக்கிறேன்.  ஆனால் இப்போதெல்லாம் அந்தக்குள்ள உருவம் கொண்ட கலைஞனின் விசாலமான மனது விஸ்வரூபமாகத் தெரிகிறது. இப்போதிருக்கிற கிராபிக்ஸ்,உயர்தொழில்நுட்பம் எல்லாவற்றையும் காலில்போட்டு மிதித்தபடி.

1.9.11

எனக்கு இல்லையா கல்வி -ஆவணப்படம்.


மேகம் இருண்டு சிலுசிலுவெனக் காற்று வருடி தட்டாம்பூச்சிகள் பறக்கிற போது அந்த மழையை ரசிப்பதைவிட அப்போது டமடமவென கேட்கும் இடியோசை வரும்.அப்போது நமறியாமலே 'அச்சுனம்பேர் பத்து' என்று நமது வாய் முனுமுனுக்கும். இடிவிழும் போது அப்படிச் சொல்லவேண்டுமென அம்மா சொன்னபோது எனக்கிருந்த கேள்விகள் எப்படி இருண்டுபோனதோ,அதைவிட அடர்த்தியாய் என் அம்மாவுக்கும் இருண்டு கிடந்திருக்கும்.

வழி வழியாய் கவிழ்ந்து கிடந்த இந்த இருட்டிலிருந்து வெளிவர எனக்கு கிழித்துப்போட்ட தீக்குச்சியாய் அந்த ரத்தினா ஆரம்பப் பாடசாலையும் அது துவக்கி வைத்த கல்வியும் இருந்தது. ஆனால் அந்தக் கிராமத்தில் முளைத்த ஏனையோருக்கும் இது கிடைத்ததா என்றால், இல்லை. தொண்ணூறுக்கும் மேற்பட்ட விழுக்காடு சனம் இதுதான்நமக்கு விதிக்கப்பட்டது என்று நினைத்துக் கொண்டு கூலி வேலைக்குச் சந்தோசமாய் கிளம்பி போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். இந்த உலகம் எல்லோருக்கும் சமமானது என்கிற அறிவின் சாவி கல்வி. அதைப் பறிகொடுத்து விட்டு பறிகொடுக்கப்பட்டதையும் அறியாது வாழ்ந்துகொண்டிருக்கும் சனங்கள் கோடிகோடியாய் கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி விசனப்பட இந்த பரந்த உலகில் வெகு சிலரே முன்வருகிறார்கள். அப்படி முன்வருகிற வாதங்களின் தொகுப்புதான் எனக்கு இல்லையா கல்வி என்கிற ஆவணப்படம்.

இங்கிருக்கிற நூறுகோடி மக்களுக்கும் உணவு உடை உறைவிடம் கல்வி கொடுக்கவேண்டியது அரசின் கடமை. அப்படிக்கொடுக்கிற அடிப்படைத்தேவைகள் சரியான அளவிலும்  முறையிலும் கொடுக்கப்படுகிறதா என்கிற கவனிப்பும் அரசின் கடமையாகிறது.
இவையாவும் கேள்விக்குறியாகிப் போன தேசத்தின் கடைக்கோடி மனிதர்களைத் தேடி தேடிப்பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படக் குழு . சென்னை ஜெயின் பள்ளி பத்மாஷேசாத்ரி மதுரை வேலம்மாள் பள்ளிகளுக்கு முன்னாடி நிறுத்தப்பட்டிருக்கிற கார்களை மட்டுமே பார்த்துப் பூரித்துப்போன மனிதர்களுக்கு மேற்கூரையில்லாத கிராமத்து ஆரம்பப் பாடசாலைகள் கட்டாயம் அதிர்ச்சியூட்டும். பள்ளித் தளமனைத்தும் கோவில் செய்யக் கனவுகண்ட பாரதியின் தேசத்தின் பள்ளிக் கூடங்கள் இரவு நேரம் சட்டவிரோத செயல்களும் சட்டபூர்வ மதுவருந்தும் செயல்களும்தான்  நடக்கிறதென்கிற பதிவும் பார்வையாளர்களைக் கலங்கடிக்கும்.

அதே போல பத்துக் கிலோமீட்டர்கள் மலைப்பாதைவழியே நடந்துபோய் கல்வி கற்கத்துடிக்கிற சிறார்களின் பின்னாடி தொடர்கிற காமிராவுக்கு ஒரு சலாம் போடவேண்டும்.  தர்மபுரி பகுதியில் அம்மலை மக்களின் அன்றாட வாழ்க்கையே சவாலாக இருக்கிறது. அவர்களின் வாழ்வு, மொழி, தேவைகளெல்லாம் வேறு வேறாயிருக்கிறது. அவர்களுக்கு கல்வி என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது சமச்சீர்கல்வி என்பது விவாதத்துக்கு வெளியே தள்ளப்படுகிறது. இதைக் கவனப்படுத்துகிற கல்வி அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் வரிசையாய் நம்மோடு பேசுகிறார்கள்.

முன்னாள் துனைவேந்தர் வசந்திதேவி,பேரா.ச.மாடசாமி,திரு.ஹென்றிதிபேன்,வழக்கறிஞர் எழுத்தாளர்ச.பாலமுருகன், பவா,அழகிய பெரியவன்,சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜி.லதா,குணசேகரன்,தடாரஹீம், மாசானி, ஆர்.லட்சுமி, ரா.முனியம்மாள் என்று பலதரப்பு சிந்தனையாளர்களின் வாதங்களைத் திரட்டியிருக்கிறது இந்த ஆவணப்படம். அவர்கள் தரும் தகவல்களும் தரவுகளும் வெளியுலகில் கிடைக்காத அரியவை. பாடத்திட்டங்களின் கடினம் தான் மாணவர்களை விரட்டி அடித்து மீண்டும் அவர்களை உடல் உழைப்பாளர்களாக ரவுடிகளாக விளிம்புமனிதர்களாக மாற்றுகிறது என்கிற பேரா ச.மாடசாமியின் வாதத்தை பொதுசனம் வேறு எங்குசென்று கேட்கமுடியும் ?  

கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகள்,பாடத்திட்டம்,இப்படி தமிழ்க்கல்விச்சூழலை பகுதி பகுதியாக ஆவணப்படுத்தியிருக்கிறது ’எனக்கு இல்லையா கல்வி’. அவையாவற்றையும் சொல்லவேண்டுமானால்.இந்தக்கவிதைமாதிரி ஆகிவிடும்

’படித்தவற்றில் பிடித்தவற்றை
அடிக்கோடிட்டேன்
முடித்துப்பார்க்கையில்
புத்தகம் முழுக்க அடிக்கோடு’.

ஆம்.நாம் கேள்விப்படாத ஹண்டர் கமிட்டி,எந்த வரலாற்றிலும் இடம்பெறாத அரசியல் உள்விவகாரங்கள் என இந்தப் படம் நெடுக தமிழகம் அறிந்துகொள்வதற்கான கல்விகுறித்த சேதிகள் அதிகம் இருக்கிறது. ஆனாலும் அந்த வகுப்பறை வன்முறை என்கிற பகுதி இந்த ஆவணப்படத்தின் செரிவூட்டப்பட்ட பகுதி. சிவகாசிக்குப் பக்கத்தில் இருக்கும் துரைச்சாமிபுரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ரா.முனியம்மாள் என்கிற பத்து வயதுச் சிறுமியின் வாக்குமூலம் இந்த தேசத்தின் மனசாட்சிமேல் அடிக்கிற ஓயாதசாட்டை அடி.
யாருக்காவது இன்னும் இருக்கிறதா சாதி என்கிற சந்தேகம் இருந்தால் அவள் கண்களில் இருக்கும் சோகம் பதிலாக இருக்கும்.

மாதா பிதா குரு என்று எழுத்தறிவிக்கிற ஆசிரியர்களை வழிபாட்டுக்கு உரியவர்களின் வரிசையில் மூன்றாவது நிறுத்தியிருக்கிறது முன்னோர் சொல். ஆனால் சாதி வெறி நீங்காத அந்த ஆசிரியர்களை, அதுவும் பெண் ஆசிரியர்களை எங்கே நிறுத்தி வைப்பதெனத் தெரியவில்லை. அதற்கு அழகிய பெரியவன் சொல்லுகிற அம்பேத்காரின் வார்த்தைகள் மட்டுமே சரியாக இருக்கும். பள்ளிப் பிள்ளைகளை குழுவாக பிரித்து விளையாட்டு,சாப்பாடு,கொடியேற்றுதல் என்று பொறுப்புக்கொடுக்கிற ஆசிரியர்கள் சுகாதாரப்பிரிவை மட்டும் ஆதிதிராவிடப் பிள்ளைகளுக்கு ஒதுக்கி வைப்பது என்கிற நடைமுறையை read அமைப்பின் ஆய்வு சொல்லுகிறது. இந்த சாட்சியங்கள் இளகிய மனதுள்ள எல்லோர் கண்ணிலும் நீர் தருவிக்கிற சாட்சியங்கள்.

அறிவும் உணர்வும் நெடுநாள் அலைக்கழிக்கும் சமூக சோகமுமாக எனக்கு இல்லையா கல்வி ஆவணப்படம் நமோடு கூடவரும்.
அதனோடே ப்ரபாகரின் இசையும், இரா. தனிக்கொடியின் பாடலும், அந்த சிறார்களின் குரலுமாக அந்தப்பாடலும் நம்மோடு கூடவரும்.
துடைத்துப்போடப்பட்ட கண்ணாடி வழித்தெரியும் பிம்பங்களாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிற காமிரா
அதை ஒருங்கிணைத்த படக்கோர்வை. துள்ளியமான ஒலிச்சேர்க்கை என இந்த ஆவணப்படத்தில் தனது திறமையான செய்நேத்திய  நிரூபித்திருக்கிறார் எங்கள் தோழர் பாரதி கிருஷ்ணகுமார்.