11.10.09

மறுதோன்றி நினைவுகள் - சிறுகதைகனியண்ணன் வாசலில் உட்கார்ந்து கொண்டு தெருவை வெறித்துக்கொண்டிருந்தார். அவரது தாடியைச்சுற்றி சிகரெட் புகை படர்ந்து கொண்டிருந்தது. அதென்னமோ தாடி வைத்திருக்கிறவர்களைப்பார்த்தவுடன் ஒரு மரியாதை வந்து ஒட்டிக்கொள்கிறது. அதனுள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருப்பது சோகமா, அடர்த்தியான கதைகளா, அல்லது காலத்தைப்பதுக்கி வைத்த அனுபவங்களா என்று இனங்கண்டுகொள்ள முடியாது. சிவந்த மேனி, முன் வழுக்கை, கரு கரு தாடியோடு நிறைய்ய கேரளத்து முகங்கள் தாடிக்கு ஒரு அழகையும் மரியாதையையும் கொடுக்கும். சீர் செய்யப்படாத அடர்த்தியான முடிகளின் ஊடாகச் சில வெள்ளை முடிகள் தூவப்பட்டிருக்கிற தாடிகளுக்கு அறிவுக்களை ஏறிக்கிடக்கும். நாடிப்பகுதிக்குள் விரல் நுழைத்து சொரிந்து கொள்ளும் வேளையிலும், தாடிக்குள்ளிருந்து மீசையைத்தனியே எடுத்து முறுக்கிவிட்டுக் கொள்ளும்போதும் தீவிர சிந்தனைக்கான தடயம் தெரியும். ஆனால் அந்த சர்தார்ஜிகளைக்குறி வைத்து கேலிக்கதைகள், தயாரிக்கிற தொழிற்சாலையை நிர்மானித்தவர்கள் யாரென்பதும், ஏன் என்பதும் சவாலான கேள்விகள்.


கனியண்ணனுக்கு முகத்தில் தாடியிருப்பதை அதிலிருக்கும் சில வெள்ளை முடிகளால் மட்டுமே அறியமுடியும். அவர் நிறம் அப்படி. அந்த நிறத்தை அலாதியாக்குகிற மாதிரியான திருப்பூர் பனியன்கள் அணிந்திருப்பார். அரக்குக் கலரிலும், அடர் மஞ்சள் கலரிலும் தவிர வேறு எந்தக் கலரும் அணியாதவர். தலைமுடியில் சீப்புப்பட்டிருக்குமா என்கிற சந்தேகம், கலைந்துகிடக்கிற அதைப்பார்க்கிற ஒவ்வொரு கணமும் வந்து போகும். ஒரு கல்யாணவீட்டில் வெகு நேரம் தனியே நின்று விட்டு கிளம்பியவரை எதிரே வந்த கணபதி பார்த்து உள்ளே அழைத்துவந்தார். அதற்குப்பிறகுதான் அவரின் வருகை எல்லோருக்கும் உறைத்தது. அப்போது அவர் முகச்சவரம் செய்து, வெள்ளை வேட்டி வெள்ளைச்சட்டையில் வந்திருந்ததால், சட்டென்று கண்டுபிடிக்க முடியாமல் போனது.


அவரோடு எழுத்துவேலை பார்த்த மனோகரனுக்கு அவர் தான் எல்லாம். மூன்று வேளை வயிறாரச் சாப்பிட முடியுமா என்கிற கேள்விக் குறியோடு, வெட்ட வெளியாக அவனது முன்னால் கிடந்தது காலம். ஒன்பதாம் வகுப்பிற்கு புத்தகம் வாங்க முடியாமல் படிப்பும் நின்றுபோக ஓவியக் கூடத்துக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா பின்னால் வந்தான். அங்கு தான் அவனுக்கு மீசை முளைத்தது. மொத்தமாக ஆயிரம் ரூபாயை அங்குதான் பார்த்தான். அவனுக்கும் ஒருகல்யாணம் நடந்தது. அந்தக் கல்யாணத்தில் முதலில் காலில் விழுந்து கும்பிடத்தேடி தேடி அழுத்துப் போனார்கள் கணியண்ணன் இல்லாதது தெரிந்து அவன் அழுதேவிட்டான். அவரோ தனது இருப்பை உணர்த்தும் எந்தக் காரியத்தையும் வலிந்து செய்யத் துணியாதவர். அவர் எழுதும் விளம்பரப் பலகையின் மூலையில் ஓரத்தில் ஒளிந்திருக்கும் ஓவியக்கூடத்தின் பெயரைப் போலவே பொது இடங்களில் அவரைத் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும். எப்போதுமே ஒரு பார்வையாளனின் கடைசிப்பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு உலகத்தை உன்னிப்பாகக் கவனிப்பவர். அவரது கல்யாணத்தன்று மணவரையில் வெகு நேரம் எல்லோர் கண்களும் படும் இடத்தில் உட்கார்ந்திருந்ததே அவர் மட்டுக்கும் மிகப்பெரும் அதிசயம். ஆனால் அவரது கைபட்ட வண்ணங்களைப் பார்க்காமல் எந்தக்கண்களும் கடந்துபோகாதபடிக்கு அவரது வேலைப்பாடு அந்த நகரம் முழுக்க பரவிக்கிடந்தது. பெட்டிக்கடை தொடங்கி பெரிய கோடிஸ்வர நல்லெண்ணெய் நிறுவணம் வரை அவரது விளம்பரப் பலகை இல்லாத இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


காரிலும் இருசக்கர வாகணத்திலும் வருகிற வாடிக்கையாளர்கள் பிரதானச்சாலையில் வண்டிகளை நிறுத்திவிட்டு சகதிக்குள் நடக்கிற பாவத்தோடு தயங்கித் தயங்கி காலடி எடுத்து வருவார்கள். முகஞ்சுழித்து மூக்கைப் பொத்திக்கொண்டால் வேலை நடக்காது எனப்பயந்து முகத்தை இயல்புக்கும் சுழிப்புக்கும் நடுவில் வைத்துக்கொண்டு வருவார்கள். மர அறுவைத் தொழிற் சாலையையும் அதன் தூசி நெடியும் அந்தப் பிரதேசமெங்கும் வியாபித்திருக்கும். அதைக் கடந்து வந்தாலும், மூத்திர மல நெடியை எளிதில் கடக்க முடியாது. அவரது ஓவியக் கூடத்துக்குப் பக்கத்தில் ஒரு தூர்ந்து போன தெப்பக்குளம் இருக்கும். ராஜாக்கள் தூர்ந்து போனதும் அது அடித்தட்டு மக்களின் கழிப்பறையானது. இந்த இரண்டையும் தாண்டி ஒரு சிவன் கோவில். அங்கே படர்ந்து விரிந்திருக்கும், வில்வமரத்து வாசனை வந்துகொண்டிருக்கும். மரங்கள் எப்போதும் காற்றோடும் வாசத்தோடும் தீராச்சொந்தம் கொண்டது. வில்வ மரத்துக் காற்றுப்பட்டால் தீராத நோயும் தீருமென்கிறது சித்த அறிவியல். இந்த கெட்ட காற்றையும் நல்ல காற்றையும் விழுங்கும் தைல வண்ணங்களின் வாசனை அவரது கூடத்துக்குள்ளிருந்து முப்பது வருசமாக வெளிவந்துகொண்டிருக்கிறது.


வாசலில் உட்கார்ந்து சாலையை வெறித்துக்கொண்டிருக்கிற போது, அவரைக் கடந்துபோகிற கைவண்டிக்காரர்களும் ரிக்சாக்காரர்களும் சலசலப் பேச்சை இடை நிறுத்திக் கடந்து போவார்கள். சிலர் வணக்கம் தோழரே சொல்லிக்கொண்டும் போவார்கள். ஒரு சிலர் மிகுந்த மரியாதையோடு வாங்கி உரசிவிட்டு ஒருகையில் பீடியை மறைத்து மறுகையில் தீப்பெட்டி தந்து விட்டுப்போவார்கள். அங்கு வருகிற எல்லோருக்கும் ஒரே அளவு மரியாதைதான். அந்த ஒடிசலான தேகத்துக்குள் கம்பீரம் குறையாத குரலும், நெளிவு சுளிவு இல்லாத, வியாபார நுனுக்கம் துளியுமில்லாத வார்த்தைகளும் தேங்கிகிடக்கிறமாதிரியே யார்கண்ணையும் சுண்டியிழுக்கிற வித்தையும் குடிகொண்டிருக்கும். அவர் கை பட்டு ஜனிக்கிற வெங்கடாஜலபதியின் உருவம் மட்டும் கடைமுகப்பில் இருந்தால் போதும் விருதுநகரையே விலைக்கு வாங்குவேன் என்கிற நம்பிக்கையில் பிரமுகர்களும், கருமலைகாத்த கருப்பசாமி, கூடமுடையார், அருஞ்சுனைகாத்த அய்யனார் எல்லோரும் கனியண்ணனின் தூரிகையில் முளைத்து, வியாபரிகளுக்குத் துணையிருப்பார்கள்.


தெப்பம் பஜாரில் பலசரக்கு கடையில் சரக்கு மடிக்க ஆரம்பித்த கணத்திலிருந்தே தங்கப்பழத்துக்கு கல்லாவில் உட்காருகிற கனவு முளைக்க ஆரம்பித்திருந்தது. அப்படி முளைவிடும் போதே கனியண்ணன் கையால் போர்டு எழுத வேண்டும் அந்தப் போர்டிலும் தாய், சேர்மத்தாய் துணை போடவேண்டுமென்கிற திட்டமிடுதலும் பூத்திருந்தது. அவனும் ஒரு துருப்பிடித்த அகலக்கேரியர் சைக்கிளில் தினம் இரண்டுதரம் ஓவியக்கூடத்தைக் கடந்து போவான். போகிற போதெல்லாம் ஒரு நிமிசம் நின்று அறைக்குள் விரவிக்கிடக்கிற எல்லா ஓவியங்களையும் கண்ணுக்குள் இழுத்துக்கொண்டு போவான். அதில் ஒவ்வொன்றாக விட்டு தனக்கு வரப்போகிற போர்டை தெரிவு செய்து கொள்வான்.


ஆனால், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்துவின் ஆதங்கம் வேறுமாதிரியானது. அவர் சின்னவயசாயிருக்கும்போதே காலமாகிப்போன தன் தாயின் காதுவளத்த உருவம் எதிலும் பதிவு ஆகாமல் போனது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விசேசத்துக்கும், அந்த வெறுமை விசுவரூபமெடுக்கும். அவ்வளவு பெரிய பங்களாவில் படுத்து தூங்கவும், செருக்கொடு நடந்து திரியவும் தன் தாயில்லாமல் போன குறை அவ்வப்போது அரிக்கும். அவரொரு நாள் தனது படகுக் காரை ஓரம் நிறுத்திவிட்டு வந்து குழுப் புகைப்படத்திலிருக்கும் அம்மாவை சாமியாக்க வேடுமென்று கேட்டார். குழந்தைகளைப் போலவே தாயும் பொதுவானவள். அவளது லவுக்கையில்லாத உருவத்தில் கனியண்ணனின் அம்மா சாயலிருந்தது. எனவே தனிமை கிடைக்கிற நேரம்பூராவும் அந்தப்படத்தோடே காலம் கழித்தார். வண்ணங்களை மாற்றவும், சின்னச் சின்ன திருத்தங்கள் செய்யவுமாக இரண்டுமாதம் ஓடிப்போனது. இரண்டுமாதம் கழித்து தயராயிருந்த படத்தை ஆள் மேல் ஆள் அனுப்பி வாங்கி வரச்சொன்னார். கொடுக்க வரும்போது குறைந்திருந்த கௌரவம் வாங்க வருவதற்குள் வளர்ந்ததை செரிக்க முடியவில்லை. அந்த ஓவியத்தைப் பிரத்தியார் கையில் கொடுத்தனுப்ப பிடிவாதமாக மறுத்து விட்டார். மணம் ஒவ்வாத எந்த ஒரு வேளைக்கும் இந்த உலகத்தையே விலையாய்த் தந்தாலும் புறங்காலால் எத்தித்தள்ளி விடுகிற நெருப்பிருந்தது அவரிடம். அந்தச் செருக்குக் குறையாமல் நாற்பது வருடம் நிலைத்திருந்தார். காளிமுத்துவுக்குப் பின்னாலுள்ள அரசியல் மற்றும் ஜாதிபலம் தெரியாமால் வீம்பு பண்ணுவதாக கடைப் பையன்களே கோளாறு சொல்லுமளவுக்கு பிடிவாதமாயிருந்தார்.


'' படத்துல கண்ணு பெருசாருக்கு,... செர்ரிக்குப் பதிலா மெர்ரூன் வய்க்கனுன்னு சொல்லு, நீ சின்னவனாயிருந்தாலும் சலாம் போட்டு ஏத்துக்கிறேன், துட்டுக்காக பீ திங்கிறதுதா அனுசரிச்சுப் போறதுன்னா அதுக்குப்பேரு வேற ''. கண்கள் தெறிக்க, தாடி முடிகள் குத்திட்டு நிற்க வானத்துக்கும் பூமிக்குமாக நின்றார். பிறகு யாரும் சொல்லத் துணியவில்லை. அதுபோலவே ஆர்டர் வாங்கும்போதே மிகச்சரியாகக் கொடுக்கமுடிகிற நாளைச்சொல்லி விடுவார். சொன்ன தேதியில் வேலை முடிக்க சாப்பாடு தூக்கம் ஓய்வு எல்லாவற்றையும் தூக்கி எறிவார். அப்போது பாக்கெட் நிறைய்ய சிகரெட்டும், அவ்வப்போது பிலால் கடை டீயும், ஜேசுதாஸ் அரிகரன் பாடல்களும் மட்டும் இருந்தால் போதும். ஒவியத்தைப் பற்றி அது நொள்ளை இது நோள்ளை என்று சொன்னாலோ, பிரிதொரு ஓவியர் பேர் சொல்லி அது மாதிரி வேண்டும் என்று சொன்னாலோ சொன்ன மறுகணமே கைத்துட்டுப் ட்டு எழுதிய ஓவியத்தின் மேல் மட்டியடித்து போர்டையும் முன்பணத்தையும் திருப்பி அனுப்பிவிடுவார். அதற்காக அதிகம் பேசமாட்டார். உறைந்துவிட்ட அடர் சிகப்பு வண்ணம் மாதிரியான அந்த மௌனம் நிறைய்ய பயத்தை உண்டாக்கும்.


எல்லோரும் பயந்தது போலவே காளிமுத்து அன்று கடுங்கோபத்தில் வந்தார். நடையின் தீவிரத்தில் விபரீதம் வருமென்கிற அபாயச்சங்கு ஒலித்தது. தறுமாறாகத் திட்டிவிடும் வார்த்தைகளைச் சுமந்துகொண்டு, மிதமிஞ்சிய போதையோடு வந்தார். கனியண்ணன் எப்போதும்போல ஒரு ஓவியத்திற்குள் மூழ்கிக்கிடந்தார். அது தகப்பனின் தோளில் கிடக்கிற குழந்தையின் படம். காளிமுத்துவுக்கு பாராமுகமாக இருக்கும் கனியண்ணனின் அலட்சியம் வெறியூட்டியது. எதோ ரசாபாசம் நடக்கப்போகிற அவதானிப்பில் சுவர்க்கடிகாரத்தின் நொடிமுள் சரக் சரக்கென்று நகர்ந்தது. நிழலாய் வந்த எடுபிடிகளில் ஒருவன் ''அண்ணே படம் அந்தாருக்கு'' சொன்னதும் திரும்பினார். ராஜா நாற்காலியில் உட்கார்ந்திருந்த தாயின் ஆளுயரப்படம் வடக்குச் சுவரோரம் பிரம்மாண்டமாக நின்றிருந்தது. விறகு சுமந்தே திரிந்த உருவம், சம்மணம் போட்டுக்கூட உட்காரத்தெரிரியாத அவள் ஒரு பட்டமஹிசி போலக் காட்சிதந்தாள். அந்த பிம்பம், அவர் குடித்திருந்த ஓல்டு காஸ்க் ரம்மிலிருந்த ரசனைக் கதவைத்திறந்தது. '' ச்ச்..சய் '' என்றுசொல்லி தலையை உலுக்கினார்.
கரை வேட்டியை மடித்துக் கட்டிகொண்டு தரையில் உட்கார்ந்தார். அவருக்கு ஏதும் பேசத் தோன்றவில்லை. கொண்டுவந்திருந்த கோபம் முழுக்க கரைந்து கண்களில் நீர்கோர்த்தது. படத்தையும் கனியண்ணனையும் திரும்பத் திரும்பப் பார்த்தார். தூரிகை விரல்களைப் பிடித்துக்கொண்டு தழுதழுத்தார். '' எனக்கு எங்கையெழுத்தக் கூட ஒழுங்காப்போடத் தெரியாது..., நீ வித்தக்காரனய்யா, ஒன்னயப்போயி '' அதற்கப்புறம் அவர் வந்தவேகமும், உளரள்களும் மாதக்கணக்கில் திரும்பத்திரும்ப சொல்லிப்பொழுதுகள் கழிந்தது.


அப்போதெல்லாம் ஓவியக்கூடம் கூடம் நிறைய்ய ஆட்கள் எந்தநேரமும் வருவதும் போவாதுமாயிருப்பார்கள். வேலை முடிந்த போர்டுகளும், ஸ்கெட்ச் போட்டதும், பாதி முடிந்தும் முடியாததுமாக வண்ணங்களின் வளர் சிதை மாற்றம் அந்த ஓவியக்கூடம் முழுக்க நிறைந்திருக்கும். சுவரிலும் தரையிலும் வண்ணங்கள் சிதறிய இடங்களில் சொல்லப்படாத ஆயிரம் கனவு பிம்பங்கள் ஒளிந்திருக்கும். அவற்றைப் பார்க்கிற ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு உருவம் தெரியும். சாயங்கால மேகங்கள் நகருகிற போது தெரிகிற மாய பிம்பங்கள் போலவே அந்தச் சுவரும் மிச்ச வண்னத்தில் மிளிரும். சுவரோரத்தில் ஒரு மேஜையிருக்கும் அதன் சதுர வடிவமும், மரக்கால்களும் தான் அது மேஜையென்பதை ஊர்ஜிதப்படுத்தும். அதில் ஒரு ட்ராயர் இருக்கும். அதற்குள்ளிருக்கும் தகர டப்பாதான் கல்லாப்பெட்டி. எவ்வளவு பிதுங்கினாலும் கர்வமில்லாத பெட்டியிலிருந்து, யாரும் பணம் எடுக்கலாம். உடன் வேலை பார்ப்பவர்கள் அவர்களுக்கான ஊதியத்தை எடுத்துவிட்டுக் கணக்கெழுதி வைக்கிற மாதிரியான ஏற்பாடும் இருந்தது. அங்கு வருகிற நெருங்கிய நண்பர்கள் அது குறித்து துணுக்குற்றுப் போவார்கள்.


அது மட்டுமா ஒரு கையகலப் பெட்டிக்கடையில் கூட இஷ்ட தெய்வங்கள் பாதி இடத்தை அடைத்துக்கொள்ளும். தலையே போனாலும் கடைதிறந்தவுடன் பத்திக்குச்சிப் புகையைக் கல்லாவிலும், சாமி படத்திலும் காட்டாமல், யாரும் அந்த நாளைத் தொடங்குவதில்லை. கனியண்ணன் ஓவியக்கூடத்தில் பத்திக்குச்சி வாசனை படாத மூன்று படங்கள் இருக்கும். குத்திட்டு நிற்கிற வெள்ளை முடி. அதிலிருந்து இறங்குகிற ஏறு நெற்றியில் சிவப்பு ஆச்சரியக்குறியாய் கோப்பாளம். அந்த முகத்தில் உலகை விழுங்குகிற கண்களோடு ஓவியத்தந்தை கொண்டைய ராஜுவின் படம். இன்னொன்று தாடிகளுக்குள் மறைந்திருக்கும் தீயெறியும் கண்கள். அதற்குமேலே பருந்து விரித்த சிறகாகப் புருவமும் கொண்ட மார்க்ஸின் படம். கடைசியாக நீளவாக்கிலுள்ள ஓவியம். குனிந்து நடந்த குரங்கு ஒன்று மெல்ல மெல்ல நிமிர்ந்து, ஆதிமனிதனாகிற பிரபஞ்சக் குறிப்பு அது. ஒரு பத்து உருவங்களில் கேள்வியையும் பதிலையும் பார்வைபயாளர்களுக்கு விநியோகிக்கிற வண்ணப் பிரமாண்டம். படத்தில் பதிகிற பார்வையானது, உருவங்களின் வழியே பயணமாகி வனாந்திரத்துக்குள் கானாமல்போகிற புள்ளியாகிவிடும்.
இந்த விநோத உலகில் மௌனப்பயணம் போகவும், பேசவும், பாட்டுக்கேட்கவும், மூலையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிற டோலக்கை எடுத்து லயமில்லாத ஒலி எழுப்பவும் நண்பர்கள் குவிகிற இடமாக இருந்தது அந்த ஓவியக்கூடம். கிட்டத்தட்ட எல்லா ஓவியர்களின் அறையிலும் ஒரு டேப் ரிக்காடும், எதாவது ஒரு வாத்தியக் கருவியும், தொண்ணூறு சதவீத இடங்களில் சிகரெட் புகையும் தென்படுவது ஒரு இலக்கணம் போலவே இருக்கிறது. அந்த ஒற்றுமைக்கு தர்க்க ரீதியான காரணங்கள் என்னவெனத் தெரியாது. அவர்கள் வண்ணங்களைப் போலவே இந்த உலகையும் காதலிப்பவர்கள் என்பதுதான் தூக்கலான நிஜம். அங்கு வருகிறவர்களும் வண்ணங்களைப் போல பலதரப்பட்டவர்கள். நிஜ நாடகப்பிரியர் மருதுபாண்டி, தாலுகாச்செயலாளர் தோழர் முத்து, வாத்தியார் உசைன், டின் பாக்டரித் தொழிலாளி நேசமணி, எழுத்தாளராகத் துடிக்கிற கலியமூர்த்தி. எல்லோரும் தினம் ஒரு தரம் அங்கு வந்து சம்மணமிட்டு உட்கார்ந்து நாலு வார்த்தை பேசிவிட்டுத்தான் போவார்கள்.
வயது வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் தோழரென்கிற மரியாதைதான்.

கனியண்ணன் கண் மண் தெரியாத பாசக்காரர் கல்லாவில் கிடக்கிற கடைசி இருபது ரூபாயையும் வருகிறவர்களுக்கு டீ சிகரெட் வாங்கித் தந்துவிட்டு, வீட்டு நினைவே இல்லாமல் இருப்பார். கடை பூட்டிகிளம்பும்போது தான் வீட்டில் அரிசியில்லாதது உறைக்கும். அதுபோலவே ரொம்பவும் முரண்டுக்காரர். ஓவியங்களில் நவீன உத்திகளை ஏற்றுக்கொள்வார். ஆனால் நவீனத்தொழில் நுட்பத்தை நிராகரிப்பார். எவ்வளவு சொன்னாலும் அவருக்கு இஷ்டமான, அந்தச்சிகப்பு வண்ணத்தின் அடர்த்தியைக் குறைக்கவே மாட்டார். அது வெறிக்கிறது, உறுத்துகிறது என்று சொன்னால் பிடிவாதமாக உறுத்தட்டும் என்று சொல்லிவிடுவார். உறுத்தல் இல்லாவிட்டால் எல்லாம் இயல்பாகிவிடும். ஓவியத்தில் எப்போதும் தூரிகை, எண்ணங்களுக்கு மட்டுமே இடம் உண்டு மெஷின்களுக்கு அங்கு துளியும் இடமில்லை என்கிற தீவிர முரண்டுக்காரர்.


ஸ்க்ரீன் ப்ரிண்டிங், ஸ்பிரே பெயிண்டிங், குழல் விளக்குகளில் பெயர்ப்பலகைகள் உருவான காலங்கள் வந்தது. லாப வெறியின் அதி நவீன வடிவமாக இயந்திரங்கள் கோரப்பற்களோடு வந்திரங்கியது. அந்தக் கோரப்பற்கள் பதியாத இடத்தில் பத்திரமாயிருந்த ஓவியக் கைகளின் மீதும் அதன் ரத்தம் தோய்ந்த பற்கள் பதிந்தது. பின்னார் எழுத்துக்கள் ஸ்டிக்கரில் உருவானது. எல்லாம் இரண்டு வருடம் தான் அவையாவும் அற்பாயுசில் வழக்கொழிந்து போனது. தான் பெற்ற குழந்தைகளைத்தானே விழுங்குகிற விலங்குபோல் நவீனம் தடம் அழித்துக்கொண்டே முன் சென்றது. இப்போது பாலித்தின் துணிகளில் தயாரிக்கப்படுகிற சிரிய பெரிய பெயர்ப்பலகைகள் சிவகாசியிலிருந்து வந்து, கடைகளெங்கும் தொங்குகிறது. ஒரு இரண்டு வாரகாலத்தில் உருவாகிற பெயர்ப்பலகைகளை அரை மணி நேரத்தில் வெளித்தள்ளிவிட்டு வாய்பிளந்து காத்திருக்கிறதுகம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்ட அச்சு எந்திரங்கள். உபயாகித்துவிட்டுத்தூக்கி எறிகிற குப்பைப் பழக்கம் ஒரு கலாச்சாரமாக உரு மாறிக்கொண்டிருக்கிற காலமிது. எவ்வளவு சடுதியில் தூக்கி எறிகிறார்களோ அவ்வளவு வேகத்தில் அவர்களுக்கு செல்வம் பாலிக்கிறது. குப்பையின் அளவைப்பொறுத்தே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. அந்தக்குப்பை மேட்டில் உபயோகமில்லாத பழம் பொருள்களை விட ரத்தமும் சதையுமான நினைவுகள் மட்டும் மக்கிப் போகாமல் கிடக்கிறது.


கண்ணன், மனோகரன், செந்தீ, கருப்பசாமி, பம்பரக்கண்ணாலே பாட்டுப்பாடுகிற சந்தனம் என உட்கார இடங்கிடைக்காமல் ஒரு திருவிழாக் கூட்டமிருந்த அந்த ஓவியக்கூடம், இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. மனைவியின் ஊருக்கு குடிபெயர்கிறேன் என்று மனோகரன் சொல்லிப் போனதைப் போலவே, எல்லோருக்கும் ஒரு தனித்தனிக் காரணமிருந்தது. அந்த நினைவுகளோடு கனியண்ணனின் சிகரெட்டுப்புகை மட்டும் அந்த அறைமுழுக்க அங்கும் இங்கும் அலைகிறது. அவர் வாசலில் உட்கார்ந்தபடி தெருவை இன்னும் அதிகமாக வெறித்துக் கொண்டிருக்கிறார். அதோ துறு துறுக்கும் கண்களோடு துள்ளி வருவது யார்.


மினு மினுப்பான, ஒரு போதும் தொடமுடியாத மெல்லுடலோடு அவள் வருகிறாள். ஆளில்லா நேரங்களில் மட்டுமே வருகிற அந்தக் கள்ளிக்கு, கொடுக்க என்ன இருக்கிறது. மண்ணென்னை கலந்த வண்ணங்களின் வாசனை அவளுக்கும் பிடித்துப்போய் விட்டது போல. வெறுமையின் வெளியெங்கும் ஆயிரம் வண்ணங்களை அள்ளித்தெளிக்கிற சாகசக்காரியாகத் தினம் தினம் வருகிறாள். யாருமற்ற நேரத்தில் நினைவுகள் போல், தென்றல் மாதிரி, இசையின் சாயலில் அவள் வருகிறாள். ஒரு நிமிடமும் நிற்காத தூரிகை வாளை ஆட்டிக்கொண்டு வருகிற அவளுக்கும் இவருக்கும் ஆறு மாதத்தொடுப்பிருக்கிறது. பிலால் கடையில் அவளுக்கென வாங்கிய பன் ரொட்டியை எடுத்து பிய்த்துப்போடுகிறார். வேகமக நகர்ந்து, வேகமாக நின்று, வேகமாகத்தயங்கி, மீண்டு வந்து ரொட்டித்துகளை எடுத்துக் குத்துக்காலிட்டு உட்கார்ந்து சாப்பிடுகிறாள். அது, எல்லோருக்கும் அணில், கணியண்ணனுக்கு மட்டும், அவள் பீனிக்ஸ். அப்படியொரு நாமகரணம் சூட்டப்பட்டது அந்த அணிலுக்குத் தெரியாது.
ஆனால் அவரது ஆழ்ந்த மௌனத்தோடு, துடி துடிப்பான அதன் அங்க சேஷ்டைகள் எப்போதும் கலந்துறையாடும். மாதவனிடம் மட்டுமே பகிர்ந்துகொண்ட அநேக ரகசியங்களை அவளோடு பகிர்ந்துகொள்கிறார். இசைக்குறிப்பு போலிருக்கும் அதன் வேகச் சத்தத்தோடு ஒரு நேர்காணல் நடக்கும். அவரின் பதில்களில் சேதிகள் மறைந்திருக்கும். அந்த நேர்காணல், மூன்றாவது மனிதர் இடைமறிக்கிற வரை தொடரும். அதோ, ஒரு மாதத்துக்குப்பிறகு நடக்க இருக்கிற ''கோக்'' எதிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு போர்டு எழுதவும், சுவர் விளம்பரம் எழுதவும் வாசகங்கள் ஏந்திக்கொண்டு, தோழர் எம்ஜியார் வந்துகொண்டிருக்கிறார். ரொட்டித்துகளைப் போட்டு விட்டு சடுதியில் ஓடி மறைந்து விடுகிறது பீனிக்ஸ்.


0


( '' ஒரு வனதேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும் '' எனது தொகுப்பிலுள்ள சிறுகதை - அல்லது ஓவியக்குறிப்பு.வாழ்வின் துயர அனுபவங்களைத் தேர்ந்து மிளிர்ந்த ஓவியக்கலைஞன், ஓரடி முன்னால் எனும் தமுஎச பரிசுபெற்ற புதினத்தின் ஆசிரியன், நொடித்துப் போன விருத்நகர் ' சூப்பர் ஆர்ட்ஸ் ' ஓவியக் குழுமத்தின் ஆணிவேர், பாசமும் வாஞ்சையும் தீராத வண்ணமாய்த் தேங்கிக் கிடக்கும் என் மூத்த சகோதரன், தோழர் மணிவண்ணன் அவர்களுக்கு )

10 comments:

காமராஜ் said...

வித்யா,
ஆராதனா,
ஜீவன்

நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

பாராட்டுகள் நண்பா,... கதையின் கரு மற்றும் வர்ணனை ஆச்சரியத்தை கொடுக்கின்றது... என்றுமே உனக்கு பாராட்டுகள்தான்

☼ வெயிலான் said...

இடங்களின் விவரணையின் போது சந்தேகம் வந்தது.

முழுவதும் படித்து விட்டு உங்களைக் கூப்பிட்டு உறுதி செய்து கொள்ளலாம் என்றிருந்தேன்.

கடைசியில் அடைப்புக் குறிக்குள் இருந்த வரிகளை படிக்கும் போது நான் நினைத்ததே தான்.

“ சூப்பர் ஆர்ட்ஸ் “

மண்குதிரை said...

nice sir

romba nalla irukku

காமராஜ் said...

வாருங்கள் ஞானசேகரன் வணக்கம்,
அன்புக்கு மிக்க நன்றி.

காமராஜ் said...

வெயிலான்,, எப்படியும் உங்களின் பின்னூட்டம் இருக்கும்
என எதிர்பார்த்தேன், அப்படியே ஆனது. அன்புக்கு நன்றி
வெயிலான்.

காமராஜ் said...

அன்புக்கு நன்றி மண்குதிரை.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்லா இருந்தது இந்த சிறுகதை. ஒரு வனதேவதையும் இரண்டு பொன் வண்டுகளும்’ சிறுகதை தொகுப்பு நான் படிக்கவேண்டும். சாத்தூரில் இருந்து எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. எல்லாரிடமும் கதையாடலும், சொல்லாடலும் தெறிக்கிறது, கொல்லன் உலை கொதி நெருப்பாய். எனக்கு இந்த கதையை நீங்கள் எப்போது எழுதினீர்கள் என்று தெரியாது, ஆனால் காலகாலத்துக்கும் ஒட்டிக்கொண்டிருக்கிறது, சைக்கிள் கற்றுக்கொள்ளும் போது ஏற்பட்ட வடுவாய் ஒரு திமிருடன் பதிந்து போயிருக்கிறது இது போன்றவர்களின் நினைவுகள்.
நிறைய வாழ்வாதாரங்களான இது போல் மனிதர்களாய், உறவுகளாய், இடங்களாய், இன்னும் பிறவாய் பார்க்கிறோம், எந்த குறிப்பேடும் இல்லாமல் பதிவு செய்து கொள்கிறோம், யாரோ சன்னமாய் பொத்தலிட மஞ்சப்பையில் கம்பாய் வழிகிறது நினைவுத் தாரைகள்.

அம்மா! எத்தனை நேரம், எத்தனை இருந்தது அப்போது, மனதில் குறித்துக் கொள்ள, எத்தனை காலியாக இருந்தோம், இட்டு நிரப்பிக்கொள்ள.

அன்புடன்
ராகவன்

பா.ராஜாராம் said...

வாசித்து நிமிரும் போது,கண்களில் நீர் நிறைந்து விட்டது காமராஜ்.ராகவன் சொல்வது போல எத்தனை பேர் இப்படி அந்த கரிசல் மண்ணிலிருந்து கிளம்பி இருக்கிறீர்கள் என எனக்கும் இருக்கு.இந்த மாதிரி கதைகளை,இப்படி கணினி மூலமாக வாசிக்கிற குறை பெரிதாக உணர்கிறேன் காமராஜ்.புத்தக வாசனை ஒரு சுகம்.இந்த தொகுப்பு வேணும் காமராஜ்.நண்பர் மாதவனின் தொகுப்பும் கேட்டு இருக்கேன்.மாதவனை சந்திக்கும் போது விபரம் அறிந்து கொள்ளுங்கள்.அவரின் "ம்மா...ம்மா.."சிறுகதை பதிவில் என் பின்னூட்டத்தில் என் முகவரி பதிந்திருக்கேன்.இரண்டு தொகுப்பும் கிடைத்தால் மிகுதி சந்தோசம்.இதற்கான பணம் எப்படி அனுப்பலாம் என்பதை என் மின் முகவரியில் தெரியபடுத்துங்கள் மக்கா.அன்பு நிறைய.

badri said...

sir nice story.emotional,heart touching,great-badri