21.4.10

கணக்கிலடங்கா மனித மாதிரிகளின் இருப்பிடம்.

நேற்றிரவு நகரின் மையப்பகுதியில் இருந்து கூடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தேன்.கணக்கிலடங்கா வாகனங்கள் கவனத்தின் மையப்பகுதியை அனுவளவும் பிசக விடாமல் பார்த்துக்கொண்டன.நேற்று புதிதாய் ஆரம்பமான இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தோடு  சேர்த்துபுறப்பகுதியில் இது நாலாவது கடை.தொண்ணூறுகளில் என் ஜி ஓ காலணிக்கு குடிவந்த போது. இந்த வாகன விற்பனைக்கடை இருக்கும் பகுதியெல்லாம் இருளடர்ந்து கழுதைகள் நின்றுகொண்டிருக்கும். அதிகாலையிலும் இருட்டு நேரங்களிலும் கழிப்பறையில்லா குடித்தனக்காரர்களுக்கு இது ஒரு  தோதுவான இடமாக இருந்தது. இப்போது அவர்கள் எங்கு போவார்கள்.

ஒரு ட்ரை சைக்கிளில் வைத்து 20 க்கு 12 ப்ளக்ஸ் பேனரை தள்ளிக்கொண்டு போனார்கள்.பின்னாளிருந்து தல்லிக்கொண்டு போனவர்  அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர்.நடக்க இருக்கும் மாநாட்டு
பேனர் என்பதை யூகிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 300 தொழிலாளிகள் வேலை பார்க்கும் அந்த பணிமனையில் அவர் மட்டும் தன்னந்தனியாக பேனரை இழுத்துக்கொண்டு போவது மனதைப்பிராண்டிக்கொண்டே இருக்கிறது.  சைக்கிளை ஓட்டுகிற வரும் பின்னாளிருந்து தள்ளிக்கொண்டு போன தோழரும் ஒரு இருட்டுப்பகுதியில் நின்று சிறுநீர்கழித்தார்கள்.

சென்னை மாநகரில் பிறந்து வளர்ந்து படித்து வேலைக்காக இந்தப்பக்கம் வந்த ஒரு நண்பர் 'இட்ஸ் ஹார்ரிப்ள், எப்ப்டீங்க ஜனங்க, ப்ளஷ் அவுட் இல்லாம,தண்ணி இல்லாம, இட்ஸ் ரியலி ஹார்ரிப்ள்' என்று சிலிர்த்துக்கொண்டு சொன்னார்.வாஸ்த்தவம் தூய்மை,சுகாதாரம்,நாகரீகம் என்பதெல்லாம் கிடைத்தும் அவர்கள் உதாசீனப்படுத்தியதல்ல.இந்த உலகம் தான் அவர்களை உதாசீனப்படுத்துகிறது.கிராமத்திலிருந்து வந்திருந்தார் எனது தூரத்து சித்தப்பா, இன்னும் விவசாயத்தோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் பத்தாம் பசலி அவர். ' வெளிய போனுமப்பா' என்றார், 'வெளிய ஏம்ப்போகனும் உள்ள  லட்ரின்  இருக்கு' என்று சொன்னேன். 'அடப்போப்பா நடு வீட்டுக்குள்ள போயி' என்று சொல்லிவிட்டு ரயில் தண்டவாளத்துப்பக்கம் நடையைக்கட்டி விட்டார்.

சென்னை வாசிக்கும், எனது கிராமத்துச் சித்தப்பாவுக்கும் ஒரே விஷயத்தில் இரண்டு எதிர் எதிர் முரண்பாடுகள் இருக்கிறது ஒன்றையொன்று உரசிக்கொள்ளாமல்.சித்தப்பா அவரது அந்திமக் காலங்கள் வரை தனது பிடிவாதத்திலிருந்து மாறாமல் செத்துப்போக அநேக சாத்தியமிருக்கிறது,வழியுமிருக்கிறது. சென்னை வாசி எங்காவது காட்டில் சிக்கிக்கொண்டு வயிற்றைக்கலக்கினால் அவரது சுத்தம் கேள்விக்குறியாகலாம்.இப்படி ஒன்றோடொன்று ஒத்துப்போகாத நூற்றுக்கணக்கான மாதிரிகள் இன்னும் அப்படியே தொடர்கிறது இந்தியாவில்.ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு கெட்டியான கலாச்சாரம்,அல்லது அரசியல் மறைந்திருக்கிறது.

இதை அப்படியே தொடர விடுவதில் நிகழ் அரசியலுக்கு பெரும் லாபம் இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சுற்றி பாம்பு பிடிக்கிற இனக்குழு ஒன்று இருக்கிறது.அதை ஜாதியாக்கிவிட்டது இந்தியா.நேசனல் ஜியக்ரபி தொலைக் காட்சி அலைவரிசையில் பாம்பு பிடிக்கிற காட்சிகள் வந்துகொண்டிருக்கும்,சில நேரம் திடுக்கிட வைக்கும் காட்சிகள் எல்லாம் காண்பிப்பார்கள்.அவர்கள் கார்,காமிரா,முதலுதவிப்பேட்டி,போன்ற தொழில்நுட்ப உபகரணங்களோடு வந்து செய்கிற சாகசத்தை.இவர்கள் குடும்பத்தோடு ஒரு கோணிப்பையும் கையில் ஒரு இரும்புக்கம்பியும்,இன்னொரு கவட்டைக்கம்பும் வைத்துக்கொண்டு வயிற்றுப்பிழைப்பு நடத்துகிறார்கள்.அவர்கள் ஆராய்ச்சியாளர்கள்.இவர்கள் மூப்பர்கள். எப்படி விந்தையான உலகம் இது.

10 comments:

AkashSankar said...

இங்கே ஒரு பெரிய மதிப்பீடு இருக்கிறது...கிராமத்தான் என்றால் நாகரீகம் அற்றவன் என்று... ஆனால் உண்மை என்னவோ... அவன் வாழ்க்கை, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை... அதை விட்டு வர சொல்லுவது... நாம் செய்யும் மிக பெரிய தவறு....

மனிதர்கள் சூழ்நிலையுடன் ஒத்து வாழ பழகி கொண்டவர்கள்.... எந்த ஒரு சூழ்நிலைக்கும், அவன் கிராமத்தானாக இருந்தாலும் நகரத்தானாக இருந்தலும் இயற்கையே மாற்றிவிடுகிறது. இதில் நாம் யார் மதிப்பீடு செய்ய...

ராம்ஜி_யாஹூ said...

சங்கரின் பின்னூட்டம் அருமை.

கிராமத்தில் உள்ள வாழ்க்கை இயற்கை சார்ந்தது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தான் இந்த நகர, கிராம முரண்பாடு அதிகம்.

கேரளத்தில் இன்றும் பெருமளவு இயற்கை சார்ந்தே வாழ்கிறார்கள், தலைநகர திருவனந்தபுரத்தில் கூட இயற்கை சார்ந்த வாழ்வே அதிகம். கர்நாடகாவில் கூட.

சிந்தனையை தூண்டும் பதிவை அளித்ததற்கு மிகுந்த நன்றிகள்.

vasu balaji said...

/இப்படி ஒன்றோடொன்று ஒத்துப்போகாத நூற்றுக்கணக்கான மாதிரிகள் இன்னும் அப்படியே தொடர்கிறது /

100 சதம் உண்மை சார். புள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா விளம்பரம் பிரபலமான நேரம் அது. செண்ட்ரல் ஸ்டேஷன் டி.வி.க்களிலும் ஒளிபரப்பாய்க் கொண்டிருந்தது. ஒரு குடிமகன் இடுப்பில் கைவைத்தபடி பார்த்துக் கொண்டிருந்து ஒரு கை நீட்டி சிரியோ சிரியென்று சிரித்தார். வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் வசதி இருக்கிறவனுக்கு புழக்கடையில் தூரத்தில், இல்லாதவர்களுக்கு வேலங்காடு என்று ஒதுக்குப்புறமாக இருந்ததை நடுவீட்டிலும், டைனிங்ஹால் அருகிலும் வைத்துவிட்டு நோவு கண்டுபுடிக்கிறாங்கப்பா புச்சு புச்சா! ஏன் வராது? எல்லா நோவும் வரும் என்றபடி போய்க்கொண்டே இருந்தார். சித்தப்பா சொன்னதும் இதேதானே:)

சின்னவயதில் காலைக்கடன் கழிக்க தாத்தா சொல்லிக் கொடுத்தது கவனமிருக்கிறது. இப்போது அது தெரிந்தால் ஒரு யோகா கோர்ஸ் ஆரம்பித்து விடுவார்கள். எங்கோ படித்தேன். இந்த முறையில் காலைக் கடன் கழிப்பதும், தரையில் அமர்ந்து உணவருந்துவதும், பெரும்பாலும் சம்மணமிட்டு அமருவதுமே ஆசியரிடம் ப்ராஸ்ட்ரேட் சுரப்பி பழுதடையாமல் இருப்பதும், ஜனத்தொகை அதிகரிக்கக் காரணமென்றும்.:))

க.பாலாசி said...

//'அடப்போப்பா நடு வீட்டுக்குள்ள போயி' என்று சொல்லிவிட்டு ரயில் தண்டவாளத்துப்பக்கம் நடையைக்கட்டி விட்டார்.//

இப்டித்தான் எங்கப்பாவும் அக்காவீட்டுக்கு போனாக்க செய்யுறாரு...

நாம கெடக்குற நாறிப்போன நாகரீக குட்டைக்குள்ள அவங்கள ஏன் தள்ளனும்னு தோணுதுங்க....

நல்ல இடுகை....

Unknown said...

வெள்ளைக்காரன் மிகவும் ரிஸ்க் எடுத்து செய்யும் வேலையை இவர்கள் எளிதாய் செயவார்கக்ர்

க ரா said...

நல்ல பதிவு சார்.

அன்புடன் அருணா said...

இப்படிக் கணக்கிலடங்கா முரண்பாடுகள் விந்தையான வாழ்வில்!

சீமான்கனி said...

//மனிதர்கள் சூழ்நிலையுடன் ஒத்து வாழ பழகி கொண்டவர்கள்.... எந்த ஒரு சூழ்நிலைக்கும், அவன் கிராமத்தானாக இருந்தாலும் நகரத்தானாக இருந்தலும் இயற்கையே மாற்றிவிடுகிறது. இதில் நாம் யார் மதிப்பீடு செய்ய...//

சங்கர் சரியாய் சொல்லி இருக்கிறார் அதையே வழிமொழிகிறேன்...நன்றி அண்ணே....

பத்மா said...

காமராஜ் சார் .உங்கள் இடுகையெல்லாம் எப்போதும் ஒரு தார்மீக கேள்வி இருக்கிறது .இதையெல்லாம் படிக்கும் போது "நீ லாம் எதுக்கு எழுத வரன்னு "எனக்குள்ளேயே கேள்வி வருகிறது .வேறொரு தளத்திற்கு என்னை அழைத்துசெல்லும் காரணியாக உங்கள் எழுத்து .மிக்க நன்றி சார்.மிகவும் enjoy செய்து படிக்கிறேன் .அனைத்தையும்

லெமூரியன்... said...

அழகா சொல்லிருக்கீங்கன்ன.......இந்த வாழ்க்கை முறை சிறந்தது என்றோ அல்லது இது சரியான வாழ்க்கை முறை அல்ல என்றோ யாரும் தீர்மானிக்க முடியாது......