25.4.10

பங்குனிப்பொங்கலும் அக்கினி நட்சத்திரவெயிலும்

இரண்டு வாரமாகப் போகிறது இன்னும் மனசு அடங்கவில்லை. ஊர்போய் வந்த திருப்தியில்லாமால் பாதியில் கிளம்பி வந்ததுபோல இருக்கிறது.


வியாழக்கிழமையே பொங்கல் ஆரம்பித்துவிடும் ஊர் முழுக்க வேப்பங்குலைகள் தோரணமாகத் தொங்கும்.யாரும் செருப்புப் போட்டுத் தெருவில் நடக்கக் கூடாதென்பார்கள். அந்த வாரம் முழுக்க பொத்துக்கால் பொன்னுச்சாமி மாமா கடைக்குக்கூட போகாமாட்டார். அவருக்கு செருப்பில்லாமல் ஒரு அடி எடுத்து வைக்க மிடியாது,ஆத்தாளுக்கு செருப்புப்போட்டால் ஆகாது.

எய்யா மாப்ள  ஒரு கட்டு சொக்கலால் பீடி வாங்கிட்டு வாங்க

சரி கொண்டாங்க

யோவ் இந்தரும், யோவ் கிழிஞ்ச செருப்பு, போடாதிரும்

சொல்லச் சொல்லக் கேட்காமல் கருப்பாயம்மா கடைக்கு பொன்னுச்சாமி மாமா செருப்போடு போய் திரும்பிவந்தபோது வீட்டுக்கு பலபேர் பிராது சொல்லிவந்துவிட்டார்கள்.அம்மா உட்காரவைத்து ஆச்சாரத்தை மீறக்கூடதென்று சொன்னது அப்போதெல்லாம் உறைக்கவில்லை.ராத்திரி சீதை மதினி உருவில் வந்த கனவு மாரி என்னை மடியிலமர்த்திக் கொண்டு 'ஓங்கண்ணையெல்லாங்  குத்தமாட்டன்  நீ பயப்படாமத் தூங்கு'என்று சொல்லிவிட்டுப்போனது.இதுபோலொரு பொங்கல் நாளில் கவுறு குத்து நடக்கும்.நேத்திக்கடன் செலுத்துவதற்காக இடுப்பில் ஊசி வைத்து நூல் கோர்ப்பார்கள்,அன்றைக்கு இரவு ஏழு மணிவாக்கில் பெரிய சாமிக்கு நாக்கில் சூலாயுதம் குத்துவார்கள்.

அந்த நேரம்  பெரிய சாமியைச்சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க வடக்குத்திசை நெடுக ஒரு பாதை அமைந்திருக்கும் அந்த ஆளில்லாப்பாதையின் குறுக்கே யாரும் போகக்கூடது.கொட்டுஅடிப்பது நின்று போய்  தீப்பந்தங்களின் ஒளியில்,அக்கினிச்சட்டியின் தீயில் எண்னெய் எரிகிற வாசமும் கடுகு வெடிக்கிற மாதிரி தீயெரியும் சத்தமும் மட்டும் வரும். கிழக்குப் பக்கம் நின்றுகொண்டிருந்த வேலவர் அருகில் நிற்பதகாக ஆளில்லா பாதையைக்கடந்த போது் கூட்டம் என் பேரைச்சொல்லிப் போகாதே போகாதே எனக்குரல் கொடுத்தது.அன்றும் கூட கறிக்குழம்பை ஊற்றிக்கொண்டே திட்டிய அம்மாவின் வாத்தைகள் சோத்தத் திங்க விடாமல் விரட்டியது. ஊர்மடத்தில் பசங்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் பசி கிளறிக் கிளறி வீட்டுப்பக்கமே பார்வையை கொண்டுபோனது. நினத்த படி அம்மா வந்தாள். 'என்ன சொன்னாகன்னு இப்டி நல்ல நளும் பொழுதுமா பட்னியாக்கெடக்க,ஏ வேலவரு ஓப்பிரண்ட சாப்பிடக் கூட்டியா' ன்னு சொல்லிவிட்டுப் போனாள்.

கல்லூரியில் கிடைத்த நட்பின் மூலமாக அறிமுகமான பெரியார் திராவிடக் கட்சி கருஞ்சட்டை தோழர்களும்,என் பால்ய நண்பன் முருகையாவின் மூலம் அறிமுகமான sfi யும் எனக்குள்ளே சில கேள்விகளை ஊன்றியிருந்தது.
அதையெலாம் அர்த்த பூர்வமாகச் சொல்லுகிற அறிவும் அப்போது எனக்கில்லை,அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற பக்குவமும் ஊருக்கில்லை. காலையில் வந்த 'பெரியசாமி 'அஞ்சத்தாத்தன்   'ஏவிள  ஏ  செம்பட்டச் சிறுக்கி( என்னை அப்படித்தான் கூப்பிடுவார்)  படிச்சா கிறுக்குப் பிடிக்குமா'  என்று கன்னத்தை இனுங்கிவிட்டுப் போனார்.

ஊரைவிட்டுப்போனதும் அந்த சடங்குகளின் மேல் ஒரு சிநேகம் வந்தது.ஒரு வருட உழைப்பை,வறுமையை  இயலாமையை விரட்டி விடுகிற திருவிழாவாக வந்து போகும் பொங்கலன்று, எங்கெங்கோ போய்  வயிறு நிறப்பும் மாணாவரி மனிதர்கள் வந்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து   பழயவற்றை அசைபோட்டபடி ஊர்ச்சண்டை பார்க்கிற தருணத்துக்காக நானும் வருஷா வருஷம் போவேன். தொண்ணுறுகளுக்குப்  பிறகு மாது,கார்த்தி,இன்னும் சில தோழர்கள்  ஊருக்கு வருவார்கள். உட்கார இடம் பற்றாத அந்த திண்ணையில் உட்கார்ந்து அந்தக்கிராமத்தோடு ஐக்கியமாவார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் வந்து நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் போகும் தருணங்களில் எங்கம்மா பூரிப்போடு ' எய்யா வாங்க உள்ள சோறுபோட்டாச்சு'  என்று  கடைக்கும் வீட்டுக்குமாக அலைவாள்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழிந்து போனது. போன திங்கள் கிழமை நண்பர்கள் இல்லாத, பையன்களில்லாத, பொங்கலாக வந்தது. சொல்லி முடியவில்லை பெரிய பேரன் வரலையா, ஒங்க அக்காதங்கச்சி வரலையா, என்னன்னே இந்த தடவ தோழர்கள் வல்லையா கேள்விகளுக்கு அவள் தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

சூடுபிடித்துக்கொண்டது,எழுமிச்சம்பழம் வாங்கிவர மேலக்கடைசியில் இருக்கும் கடைக்குப்போனேன். 'எப்பா அடிப் பொசுக்குது செருப்பு போட்டுட்டுப்போ',  அம்மா சொன்னாள். பாதிவழி போனபிறகு வெயிலின் உக்கிரம் பாதத்தை வெந்து போகவைத்தது  ' எய்யா பேங்காரரே காலு பொத்துப்போகும்யா, இந்தாங்க செருப்பு போட்டுக்குங்க ' என்று கொண்டுவந்து கொடுத்தார். பரவாயில்ல என்று சொல்லிவிட்டு செருப்பில்லாமல் கடைக்குப் போனேன் . மாரி என் சாமியில்லை கொஞ்சம் வயதான எங்கள் ஊர் மூதாட்டி.

23 comments:

ஈரோடு கதிர் said...

வியாபாரத் தந்திரங்கள் படியாத கிராமத்து (ஆன்மீக !!) பொங்கல், அங்கு காலம்காலமாய் வாழும் மனிதர்களுக்கான அற்புதமான வடிகாலாகவே இருக்கின்றது...

பகுத்தறிவு மனதுக்குள் நிரம்பிக்கிடந்தாலும் எதன் பொருட்டேனும் பாதத்தை மண்ணில் ஆழப்பதியவைக்கிறது அது கொதித்தாலும்...

கடைசி வரி ஆயிரம் அர்த்ததை உணர்த்துகிறது.

vasu balaji said...

/மாரி என் சாமியில்லை கொஞ்சம் வயதான எங்கள் ஊர் மூதாட்டி./

சாமியோ ஆசாமியோ இந்த நேசம் மட்டும் இருந்துட்டா போதும் சார். திரும்ப திரும்ப படிச்சேன் இந்த வாஞ்சையை.ஊர்த் திருவிழாவும், மனுசங்களும் கண்முன்னே காலையில் மனசுக்கு இதமா..நன்றி :)

AkashSankar said...

நானும் பல சமயம் யோசித்திருக்கிறேன்... இந்த திருவிழாக்கள் இல்லாமல் நமது கிராமங்கள் எப்படி இருக்கும்... கடினம் தான்... அறிவிற்கு இடமளிக்காமல் அப்படியே ஏற்றுகொள்வோமே... அப்பாவி மனிதர்களின் அப்பாவிதனத்தால்... யாருக்கும் தீங்கில்லையே...

Ahamed irshad said...

மண்மணத்தோடுள்ள எழுத்தை எத்தனை தடவை படித்தாலும் சலிப்பூட்டுவதில்லை..அருமைங்க...

ராகவன் said...

அன்பு காமராஜ்,

வழக்கம் போல அற்புதமான நடை, வழிகிற பால் பொங்கலும், வெல்லமும், நெய்யும் சேர்ந்து, பச்சை கற்பூர வாசனையுடன் மிதக்கும் பொங்கல் வெளி வழிகையில் வரும் குலவையும் சேர்ந்து ஒரு பரவச நிலையில் தள்ளுகிறது இந்த பதிவு. எனக்கும் அனேக நினைவுகள் உண்டு, காமாச்சியம்மன் கோயில் பொங்கல், மாரியம்மன் கோயில் தீமிதி, சித்திரத் திருவிழா, மற்றும் சிவராத்திரியில் குலசாமி கும்பிடப்போகும் திருவிழா என்று அமெரிக்கைகளும், அலங்காரங்களும் பூத்துக் குலுங்கும் பால்யம் என்னை எழுதச் செய்கிறது.

சிவராத்திரி நேரத்தில புலிக்குத்தி கிராமமே ஒரு புது வண்ணத்தில புரளும். செம்மண் கலரெல்லாம் போயிட்டு மஞ்ச கலரும், பச்சை கலரும் ஜாஸ்தியான மாதிரி தெரியும். பக்கத்து ஊர்கள்ல இருந்து நிறைய யாவாரிங்க கடை போடுறத்துக்கு வந்துடுவாங்க. இந்த வாட்டியும் நிறைய கடையா இருந்துச்சு கிராமத்துக்குள்ள நுழையும் போதே. குழந்தைங்க, பெரியவங்கன்னு எல்லாருக்கும் தேவையான எல்லா கடைகளும் புதுசா முளைச்சிருந்தது. விளையாட்டு சாமான் கடைங்க, டீக்கடைங்க, பஜ்ஜி, போண்டா கடைங்க, இளநீர், பதநீர், நொங்கு, குஞ்சலம், ரிப்பன், மைடப்பா, கேர்ப்பின், சீப்பு, சோப்பு டப்பா, சாந்து பொட்டு விக்கும் கடைங்க, சவ்வு மிட்டாய், ஐஸ் வண்டிங்க, பலூன்காரங்க, சாமிக்கு தேவையான, பூசைக்கு தேவையான சாமான், பூக்கடைங்கன்னு களை கட்டி இருந்துச்சு புலிக்குத்தியே. எல்லாருமே இங்க வாங்க, இங்க வாங்கன்னு கூப்பிட்டு தத்தமது வியாபாரத்தை பார்த்து கொண்டு இருந்தார்கள். எங்க போறதுன்னு தெரியாம சனங்கள் பெரும்பாலும் குமரிகளும், சிறுவர்களும் தான், எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு, பேருக்கு இது என்ன விலை, இது என்ன விலைன்னு கேட்டுக்கிட்டே திரிஞ்சாங்க. இந்த கிராமத்தை ஒட்டி ஒரு சின்ன ஆறு ஓடி கொண்டு இருந்தது, கன்னிசேரி என்ற பெயரில், எதன் கிளையாறோ தெரியலை, அப்பாவை கேட்டா சொல்வார், அநேகமா தாமிரவருனியாகவோ அல்லது வையையாகவோ இருக்கணும். ஆத்துல தண்ணீர் இல்லாத சமயங்கள்ல, ஆத்துமணலில் ஊத்து பறிச்சுக்கிட்டு, வாளி வச்சு ஊத்தை வாடகைக்கு விட்டு இந்த கிராமத்தின் மிச்சமான ஊர்காரங்க காசு சம்பாதிப்பார்கள். மருதமலை மாமணியே, கற்பூர நாயகியே, விநாயகனே, ஆத்தாடி மாரியம்மா ன்னு தனக்கு விருப்பமான சாமியை குழாய் கட்டி கூப்பிட்டு கொண்டு இருந்தார்கள். தவில், தப்பு, உறுமி என்று மாடுகளையும், ஆடுகளையும், உடும்புகளையும் தோலாய் கட்டி அடித்து நாயனங்களையும், ஒத்துக்களையும் காற்றில் பரப்பினர். விரிதலையும், வேப்பிலையும், குலவை சத்தமும் பதினெட்டாம் படி கருப்பையும், சுடலைமாடனையும், முனிஸ்வரனையும், வீர சின்னம்மாளையும், முனிபைரவரையும் பலிக்கு ஏங்க வைத்து பந்திக்கு அழைத்தன. எல்லா கோயிலையும் ஏதாவது ஒரு சாமி ஏறி நின்னு குறி சொல்ல வாய் பொத்தி பக்த பங்காளிகள், சாமிக்கே என்ன வேணும்னு கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நான் திரும்பவும் அந்த திருவிழாவுக்கு போனால் எப்படி இருக்கும் என்று நினைக்கும் போது சந்தோஷமாகவும், அதே நேரம் பயமாகவும் இருக்கு காமராஜ்!!

அன்புடன்
ராகவன்

லெமூரியன்... said...

/மாரி என் சாமியில்லை கொஞ்சம் வயதான எங்கள் ஊர் மூதாட்டி./

ரொம்ப சின்ன வயதில் ஊர் திருவிழாவிற்கு போனதுதான் நியாபகத்தில் வருகிறது......அதன் பிறகான நாட்களில் வாய்ப்பு அமையாமல் போனது......பின்பு என்னுடைய இருபத்தி மூன்றாவது வயதில்தான் ஊர் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது......அதில் கலந்து கொண்ட போது இவ்வளவு நாட்கள் இதை இந்த அன்னியோன்யத்தை....அதில் அடங்கியிருக்கும் சந்தோஷத்தை.....என தொலைத்தவைகளின் பட்டியல் சற்று நீண்டதாகவே இருக்கும் என தோன்றியது.....அதன் பிறகான நாட்களில் மறக்காமல் கொண்டாட்டங்களின் உறுப்பினராக இருக்கிறேன்.....இம்முறையும் கூட திருவிழாவிற்காக விடுப்பு விண்ணப்பம் செய்திருக்கிறேன் அலுவலகத்தில்......!
உங்களின் எழுத்துக்களை வாசிக்கும்போது அப்படியே ஊர் பக்கம் திருவிழா பார்த்த மாதிரி ஒரு அனுபவம்.

உயிரோடை said...

பங்குனியில் பொங்கலா? பகிர்வு கதை போலவே இருக்குங்க அண்ணா

காமராஜ் said...

//இந்த கிராமத்தை ஒட்டி ஒரு சின்ன ஆறு ஓடி கொண்டு இருந்தது, கன்னிசேரி என்ற பெயரில், எதன் கிளையாறோ தெரியலை, அப்பாவை கேட்டா சொல்வார், அநேகமா தாமிரவருனியாகவோ அல்லது வையையாகவோ இருக்கணும்.//

வரையிலும் அர்ச்சுனா நதியாக ஓடி இருக்கன்குடியின் ஒரு கரையில் வைப்பாறும்,இன்னொரு கரையில் அர்ச்சுனா நதியும் ஓடும் இருக்கன்குடி முடிந்ததும் இரண்டும் ஆலிங்கணமாகிப்பின்னர் வைப்பாறு என்ற பெயரிலே ஓடி வேம்பாரில் கலக்கும். கன்னிசேரி மிகப்பிரபலாமான குலதெய்வக்கோயில்களில் ஒன்று.

காமராஜ் said...

raagavan அதன் பெயர் அர்ச்சுனா நதி. அது இருக்கன்குடி வரையிலும் அர்ச்சுனா நதியாக ஓடி இருக்கன்குடியின் ஒரு கரையில் வைப்பாறும்,இன்னொரு கரையில் அர்ச்சுனா நதியும் ஓடும் இருக்கன்குடி முடிந்ததும் இரண்டும் ஆலிங்கணமாகிப்பின்னர் வைப்பாறு என்ற பெயரிலே ஓடி வேம்பாரில் கலக்கும். கன்னிசேரி மிகப்பிரபலாமான குலதெய்வக்கோயில்களில் ஒன்று.

காமராஜ் said...

கதிர் வாங்க, ரொம்பத்தேடினேன்.
0

பாலா சார் பெருந்தெய்வக்கொவில்களுக்கும்.
ஊர்க்குலதெய்வங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதை
உணரவே ரொம்ப நாளாச்சு எனக்கு.
0
வங்க சங்கர் வணக்கம் அன்புக்கு நன்றி.
0
ராகவன்,
இர்ஷாத்,
லாவண்யா
எல்லோருக்கும் அன்பும் வணக்கமும்.
0
லாவண்யா
பங்குனியில் மாரியம்மனுக்கு திருவிழா நடப்பது
இந்த கரிசல் பூமியின் மிக் முக்ய வைபவங்களில் ஒன்று.

காமராஜ் said...

அன்புத்தம்பி லெமூரியன்.
எங்கே போயிருந்தாய்?
எழுது.

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு, அப்படியே திருவிழாவை, கோவில் கொடையை, தெருவை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.

ஆயிரம் லேசர் ஷோ க்கள் வந்தாலும், சீஅர்ஸ் பெண்மணிகள் வந்தாலும், கிராமத்து திருவிழாவின் சுகத்திற்கு ஈடாகாது. அதற்க்கு காரணம் திருவிழாவில் பங்கு பெறும் அத்துனை மக்களும் மனம் ஒன்றி பங்கு கொள்வதுதான்.

உங்கள் பதிவை ஆப்பிசில் உக்காந்து படிக்க முடிவதில்லை, என் கட்டுப்பாட்டையும் மீறி கண்களில் தண்ணீர் வந்து விடுகிறது. சுற்றி உள்ளோர்கள் சிரிக்கின்றனர். என்ன சொல்லி புரிய வைப்பது.

க.பாலாசி said...

எங்க ஊர்ல இந்த பொங்கல் பண்டிகன்னு கிடையாதுங்க... ஆனாலும் மாரியம்மன் உண்டு... தீமிதிக்காக.... வீடு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க... ஆனா இங்க ஊரு ஒண்ணுகூடினாலும் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானுங்க.... இது ஒரு மகத்துவம் மாண்டுபோகாமல் இருக்கவேண்டும்...

எத்தனை அழுத்தமான மொழி இந்த இடுகையில்... நானும் பொங்கலுக்கு வந்ததுபோன்ற உணர்வு....

☼ வெயிலான் said...

ரசித்துப் படித்தேன்ண்ணே! அனுபவித்தவர்களுக்குத் தான் வார்த்தைக்கு வார்த்தை ரசிக்க முடியும்.
அருமை!

காமராஜ் said...

ராம்ஜி,
பாலாஜி,
வெயிலான்
அன்புக்கு நன்றி.

செ.சரவணக்குமார் said...

காலையிலிருந்து மூன்று முறை வாசித்தேன். நமது ஊர் திருவிழா ஒன்றை, நம் மக்களை நேரில் கண்டதுபோல் இருந்தது காமராஜ் அண்ணா.

காமராஜ் said...

வாங்க சரவணக்குமார் அன்புக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

பங்குனிப் பொங்கலின் எனதான அனுபவங்கள் மனதில் பதிந்துவிட்ட பயமூட்டும் சாமியாட்டங்கள்தான்.

Unknown said...

அருமையான பதிவு. உங்கள் பதிவிற்கு வரும் போது இதற்கு ராகவன் என்ன எழுதியிருப்பார் என்ற ஆவலும் கூடவே வருகிறது. Thanks.

நேசமித்ரன் said...

//மாரி என் சாமியில்லை கொஞ்சம் வயதான எங்கள் ஊர் மூதாட்டி//

எழுத்தின் வழி முன் நிறுத்தும் நேயம் மிகு உலகம் கடல் பாலை கடந்து திரவியம் செய்து கொண்டிருப்பவர்களுக்குத்தான் எத்துணை பெரிய ஆறுதலை ஆசுவாசத்தை தருகிறது காமு சார்

பா.ராஜாராம் said...

ஒவ்வொரு வரியையும்,தனி தனியா பேசலாம் காமு.

என்னவோ,

நாய்க் குட்டி மாதிரி,முண்டி முனைஞ்சு, மடியில் புரளணும் போல் இருக்கு.

மண்ணை தின்னுக்கிட்டே இருக்கலாம்தான்.இல்லையா?

பத்மா said...

நேத்து தான் நா ஒரு கிராமதிருவிழாக்கு போயிட்டு வந்தேன் காமராஜ் சார் .அதையெல்லாம் மனசில போட்டு உருட்டிகிட்டு இருக்கறபோது உங்க பதிவு
.மனசே நெறஞ்சு போச்சு .நானும் காவடி பத்தி எழுதணும் .உங்களை மாதிரி எழுதரவங்களோட ஆசியோட

சந்தனமுல்லை said...

காட்சிகள் கண்முன் விரிகிறது...எனக்கும் வரணும்போலத் தோன்றுகிறது! :-)