புழுதியைகிளப்பிக்கொண்டு ஊருக்குள் போலிஸ் ஜீப் நுழைந்தது கொட்டாரத்தில் முள் ஒடித்துக்கொண்டிருந்த சின்னப்பொண்ணு தான் முதலில் பார்த்துச் சொன்னாள். கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தவர்கள், வாலை விட்டு வந்து உலை வைத்தவர்கள் , எல்லாரும் அங்கங்கே கூடினார்கள். ஊர் மடத்தில் சீட்டாடிக்கொண்டிருந்தவர்கள் அலறிபுடிச்சி இடத்தைக்காலி பண்ணிவிட்டு ஓடினார்கள். பொன்னுச்சாமி பயத்தில் விரித்திருந்த கோரப்பாயையும் சீட்டுக்கட்டையும்வேலிச்செடிக்குள் எறிந்து விட்டு ஓடினார். இன்னு செத்த நேரம் இருந்திருக்கணும் கூப்டு போயி நாலு நாளைக்கு ஒலமூடியில் ஒண்ணுக்கிருக்க வசிருப்பாக என்று தன் புருசன் கருப்பசாமியைப்பார்த்து கனகமனி சொல்லிக்கொண்டிருந்தாள். கள்ளச்சாராயம் விற்கிற நடராசன் குறுக்கால ஓடி கண்மாய்க்குள் மறைந்துகொண்டான்.
ஊர் நடுவே வந்த போலிஸ் ஜீப் சிறிது நேரம் நின்றது, உள்ளிருந்து ஒரு காவலர் காளியப்பன் வீடு எது எனக்கேட்டார்மூணாவது போஸ்டுக்கு பக்கத்துல கிழக்கால பாத்த வீடு என்று சொன்னார்கள்.
யே எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் அவஞ்செத்து மூணு வருசமாச்சே நல்லா அடையாளஞ்சொல்ற ,
என்று கனகமணி சொல்லியது.
ஏம்மா ஊதாச்சேல இங்க வா
என்று கூப்பிட்டார் அதே காவலர். கனகமணி வரவில்லை
ஏ ஒன்னத்தா திமிரப்பாரு, இங்கெ வா
ஊராம்பொண்டாட்டியெ நீ வா போ ன்னு கூப்பிட்டிட்டு, திமிராண்ணு நம்மளப்பாத்து கேக்குதப்பாரு, இது சாயம்போன செகப்புச்சேல, ஊதாச்சேலயா, ரெம்பத்தா... ஏ சனங்கா அவுகளே தேடிக் கண்டுபிடிக்கட்டும்.
ஆய்வாளர் இறங்கி வந்து கேட்டார்.
'சார் மாரியப்பன், காளியப்பன்னு கேட்டா ஊர்ல முக்காபாதிப்பேர் வந்துருவாங்க, நீங்க தேட்றது காளியப்பன் ,மேலத் தெரு, அந்தா மேக்க இருக்கு'.
ஜீப் ஒரு வளையம் அடித்து திரும்பி மேலத்தெருப்பக்கம் போனது பின்னாலே நாய்களும் விரட்டிக்கொண்டு போனது.
அந்ததெருவுல இருக்குற அத்துண பேரையு அள்ளி போட்டுக்கிட்டு போகணும். கொக்கரகுளத்துஅந்தோணியம்மா சொன்னதும்.
'ஏடி தப்புச்செஞ்சவுகளுக்கு தண்டண குடுத்தாலே போது, இவனுக போறதப்பாத்தா வேற ஏதோ கோக்கு மாக்கு நடந்திருக்கணும். எப்பிடிப் போம்பள அப்பிடியே செப்புச்செல கெணட்டா இருப்பாளே, ஒவ்வலன்னா வேற கண்னுதெரியாத காட்டுக்கு கட்டிக்குடுத்துருக்காலாம், பொம்பளப் பொறப்புகளப்போல தண்ணிக்கு தரைக்குமா உசுரச் சொமந்துக்கிட்டு அலஞ்சிருப்பா, சாகுற வயசா, ரதி, ரதி, கொலகாரப்பாவிக'.
சொல்லிக்கொண்டே கண்ணைத் துடைத்தாள்.சுத்தியிருந்த ஆணும் பொண்ணும் கண்கலங்கியது.
'எப்பிடி வாஞ்சையான நாச்சியா ஒரு நாளு வித்தியாசம் பாக்காது எக்கா தங்கச்சி ன்னு கூடப்பொறந்தவா மாதிரி பேசும்', சொல்லிக்கொண்டிருக்கும்போதே மூக்கைச்சிந்தினாள் கருப்பாயி.
மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி நொடித்துப்போன வசந்தியின் குடும்பம் ஊருக்கு வந்து பத்து வருசம் ஆனது. அப்போது வசந்தி பவாடை சட்டைபோடுற வயசு. ஐந்தாவது வகுப்பில் சேர்த்து விட்டர்கள் இருக்கிற பிள்ளைகளில் பெரிய பிள்ளையாக இருந்த வசந்தி வந்தகொஞ்ச நாளிலே லீடராகிவிட்டாள். ஒண்ணாப்பு ரெண்டாப்பு வாத்தியார் விடுப்புஎடுத்த நாட்களில் அவள் தானந்த வகுப்புகளுக்கு பாடம் எடுப்பாள். பள்ளிக்கூடம் வராத குழந்தைகளை கும்பலாகப் போய் துரத்திப்பிடித்துவருகிறவர்களுக்கு அவள்தான் தலைமையாக இருப்பாள். வாத்தியார்கள் நுழையக் கூச்சப்படுகிற தெருக்களில் ஐயரவில்லாமல் நுழைகிற அவளுக்கு. தெருவிலும் ரசிகர் பட்டாளம் உண்டு அந்த ஊரில் படிக்கிற அவள் வயதுப்பையங்களுக்கு அவள் தான் கனவுக்கண்ணியாக இருந்தாள். பேச்சிமுத்து, கணேசமூர்த்தி, துரைராஜ், எல்லோருமேஅவளுக்காக தினம் தினம் அவள் வீட்டுக்கு எதிரே உள்ள பூவரசமரத்துக்குப்போவார்கள் அங்குதான், எல்லா விளையாட்டும்.
காலங்களின் சுழற்சியில்.ஆளுக்கொரு மூலையாக பிய்த் தெறியப்பட்டார்கள். அவர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வேறு வேறு முகங்களும் விசயங்களும் காத்திருந்தன. பத்து வரை படித்த வசந்தி அதற்குப்பிறகு குடும்ப வறுமையினாலும் அண்ணியின் வசவுகளைத் தாங்காமலும் படிப்பை நிறுத்திக் கொண்டாள்.தீப்பெட்டிக்கட்டு ஒட்டுகிற முழுநேர வேலைக்கு இடையே படிக்க முடியாமல் போனதனது ஏக்கத்தை திசைதிருப்ப கண்ணில்படுகிற எல்லா எழுத்தையும் படித்தாள். குமுதம் ஆனந்த, விகடன் வாரப்பத்திகைகளும், சில கதைப்புத்தகங்களும் படிக்க அவள் இரவுகளை ஒதுக்கிக்கொள்வாள் அல்லது மத்தியானம் சாப்பிட்டு முடித்ததும் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து படிப்பாள். புத்தகங்கள் விலைகொடுத்து வாங்கமுடியாததால் சாமுவேல் வாத்தியார் மகள் ஜாக்குலின் இவளது தோழியானாள். அவர்கள் பக்கத்து ஊர் பஞ்சாயத்து நூலகத்தில் உறுப்பிர்களாக இருந்தது இவளுக்கு இன்னும் கூடுதல் அனுகூலமாக இருந்தது. எல்லோரும் படித்துவிட்டு கசங்கிநிலையில் கைக்கு வரும் அந்தப்புத்தகங்களை எதிர்பார்த்தபடியே கட்டு ஒட்டுவாள்.
ஒரு காலை சம்மனமும் ஒரு காலைக் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் வசந்தியின் கைகளுக்கிடையில் ஊதத்தாளும் அட்டைச்சில்லும் பசையும் கலந்து சின்னச்சின்ன தீப்பெட்டி டப்பாக்களாக மாறும். அவள் கையிலிருந்து சுழன்று சுழன்று எதிரே விரித்திருக்கும் சாக்கில் விழும். விழுகிற டப்பாக்களுக்குள் உள்ள இடைவெளி சொற்ப கணங்கள். அதைக் கூர்ந்து கவனித்தால் எதோ மாயாஜாலம் நடப்பது போலிருக்கும். இந்த நேரங்கலில் தான் படித்த கதைகளைவிஜயலட்சுமிக்குச் சொல்லுவதிலோர் பரவசம் கிடைக்கும். கதைகளைக்கேட்டுக்கொண்டே அந்தக் கதைகளுக்கான ஓவியங்களில் கரைந்துபோவாள் விஜய லட்சுமி.
கல்யாணமான மறு வாரம் அஸ்ஸாம் போன தன் கணவனை நினைத்தபடியே காலம் தள்ளுவதாக ஊர் பேசும் விஜயலட்சுமிக்கு ஒரு இருட்டுக்கதை இருந்தது. அது நெடு நாட்களாக வசந்திக்குக் கூடத் தெரியாது. விஜயலட்சுமியின் கதை தெரிந்தபோது,இரண்டு நாட்கள் அவளிடம் மூஞ்சி கொடுத்துப் பேசவில்லை,
ஒரு நாள் சாயங்காலம் வேலிக்காட்டுக்குப் போகும்போது விஜயலட்சுமி வலியப்போய் அவளிடம் சொன்ன விசயங்களின் நியாயம் புரிந்துகொண்டு மீண்டும் இருவரும் சகஜமாகிப் போனார்கள்.ஏற்கனவே கல்யாணமாகி மூணு பெண்கள் இருந்த அவன் கேட்ட அம்பதாயிரம் ரொக்கத்தை சாக்குச்சொல்லி பழய்ய வாழ்க்கைக்குப் போய்விட்டான். பின்னிரவு நேரங்களில் வருகிற அந்த மாய உருவம் யார் என்று தெரிந்து கொள்ள வசந்திக்கும் ஆவலாக இருந்தது. அது கீழத் தெருவிலிருந்துதான் வருகிறது என்னும் ஒரே ஒரு தகவலை
வைத்து யார் என அனுமானிக்க முடியவில்லை.
தெருப்பக்கம் வருகிற எல்லா வாலிபர்களையும் சந்தேகப்பட்டாள். அப்படித்தான் ஒரு நாள் கென்னடியும் இரவு எட்டரை மணிக்கு அந்தத்தெரு வழியே நடந்து போனான். காலில் இருந்த செருப்பு காதறுந்து போகவே விஜயலட்சுமி வீட்டு வசலில் நின்று குனிந்து கொண்டிருந்தான். விஜயலட்சுமியும் அதே நேரம் வாசலுக்கு வந்தாள். இந்த காட்சி அவள் சந்தேகத்தை வலுப்படுத்தப் போதுமானதாக இருந்தது. அன்று வீட்டிலுள்ளவர்கள் எல்லாரும் வேலைக்குப் போய்விடக்காத்திருந்து விஜயலட்சுமி வீட்டுக்கு ஓடோடிப்போனாள். இவள் சொன்னதைக் கேட்டு விட்டு சத்தம் போட்டுச்சிரித்தாள்.
'அவனா,பைத்தியம் அவ என்னோடதா படிச்சான் இங்கெ கல்லுவீட்டு முதலியார் மகனுக்கு டியூசன் எடுக்க வருவான். அவனா இருந்தா இன்னேரம் நானே கூட்டிட்டுப்போய் தாலிகட்டி நாலு பிள்ளப் பெத்துருப்பேன்'. என்று சொல்லிவிட்டுச்சிரித்தாள். அவனு ஒன்னிய மாதிரித்தா கதபுஸ்தம்னா சோறுதண்ணி கூட வேண்டாம். ஆனா தண்டி தண்டியா பெரிய புஸ்தகங்களாத்தா படிப்பான்'.
அதன்பிறகு விஜயலட்சுமியின் சிபாரிசின் பேரில் கென்னடி படிக்கும் தடித்த நாவல்கள் வசந்தியின் கைகளுக்கு வந்தது. முதலில் மோகமுள் படித்து தன்னைவிட இளைய ஆடவனோடு காதலான யமுனாவை நினைத்து உருகிப்போனாள். அப்புறம் கடல் புறத்தில் படித்துவிட்டு அது குறித்து யாரிடமாவது பேசவேண்டும் என்று மருகினாள். 'இன்னும் நெடுநாளைக்கு கடலிரைச்சலும், பிலோமிக்குட்டியும் பவுலுப்பாட்டாவும்
கூடவே வருவார்கள்'. என்று கடைசிப்பக்கத்தில் எழுதியிருந்தது அது கென்னடி'தானென்பதை புரிந்துகொண்டபின் அவனோடு பேசவேண்டுமென்ற ஆவல் கூடியது.ஒரு செவ்வாய்க்கிழமை பகல் பணிரெண்டு மணிக்கு தெருவில் நடமாட்டமில்லாத நேரத்தில் விஜயலட்சுமியின் வீட்டில் மூன்றுபேரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். வண்டி வண்டியாய் அவன் வாசித்த புத்தகங்களைப் பற்றிப்பேசிக் கொண்டே இருந்தான் பாட்டியின் மடியில் கிடந்து கேட்பதைப்போல கிறக்கமானது.
8 comments:
காத்திருக்கிறேன்...அடுத்த பாகத்திற்கு...
அழகாக எழுதிரிக்கிங்க..
i remember u have written this earlier or similar type story. Husband or wife killed and was arrested.
எவ்வளவு வாசனை இந்த கதையில்.. ரசித்து ரசித்துப்படித்தேன்... தொடந்து எழுதுங்கள்...முச்சூடும் படித்துவிட்டுதான் மறுவேலை...
அழகு நடை காமு சார்.
தொடரும் போலத் தெரிகிறதே!தொடருங்கள்!
அருமை. வாழ்த்துக்கள்
அண்ணா அருமையான எழுத்து நடை....அடுத்த பாகத்தை ஆவலோட எதிர்பார்க்கிறேன்...!
Post a Comment