1.6.10

மூன்று பேருந்து பயணங்கள்.

பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்து நிறுத்தத்துக்கு வந்தவுடன் இன்னும் நெரிசல் அதிகமானது.நானும் மாதுவும் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு அருகே நின்றுகொண்டிருந்த அந்த இளைஞன் பேருந்து குலுங்காதவேளையிலும் கூட அருகிருந்த பெண்ணின் மீது உரசி உரசி திருட்டு சுகம் தேடினான். அவள் நெளிந்து விலகிப்போனாள்.அடுத்த நிறுத்தத்தில் இவனுக்காகக் கூட்டம் ஏறியது மீண்டும் அந்தப் பெண்ணருகில் போனான்.ஏறிய கூட்டத்தில் இன்னொரு பெண் ஏறவும் இன்னும் குஷியானான்.ஆர் ஆர் நகர் வந்ததும் கூட்டத்தில் பாதி இறங்கிப்போனது. இருக்கைகள் காலி ஆனது. உட்கார மன்சில்லாமல் இரண்டு பேர் இருக்கையில் அவன் மட்டும் தனித்து
உட்கார்ந்தான். நின்று கொண்டிருந்த பெண் பெருநகரில் வசிக்கிற பெண் போல இருக்கவேண்டும்.விகல்பமில்லாமல் அவனருகில் போய் உட்கார்ந்தாள்.

அந்த உரசல் பார்ட்டி சப்த நாடியும் ஒடுங்கிப்போய் ஜன்னல் பக்கமாக தனது உடலைச் சுருக்கிக் கொண்டே  போனான். அந்தச் சின்ன இருக்கையில் இப்போது இருவருக்குமிடையில் அரை அடி இடைவெளி இருந்தது.
உட்கார்ந்த மாத்திரத்தில் அந்தப்பெண் கண்ணை மூடிக்கொண்டு தூங்கிப் போனாள். சாத்தூர் வந்து இறங்கும்போது பார்த்தோம் அவன் ஜன்னல் கம்பிகளில் ஒன்றாக மாறிப்போனான்.

0

நேற்று நகரப்பேருந்துப் பயணத்தின்போது பின்னிருக்கையில் இரண்டு கிராமத்து மனிதர்கள் உரையாடிக்கொண்டுவந்தார்கள். ஒருவர் தன் பாடு பழமைகளைச்சொல்லிக்கொண்டு வந்தார்.அந்த பிரிண்டிங் பிரஸ்சில் ஒரு மனிநேரத்துக்கு பதினான்கு ரூபாய் சம்பளமாம்.ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் வேலைகிடைப்பதே பெருத்த உபகாரமாம். அதிக பட்சம் ஒரு நாளைக்கு எழுபது ரூபாய் சம்பாதிக்கும் அவர் அதுதான் அன்றாடம் கொழம்புச் செலவுக்கு என்று சொன்னார்.ஆனம்,வெஞ்சனம்,தொட்டுக்க,கடிச்சிக்கிட என்கிற பலபெயர்கொண்டு புழங்கும் சைடு டிஷ்.அப்படியானால் சாப்பாடு.ரேஷன் அரிசிதானாம்.'வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போது மட்டும் கடை அரிசி வாங்கிப் பொங்குவோம் அவர்கள் போனப்பிறகு வழக்கம்போல' என்று சொன்னார்.

இப்படி ஆரம்பித்த பேச்சு அரசியல் பக்கம்போனது ஒன்றியப் பெருந்தலைவர் மகள் கல்யாணத்துக்கு பத்தாயிரம்  பத்திரிகை அடித்தாராம் ஒரு பத்திரிகையின் விலைமட்டும் என்பத்தி இரண்டு ரூபாயாம். பூ வைக்கிற நாளன்னைக்கே மருமகனுக்கு ஒரு வெளிநாட்டுக்கார் வாங்கிக்கொண்டுவந்து நிறுத்திவிட்டாராம் தலைவர்.இதற்குள்,பேருந்து நகரம் தாண்டி  ராமசாமிநாயுடு ஞாபகார்த்தக்கல்லூரி நிறுத்தத்துக்கு வந்துவிட்டது.கல்லூரிப் பெண்கள் இறங்கிப்போனார்கள்.

'ஆமா ஓம்பொன்னு இந்த வருஷம் பதினொன்னு போகுதே என்ன செய்யப்போற' என்று இன்னொருவர் கேட்டார்.'ஆமா அவளுக்கும்,பயலுக்கும் சேர்த்து மூவாரம் ரூபாயாவது வேணும் என்ன செய்யப்போறேனோ தெர்ல'என்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கம் தலையைத் திருப்பிக்கொண்டார்.பின்னிருக்கை நெடுநேரம் உரையாடல் இல்லாமல் உறைந்து போயிருந்தது.தடதடக்கும் பேருந்து ஜன்னலின் சத்தம் உக்கிரமாகக் கேட்டபடியே இருந்தபோதும். அதன்பிறகான பேருந்து இறைச்சல் ஏதும் பெரிதாகத்தெரியவில்லை.

0

தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள ஒரு கிராமத்துக்கு 'இதுவேறு இதிகசம்' ஆவணப்பட ஒளிப்பதிவுக்காகப்போயிருந்தோம்.தொண்ணூறுகளில் நடந்த ஜாதிய மோதலில் பாதிக்கப்பட்ட பகுதியில் நடந்த பேட்டி அது.இன்னும் ஒரு
யுகத்துக்கு அந்தக் கிராமத்தோடே கூடவரும் பேரதிர்வுகள் நிறைந்த சம்பவம்.பேட்டி முடிந்து மதுரை திரும்புகிற போது அந்த பயங்கரத்தோடு தொடர்புடைய்ய இன்னொரு தகவலை ஒருதோழர் சொன்னார்.

கொலை நடந்த பேருந்தில் சகல பகுதி மக்களும் பயணம் செய்தார்கள் தாக்குதல் நடத்திய கும்பலின் குழுவைச்சேர்ந்த ஒரு பெண்ணும் அதில் பயணம்செய்தார்.அந்தக் கொடூரம் நடந்துகொண்டிருந்த போது பாதிக்கப்பட்ட பகுதியைச்சேர்ந்த ஒருவர் தப்பித்து ஓடிவந்து பயணிகளிடம் அடைக்கலம் கேட்டிருக்கிறார்.அப்போது அந்தப்பெண் அவரைத் தனது காலுக்கடியில் ஒடுங்கவைத்து சேலையால் மூடிக்கொண்டார்.

எமனிடமிருந்து உயிர்களை மீட்டிய கதைகளின் நம்பகத்தன்மைக்கு வலுச்சேர்க்கும் நிஜமான தீரமிது.ஒரு உயிரின் விலை என்ன என்பதை எமனை விடவும், கடவுளைவிடவும், எவனைவிடவும் துள்ளியமாகத் தெரிந்து வைத்திருப்பவள் தாய்.அந்த ஆதிப்பெருந்தாயும் அவராலே மறு ஜென்மமடைந்த மனிதனும் இன்னும் உயிரோடு இருப்பதாகவும் சொன்னார்.அவள் இருந்த திசைபார்த்துவிட்டு திரும்பிவந்தோம்.

15 comments:

vasu balaji said...

/ஒரு உயிரின் விலை என்ன என்பதை எமனை விடவும், கடவுளைவிடவும், எவனைவிடவும் துள்ளியமாகத் தெரிந்து வைத்திருப்பவள் தாய்.அந்த ஆதிப்பெருந்தாயும் அவராலே மறு ஜென்மமடைந்த மனிதனும் இன்னும் உயிரோடு இருப்பதாகவும் சொன்னார்.அவள் இருந்த திசைபார்த்துவிட்டு திரும்பிவந்தோம்/

இப்படியான மனிதர்கள் இருக்கும் இடத்தில்தான் நாமும் இருக்கிறோம். கோபுரம் பார்க்க கோடி புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ இப்படி தாயெனும் சொல்லுக்கு அர்த்தமாயிருப்பவர்களின் கால்தூசு போதும். கும்பாபிஷேகம் பார்த்துட்டு வந்தவங்களப் பார்த்தாலும் அதே புண்ணியம்னு சொல்லுவாங்க. உங்க எழுத்து அதைத் தரட்டும்.

இரண்டு நாட்களாக திணறிப் போச்சு பின்னூட்டமிட முடியாமல். பெண்மையை ஆராதிக்கும் இந்த இடுகையில் சொல்லிக்கிறேன் நிறைவாக. இரண்டு ஆண்டுகள் நிறைவுக்கு வாழ்த்து.

Lenin P said...

நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்,
www.narumugai.com

சஹஜமொழி said...

உலகம் அன்பால் ஆனது .
உங்கள் பதிவால் கண்கள் நிறைந்தன

நன்றி

அருட்செல்வம்

நேசமித்ரன் said...

பெண்மை போற்றுதும் !

அன்புடன் அருணா said...

இரண்டு ஆண்டுகள் நிறைவுக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

மூன்றிலும் வெவ்வேறு மன நிலையையும் மனித மனத்தின் ஆழ்ந்த வெளிப்பாடுகளையும் அழகாய் சொல்லிடீங்க அண்ணே....சிறப்பாய் வந்திருக்கு...வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு வாழ்த்துக்கள்.

கமலேஷ் said...

பயணங்கள் தொடருந்து விரிய வாழ்த்துக்கள்..

enothano said...

vanakam kamaraj anna. epadi erukinga. parthu nall achi. enuduya blog enothano.blolgspot.com. free eruntha parunga.

enothano said...

ïV\«V· ¶õ¼ð . ¨©Ã½ ÖòÂþºï.ÃVìÝm åVáVß·. cºï ¸áV ýݼ>[, å_éVlòÍ>m. ¨[Ðç¦B ¸áV ÃVòºï^ . ¨©Ã½ Ð ØÄV_Kºï.

hariharan said...

/// தாக்குதல் நடத்திய கும்பலின் குழுவைச்சேர்ந்த ஒரு பெண்ணும் அதில் பயணம்செய்தார்.அந்தக் கொடூரம் நடந்துகொண்டிருந்த போது பாதிக்கப்பட்ட பகுதியைச்சேர்ந்த ஒருவர் தப்பித்து ஓடிவந்து பயணிகளிடம் அடைக்கலம் கேட்டிருக்கிறார்.அப்போது அந்தப்பெண் அவரைத் தனது காலுக்கடியில் ஒடுங்கவைத்து சேலையால் மூடிக்கொண்டார்.///

காப்பாற்றப்பட்டவர் அப்பெண்ணை தாயென போற்றியிருப்பார். மறுஜென்மம் கொடுத்த சுய சாதிக்கொடூரர்களிடமிருந்து காப்பற்றியவர் நிச்சயம் வீரத்தாய் தான்!!

manjoorraja said...

முதல் பயணத்தை ஒரு நல்லக் கவிதையாக மாற்றலாம்.

இரண்டாம் பயணம் மிகுந்த கனம் ஏற்படுத்தியது.

மூன்றாவது பயணத்தின் நிகழ்வு நெகிழவைத்தது. அதில் கடைசி வரிகளில் துள்ளியமாக என எழுதியுள்ளீர்கள்.. துல்லியமாக என இருக்கவேண்டும்.

cheena (சீனா) said...

அன்பின் காமராஜ்

அருமையான பதிவு - மூன்று பல்வேறு வகையான நிகழ்வுகளை ஒன்று சேர்த்துப் பதிவாக்கியமை நன்று - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் காம்ராஜ்

வலைச்சரத்தில் இப்பதிவு அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது - அங்கிருந்து தான் இங்கு வந்தேன். படித்தேன் - இரசித்தேன் - மறுமொழி இட்டேன்

http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_29.html

3. அடர் கருப்பு – எஸ்.காமராஜ்

இருள் என்பது குறைந்த வெளிச்சம் என்று வெளிச்சமிக்க கருத்தோடு ஆரம்பிக்கும் வலைப்பூ, உலக சினிமாக்களின் விமர்சனங்களையும் பல செய்திகளையும் கொண்டதாக இருக்கிறது. குறிப்பாக, மூன்று பேருந்து பயணங்கள் என்ற பதிவில் இவர் சொல்லும் இறுதிப் பயணம் மனதை வெகு நேரம் கட்டிப் போடுகிறது. எதிர்பார்ப்புகள் அற்று கொடுப்பதை மட்டுமே நினைத்திருக்கும் அற்புதமான தாவரம் உங்களுக்கு தெரியுமா? அது பற்றி இவர் படைத்த கவிதை செடிக்குள் கிடக்கும் பனம்பழம் கவிதையின் மனம் நாசி வழி நெஞ்சம் நிறைக்கிறது.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

இரசிகை said...

arumai arumai

:)

vaazhthukal