அந்த அதிகாலை வேலையில் ஸ்டார் சிட்டி இருசக்கர வாகனத்தில் அவர் வந்து இறங்கினார். அந்த தேநீர்க்கடையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மேல் சட்டையைக் கழற்றி ஓரப்பெட்டியில் வைத்து மூடினார்.கைலிஒயை மடித்துக்கட்டிக்கொண்டு இடுப்பில் கொக்கியை சொருகிக்கொண்டு கிளம்பிப்போய் விட்டார்.அங்கே தேநீர் அருந்திக்கொண்டிருந்த சூட்டுப்போட்ட கனவான்களும், இன்னும்சிலரும் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள்.அவர் கடந்துபோனதை உறுதி செய்துவிட்டு இப்போது விமர்சனங்கள் வெளியேரின.
'பைக் இல்லாத கொத்தனார் ஊர்ல கிடையவே கிடையாதுங்க,ரொம்பத்தான் முன்னேறிட்டாய்ங்க'
'இது கூடப்பரவால்ல சார், நேத்து கக்கூஸ் கழுவ வந்தவன் பசக்குனு செல்போன எடுத்து பேசுறான்'
டீக்கடை நீதிமன்றம் தனது தீர்ப்புகளைச் சொல்லத்தொடங்கியது.
இப்படித்தான் நமது பொதுப்புத்தியில் பல அழுக்குகளும், சாக்கடைகளும் திட்டமிட்டுத் திணிக்கப் பட்டிருக்கிறது. காலங்காலமாக, ஆடை அணிகலன்கள், படிப்பு,ஞானம்,சௌகர்யம்,சுத்தம் எல்லாமே ஒரு சாராருக்குமட்டும். அதாவது சமூகத்தின் மேல்தட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருத்தமானது எனவும்மப்படியல்லாதவர்கள் அதை உபயோகிக்கிறபோது அவர்கள் ஒரு கேலிப் பொருளாகச் சித்தரிக்கப்படுவதுதான் இங்கிருக்கிற கொடுமை.
முழுக்கால் சாராய் என்பது ஆங்கிலேயர்களின் ஆடைவகை.அதை அணிவதற்குத் தகுதியானவர்கள் முதலில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இன்னபிற மக்கள் என்பதை காலங்காலமாகச் சினிமாக்கள் நமது பொதுப்புத்தியில் ஏற்றிவைத்துவிட்டது அதனால்தான் ஞண்ணாச்சி பாரதிராஜா கூட சப்பாணி சூட்டுப்போட்ட காட்சியை மிகப்பெரிய விகடக்காட்சியாகச் சித்தரிப்பார். பூ படத்தில் சசிக்குமார் ஒரு ஆட்டுக்காரச்சிறுவன் கைப்பேசி உபயோகிப்பதை உலகமகா சிரிப்பாணியாக்குவார். இதற்கு இவர்கள் டூயட்டில்,சண்டைக்காட்சியில்கூட சமரசம் ஆகிவிட்டுப்போயிருக்கலாம்.
கழிப்பறை சுத்தம்செய்ய வருகிற பெண்கள் குடைப்பிடித்துக்கொண்டு வருவது போலவும்,பிச்சைக்காரர்கள் வங்கிக்கணக்கு வைத்திருக்கிற மாதிரியும் சித்தரித்துக் கிச்சணங் காட்டுவதுதான் திரைத்துறையின் சிரிப்புக் கிட்டங்கியில் கிடக்கும் நாற்றம் பிடித்த சிந்தனைகள்.ராசாவீட்டு நாய் சிம்மாசனத்தில் ஏறலாம்,சலவைக்காரர்வீட்டு நாய் வெள்ளாவிப்பானையில் ஏறலாமா என்கிற பழமொழிகளை அப்படியே கணினி யுகத்துக்கு உருமாற்றம் செய்கிறதிந்த பிரபல திரைப்படங்கள்.
எளியவர்களை நசுக்கவும், வலியோருக்கு ரத்தினக்கம்பளம் விரிப்பதும்தான் காலங்காலமாக பிழைப்பு நடத்தும் தொழில் நுட்பமாகக் கருதப்படுகிறது.அல்லது தர்மமாக ஓதப்படுகிறது.அதைத்தான் கலை உலகம் தனக்கிட்டபணியாக தலைச்சுமையாய் விற்றுவருகிறது.
பெப்சி குளிர்பாணத்தில் நச்சுத்தனமியிருக்கிறதென்னும் விவாதம் சூடேறிக்கொண்டிருந்த காலத்தில் தான் சிந்தனைச் செல்வி ராதிகாவும்,விவேக்கும் பெப்சி,கோக் குளிர்பாணங்களின் சரிவுக்கு முட்டுக்கட்டையக தாங்கி நின்றார்கள்.ஐஎஸ்ஐ,ஐஎம்ஏ,போன்றவற்றோடு போட்டிபோட்டுக் கொண்டு அவர்களுக்குத் தரச்சான்றிதழ் வழங்கினார்கள்.
ஒருபாட்டில் தண்ணீர் பதினைந்து ரூபாய்க்கு விலைபோகிற அவலத்தைச்சொல்லுவதற்கும்,பத்துரூபாய்க்கு ஃபேர்அண்ட் லவ்லி களிம்பு வாங்கித்தடவினால் கருப்பு மாறிச் சிகப்பாகிவிடலாம் என்கிற பித்தலாட்டத்தை விமர்சனம் செய்வதற்கும் தில்லில்லாத சிங்கங்கள்
ஓங்கி ஒரு அடி அடிச்சா ஒன்னர டன் வெயிட்டுறா என்று ஊளை விடும்.
ஒரு ஆடை, ஒரு வாகனம், ஒரு அலைபேசி உபயோகப்படுத்துவதில் கூட ஒவ்வாமையை ஒளித்துவைத்திருக்கும் சமூகம் எப்படி நீதியை ஒரே தட்டில் வைத்து வழங்கும் ?
பழனிக்குபாத யாத்திரை போகிறமாதிரி போபால் விஷவாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணூறு கிலோ மீட்டர் கத்திக்கொண்டே டெல்லிக்கு வருடா வருடம் போவது ஊடகங்களின் தப்பித்தவறிக் கூட காண்பிக்கப் படவேயில்லை. எண்பதுகளின் இறுதியில் துவங்கிய வழக்கு தீர்ப்பாக இரண்டு தலைமுறை தாண்டிவிட்டது.ஆனாலும் யூனியன் கார்பைடிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை இன்னும் படிந்துகிடக்கிறது. அதைவிடக் குரூரமாக ஆட்சியாளர்களின் பாரபட்சம் நீதித்துறையில் படிந்து கிடக்கிறது. அது குறித்த ஸ்மரணை இல்லாமல் 27 வருடங்கள் கழிந்துபோய்விட்டது.எங்காவது உரிமை கேட்டுப்போராட்டம் நடத்தினால் அரசு பிருஷ்டத்தில் ஒளித்து வைத்திருக்கும் தனது இரும்புக்கரத்தை எடுத்து அப்பாவி மக்களை அடக்குகிறது.ஆண்டர்சன் விவகாரத்தில் அதே இரும்புகரம் உருகி சாக்கடையாய் ஓடுகிறது.
மும்பை தாஜ் ஒய்யார விடுதி தீவிரவாதத் தாக்குதல் நடந்து இரண்டுவருடங்கள் முடியவில்லை அதற்கான தீர்ப்பு சமீபித்து விட்டது. உயிர்ச் சேதக் கணக்குப்படிப் பார்த்தால் போபாலில் நடந்தது மும்பைத் தாக்குதலைக் காட்டிலும் 200 மடங்கு தீவிரமானது. அது ஒரு இனப்படுகொலை. அந்த வீரமும் விவேகமும் எட்டாயிரம் உயிர்களை ஒரே இரவில் பலிகொண்ட போபால் விவகாரத்தில் ஏன் காட்டமுடியாமல் போனது ?. நீதித்துறையின் கைககளைக் கட்டிப் போட்டது எது ?. எனில் ஒரே வகையான நீதி வழங்க முடியாமல் போன அது, அழங்கரிக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து என்பதே தகும்.
ஆமாம் நண்பர்களே எதாவது ஒரு சினிமாப்படத்தில் ஒரு கணம் கடந்து போக்கும் காட்சியாக அல்லது ஒரு வரி வசனமாக இடம்பெற்றிருக்கிறதா எனத் தெரியவில்லை. அதனால் தான் இது வரை 23 ஆயிரம் உயிர்களைப் பலிகொண்ட ஆண்டர்சன் இந்தியர்களைப் பார்த்துக் கெக்கலிட்டுச் சிரிக்கிறான்.நரகாசுரக் குரலில் பகடி செய்கிறான். நாம் இன்னும் டீக்கடைப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு,'அங்கபார்றா அவன பேண்ட் போட்டுக்கிட்டு போறான்' என்றும் நமது கலாச்சார ஊடகம் 'அடடா நீங்களும் சங்கம் வச்சீட்டிங்களாடா' என்றும் கீழ்தட்டு மக்களைப்பகடி செய்வதிலேயே தனது சக்தியை விரயம் செய்துவிட்டு. நாங்க பிலிய சொலகால அடிச்சு வெரட்னோமில்ல என்று பீத்திக் கொள்கிறவர்களாகிவிட்டோம்.
13 comments:
பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்....
உலகம் பெருசு காமராஜ் சார்... இவனுங்க இங்க இருக்கவங்கள... நாய் மாதிரி மதிச்சா...இவனுங்கள வெளிநாட்டுல நாய் மாதிரி மதிக்கிறங்க...அவ்வளவு தான் வித்தியாசம்... உண்மையா மக்களுக்கு உழைக்கனும்னு நினைகிரவங்க...இன்னைய தேதிக்கு ஒரு வோட்டு கூட வாங்கமட்டாங்க... தேர்தல நின்னா...
கிறங்க வைக்கும் எழுத்துக்கள் சாமி, அற்புதமான பதிவு.
இயக்குனர்களின் பார்வை குறித்த எழுத்துக்கள் மிக அருமை.
இன்றும் அரசியல் கட்சிகள் இந்த நஷ்ட ஈடு விஷயத்தால் எவ்வளவு வோட்டு பெறுவோம் இழப்போம் என்ற பார்வையிலேயே உள்ளது.
இதே போலவே தொலைக்காட்சி ஊடகங்களும் தங்கள் டி ஆர் பி ரதிங்கை கூட்டவே இந்த விஷத்தை பயன் படுத்து கின்றன.
அலங்கரிக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து
:(((
பார்த்திபன் - வடிவேலு (வெற்றிக்கொடி கட்டு ) கூட கொஞ்சம் இந்த வகையை சேர்ந்ததே..மற்றபடி உடல் திறன் பெற்றவர்கள் பிச்சை எடுப்பதை பகடி செய்வது தவறில்லை என்றே கருதுகிறேன் ..
சாட்டையடி, நெத்தியடி
சிந்திக்கவைக்கிறது.
காமெடி (என்று) காட்சிகள் பொதுபுத்தியில் இருந்தால்தான் ரசிப்புக்கு உள்ளாகும்.
நல்ல இடுகை. போபால் விசயத்தில் எங்கே போனது இந்த ஊடகங்கள்?
:(
அந்நிய ஆட்சியின் போது, நம்மில் விதைக்கப்பட்ட மெக்கலின் விஷம்.
நமது கலாச்சார்த்தை இழிவானதென போதித்து,
அவர்களதை உயர்த்தி பிடித்தது. முன்னூறு ஆண்டுகளாய்
அடிமைகளாய் கிடந்ததால் வந்தது இந்த இழிவு.
அவர்களின் மொழி, உடை, கலாச்சாரங்கள் மீது அதீத மரியாதை
அவர்களது எல்லாம் அறிவானது, நம் கடவுள், மொழி, உடை
நடையெல்லாம் கலிசடையானது என்ற தாழ்வு மனப்பான்மையை
திட்டமிட்டு திணித்தனர்.நாம் அவர்களை கடவுளாய் வணங்கிக்
கொண்டேயிருக்க சில உயர்சாதியின்ர் தரகர்காளாவும் இருந்தனர்.
அந்த இயல்பு அப்படியே படிந்து நமது பழக்கமாகவே ஊறி,
குட்டக்குட்ட குனிந்து, அதிகாரத்திற்கு அடிமைகளாக்கி விட்டது.
பிரித்தாளும் அவர்களது மந்திரக்கோல் கை மாறி,
இன்னும் அரசாங்கத்திடம் தானே இருக்கிறது.
நாமும் வாடும் பயிர்களை மிதித்து கடந்து, விருட்சங்களின்
பணப் பழத்துக்கும், அதிகார நிழல்களுக்கும் தானோ ஓடுகிறோம்.
பயிர்களுக்காய் வாடுபவன், வயிறும் வாடிக் கொண்டே.
அதிகார தண்ணீர் இயல்பு மாறி, கீழ் மட்டத்து கீரைக்குப் பாயாமல்
மேல் மட்ட குரோட்டன்சுகளுக்கு பாய்கிறது.
ஏழை சொல் மட்டுமல்ல, ஏழை பற்றிய சொல்லும் அம்பரம் ஏறாது
“அறியாமையே பலருக்கு அமைதியைத் தந்து விடுகிறது, அறிவு பெற்று சிந்திப்பவர்களே கவலைப்படுகிறார்கள்” என்று ஒரு எழுத்தாளர் கூறினார். அதைப்போல் இன்று ஊடகங்கள் மக்களை களியாட்டங்களிலும், நெடுந்தொடர்களிலும் அழுத்தி வைத்துள்ளது. எப்போது இந்த மக்களுக்கு விழிப்பு வரும் புலம்புவதை நிறுத்திவிட்டு சமூக அக்கறை கொள்வார்கள் என்று நினைத்தால் மனது வலிக்கிறது.
அழுத்தமான வார்த்தைக் கோர்வைகள்.
மிக அருமையான பதிவு. எப்படி சாத்தூர் மக்கள் இப்படி மனதை அப்பிடியே படம் பிடித்து எழுதுகிறீர்கள். நிறைய எழதுங்கள் நண்பரே!
ஜாதீய வேறுபாடினால் மற்றவர் மனம் புண்படுவதை பார்க்கும் போது நெஞ்சு பதைக்கிறது. நேற்று கூட நண்பரிடம் இருந்து அறிய நேர்ந்த போது மிக வருத்தமாக இருந்தது. இது முற்றிலும் களையப்பட வேண்டும்
///////நீதித்துறையின் கைககளைக் கட்டிப் போட்டது எது ?. எனில் ஒரே வகையான நீதி வழங்க முடியாமல் போன அது, அழங்கரிக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து என்பதே தகும்.
/////
அழங்கரிக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து இல்லை நண்பரே.
இன்று நீதித்துறையின் கடிவாளம் சில அதிகார வர்க்கத்தின் கைகளால் இறுக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது .
setthadhu saatharana ezhaikal thane kavalaipada neethimandramum thayarillai- meerapriyan
பளீர் பளீர்னு அறையுதுங்க...
Post a Comment