மொட்டை வெயிலில் ஒற்றை வேப்பமரத்து நிழலில் கைலியைத் திரைத்துக்கொண்டு உட்கார்ந்து,தலைத்துண்டை அவிழ்த்து மடியில் வைத்துவிட்டு இருக்கிற தண்ணீரில் கை அலம்பிக்கொண்டு( டெட்டால் போட்டு கழுவிக்கொண்டல்ல)தூக்குவாளியின் மூடி திறக்கிற நேரம்.ஒரு உழைப்பாளிக்கு உலகத்தின் அத்துணை உன்னதங்களும் பின்னுக்குப் போய்விடும்.அந்த புளிச்ச கஞ்சி,வறுத்த வத்தல் டால்டா போட்டு,சாயம் பூசி,சாப்பாடு என்ற பெயரில் பரிமாறப்படுகிற ஒப்பணைகளை ஊதித்தள்ளும்.பசி ருசியறியாது.அதே உழைப்பாளியின் ஞாயிற்றுக்கிழமை முன்மதியம் வீட்டிலிருந்து வெளிக்கிளம்புகிற தாளிப்பு வாசனையில்
கிறங்கிப்போய் பசியின் அளவுகூட்டும்.அத்தியாவசியத்துக்கும் ஆடம்பரத்துக்குமான இடைவெளி மிகப் பெரியது அது பழய்ய கஞ்சிக்கும்,பீட்சாவுக்குமான காத தூர இடைவெளி.
வாழ்வில் ஒப்பனைகளுக்கான இடம் விரிந்துகொண்டே போகிறதுப்போல பிரம்மாண்டப்படுத்தப்படுகிறது தொலைக்காட்சியில்.அப்படியொரு பிரம்மாண்டம் தான் விஜய் அவார்ட்ஸ்.ஒருமணி நேரத்துக்குமேலே காட்டப்படுகிறது விருதுக்கான முன் தயாரிப்புகள்.விழா மேடையின் டாம்பீகம்.அங்கே வந்து ஆடப்போகும் தமிழறியாப்பெண்டிரின் எக்சைட்மெண்ட்,வந்து நிற்கும் வெளிநட்டுக்கார்கள் அதிலிருந்து இறங்கும் பரம்பரை நடிகர்கள்.அரைகுறை ஆடையில் வந்த ஒரு நடிகைக்கு ஆன் த ஸ்பாட் வார்த்தை விருதுகொடுக்கிற தத்துபித்து அறிவிப்பாளினி. இவைகளையெல்லாம் பார்க்கிற சாதாரண ஜனங்களுக்கு சினிமா மீது பிரம்மை மட்டுமே ஏற்படுத்துகிற துள்ளியமான ஏற்பாடு இது.
அப்படியிருந்த சினிமாவை தரையில் இறக்கிவிட்டது எண்பதுகளின் சினிமா முயற்சி. சற்று ஓய்ந்து மீண்டும் வேதாளம் ஏறிய முருங்கையாய் இன்னும் நீடிக்கிறது சினிமா.அந்த செல்லுலாய்ட் உற்பத்தி நிறுவனம் சாமன்யர்களை அண்டவிடாது அகழி பாய்ச்சி வைத்திருக்கிறது.அந்த அகழியை தாண்டி வந்து ஜெயிக்கிறது சமீபத்திய புது வரவுகள், சுப்ரமணியபுரம், பருத்திவீரன், ரேணிகுண்டா,நாடோ டிகள்,பசங்க, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள்.இவையாவும் அதன் கதைகளால் அறியப்பட்ட படங்கள்.அவற்றில் மருந்துக்கும் நட்சத்திர அந்தஸ்து உள்ள எவரும் முன்னிறுத்தப்படவில்லை என்பது நம்பிக்கையளிக்கிற விஷயங்கள்.2009 ஆம் ஆண்டு வெளிவந்த 132 படங்களில் பெருவாரியான பரிசுகளை ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே தட்டிச்செல்லமுடியும் என்பது கொண்டாடப்படவேண்டிய அதே நேரம் வேதனைக்குறிய விஷயம். வலுவானதாக கதைகளைத் தேடுவதில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.சினிமா உலகம் சற்று நிதானமாகச் சிந்திக்கவேண்டிய விஷயம் இது.
அகலிகைக்கு கிடைத்தது சாப விமோசனமில்லை.ஒரு அங்கீகாரம். அவள் கல்லிலிருந்து மனுஷியானாளோ இல்லையோ. கவனிக்கப்பட்டாள்.அதுதான் பசங்க பட நாயகன் சொன்னதுபோல ஒரு சின்ன அங்கீகாரத்துக்காக normal மனிதர்கள் ஏங்குகிற போது.மாற்றுத்திறனாளிகள் இன்னும் சற்று அதிகமாகவே ஏங்குவார்கள்.அவர்களை அங்கிக்கரிக்கிறபோது அரங்கில் ஒலித்த அபிநாயவின் அந்த உற்சாகக்குரல் கவனிக்கப்படாத எல்லோரிடத் திலிருந்தும் வெளியேறும்.நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா பரிசு வாங்கிய தருணங்கள் ஒரு அழகிய திரைக்காவியத்தை நெருங்கும் நிகழ்வுகள்.நாம் அறியாமலே கண்கள் கலங்குகிறது.அந்த நிகழ்வில் கோபிநாத் நடந்துகொண்டதும் கவனிக்கத்தக்கதும், கதிர் சொன்னதுபோல கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
10 comments:
இன்னும் கூட எழுத இருக்கிறது போல தோன்றுகிறது காமு சார்
கடைசி வரிகளுக்கு சல்யூட்
படம், காட்சியை விட உங்கள் விமர்சனம் தான் தூள் கிளப்புகிறது. வெரி குட்.
டிவி, சினிமா வில் நிறைய எதிர்பார்ப்பது தேவை தானோ என்று தோன்றுகிறது. அதே சமயம் அதன் தாக்கத்தையும் அறிய முடிகிறது.
முதல் பந்தியில நிலைச்சு நின்னு போச்சு மனசு. பிடிச்சிழுத்து கடைசியில வந்த விட்டேனா பாருன்னு புடுங்கி வச்சிட்டீங்க. சுகிக்கட்டும். விட்டுப்போறேன். என்ன இப்ப:)
Erode கதிரின் பதிவை படித்தபோதுதான் அபிநயா பற்றிய மட்டரகமான கேள்வியை பற்றி உணர்ந்தேன். என்ன கேவலமான மனிதர்கள்! சமீபத்தில் பாடகர் மனோவின் programme இல் ஒரு பழைய பாடகரை ஆவலுடன் ஆட்டத்துடன் அவர் பாடிய ‘ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை ’ பாடலுடன் வரவேற்ப்பார். அந்த பெரிய மனிதர் வந்தவுடன் ‘இங்கு ஏதோ ஒரு குட்டி யானை ஆடிய மாதிரி இருந்தது ’ என்பார் . என்ன ரசனையோ!
ஒவ்வொரு வரிளையும் சும்மா அப்டியே மணசு லைச்சு போகுதுனே...கோபிநாத்தை பகிங்கரமா கண்டிக்கப்படவேண்டும் அண்ணே...ரசனையான அருமையான பகிர்வு நன்றி...
உயர்ந்த இடத்திற்கு வரும் போது...சற்று கவனித்து பேச வேண்டும்...கோபிநாத் விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளை அழகு தமிழில் நன்கு நடத்துகிறார்...ஆனால் அவருக்கு கண்டிப்பாய் நாம் உணர்த்தவேண்டும் அவர் செய்த தவறை...
நான் பல இடங்களில் உங்களோடு முரண் படுகிறேன்.
அபிநயாவிற்கு விருது என் பார்வையில், ஒரு அனுதாபத்தால் மட்டுமே கிடைத்து உள்ளது. அவர் ஒரு மாற்று திறனாளி என்ற ஒரே காரணத்தால் தான் கிடைத்து உள்ளது.
என் பார்வையில் அபிநயாவின் நடிப்பு அர்ச்சனா, ராதா, ரேவதி போன்றோரின் நடிப்பில் இருந்து வெகு வெகு தொலைவில் உள்ளது.
ராதாவின் நடிப்பை அலைகள் ஓய்வதில்லை யில் பார்த்து இருக்கிறீர்களா, கைதியின் டைரியில் பார்த்து இருக்கிறீர்களா.
அதே போல உன்னை போல் ஒருவனில் நடித்த கமல், மோகன்லாலை காட்டிலும் விஜயின் வேட்டைக்காரன் நடிப்பு சிறந்தது என்று மக்கள் தீர்ப்பு வந்தது வருத்தமாகத்தான் உள்ளது.
ஒரு காலத்தில் இப்படிதான் புது வசந்தம் விகரமனை, புதிய பாதை பார்த்திபனை, ஞாபகம் வருதே சேரனை , அளவுக்கு அதிகமாக நாம் புகழ்ந்து கீழே தள்ளி விட்டோம், அதே நிலைமை சமுத்ர கனிக்கும், சசி குமாருக்கும் வந்து விட கூடாது என்பது தான் என் கவலை
.
//சுப்ரமணியபுரம், பருத்திவீரன், ரேணிகுண்டா,நாடோ டிகள்,பசங்க, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள்.இவையாவும் அதன் கதைகளால் அறியப்பட்ட படங்கள்.அவற்றில் மருந்துக்கும் நட்சத்திர அந்தஸ்து உள்ள எவரும் முன்னிறுத்தப்படவில்லை என்பது நம்பிக்கையளிக்கிற விஷயங்கள்.//
நிச்சயமாக. நல்ல பதிவு அங்கிள்.
//நாம் அறியாமலே கண்கள் கலங்குகிறது.//
கலங்கியது... அதுவும் சமுத்திரக்கனி பேசும் போது
/அது பழய்ய கஞ்சிக்கும்,பீட்சாவுக்குமான காத தூர இடைவெளி/
புரிகிறது.
Post a Comment