24.11.10

உலகமாதா எண் 2.

கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் முந்தி அறிவியல் இளங்கலை படித்துக்கொண்டிருந்தான்.ஒல்லியான ஒசரமானஉருவம்.கொஞ்சம் இலக்கிய ஆர்வம்,வெகு தீவிரமான பேச்சாளி.வழக்காடு மன்றங்களில் தனக்கு பிடித்த தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு அப்படியே அரசியல்வாதி மாதிரி உச்சஸ்தாயியில் பேசுவான்.அப்போதெல்லாம் கிலோக்கணக்கில் அவனுக்கு லந்து கொடுப்பேன்.அப்போது எனது நண்பன் முருகையா ஒரு புரட்சிகரப் பேச்சாளன் அவனோடு எல்லா இடங்களுக்கும் போவேன்.நான் நல்லாப் பாடுவேன் என்று அறிமுகம் செய்து பாட்டுப் போட்டியில் பேரும் கொடுத்து தள்ளிவிட்டு விடுவான்.மேடையில் எனக்கு முன்னாடிப் பாடியவர்கள் கொஞ்சம் முறைப்படி சங்கீதம் கற்றவகளாக வந்து ஒரு போடு போட்டு விட்டுப்  போனப் பிறகு, எனது சிவாஜி பாடல்கள் கரகரத்துவிடும்.

வேலை கிடைத்து ஒரு பகல் முழுக்க பயணம் செய்து கிளைக்குள் நுழையும் போது பெரிய அதிர்ச்சி காந்த்திருந்தது. அங்கே அவன் உட்கார்ந்திருந்தான். இரண்டு நாட்கள் என்னோடு தங்கி ரூம் பார்த்து விட்டு விட்டுப் போக வேண்டு மென்று வந்திருந்தார் எனது சித்தப்பா. ஆனால் அவன் இருக்கும் நிம்மதியில் சாயங்காலமே கிளம்பிவிட்டார்.அந்த வாலிபக் காலத்தில் பீறிட்டுக் கிளம்பிய உற்சாகம்,பெண்களைப் பார்க்கிறபோது ஏற்படுகிற குறு குறுப்பு,அந்யாயத்தைக் கண்டு வெடிக்கிற கோபம் இவற்றில் என்னோடு கூடவந்த தோழன் அவன். ஒருவருக்கொருவர் தோற்றுப்போன காதலைச் சொல்லி இறுக்கமானோம். பின்னர் குடும்பப் பின்னணியைச் சொல்லி இன்னும் நெருக்கமானோம்.அவன் குடும்பக் கதை சொல்லும்போது எனது வறுமை ரொம்பச் சிறியதாகத் தெரிந்தது.ஒரே ஒரு மாணாவரிக்காடு, மூன்று குழந்தைகள்,புகைப்படத்தில் கணவன் இவற்றோடு தன்னந்தனியே வாழ்வை எதிர்கொண்ட தாயின் பிம்பம் அரிச்சலாக இருந்தது.மாற்றலாகி ஊருக்கு வந்த சிலமாதங்களில் அவன் வீட்டுக்குப்போனேன். நானே வரைந்து கொண்ட தாயின் சித்திரம்  நேரில் பார்க்கும்போது கலைந்து நடக்கும் அமைதிக்கடல் மாதிரி இருந்தார்.

அப்புறம், எப்போது வீட்டுக்குப் போனாலும் அடுப்படியில், துவைகல்லில், முற்றத்தில் காயப்போட்ட கோதுமை இப்படித் தான் வெளிப்படுவார்கள். பர்த்ததும் சோபையாய் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு 'றாய்ய,டீ தாஹு' என்று சொல்லுவார்கள். உடலும், மனசும்,உடையும் வெண்மையான அந்தத்தாய். அவனுக்கு தெலுங்கு தெரியாது என்று சொன்னப்பிறகு அதைப் பொருட் படுத்தாமல் தமிழுக்கு மாறிவிடுவார்கள்.தேநீர் தானே வரப்போகிறது என்று பேசாமல்லிருந்தால்,கேட்காமலே சாப்பாடு போட்டு வைத்துவிடும் தாயுள்ளம் அவர்களுக்கு.ஒரு மாத இடைவெளியில் மீண்டும் வீட்டுக்குப் போகும்போது மறக்காமல் 'றாய்யா,கூச்சுண்டு' என்று சொல்லுவார்கள்.நான் சில நேரம் வலுக்கட்டாயமாகத் தமிழில் பேசுவேன்.ஆனால் பல நேரங்களில் எனக்குத் தெரிந்த தெலுங்கில் பதில்பேசிவிடுவேன்.

தன் மகனோடு நெருக்கமாகப் பழகுகிறவர்கள் தன் சுயஜாதிக்காரர்களாக மட்டுமே இருக்க முடியும் என்கிற நம்பிக்கை.அது ஒரு மாணாவாரிக் குடும்பத்தின் சொச்சம் என்கிற விமர்சனம் எனக்குள் இருந்தது.கொஞ்சம் நிதானமாக யோசித்தால் அது இந்த சமூக அழுக்கின் மிச்சம் என்பதை உணரலாம்.வீடு குழந்தைகள் வறுமை.காடு,பாடு,பற்றாக்குறை இதற்குள்ளிருந்தே மீளமுடியாத பெண்ணை வீட்டுக்குள்ளிருந்து கூட கைதுக்கிவிட முன் முயற்சி எடுக்காத சொந்த ஆதிக்கம்.அதைக் கலாச்சாரத்தின் பெயரால் சகித்துப்போகிற பெண்கள் பெரும்பாண்மை வகிக்கும் சமூகம்.ஒவ்வொரு ஊரிலும் கூட்டமாக  ஒரு ஜாதியை ஒதுக்கி வைத்திருப்பது மேக்ரோ ஆதிக்கம்.அது போல ஒவ்வொரு வீட்டு அடுப்படியிலும் ஒதுக்கி வைத்திருப்பது மைக்ரோ ஏற்பாடு. இந்த ரெண்டையும் எதிர்த்து குரல் எழுப்பியவர்களை ரொம்பச் சுளுவாக நாத்திகர்கள் என்று ஒதுக்கிவிவைத்து விட்டது எவ்வளவு பெரிய கொடுமை.

இதைப்புரிந்து கொள்ளும்போது அந்த வெள்ளை உள்ளம் கொண்ட தாய் என் மதிப்பில் வெகுவக உயர்ந்தார்.நான் அவரோடு  தெலுங்கு மட்டுமே பேசுவது என்கிற முடிவெடுத்தேன். எனது வக்கபுலேரியில் மேலும் அதிக தெலுங்கு வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டேன்.அடுத்த முறை போகும்போது அவர்கள் இல்லை.கடைக்குப்போயிருந்தார்கள். வந்ததும்  'எப்பய்யா வந்தே, அண்ணன் ஊருக்கு போயிருக்கான்,வீட்டுக்காரியையும் பேரனையும் கூட்டிட்டு வரலாமில்லய்யா' என்றார்கள். ஏதேதோ இற்று இடிந்து விழும் சத்தம் கேட்டது.நான் குனிந்திருந்தேன்.நீட்டிய கையில் வரக்காப்பி இருந்தது. ஆனால் பால் வாடை அதிகமாக அடித்தது.

20 comments:

செ.சரவணக்குமார் said...

காலை 7 மணி.. வாட்டியெடுக்கும் குளிர்.. அத்தனை இதமாக இருந்தது அந்த அன்னையின் அன்பின் கதகதப்பு. இந்தக் காலையை இப்படி ஒரு கதையோடு தொடங்குவதும் ஒரு கொடுப்பினைதான்.

நன்றி காமு அண்ணா.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மாக்ஸிம் கார்க்கியின் தாய்க்கும் உங்களின் தாய்க்கும் அடிநாதம் ஒன்றுதான் காமராஜ்.நெகிழ்ச்சியும் சுவாரஸ்யமும் தெளித்த இடுகை.

//மேடையில் எனக்கு முன்னாடிப் பாடியவர்கள் கொஞ்சம் முறைப்படி சங்கீதம் கற்றவகளாக வந்து ஒரு போடு போட்டு விட்டுப் போனப் பிறகு, எனது சிவாஜி பாடல்கள் கரகரத்துவிடும்.//

வாழ்வின் எல்லா மேடைகளிலும் என் அனுபவமும் இதுதான் காமராஜ்.

நிறையவும் நிறைவாகவும் எழுதுகிறீர்கள்.பெருமையாக இருக்கிறது.

Unknown said...

என்னோடு படித்த நண்பனின் தாயார் வைக்கும் கோழி குழம்புக்கும் , நண்டு வறுவலுக்கும் நான் அடிமை, சாப்பிட்டு முடித்ததும் , என் வீட்டில் மட்டும் சொல்லிட வேண்டாம் என உறுதி வாங்குவார்கள், ரொம்ப நாளைக்குப்புறம் ஒருநாள் என் அம்மாவிடம் சொல்லிவிட்டேன், அம்மாவோ உனக்கு புடிக்குது சாப்பிடுகிறாய் இதில் ஜாதி எங்கேருந்து வந்தது, ஹோட்டலுக்குப்போனா யாரு சமச்சதுன்னு கேட்டுட்டா சாப்பிடுறோம் என்றார். இரண்டு தாய்களுமே எனக்கு உயர்வாகத் தெரிந்தனர்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நிண்ட அந்தங்கா உந்தி... பாக உந்தி... என்று பல்வேறு தெலுங்கில் பேசினாலும்... ஒரே அர்த்தம்... ரொம்ப நல்லாயிருந்தது. வழக்கம் போல் நடை ஒழுக்கு... அழகான சொற்கள்... இதமாய் கோர்த்த விதம் என்று எல்லாவிதத்திலும் அழகு... காமராஜ்... ச.தமிழ்ச்செல்வன், வண்ணதாசன் குறித்த ஒரு பதிவில்... எழுத்தில என்ன முற்போக்கு, பிற்போக்கு... அது வாசிக்கிறவனுக்கு ஏற்படுத்துகிற மாற்றங்கள் நல்ல விதமா இருந்தா அது போதும் என்கிற தொனியில் எழுதியிருக்கிறார்... அது மாதிரி தான் இருக்கிறது இது போன்ற பதிவுகளும்... எத்தனை அம்மாக்கள், ஒரே தாய் தானே எல்லோரும், தாய் என்பது ஒரு தண்மை தானே எப்போதும்...

ராய்யா கூச்சு... டீ... தாஹூ... உபசரிக்கிற வார்த்தை எல்லாமே ஒன்னுதானே காமராஜ்... அது எந்த பாஷையாய் இருந்தா என்ன... நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் போயி, என்னோட தெருவுக்குள்ள இன்றைக்குவரை நுழையும் போது... என்னை பார்த்ததும் தலையை நீட்டி... ஊடுதான் ஒச்சேவா... என்று கொச்சைத் தெலுங்கில் அல்லது தெலுங்கு என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பாஷையில் குசலம் விசாரிப்பவர்கள் எத்தனை பேர்...அத்தனை பேருக்கும் ஒரே பதில்... அவ்வூ... நச உண்டேரா... என்ற பதிலில்... எல்லாவற்றையும் கைபற்றி உச்சி மோந்த சந்தோஷம் வந்துவிடும்...புதிதாய் என்னுடன் யாராவது இருந்தால்.. வீரு எவுரு... என்று அதே தொனியில் விசாரிப்பதை... எப்படி தவறென்று கொள்ள முடியும்... காமராஜ்... ” தன் மகனோடு நெருக்கமாகப் பழகுகிறவர்கள் தன் சுயஜாதிக்காரர்களாக மட்டுமே இருக்க முடியும் என்கிற நம்பிக்கை.அது ஒரு மாணாவாரிக் குடும்பத்தின் சொச்சம் என்கிற விமர்சனம் எனக்குள் இருந்தது.கொஞ்சம் நிதானமாக யோசித்தால் அது இந்த சமூக அழுக்கின் மிச்சம் என்பதை உணரலாம்.” இந்த பத்தி எனக்கு ஒப்புமை இல்லை காமராஜ்... எங்கள் வீடும் (அம்மா, அப்பா) தெலுங்கு தான் பேசும்... இதில் பேசப்படும் பாஷையே வேறு... இதில் இருக்கும் பிரியம், உபசரிப்பு, வாஞ்சையும், வெம்மையும் தான் பாஷை... தெலுங்கு அல்ல... தெலுங்கு பேசுவது... யாவரும் கேளிர் என்பதால் இருக்கலாம்... அல்லது ஒரு வசதி... வீட்டுக்கு வருபவர்கள் எல்லோருமே உறவென்று கொள்வதில் என்ன தவறு... இதில் சுயஜாதி... சமூக அழுக்கின் மிச்சம் என்பதெல்லாம் வேண்டாமோ என்று தோன்றுகிறது... ”'எப்பய்யா வந்தே, அண்ணன் ஊருக்கு போயிருக்கான்,வீட்டுக்காரியையும் பேரனையும் கூட்டிட்டு வரலாமில்லய்யா' “ எனக்கு இதற்கும் முந்தைய உபசரிப்புக்கும் வித்யாசம் தெரியவில்லை...

வேற்று பாஷை பேசும் ஊரில் இறங்கியவுடன்... அங்கு இருக்கும் நண்பர்கள் வீட்டில் நுழையும் போது... ரா தம்பு... என்ற குரல் இருக்கத் தான் செய்யும் காமராஜ்... இது பெண்ணடிமைத்தனமா என்றால் எனக்குத் தெரியவில்லை காமராஜ்... என்னை தவறாக நினைக்க வேண்டாம்... இது என்னுடைய தாழ்மையான கருத்து...
ஆனாலும் எனக்கு ரொம்ப பிடித்த நடை உங்களுடையது... சம்பாரி மேளம் தொடங்கி இன்று வரை கேட்கும்... பரிபாடல்கள் இவை...

அன்புடன்
ராகவன்

வினோ said...

அண்ணா, மிகவும் நெகிழ்வான ஒரு உணர்வு..

ராகவன் அண்ணா சொல்வது போல், அன்பிற்கு பாஷை ஒன்னு தானே...

காமராஜ் said...

நன்றி சரவணன்.

காமராஜ் said...

நன்றி சுந்தர்ஜி சார்..

காமராஜ் said...

நன்றி செந்தில்.

காமராஜ் said...

ராகவன்....

இந்தக்கதையை நீங்கள் அப்படிப்புரிந்து கொண்டால் நான் சொல்லுகிற முறை தவறாக இருக்கிறதாக ஒப்புக்கொள்கிறேன்.பம்பாய் படத்தில் கோயிலுக்கு டொனேஷன் கேட்டுவருவார்கள்,அப்போது கதாநாயகி கண்களில் ஒரு மருட்சி தெரியும்.ஒரு கடைக்கோடி கிராமத்தில் எனக்கு சொல்லப்பட்ட கதைகளும் என் நண்பனுக்குச்சொல்லப்பட்ட கதைகளும் எதிரெதிரானவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இயல்பில் நான் மருண்டதும் அது சரிசெய்யப்பட்டதும் தான் கதை. சூறாவளியைப்பிசாசென்று பயந்ததில்லை.வெத்தில போட்டால் மாடு முட்டும் என்று ஒதுங்கியிருந்ததில்லை.

மின்னல் வெட்டினால் தலைச்சன் பிள்ளைக்கு ஆகாது என்கிற நம்பிக்கை இன்னும் கெட்டியாக இருக்கிறது ராகவன். அது இருக்கிறது.

அதை மூடநம்பிக்கை என்று நானும் தாயும் அறிந்து கொண்டதுதான் கதை.

நான் ஏன் தப்பாகச் சிந்திக்கிறவனாக இருக்கக்கூடாது.

அதைச் சரிசெய்கிற இடம் தான் கதை.
இன்னும் கூட திருத்தி எழுதலாம்.

விவாதிக்கலாம் ராகவன்.

காமராஜ் said...

நன்றி வினோ.

ஈரோடு கதிர் said...

வாசிக்கும் போது பால் வாசம் வீசுகிறது!

காமராஜ் said...

கதிர்...

எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா?
ரொம்ப ரொம்ப ரொம்ப ....thanks.

இப்படியே போய் ரெண்டு மடக்கு குடிக்கனும் போல இருக்கு.

காமராஜ் said...

சுந்தர்ஜி சார், எம்மேல ரொம்ப பிரியமாகிட்டார்.அதுக்கு பாத்திரமானது சந்தோசம்.

ஆனா கார்க்கியின் 1000 ல் ஒரு பங்குகூட நானில்லை.

ராகவன் said...

அன்பு காமராஜ்...

மருண்டதும் சரி செய்யப்பட்டதும் தான் கதை என்ற உங்களின் வாதம் சரியே என்று கொள்கிறேன்... நான் தான் தவறாய்ப் புரிந்து கொண்டேன்... அவசரக்குடுக்கை காமராஜ்... நான்... என் தவறு... திரும்பவும் படிக்கையில்... கொஞ்சம் முடிச்சவிழ்வது மாதிரி இருக்கு... சைனீஸ் விஸ்பர் நு ஒரு கேம் ஆடுவார்கள்... அல்லது அது மாதிரி ஒரு கேம் ஆடுவார்கள்... குரங்கு அதன் குடும்பம் குட்டிக்குரங்கு பற்றிய நீண்ட கதை சொல்வார்கள்... முழுக்கதையும் காதிலேயே சொல்வார்கள்... ஒரு அம்பது பேரை கடந்தவுடன்... மிஞ்சுகிற வார்த்தைகள் குரங்கும், குட்டிக்குரங்கும் மட்டும் தான் இருக்கும்... முழுதாய் அதன் சீர் இழந்து இது மட்டுமே தங்கும்... சடக்கென்று நான் குறிப்பிட்ட பத்தி படித்தவுடன், புத்தி குரங்காய் அதிலேயே உட்கார்ந்து விடுகிறது...

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...
This comment has been removed by the author.
காமராஜ் said...

//நான் தான் தவறாய்ப் புரிந்து கொண்டேன்... அவசரக்குடுக்கை காமராஜ்... நான்... என் தவறு..//

இதெல்லாம் எதுக்கு ராகவன்.நீங்கள் என்னிடம்.அய்யய்யோ.அது கதை.என் புரிதலில்.அவ்ளோதான்.

நான் இப்போ 'கபி கபி' கேட்டுக்கொண்டிருக்கிறேன்.'ஹெய்செஜெ துஜுகொ பனாயா ஹயா† மேரெலியே... அந்த மேரெலியே வரும் போதும்,திக்காஹி வரும்போதும் மனசு இலவம் பஞ்சில் ஏறி மிதக்கும்.அந்த மெலிய புல்லாங்குழல்,அடக்கி வாசிக்கும் தாளங்கள்.அப்பப்பா இது எண்பதுகளில் வந்த படமாமே. எவ்ளோ லேட் பாருங்க.

கேக்றீங்களா..கால் பண்னுங்க,ராகவன்.

vasu balaji said...

வாத்ஸல்யம். சில உணர்வுகளை இப்படித்தான் சொல்லமுடியும். இதற்கு மொழிதேடி மாற்றுச் சொல்ல மனம் இடம் தரவில்லை. ரொம்பவும் ரசித்தேன். வழக்கம்போல் கடைசி வரிகள்.:)

Unknown said...

அருமை நண்பரே! எனக்கும் இதே மாதிரி நட்பு. அந்த நண்பர் வீட்டில் இன்று வரை அவர் சகோதரிகள், மற்றும் பாவா எல்லோரும் அதே அன்போடு இருக்கிறார்கள்.

பத்மா said...

நண்பர்களின் அம்மாக்கள் எல்லாம் நம் அம்மா மாதிரி தான் இல்ல?
எவ்ளோ அழகா எழுதுறீங்க சார் ?இத் நா எத்தன தடவ சொன்னாலும் பத்தாது போல

☼ வெயிலான் said...

நானும் உங்களைப் போல தான்ணே தெலுங்கு கத்துருக்கேன். அநேகமா நம் பகுதிவாசிகள் எல்லாருமே அப்படித் தானோ?