மதுரை டவுன்ஹால் ரோட்டின் தீபாவளிக்கு முந்திய வாரம். அந்த பாட்டா செருப்புக் கடையின் வாசலில் ஒரு பெரிய தூக்குப் பையோடு வந்தாள் அவள். வயதுக்கு மீறிய சுமை.இறக்கிவைத்து விட்டு கையை நீட்டி உதறிக் கொண்டாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்த இடத்தில் உட்கார்ந்து விட்டாள்.
சரி உடன் வந்த அம்மா அப்பா வருகிற வரை அங்கே உட்கார்ந்திருப்பாள் போல என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது பையின் ஜிப்பை திறந்தாள்.சதுர சதுரமான ப்ளாஸ்டிக் பைகளை எடுத்து கீழே போட்டாள். அதிலிருந்து ஒன்றை எடுத்து நுனியில் வாய் வைத்து ஊதினாள்.ஆஹா கிடைத்த சிறிது நேரத்திலும் தன் விளையாட்டுப் புத்தியை விடவில்லையே,குழந்தைகள் குழந்தைகள் தான் என்று சந்தோஷமாக இருந்தது.
ஊதிப்பெருக்கிய பொருள் ஒரு காற்றுத்தலையணையானது.பின்னர் ஒவ்வொன்றாக எடுத்து பத்துப்பதினைந்து காற்றுத் தலையணைகளை உருவாக்கி அதை எல்லாம் இணைத்து கட்டி பாதசாரிகளின் பார்வையில்படும்படி வைத்துவிட்டு தெருவை வெறித்தாள் அந்தச்சிறுமி.
ஒரு குட்டி லட்சுமி மிட்டல் டவுன்ஹால் வீதியில் தனது வியாபாராப் பயணத்தை ஆரம்பிக்கிறாள். இந்த உலகமயமாக்களில் அவளின் அன்றைய வியாபார இலக்கு என்னவாக இருக்கும்.இந்த போட்டிகள் நிறைந்த வியாபார உலகில் அவளின் உடனடி போட்டியாளர் யாராக இருக்கும்.யோசித்து வையுங்கள்.
முதல் நபர் வந்து விலைகேட்டார் ஹிந்தியில் நாற்பது ரூபாய் என்று சொன்னது.பேரம் பேசினார் உறுதியாக மறுத்து முதல் போனியை ஆரம்பித்தது.பணத்தை எண்ணி சரிபர்த்து முகத்தில் ஒற்றிக்கொண்டு பிரார்த்தனை பண்ணியது. பார்த்துக்கொண்டிருந்த நமக்கே பதற்றமாக இருந்தது.அந்தக் கடவுள் என்னவாக ஆகியிருப்பார்.
14 comments:
இது முதல்...
//ஒரு குட்டி லட்சுமி மிட்டல் டவுன்ஹால் வீதியில் தனது வியாபாராப் பயணத்தை ஆரம்பிக்கிறாள்.// Touching line
தலையணைகள் விற்பவள்
பெயரச்சடித்த கற்களுள்ள நடை பாதையில்
சூரியக்குடை விரித்தமர்கிறாள்
மடித்த கனவுகளாய் காற்றுத்தலையணைகள்
உறங்கும் பெட்டிகளுடை சிறுமி
பொம்மைகள் வாங்கி வர காத்திருக்கும் பாவனையில்
சிநேகிதன் மிதிவண்டி கடந்து போகும் திசையில்
அமர்ந்திருக்கும் தோரணயொடு
ஆவி செலுத்தி தலையணைகள் நிரப்புகிறாள்
சின்ன சின்ன மேகங்கள் மேய்க்கும் பறவை
முதல் பேரம் துவங்குகிறது ஷைலக்கின்
தராசு நாக்கில் வைத்தவருடன்
புறா- கழுகு- சிபியின் ஆட்டம்
கழுகு எப்பவும் போல்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது
ஆகாசத்தில் ஒரு கால் அடிவயிற்றில்
ஒரு காலுமாக
காமு சார் என்னவோ எழுதிப் பார்க்கத் தோன்றியது
நன்றி :)
இந்த சிறு உயிர் கூட்டுக்கு(ள்) எத்தனை போராட்டம் அண்ணே...
பாவம். தீபாவளியை நம்பி எவ்வளவு சிறு வியாபாரிகள், சிறு முதலீடுகள். இந்தக் குழந்தையும் தீபாவளியை நம்பி வாழும் பல சிறு தொழில் செய்பவர்களுள் ஒன்றாக மாறி அமர்ந்திருப்பதை என்ன சொல்வது. பிச்சை எடுக்கத் தள்ளாமல் இருந்தார்களே என்று ஒரு ஆறுதல் தான். ரோட்டில் விற்பவர்களிடம் தான் பேரம் பேச முடியும். அது குழந்தையிடமுமா?
நேசனின் கவிதை ஒரு அழகான விவரிப்பு. நன்றி நேசன்.
கொடுமைதான் காமராஜ். சென்னை போன்ற நகரங்களில் இந்தச் சிறுவர்களை வைத்து வியாபாரம் செய்வதும் பணமுதலைகள். போலீஸ் அதிகபட்சம் விரட்டும். நான்கு கடை தள்ளி திரும்ப கடை போடலாம். எது எப்படியானாலும் பிஞ்சுக் குழந்தைகள் தொலைப்பதுவும் அல்லது பறிக்கப்படுவதும் அவர்கள் பால்யம், எதிர்காலம்.
சார் நீங்க எழுதினா பின்னூட்டங்களே கவிதையா வருது ..
இதான் இதான் காமராஜ் ங்கறது .
பதைபதைப்பு !
வருத்தங்கள்தான் காமராஜ் அண்ணே.. சுமக்க முடியாத சுமை..
/அந்தக் கடவுள் என்னவாக ஆகியிருப்பார்./
அந்தக் கடவுள் மட்டும் பதறியிருந்தால் அந்தக் குழந்தைக்கு இந்த நிலை வருமா???ம்ம்ம்??
சீமான்,
அருண்,
இர்ஷாத்,
பாலாண்ணா,
சேதுசார்,
அருணா,
பத்மா..
எல்லோருக்கும் நன்றி.
அன்பின் நேசன்.
வணக்கம்.
நான் சொல்லவந்ததை இன்னும் அழகாகவும்,ஆழமாகவும் சொல்லுகிறதிந்தக் கவிதை.
ரொம்ப நன்றி.
கையிலிருந்த தீபாவளிச்சரக்கெல்லாம் கனத்துக்கிடந்த மனதோடு மதுரையிலிருந்து திரும்பின்னேன்.
வந்து வலை திறக்க முடியவில்லை.பாலாண்ணா வின் 'தேவன் கோவில் மணியோசை' படித்தபின்னர் தான் இன்னும் மனிதாபிமானம் கெட்டியாக இருப்பது நினைவுக்கு வந்தது.
மட்டுமல்ல இந்த பின்னூட்டங்களும் தெம்பளிக்கின்றன.என்றாவதொரு நாள் இவை தீரும் என்னும்
நம்பிக்கை வெளிச்சத்தில் முன் நடப்போம்.அதுவரை எழுதுவோம்.
படிக்கும்போது அந்த குழந்தையின்மேல் ஒற்றும் பரிதாபத்தை, ஆதங்கத்தை வார்த்தைகளில் சொல்லமுடியவில்லை.. பலரை கண்டிருக்கிறேன். இப்படி எழுதத்தான் தரியவில்லை...
இன்னும் சிறிது நாட்களில் எவ்வளவு தேடினாலும் கிடைக்கப்பெறாமல் போகப் போகிற குழந்தையின் தெய்வத்தனங்களை உலகமயம் கொன்று கொண்டே வருகிறது.
அந்தக் குழந்தைக்காகப் பதைபதைப்புற்ற நீங்கள்தான் அந்தக் கடவுள் காமராஜ்.அந்தக்குழந்தைக்கான உங்கள் நேசமும் ப்ரார்த்தனையும் நிரம்பிய மற்றப் பத்துத் தலையணையையும் அவள் விற்றுத்தீர்த்திருப்பாள். நெகிழ்ந்தேன் காமராஜ்.
Post a Comment