3.7.11

மிஷினாஸ்பத்திரியும் துட்டுவாங்கும் மிஷினும்.வெள்ளந்திக்கதைகள்



விடிந்தும் விடியாத கருக்கலில் அடுப்புச்சட்டிகள் உருள்வதும் தண்ணீர் சிதறுவதுமான ஓசைகள்,ஊதுவத்தி,பச்சை விறகுப்புகை மணப்பதுமான வாசனைகள் .அந்த கிராமத்து தேநீர்க்கடை ஊருக்கு சுறுசுறுப்புடன் கூடிய இதமான இனிப்பு வழங்கத் தயாராகிக்கொண்டிருப்பதை அறிவிக்கும்.காப்பிப்பொடிய எங்க வச்ச ஒழுங்கா ஒரு எடத்துல வய்க்கத் தெரியுதா பொம்பளக்கி நல்லா வாயில வருது இந்தா ஓம்பீச்சாங்கயிப்பக்கத்துல கெடக்குற பாக்கெட் என்னது,ஆட்டுக் குட்டியெக் கழுத்துல போட்டுக்கிட்டு ரோட்டுல தேட்ற கதகெனட்டா.ம்க்கும் இந்த குண்டுபல்பு வெளிச்சத்துல என்ன தெரியிது.பேதியில போற பெயக நம்மூருக்கு மட்டும் இத்தினிக்கூண்டு கரண்ட அனுப்புறான்.சொல்லச் சொல்லக் கேக்காம கண்ண மூடிக்கிட்டு போயி ஓட்டக்குத்துனா இப்பிடித்தான்.

சொந்தச் சண்டையில்  ஆரம்பித்து அரசியலில் நிலைக்கொள்ளும் பேச்சு. இப்படி ஆரம்பிக்கிற பேச்சு ராத்திரிப் படுக்கிற வரை கூட வரும்.அதுவும் மெத்தப்படிச்ச சித்திரவேலு வந்தாப்போதும் கடையில் கூடப்பத்து டீக்கணக்கு சிட்டையில் ஏறும். ஊர்முச்சூடும் கைநாட்டுப்போட வண்டிமைதேடிக்கிட்டு அலஞ்சப்போ சாத்தூர் ஜப்பான் பள்ளிக்கூடத்தில் ஆறு வரைக்கும் படிச்ச மேதாவி சித்திரவேலு.அவன் வீட்டு ரெங்குப்பெட்டியில் ஒரு மைப்பேனா கெடக்கும்.அதை பெத்த பிள்ளைகளக் கூடத்தொடவிடமாட்டான். பிறந்தபிள்ளைகளுக்கு சேனை ஊத்த பேனாக்கேட்பார்கள் அப்போது பெரிய்ய அழிச்சாட்டியம் பண்ணுவான். என்னமோ ஊருக்குள்ள தங்கத்தேரை ஓசிக்கு ஓடவிட்ட ரஜபரம்பரை மாதிரி பேனாவைக் கொடுத்துவிட்டு அதை திருப்பி வாங்க வாசப்படியில உட்கார்ந்துவிடுவான். அது மட்டுமா ஊருக்கு வரும் தினத்தந்திப் பேப்பரையும்தான்.

எலே சம்மட்டியும்,மம்பட்டியும் தூக்குற ஒங்களுக்கு பேப்பரப்பத்தி என்னடா தெரியும் ஒருபானக்கஞ்சிய ஒரே தடவையில குடிச்சதத்தவர என்ன சாதிச்சிட்டீங்க என்று சொல்லுவான். அவனிடம் வாக்குவாதம் செய்ய யாரும் வரமாட்டார்கள்.அப்படி வாக்குவாதம் பண்ணி சண்டையாகிப்போனா நாளப்பின்ன ஒரு தபாலுகிபாலுவந்தா வாசிக்க சித்திரவேலுதான் கதி. ஒரே ஒராளுக்கிட்ட மட்டும் அவன் பருப்பு வேகாது அந்த சரோஜாச்சித்தி வந்துவிட்டாப்போதும் கம்முனு கெடப்பான்.அவள் பத்துப்படித்த விவரகாரி.அதுக்கு ஒரு காரணம் இருக்கு.ஊர் மடத்தில் அன்னைக்கு ஒரே கசமுசா சீட்டாட்டம் கூட நின்னு போச்சு.வேறு ஒன்றும் இல்லை மகாத்மாக் காந்தியின் பேத்தியா தான் இந்திராக்காந்தி என்று நட்டுக்க நிக்கிறான்.மடம் ரெண்டாகப்பிளந்து அங்கிட்டு பத்து இங்கிட்டு பத்துபேரா கோஷ்டியானது. ஊர்த் தலைவரிடம் போய் பிராது சொல்லலாம் என்றால். கீரமுண்டைகா வீட்டுக்கு போங்கடா போக்கத்த பெயகளா என்று விரட்டி விடுவார். களவு, சுவரேறிக்குதிச்சது, கையப்பிடிச்சு இழுத்தது, கடவுக்குள் பேண்டு வச்சது,புருசம்பொண்டாட்டி சண்டை,பொழித்தகராறு தீத்துவுட்றதில தான் ஊர்த்தலைவர் கில்லாடி.ஆனால் முனியாண்டி என்று எழுதிமுடிக்க மூன்றுநாள் ஆகும்.

அந்தப்பக்கமா வந்த சரோஜச்சித்தியிடம் பிராதைக் கொண்டுபோனார்கள்.அவள் அங்குவந்தவுடனே அவர் பாதிபேதி போய்விட்டது. கிட்டத்தட்ட தோத்துப்போனார்.அவளை ஆறாம் வகுப்புக்கு ஹாஸ்டலில் சேர்க்க மெத்தப்படிச்ச சித்திரவேலுதான் கூட்டிக்கொண்டு போனார்.மதுரை போகவேண்டிய அவர்கள் ரயிலேறிக்கொவில்பட்டிபோய் இறங்கியகதை ஊருக்குள் பிரபலம்.திருநெல்வேலி மதுரை என்று போர்டு போட்டு இரண்டு அம்புக்குறி எதிரும் புதிருமாக இருக்குமல்லவா? அவர் மதுரை அம்புக்குறி காட்டிய பக்கத்துப்பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டு சவடால் பேசினார். கோயில்பட்டியில் இறங்கிப்பின்னர் அங்கிருந்து மதுரைக்கு பஸ்பிடித்துப்போய்ச்சேர இருட்டிவிட்டது.மறுநாள் ஊரே கெக்கெக்கேனு சிரிச்சுக்கிடந்தது.  அதிலிருந்து சரோஜாச்சித்தி அந்தப்பக்கம் வந்தாப்போதும் சவுண்டைக்குறைத்துக்கொள்வார்.

இப்போது வராலாற்றுப்பாடத்தில் படித்ததைச் சொன்னதும். ஊர்மடத்து விவகாரம் சப்பென்று போனது.அன்னைக்கு அப்படித்தான் கோயிலானுக்கு வயித்துவலியென்று வந்து கடையில் ஜிஞ்சர் பீர் வாங்கிக்குடித்துக்கொண்டிருந்தான்.யாரோ வெத்திலையும் மிளகும் வைத்து மென்னுதின்னு என்று சொன்னார்கள்.காலங்காத்தால ஒரு செம்பு புளிச்சதண்ணி குடி என்று மாடத்தி சின்னம்மை சொன்னாள். அங்கு வந்த சித்திரவேலு ஞானதுரை ஆஸ்பத்திரிக்குப்போ ஒரே ஒரு ஊசியில சொன்னங்கமாக்கேக்கும் என்று சொன்னார். கடிச்சிக்கிடக்கு கருவாடு வாங்கத்துட்டில்லன்னு வீட்டுல சண்ட போட்டுட்டு வந்துருக்கேன் துட்டாஸ்பத்திரிக்கு போகச்சொல்றயே சின்னையா என்று கடுப்பாகினான் கோயிலான்.

அப்புறம் கதை வேலுஅண்ணனுக்கு வகுத்தாப்பரேசன் செஞ்சது,திருமேனிச்சித்திக்கு காட்டாஸ்பத்திரியில கொழந்த பெறந்தது இப்படி ஒன்றிலிருந்து ஒன்றுக்குத்தாவிக்கொண்டே போனது.அப்போது தான் அங்கு வந்த பேச்சி முத்து கேட்டான் ”ஏ மாமா இந்த மிஷின் ஆஸ்பத்திரி மிஷின் ஆஸ்பத்திரின்னு சொல்றாய்ங்களே அப்படின்னா என்னா மாமா” என்று கேட்டான். இந்தச்சவால்கேள்விக்கு பதில் சொல்ல தனது கேள்விஞானத்தையெல்லாம் ஒன்று திரட்டி ஆரம்பித்தான்.மாப்பிள அங்க பூராம் மிஷினுதான்,நாடிபாக்க, ஊசிபோட, ஆப்பரேசன் பண்ண, மருந்துகட்ட இப்பிடி எல்லாவேலைக்கும் மிஷினுதே வச்சிருப்பாய்ங்க அது வெளிநாட்டுல சர்வச்சாதாரணம் பூராம் வெள்ளக்காரங்கண்டுபிடிச்சது என்று அளந்து விட்டுக்கொண்டிருந்தான்.அப்ப துட்டுவாங்குறது ஆளா இல்ல மிஷினா மாமா என்றான். எலே ஒங்க வலசல சும்மாவால சொன்னாய்ங்க சூத்துக்கொழுப்பு பிடிச்ச சுருளியன் வலசல் அப்படீன்னு என்று சொல்லிவிட்டுதுண்டை உதறித்தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிப்போனார் மெத்தப்படிச்ச சித்திர வேலு.  

14 comments:

செ.சரவணக்குமார் said...

என்னத்த சொல்றதுண்ணே.. ஊர் ஞாபகம் வந்தாலே உங்க பதிவுக்குத்தான் ஓடிவருவேன்.. இப்பப் பாருங்க மிஷினாஸ்பத்திரியப்பத்திச் சொல்லி பிரிச்சி மேஞ்சிருக்கீங்க..

அட்டகாசம் அண்ணே.

hariharan said...

மதுரைக்கு போறதுக்கு பதிலா கோவில்பட்டிக்கு ப்போறது பொம்பளை வண்டி கதை மாதிரி இருக்கு.

vasu balaji said...

:)). அமர்க்களம்.

ஓலை said...

Super. Vellanthik kathaigalin silaagippu attakaasam.

"ராஜா" said...

Super sir. Kiramaththai appadiye kannukku munnadi niruththideenganga

Mahi_Granny said...

வரிக்கு வரி ரசிக்க முடிகிறது. என்ன ஒரு எழுத்து .தம்பி காமராசுக்கு பாராட்டுக்கள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அது சித்திரவேலோ சரோஜாச் சித்தியோ மோனோபோலி என்றாலே அதன் சுவாரஸ்யம் தனிதான்.

மிக அற்புதமான சித்திரத்தை வரைந்திருக்கிறீர்கள் காமராஜ்.

இப்படிப்பட்ட வெள்ளந்தி மனிதர்களைத் தான் நூறுசதக்கல்விக்குப் பலி கொடுத்திருக்கிறோம்.பெரிய இழப்புத்தான்.

சேக்காளி said...

//மகாத்மாக் காந்தியின் பேத்தியா தான் இந்திராக்காந்தி என்று நட்டுக்க நிக்கிறான்.மடம் ரெண்டாகப்பிளந்து அங்கிட்டு பத்து இங்கிட்டு பத்துபேரா கோஷ்டியானது//
யதார்த்தமான வரிகள்

க.பாலாசி said...

ஆளாளுக்கு தெருவச்சுத்தி சுத்தி வர்ராங்க.. சித்திரவேலுவும், சரோஜாசித்தியும் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறார்கள்... மெஷினாஸ்பத்திரியும் தன்பங்குக்கு கதவு திறக்கிறது.. இதுதான் எழுத்து..

கிச்சான் said...

அண்ணா ! எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு உங்கள் பதிவை படித்து
அன்புடன் கிச்சான்!

ராகவன் said...

அன்பு காமராஜ்,

இந்த மனிதர்கள் எல்லோரும் நம்முள் இருக்கிறார்கள். நம்முடன் இருக்கிறார்கள்... சிறப்பான நடை... வெரச விறகுக்கட்ட சும்மாடு மேல ஏத்திக்கிட்டு மலைப்பாதையில இறங்குற குமரியாட்டம்...

ஆனா வட்டாரமொழி குழப்பங்கள் இதுல அதிகம் இருக்கு... காமராஜ்...

சென்னைப்பக்கம், மதுரை, ராமனாதபுரம், திரு நெல்வேலி என்று சகட்டு மேனிக்கு மாறி மாறி வருகிறது... இது ஒரு இடறல் இல்லை கதை போகிற வேகமும், அழகும்.

அன்புடன்
ராகவன்

பா.ராஜாராம் said...

happy 25th annivarsary kamu :-)

காமராஜ் said...

வணக்கம் நண்பர்களே.
எல்லோருக்கும் அன்பும் நன்றியும்.

காமராஜ் said...

நன்றி பாரா