17.10.11

உள்ளாட்சியைக் கைப்பற்றப் போவது யார் ?. ஜாதியா,ஊழலா இல்லை ஹசாரேவா



பேஸ்புக்குக்கும் ப்ளாக்குக்கும் அலைந்து அலைந்து கண்கள் வலித்திருந்தது. காலைச்சாப்பாட்டை எடுத்துவைத்த இணை கிறுக்குத்தான் பிடிச்சிருச்சி என்று சொல்லிக்கொண்டே அதை எடுத்து மூடிவைத்துவிட்டு தொலைக்காட்சிக்குள் தொலைந்துவிட்டார்.பகல் முழுவதும் யாரவது வந்து வாக்குறுதி நோட்டீசும் மாதிரி வாக்க்குச் சீட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.ஒரு சில நோட்டீசில் காந்தி எம்ஜியார் காமாராஜர் அம்பேத்கர் முத்துராமலிங்கம் அழகுமுத்து வ.உ.சி அப்துல்கலாம் இம்மானுவேல்சேகரன். இன்னும் ஒருசில நோட்டீசில் பெரியாரும் முத்துராமலிங்கமும் அருகருகே காட்சிதந்தார்கள். பார்த்தபோது சிரிப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

அடுத்த வருடத்திலிருந்து முழுமையாக மின்வெட்டே இருக்காது என்று அம்மா அறிக்கைவிடுகிறார். அதைப்படித்த ஒரு இளைஞன் ஆமாமா பரமக்குடி மாதிரி முழுக்க முழுக்க ஆளவெட்ட ஆரம்பிச்சுருவாங்க அதனால மின்சாரத்த வெட்டத் தேரமிருக்காது என்று சொல்லுகிறார். ஆனால் அதே பரமக்குடிக்கு ஓட்டுக்.கேட்கப்போன கேப்டன் இனிமேல் இடஒதுக்கீடு என்பதே இருக்கக்கூடாது என்கிற தனது ஆராய்ச்சியை தெருவில் கொட்டுகிறார். அப்போ இந்த ஆறுபேர் படுகொலையும் இடஒதுக்கீட்டுக்கு எதிராகத்தானா என்கிற நக்கலுக்கு அவர் எப்படிப்பதில் சொல்லுவார்.  கைக்கெட்டாத தூரத்தில் இருந்து தான் கேள்விக்கேக்கனும்.

இந்தத்தேர்தல் எப்படியெல்லாம் தான் குட்டிக்கரணம் போடவைக்கிறது. மூன்றுமுறை தொடர்ந்து பஞ்சாயத்துதலைவராக இருந்த ஒருவர் நான்காவது முறையாக தனது மனைவியை நிறுத்துகிறார். அதோடு நிற்காமல் நான் ஆட்சிப் பொறுப்பேற்றால் பொதுமக்களுக்கு  நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று கூச்ச நாச்சமில்லாமல் உறுதிமொழி கொடுக்கிறார். காலையில் டீக்கடைக்கு வந்த ஒரு
பட்டாசுக் கம்பெனி முதலாளி அந்த ஊரின் அடுத்த பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடுபவர். ராத்திரியானா ஒரு நூருரூவாக்கட்டு காலியாப் போகுது என்று சொல்லிவிட்டு கோடு போட்ட டவுசரிலிருந்து மீதிரூபாயை எடுத்துக் காட்டுகிற்றார். அதைப்பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ’எல்லாத்துக்கும் வாங்கிக்,கொடுக்ககூடாது  அண்ணாச்சி,டெய்லி ஒரு இருபது பேருக்கு மட்டும் வாங்கிக் கொடுக்கணும். அதுவும் கண்ட பயக வருவாய்ங்க கவனமாப் பாத்து வாங்கிக் கொடுக்கணும்’. என்று அறிவுறை சொல்லுகிறார்.

ஓட்டுவீடுகள் மட்டுமே நிறைந்திருக்கிற அந்த ஊரில் ஆனையாக்குவேன் பூனையாக்குவேன் என்று சொல்லி பஞ்சாயத்துதலைவர் பதவியேற்ற ஒருவர் ஒரே வருடத்தில் மூன்று மாடி வீடுகட்டுகிறார். இரண்டு டாடா ஏசி வாங்கி வாடகைக்கு விடுகிறார்.குண்டிகிழிந்த டவுசர் போட்டுக்கொண்டலைந்த மகனுக்கு பல்சர் வண்டி வாங்கிக்கொடுக்கிறார்.நட்ட நடுத்தெருவில் சாக்கடையோடும் ஊரில் அந்தப்பல்சர் வண்டியில் அவன் சிட்டாய்ப் பறக்கிறான். அதுவரை அண்ணாதிமுக திமுக தேமுதிக மதிமுக கொடிகளுக்கு இடையில் இருக்கிற வித்தியாசம் கூடத்தெரியாத கூமுட்டையாக இருந்தவர் பழுத்த அரசியல்வாதியாகி ஆளும்கட்சியின் விவசாய அணிச் செயலாளாராகிறார். அதற்குப்பிறகு அங்கிருக்கிற வேலிக் காட்டையெல்லாம் எர்த்மூவர் வைத்து திருத்தி, அளந்து, கல்நட்டி, செம்மண் கோடு போட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பிக்கிறார். ஏங்கெல்சையும் டார்வினையும் காலில்போட்டு மிதிக்கிறபடியான பரிணாமம் இது.

இதையெல்லாம் பக்கத்துவீட்டில் இருந்து பார்த்துப் பொருமிக் கொண்டிருக்கும் மதினிக்காரி சாப்பாடுவைக்கிற நேரமெல்லாம் பங்காளிக்கு
பொழைக்கிற வழிசொல்லிக் கொடுக்கிறாள். அவளும் பத்துப்பவுனில் ஒத்தை வட முறுக்குச்செயின் போட்டுக்கொண்டு டாடா ஏசியின் முன்னாடி உட்கார்ந்துகொண்டு மாரியம்மன் கோவிலுக்கு போக ஆசைப்படமாட்டாளா என்ன? அந்த ஆசைதான் இந்த தேர்தலில் அண்ணனையும் தம்பியையும் எதிர் எதிராக பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட வைக்கிறது. நாப்பதுவருஷம் தண்ணிபாய்ச்சி சேர்த்து வச்ச கம்மாப்பிஞ்சையை கிரயம் எழுதிக்கொடுத்து கத்தை கத்தையாய் நோட்டுவைத்துக்கொண்டு க்ரேடு க்ரேடாக குவார்ட்டர் வாங்கிக் குவிக்கிறார்கள்.

ஒரு நகராட்சியின் மொத்த வாக்குகள் எத்தனை அதில் எந்த ஜாதி அதிக எண்ணிக்கை என்கிற கணக்கெடுப்புக்கு அப்புறம் தான் வேட்பாளர் தேர்வு நடக்கிறது.ஆளும், எதிர்,கூட்டணி,சுயேச்சை வேட்பாளர் எல்லோரும் அதே ஜாதிக்காரர்களாகவே நிறுத்தப்படுகிற்றார்கள்.
ஆனால் இந்தச்சூழலில் தான் ஒரு வலைத்தளம் கணக்கெடுப்பில்  நல்லவேட்பாளர்களைத்தான் இந்த உள்ளாட்சி தேர்தல் தேர்ந்தெடுக்கும் என்று எழுபது சதவீதம் பேர் ஓட்டளித்து கருத்துக்கணிக்கிறது. இந்த மாதத்தில்தான் புத்தகம் பேசுது உள் அட்டையில் பேராசிரியர் க.பழனித்துரை எழுதிய ‘ தமிழக கிராமப்புற உள்ளாட்சி( கடமையும்- அதிகாரங்களும்) என்கிற கையேடு விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்துகிறது.

இதுவேறு இதிகாசம் ஆவணப்படத்துக்காக காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.பழனித்துரையைச் சந்திதித்து  பேட்டி யெடுத்தோம்.அப்போது அவர் சொன்னது.பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம்.மதுரைப் பகுதியில் சுமார் ஐநூறு பஞ்சாயத்து தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்களாம்.கலந்துகொண்டவர்கள் ஆயிரம் பேர் கணக்கு உதைக்க. என்னவென மண்டையைப்போட்டுக்குழப்பிக்கடைசியிகண்டுகொண்டார்களாம்.தேர்ந்தெடுக்கப்பட்ட அத்துணைபெண் தலைவர்களின் கணவன் மார்களும் கூட வந்திருந்ததுதான் காரணம்.உடனே மேடையிலிருந்து பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட தலைவர்கள் மட்டுமே இருக்கமுடியும் அவர்களின் கணவன்மார்கள் வெளியே போகவேண்டும் என்று சொன்னதும் சுமார் 250 எழுந்துபோய்விட்டார்களாம். மீண்டும் கணக்கு உதைக்கவே மண்டையைக் குடைந்து கண்டுபிடித்ததில். அந்தக்கூடுதல் 250, பேர் ஊராட்சிமன்றத்தின் எழுத்தர்கள் என்பது தெரியவந்தது.
ஆமாம் பெரும்பாலான தலித் மற்றும் படிக்காத தலைவர்களின் பஞ்சாயத்துகளில் கிட்டத்தட்ட தலைவர் பொறுப்பைப் பிடுங்கிக்கொள்வது
பேண்ட் சட்டை போட்ட எழுத்தர்களே.

இந்தக்கொடுமை போதாதென்று பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், மற்றும் வங்கிக்கிளைகளில் தலித் பஞ்சாயத்து தலைவர் நின்று கொண்டிருக்க பஞ்சாயத்து கிளார்க்குகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னே நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் வன்கொடுமைகள் நடப்பதாகச்சொன்னார்.  அதன்பிறகான எனது வங்கிநாட்களில் நான் அதைக் கவனிக்கத் தொடங்கினேன்.பேராசிரியர் சொன்னதைவிடவும் நூறுமடங்கு கூடுதலாகவே நடக்கிறது. காரணம்அரசு அலுவலர்கள், வங்கிமேலாளர்கள்,ஊழியர்கள்,என்.ஜி.ஓ, க்கள் எல்லோருக்கும் கூடுதல் சமூகப்பொறுப்பு இருக்கிற சுரணையே இல்லாமல் ஜாதியத்தடத்திலே பயணிக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில்தான் வருடா வருடம் சிறப்பாகச் செயல்படும் ஊராட்சி மன்றங்களைத் தேர்ந்தெடுத்து  மத்திய அரசும் மாநில அரசும் பரிசு அளிக்கிறது, அதைத்தான் முன்மாதிரி பஞ்சாயத்துக்களாக அரசு அறிவிக்கிறது. அந்தப் பஞ்சாயத்துக்கள் எம்ஜியார்,ரஜினி மாதிரி எந்த விதமான சாகச அற்புதங்களியும் செய்துவிடுவதில்லை. அரசு அறிவித்த திட்டங்களை முறைப்படி அமல்படுத்துகின்றன, அவ்வளவுதான். அப்படி அறிவிக்கப்படுகிற பஞ்சாயத்துக்கள் மூன்றே முன்றுதான். ஆனால் தமிழகத்திலுள்ள மொத்தப்பஞ்சாயத்துக்கள் சுமார் 12856.
எனில் மீதமுள்ள 12853 பஞ்சாயத்துக்களும் என்ன செய்கின்றன. மீண்டும் முதலில் இருந்து வாருங்கள்.

இதைக்கண்காணிக்க அரசு எந்திரத்தில் ஏற்பாடுகள் இல்லையா என்றால் அழகாக இருக்கிறது. ஆனால் எல்லாக்களவாணித்தனங்களும் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. இங்கேதான் காவல்துறையின் உச்சாணிப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் இகாப க்கள் ஜாதிக் கட்சித் தலைவர்களாகிறார்கள்.வருமாண வரித்துறையின் உயர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகிறவர்கள் தனியார் நிறுவணங்களுக்கு கணக்கு ஆலோசகர்களாகிறார்கள்.பொதுத்துறைவங்கிகளில் இருந்து ஓய்வு பெற்ற மறுநிமிடம் தனியார் நிதிநிறுவணங்களுக்கு மேலாளர்களாக உருமாறுகிறார்கள். அரசுப்பள்ளியில் வேலைபார்த்துக்கொண்டு முழுநேரமும் மெட்ரிக்குலேசன் மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறார்கள். இப்படிப்பொறுப்புள்ள கணவான்கள் கூடித்தான் அன்னா ஹசாரேயை கதாநாயகன் ஆக்குகிறார்கள்.

9 comments:

aotspr said...

மிக அருமையான பகிர்வு........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

vasu balaji said...

யூ ட்யூப்ல வாஸ்தவம்னு ஒரு மலையாளப் படமிருக்கு. பாருங்க காமராஜ்.

hariharan said...

பஞ்சாயத்துத் தேர்தல் வந்து நிலப்பிரபு தான் ஊர் பிரசிடெண்ட் அப்படிங்கிற நிலைமைய மாத்தினது உண்மைதான், ஆனா இவங்க ரேஞ்சுக்கு புதிய மாடிவீடு கார்வச்திகளை உண்டாக்கி இருக்காங்க. சில பேர் சொல்ற மாதிரி அரசியல்ல ஒரு பய யோக்கியன் கிடையாது, ஆனா கண்ணாடிய பாக்காம சொல்றாங்க. இந்த நிலமை எப்ப மாறுமோ?
கேப்பிடலிசம் சகப்தம் முடிஞ்சுபோச்சு, புதுசா ஒண்ணு வேணும்ணு கூப்பாடு போடுறாங்க, ஆனா சோசலிசம் வரக்கூடாதுன்னு நிக்கிறாங்க. அவங்க பொழப்புல மண்ணுவிழும் க்கிற பயம் வருது.

காமராஜ் said...

வணக்கம் கண்ணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

பாலாண்ணா வணக்கம் பாத்துவிடுகிறேன்.

காமராஜ் said...

Cpede News.
Online Works For All .

வருகைக்கு நன்றி.

காமராஜ் said...

வாருங்கள் kss rajh.
புதியவரா நீங்கள்.
வருகைக்கு நன்றி.

காமராஜ் said...

அன்பான தோழர் ஹரிகரன்.
எது வந்தாலும் பொதுவுடமை வரக்கூடாது என்கிற எண்ணம் ஆழ வேரோடிக்கிடக்க்கிறது.
நாம் இன்னும் நிறைய்ய அம்பலப்படுத்த வேண்டும்.

ஓலை said...

அருமையான பகிர்வு.