6.7.10

காடழிதலுக்கு எதிரான பொறி .ந.பேரியசாமியின் கவிதை.

தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு சிறு பத்திரிக்கையாக நெடுங்காலம் எதிர் நீச்சலடிக்கும்  செம்மலர் மாத இதழ்.

மேலண்மை பொன்னுசாமி, தமிழ்செல்வன், கந்தர்வன்,உதயசங்கர், ஷாஜகான், ஆதவன்,மாதவராஜ் போன்ற இலக்கிய ஆளுமைகளுக்கு களமும் தடமும் அமைத்துக்கொடுத்தது. சாமான்யக் குரல்களுக்கு ஒலிபெருக்கித்
தந்ததும் ஒளிவட்டமில்லாத நீங்களும் எழுதலாம் என்கிற உத்வேகம் கொடுக்கிற கிரியா ஊக்கியுமானது செம்மலர். அப்படி எழுத்தை எளிமைப்படுத்திய  சமகாலப்  பெரும் ஊக்கி இந்த வலைக்கு முன்னாள் விரல் பிடித்து நடத்திச்சென்ற செம்மலர் இதழில். தோழர் ந.பெரியசாமியின் கவிதை.கண்ணெதிரே நெருங்கி வரும் பேரிடர் இந்த
விவசாயம்  அழிதல்.  கட்டுரையாய்,கோஷமாய்,போராட்டமாய் பெரு தாக்கத்தை ஏற்படுத்த ஒரு சிறு கவிதையாய் ஒரு பாடலாய் மக்களுக்கு அறிமுகமாகிப்பதியச்செய்யும் பெருங்கைங்கர்யம் இந்த கவிதை.  


விரவும் கங்குகள்.

தட்டு நிறய்ய நாணயங்கள்
தொட்டுக்கொள்ள கிண்ணத்துள்
கலவையாகச் சில்லறைகள்
கூடவே ரூபாய்த் தாள்களின்
கரைசலைக் குடித்தாலும்
கால்வயிறு கொள்ளாது...

விலைச்சலைத் தரும் நிலம்
வெப்பமாகிக் கொண்டிருக்க
நினைவில் கொள்வோம்
எங்கள் தெருவில் மழைகொட்டியது
உங்கள் தெருவில் பெய்ததாவென
வினவும் காலம்
வெகு நெருக்கத்திலிருப்பதை.

ந.பெரியசாமி.

4.7.10

காட்சிப்பிழை

அவர் எங்கள் சங்கத்துக்கு ஜென்ம வைரி. எங்கள் சங்கமும் அவருக்கு நம்பியார். தெருவில் எதிரெதிர் பார்த்துக்கொண்டாலும் முகமன் சொல்லாத ஒரு உர்ர் மனதுக்குள் உருமும் வழக்கம் பல வருடங்கள் நீடித்திருந்தது.
ஆடுகளத்தில் பாடுபொருள் மாறிக்கொண்டே வந்தது.சின்னவயது விளையாட்டைப் போல  பம்பரம், கோலி, கிட்டிப்புல், சாமியாடி, கள்ளம் போலீஸ்,சினிமா எனப் பருவங்களின் மாற்றத்தில் ஒன்றையொன்று மறக்கச்செய்தது. பிரச்சினைக்கான காரணங்கள் பழசாய்ப் போனது. அதுபோலத்தான் அவரும் நானும் ஒரு வார காலம் ஒரே கிளையில் பணிபுரியும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.மூன்றாம் நாள் எனக்காக பேருந்தில் இடம் போட்டுக்காத்திருந்தார்.  அன்றே  மதியம் சாப்பிடும் போது அவர் கொண்டு வந்த புளிக்காய்ச்சலையும்,அவியலையும் ஊட்டிவிடாத  குறையாக தட்டில் வைத்து நெகிழவைத்தார்.

நிகழ் அரசியல்,சினிமா,விலைவாசி,பணிச்சுமை கூடுதல் குறித்து போகும்போதும் வரும்போதும் பேசிக்கொண்டே
நெருங்கிப்போனோம்.ஆறாம் நாள் 'சில பழய்ய நினைவுகள் தித்திக்கிறது சில கசக்கிறது இல்லையா தம்பி என்று சொல்லி என் கண்ணுக்குள் பார்த்தார்.அன்று மாலை நானும் அவரும் மட்டும் தனித்திருந்தோம்.வழக்கமாக வரவேண்டிய பேருந்து பழுதானதால் ஒரு மணிநேரம் அலுவலகத்திலேயே காத்திருக்க நேந்தது.எதிர்த்தகடையில் ரெண்டு காபி கொண்டுவரச் சொல்லிவிட்டு வந்தார்.அந்த நேரம் தனித்திருந்த நான் சுவர்ணலதா பாடிய 'மாலையில் யாரோ மனதோடு பேச' என்கிற பாடலைப் பாடிக்கொண்டிருந்தேன் வந்தவர் அரவமில்லாமல் வாசலிலேயே காத்திருந்து கேட்டுவிட்டு முடிந்ததும் ஓடிவந்து கையப்பிடித்துக் கொண்டார்

'இவ்ளோ அழகாப்படுவியா தம்பி அதும் இந்தப்பாட்டு எனக்கும் அப்பிடிப்பிடிக்கும்'

என்று சொல்லிவிட்டு.பிடித்த பாடல் வரிகள் பிடித்த பாடகர்கள்,பிடித்த இசை அமைப்பாளர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார். நானும் சுமாராகப்பாடுவேன் எனச்சொல்லிவிட்டு அதேபாட்டை மனதொன்றிப்பாடினார்.என் எதிரிக்கும் ரசனையிருக்கும் என்கிற புரிதல் வர முப்பதாண்டுகள் கடந்துபோயிருந்தது.

நானாகவே வரைந்திருந்த அவரின் கரடுமுரடான ஜென்ம வைரியின் சித்திரம் மறைந்து போய் மிகமெல்லிய தென்றலாக நெருங்கிவந்தார்.எனக்கு பிடிக்காமல் இருந்த காபியின் மணம் இப்போது ஈர்க்கிற மணமும் கூடுதல் சுவையும் தந்தது.

1.7.10

பாட்டுக்காரி தங்கலச்சுமி.

பாட்டெனக்கு கிறுக்கு.ஒற்றைக்கை நெரிசலில் பேருந்தில் நிற்கையில்கூட பேருந்துக் கூரையில் தாளம் போடவைக்கும் இந்தச் சினிமாப் பாட்டுக்கள்.அடுத்து நிற்கும் விடலைப்பெண் முறைத்த பிறகும் கால்கள் தரைதட்டி சுதி சேர்க்கும்.தானியங்கி எந்திரத்தோடு போட்டி போட்டு பணம் எண்ணும் காசாளன் எனக்கு எதிர்க்கடையில் இசைக்கும் இளையராஜாவின் புல்லாங்குழல் கேடு விளைவிக்கும். எண்ணுதல் இடற முன்னப்பின்னக்கூடும் பணத்தாள்கள்.அன்று கூட என்னோடு மல்லுக்கு நின்றவனின் அலைபேசியில் ஒலித்த சிறுபொன்மணி அசையும் பாடலில் கறைந்து கோபம் குறைந்து போனது. கேதவீட்டின் முன்பந்தலில் இணையும் பம்பை மேலத்தின் வேகமும் முகாரிப்பாடலின் சோகமும் என்னை அனுதாபம் மறக்கச்செய்யும்.

அந்த மனநலக்கப்பகத்தில் கூட ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து சோகம் குறைத்துக் கொண்டிருந்தார்கள்.ராப்பகலாக் கண் முழிச்சி படிச்ச மாணவன் மதிப்பெண் குறைந்ததால் பிறழ்ந்து போனான் எஞ்சினியர் கனவிலிருந்து.
எந்த நேரமும் பேனாவும் கையுமாக உட்கார்ந்து கிறுக்கிக்கொண்டிருக்கும்ப அவனது பெற்றோரின் கண்களின்னாழத்தில் கிடக்கிறது இறை நம்பிக்கையும் மருத்துவ நம்பிக்கையும் குழைந்து.தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசாங்க ஊழியன் சோறுதண்ணி ஏதும் கேட்கவில்லை அவனுக்கு ஒரு நாற்காலி இருந்தால் மட்டும் போதும் அதை கழிப்பறைபோகும்போது கூட கூடக்கொண்டுபோவான்.பிள்ளையில்லாதவள்,கணவனால் கைவிடப்பட்டவள் என்று பெண்கள் தான் பெரும்பகுதி இருந்தார்கள்.ஒவ்வொருவருடைய பெற்றோரும் பாதுகாவலரும் அடுத்தவர் சோகத்தின் கணத்தை எடைபோட்டு தங்களை இலகுவாக்கிக்கொண்டார்கள்.

அப்படித்தான் வந்தாள் தங்கலட்சுமி 'மதியச்சாப்பாடு வாங்கணும்லா என் ஏனத்தக் காங்கல  ஒங்க ஏனத்த செத்த கடங்குடுங்க சாத்தூர் பாட்டி'.வல்லநாட்டுப் பக்கத்துல ஏதோ சின்னக் கிராமம். தங்கலச்சுமி வந்ததும் எல்லோரும் குஷியாகிவிட்டார்கள்.ஒவ்வொருத்தரும் ஏட்டி இங்க வா,ஏட்டி சாந்திப்பாக்கு ரெண்டு இனுக்கு தாயேன்,இன்னைக்கு பூரா ரஜினி பாட்டுத்தான்,ஏட்டி கோழி பிடிச்ச கதபோடேன் ஆளாளுக்கு அவளை தங்கள்கிருக்கைக்கு அழைத்தார்கள்.'என்னப்பாத்தா ஒங்களுக்கு கிறுக்கச்சியாத் தெரியுதாக்கும் காங்கவுட மாட்டிக்கியவ' என்று சொல்லிவிட்டு வெடுக்கெனத் திரும்பிப்போனாள்.

வந்துருவா பாருங்க என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பிரசன்னமானாள். 'சார் எனக்கு அஞ்சு சாந்திப்பாக்கு தருவியளா நாம் பாடுதன்' என்று கேட்டாள்.'சரி சொல்லுங்க சரி சொல்லுங்க' என பக்கத்திலிருந்தவர்கள் என்னை அந்த குழாமுக்குள் இழுத்துவிட்டார்கள்.அத்தனையும் காதல் தோல்விப் பாடல்கள், காதலின் தீபமொன்று ஏற்றினாளே,உச்சி வகிடெடுத்து பிச்சிப்பூ வச்சகிளி.நோயாளி பார்வையாளர்கள்,தாதிப்பெண்கள் எல்லோரும் கேட்டுக்கிறங்கிக் கொண்டிருந்தார்கள்.கடைசியாய் 'ஒத்தையடிப்பாதையில ஊருசனம் போகயில' என்கிற பாட்டைப் படிக்கும்போது பொல பொலவென அவள் கண்ணிலிருந்து உப்புச்சரம் உதிர்ந்தது.'எனக்கு சாந்திப்பாக்கும் வேண்டாம் ஒரு நோனியும் வேண்டா' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடுவிடுவென நடந்து மறைந்தாள்.

உருகி உருகிக் காதலித்தவன் இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டானாம்.இவள் காட்டுவேலை சித்தாள் வேலை பார்க்கும் பொழப்புக்காரி.அவன் அவளைவிடவும் கொஞ்சம் ஒசத்தியாம்.இப்படி மேலோட்டமான காரணக்கதைகளையும், சொல்லாத காரணங்களையும் வயிறு சொல்லுகிறது.அவள் கூட வளரும் இன்னொரு உயிரும்.