
வீடியோ திரைப்படத் திருவிழா சைன்ஸ் 2006-திருவனந்தபுரம் இரவு முழுக்க மழை, பகலில் மிதக்குளிர், மழையின் தடமான சகதி இல்லாத சாலைகள். சாலைகளில் கழிவுகளைக் கொட்டாத தனி மனித ஒழுக்கம் நிறைந்த மக்கள். வெறும் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு சந்தோசமாகக் கடந்து போகும் ஆட்டோ க்காரர்கள். சாதாரண உணவு விடுதிகளில் கூட நம்பிக்கை ஒளிரும் கண்களோடு பணியாளர்கள். அங்கே வீட்டைவிட்டு ஓடிவந்த சிறுவர்கள் இல்லாதது சாப்பாட்டு நேரங்களை நெருடல் இல்லாத நேரங்களாக்கும் திருவனந்தபுரம். நிழல் உருவங்களில் எதார்த்த கலைகளைப் பதிவு செய்கிற உணர்ச்சிக் குவியல்களின் களமாக திருவனந்தபுரத்தின்கலாபவன் திரையரங்கு. அது கேரள மாநில சினிமா அபிவிருத்திக் கழகத்திற்குப் ( ksfdc ) பாத்தியப்பட்டது. ஜான் ஆபிரகாம் தேசிய விருதுக்காக நாடெங்கிலும் இருந்து ஆவணங்கள், குறும்படம், அனிமேசன், இசை ஆல்பங்கள் என அறுபது படைப்புகள் போட்டிக்குத்தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் பெண்கள் வித்தியாசமில்லாமல் விசுவல் கம்யூனிகேசன், மாஸ் மீடியா கம்யுனிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி மாணவர்கள் பெருவாரிப்பேர் அடங்கிய சுமார் ஐநூறு பார்வையாளர்கள். சினிமாத்தனங்களின் ஆராவாரம் ஏதுமில்லாத ஆறு நாட்கள். சட்டமடிக்கப்பட்ட மிகை உருவங்கள், எதார்த்தத்தை மீறிய சாகசங்கள், தயாரிப்பாளர்களின் பணப்பெட்டிகளின் அகன்ற வாயோடு சதைத் தொழிற்சாலையாகிப்போன சினிமா உலகம். அங்கே முடை நாறும் அருதப்பழசான கதைகளோடு பார்வையாளர்களை ஆட்டிப்படைக்கிற மசாலாச்சினிமா. அவற்றிற்கு எதிரான கலகக்குரலாக ஜான் ஆபிரகாமின் படைப்புகள் ' அம்ம அறியான் ', 'அக்ராகாரத்தில் கழுதை' ஆகியவை . தனது படைப்புகள் மக்களால் மக்களுக்காக நடத்தப்படவேண்டும் என்பதற்காக ஒன்னும் ரெண்டுமாக உண்டியலடித்து சினிமா தயாரித்தவர் அவர். அப்படிப்பட்ட ஒரு சினிமாக்கலைஞனுக்கான பெரும் கௌரவமாக இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 10 முதல் 15 வரை நடந்த இந்த விழாவுக்கு கன்னடம் ஒரியா போன்ற பிரதேச மொழிகளிலும் உ.பி, ராஜஸ்தான், ம.பி, குஜராத், போன்ற ஆதிக்க மாநிலங்களிலிருந்தும் போட்டிக்கான படங்களும் ஆர்வலர்களும் கலந்துகொள்ளவில்லை. வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் கேரளத்திலிருந்தும் அதிக எண்ணிக்கையில் போட்டிக்கான படங்கள் வந்திருந்தன. சிறப்புக்காட்சியாக பல பாகங்களிலிருந்தும் படங்கள் வந்திருந்தன. ஒரே குத்தில் பத்துப்பேரைச் சாய்க்கிற போதும், பனிமலை புல்வெளியென அலைந்து டூயட் பாடுகிறபோதும் பார்வையாளனுக்கு கிலேசத்தை உண்டுபண்ணுவதைத் தவிர்த்து மசாலாப் படங்கள் என்ன செய்யும். வேண்டுமானால் முதலமைச்சர்களைச் செய்து தரும். யதார்த்தப் படங்கள் தருகிற அனுபவம் மிக மிக அலாதியானது. வெறும் இரண்டே நிமிடத்தில் ஒரு ஹைக்கூ கவிதை போல், மின்னலைப்போல் கதைசொல்ல முடிகிற சாலையின் பாடல் என்கிற தமிழ் குறும்படமும், ஒண்ணரை மணி நேரம் எவரெஸ்ட் சிகரங்களில் பதற்றத்தோடு நம்மைப்பிந்தொடர வைக்கின்ற ' ரைடிங் சோலோ டு தெ டாப் ஆப் தெ வேர்ல்ட் ' எனும் ஆவணப்படமுமாக சுமார் எண்பது படங்கள். இந்த விழாவில் குறிப்பிட்டுசொல்ல வேண்டிய இன்னொன்றும் இருக்கிறது. வரலாற்றின் பரபரப்பான பக்கங்களில் இடம் தேர்வு செய்தவர்கள், இந்தியப் பரப்பைக்க் குலுங்க வைத்த சம்பவங்கள், மகத்தான கலைஞர்கள் எல்லாம் இரண்டு மூன்று தரம் வேறு வேறு இயக்குனர்களால் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேதா பட்கர், அருந்ததி ராய்,சி.கே.ஜாணு, சுனாமி, அடூர் கோபலகிருஷ்ணன், சத்யஜிரே, அப்புறம் மணிப்பூர் பிரச்சினை. அதனால்தான்தொழில் நுட்பம், செய்நேர்த்தி எல்லாவற்றையும் தாண்டி நின்று, பரிசுகளைத் தங்கள் பக்கம் திருப்பிக்கொண்டன. ஆவணப்படங்களில் மாதவராஜின் இரவுகள் உடையும், ரஜூலா ஷாவின் ' பியாண்ட் தெ வீல் ' ( மணிப்பூரிலும், மத்திய பிரதேசத்திலும் சக்கரமில்லாமல் பானை செய்யும் இரண்டு பெண் கலைஞர்கள் பற்றியது ) இரண்டும் பரிசுக்கான தகுதிக்கு எதிர் எதிர் நின்றது அந்த AFSPA 1958 திரையிடப்படும் வரை. |
3 comments:
//ஒரே குத்தில் பத்துப்பேரைச் சாய்க்கிற போதும், பனிமலை புல்வெளியென அலைந்து டூயட் பாடுகிறபோதும் பார்வையாளனுக்கு கிலேசத்தை உண்டுபண்ணுவதைத் தவிர்த்து மசாலாப் படங்கள் என்ன செய்யும். வேண்டுமானால் முதலமைச்சர்களைச் செய்து தரும்.//
:)
//ஜான் ஆபிரகாமின் படைப்புகள் ' அம்ம அறியான் ', 'அக்ராகாரத்தில் கழுதை' ஆகியவை //
இந்த படங்களை பற்றி நிறைய படிச்சு இருக்கேன். ஆனா இது வரை பார்த்தது இல்லை :(. தமிழ்ல ஆவணப்படங்கள் நிறைய வருவது இல்லையா
(மன்னிச்சுடுங்க எனக்கு ஆவணப்படங்கள் பற்றி அறிந்து கொள்ள நிறைய ஆர்வம் இருக்கு. ஆனா அதை பத்தின விபரம் எதுவும் தெரியாது )
Post a Comment