9.9.10

பென்சன் வாங்காத விடுதலை வீரர் ( ஓசிச் சினிமா 2 )

பிச்சைமுத்து தாத்தா ரோட்டுக்குப்போய் ஒரு காப்பி வாங்கிக்கொண்டு தினத்தந்தி பேப்பரை வாங்கி உட்கார்ந்துகொள்வார்.நடப்புகளை படித்துவிட்டு ஒரு கட்டு சொக்கலால் பீடிவாங்கிக்கொண்டு அப்படியே கிளம்பிவிடுவார்.

தாத்தா நல்ல ஒசரம்.கருப்பும் வெளுப்பும் கலந்த நிறம்.இரண்டு முழங்கால் களுக்கும் நடுவில் ஒரு மாட்டுவண்டியை விட்டுத்திருப்புகிற மாதிரி கவட்டக்கால்.சவக்கு சவகுன்னு தான் நடப்பார்.வேலைக்குப்போகும் போது ஒரு காடாத்துணியில் தைத்த லங்கோடு,அல்லது டவுசர் போட்டுக்கொள்வார்.மத்த நேரங்களில் வெளேரென்று வீசியடிக்கிற வேஷ்டியும்.அதுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு காக்கிக்கலர் சட்டையும் போட்டிருப்பார்.ஊர் அதை யாரோ போலீஸ்காரரிடம் ஓசிகேட்டு வாங்கிப்போட்டுக் கொண்டதென நினைக்கும்.பாத்தி கட்டுவதற்குப்போனால்கூப்பிடு பிச்சைமுத்த என்று குரல் கேட்கும்.

குறுக்கும்ம் நெடுக்குமாக உழவடிச்ச பிஞ்சைக்குள் நடந்து மோவாய்க் கட்டையைச் சொறிவார்.தாத்தன் சொறிஞ்சு சொறிஞ்சே முகத்துல முடியில்லாம ஆக்கிட்டானய்யா என்று இளவட்டங்கள் சொல்ல மத்தியான வேர்வை குதுகலாமய் சிரிப்பாக மாறும். வாட்டம் பார்த்து நடுவாய்க்கால் போடுவார்.அவர் வாய்க்கால் போட்டால் தண்ணி கெதிபுடுங்கா ஓடும்.அதனாலேயே தோட்டக்காரர்கள் எய்யா அந்த மில்ட்ரிக்காரப் பிச்சமுத்தக் கூப்பிடுங்க என்று விருப்பப்பட்டுக் கேட்பார்கள்.அதிகம் பேசமாட்டார்,அதிர்ந்தும் பேசமாட்டார்.ஒரே ஒரு பல் தெத்திக்கொண்டிருக்கும்.அந்தப்பல்லும் புகைந்து கொண்டிருக்கிற பீடியை கவ்விக்கொள்கிற இடுக்கி மதிரித்தெரியும். அது மட்டும் தான் அவர் இந்த உலகத்துக்கு காண்பிக்கிற அவரது உள்விவகாரம்.குடிச்சிட்டுப் போய் ஐயன்னா சுந்தரப்பன் அவரை வம்புக்கிழுத்த போதும் கையை விலக்கிவிட்டு அங்கிருந்து கழண்டுகொள்வார்.யாருடனும் சண்டைக்குபோகாத அப்பிராணி என்று பேரெடுத்த அவரெப்படி பொண்டாட்டியைக் கை நீட்டி அடிப்பார்.'பொம்பளகள கை நீட்டி அடிக்கிறவன் மனுஷப்பெறப்பே இல்லெடா என்பார்.

ஆனால் கோபமே வராத இந்த மனுசனெப்படி மிலிட்டரில இர்ந்திருப்பான்,ஒரு வேளை கெழவன் ரொட்டி சுடப்போயிர்ப்பானோ,கருகிப்போச்சுன்னு அடிச்சு வெரட்டிர்ப்பாங்களோ.ஆளாளுக்கு வியாக்கியானம் சொல்லிக்கொள்வார்கள்.ஆனால் கருப்பாய்க்கெழவிக்கு அந்த பென்சன் வராமல் போன ஆத்திரம்.'உப்புக்கல்லுப்பெறாத மனுசன வச்சுக்கிட்டு என்னத்த எழவு கூட்ட' என்று விரக்தியாப்பேசுவாள்.அந்த நேரம் சுருக்கம் விழுந்த கன்னத்தில் ரெண்டு சொட்டு உருண்டோ டும்.

சாத்தூர் தாசில்தாராபீசுக்கு புருசனும் பொண்டாட்டியும் அலைந்த நாட்கள் நெறிஞ்சி நினைவுகளாய்க்குத்தும்.மேலப்புதூர் தாடிக்காரக்கணக்குப்பிள்ளைக்கு அஞ்சு ரூவா அழுது.அவரெழுதிக்கொடுத்த தாளெக்கொண்டுபோய் ஆர் ஐ யிடம் காட்டினால் ஊர்ப்பெரியவங்க ரெண்டு பேர் ஊர்ஜிதப்படுத்தி லட்டர் தரணும் என்று சொன்னார்.
தங்கிளியானிடமும்,ஊர்த்தலைவரிடமும்,ஹெட்மாஸ்டரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு போனால் அன்னைக்கு ஜமா பந்தியென்று ஸ்ரீவில்லிப்புத்தூர் போய்விட்டார்.ரெண்டு நாள் கூலிவேலைக்குப்போய் துட்டுத்தேத்திக்கொண்டு
அடுத்த செவ்வாய்க்கிழமை போய் சர்ட்டிபிகேட் வங்கிக்கொண்டு தாசில்தாருக்கு மனு எழுதிக்கொண்டுப்போய் சேர்த்தார்கள்.

எந்தூர்யா அந்தாளு

என்று செக்சன் க்ளார்க்கிடம் கூப்பிட்டு விசாரித்தார்.
' அது பூரா அவிய்ங்கள்ள இருக்காங்க அங்க எப்டிய்யா'
கூப்பிடு தலையாரியை என்று சொல்லி சக்கரையண்ணனை
' ஆமா எசமா ஊர்ல அப்டித்தா சொல்றாங்க'

ஒனக்குத்தெரியுமா

'இல்ல சார், ஆனா ஊர விட்டு ஓடிப்போய் பத்திருவது வருசம் இருக்கும் அதுக்குப்பெறகுதா வந்தான் அந்தாளு'

1947 க்குப்பெறகு 23 வருசம் போயிருச்சு இப்பத்தான்஡ திரும்பிவந்தானா

ஆமா சார் பர்மாவ்லருந்து நடந்தே வந்தானாம் ஊர்ல பேசிக்கிட்டாய்ங்க

நீயும் அந்தூர் தான

அவிய்ங்க வேற தெரு,நா வேற தெரு

போதிய எழுத்துபூர்வமான ஆதாரங்கள் கோரப்படுகிறது என்று பச்சை மையில் எழுதி சீல்போட்டு கட்டி மூலையில் போட்ட பிறகு நூலாம்படையும்,அந்துபூச்சிகளும் வசிக்கும் வீடானது அந்தக்கோப்பு. இது போதாதென்று மறுவாரம் வப்பாட்டி வீட்டுக்கு நடுராத்திரி சைக்கிளில் போன தாசில்தார் மாரடைப்பால் செத்துத் தொலைந்து விட்டார்.அந்த மரணத்துக்கும் இவருக்குத் தெரிந்த கொரில்லா சண்டை யுத்திக்கும் சம்பந்தம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.அன்று ரெண்டுபாட்டில் சாராயத்தை பொத்தையக் குடும்பனிடம் வாங்கி அடித்துவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்து ரெங்குப்பெட்டியைத் திறந்து  உடுப்புகளை மாட்டி நேதாஜி படத்தை எடுத்து வைத்து விறைப்பாய் ஒரு சல்யூட் அடித்துவிட்டு கீழக்கோயிலிலிருந்து மேலக்கோயில் வரை ஒரு நடை நடந்துவிட்டு படுத்தார். ரெண்டு நாள் கழித்து எழுந்து வழக்கம்போல மம்பட்டியைத் தூக்கிக்கொண்டு பாத்திகட்டப் போய்விட்டார். ஆனால் வருடா வருடம் ஊர்ப்பள்ளிக்கூடத்தில் நடக்கிற கொடியேத்தத்தன்று  ஒரு ஓரமாய் நின்று ஒரு பார்த்துவிட்டு பெருமூச்சோடு திரும்பிவிடுவார்.யாரவது கதர்ச்சட்டை போட்ட ஆட்கள் பேசுகிற பிதற்றல்களைக் கேட்க  அந்த இடத்தில் அவர் இருக்கமாட்டார்.

புகைப்படம்; நன்றி வெப் இமேஜ்
( தாத்தாக்கள் இருக்கும்அதில் பிச்சமுத்து தாத்தா இல்லை )

11 comments:

vasu balaji said...

பயாஸ்கோப்பு:)

ஆடுமாடு said...

'நேதாஜி கூட இருந்தனா இல்லையான்னு இவனுவ என்னத்த சர்பிகேட் கொடுக்கிறது. உங்க ரூல்சையும் ஆதாரத்தையும் ஒடப்புல போங்கடா போக்கத்தவங்களா...''

பிச்சைமுத்து தாத்தா, என் காதில் இப்படி சொல்வதாய் படுகிறது.

நேசமித்ரன் said...

//இரண்டு முழங்கால் களுக்கும் நடுவில் ஒரு மாட்டுவண்டியை விட்டுத்திருப்புகிற மாதிரி கவட்டக்கால்//

class

Keep going :)

(tamil font problem sorry :)
)

vasan said...

இந்திய‌ன் தாத்தா சாய‌ல் கொஞ்ச‌ம் லேசா தெரியுதே!!

Unknown said...

சுதந்திர வீரர்களை அடையாளம் கண்டு கொள்ளத் தெரியாத மக்களிடம், கையை கட்டி அவர்களது ஏக வசனத்திற்கு செவி சாய்ப்பதை விட தன் கையில் உள்ள மண்வெட்டியே சிறந்ததுன்னு என்ன அற்புதமா சொல்லிருக்காரு . அருமை நண்பரே.

காமராஜ் said...
This comment has been removed by the author.
காமராஜ் said...

நன்றி....

பாலாண்ணா,
ஏக்நாத்,
நேசன்,
சேது
வாசன் சார்

0

Blogger vasan said...

//இந்திய‌ன் தாத்தா சாய‌ல் கொஞ்ச‌ம் லேசா தெரியுதே!//
நான் இந்தியன் படம் பார்க்கும்போது பிச்சைமுத்து தாத்தா சாயல் இருக்கிறதே என்று நினைக்கவில்லை.அது கதை.இது நிஜம்.
அவர் சாகிற வரை தன்னை ஐ என் ஏ வின் சிப்பாய் என்று பீத்திக்கொள்ளவே இல்லை.பென்சனும் வாங்கவில்லை.யாரையும் பழிக்குபழி வாங்கவும் இல்லை.
ஆனால் அவரின் மௌனம் இந்தப்பக்கம் குத்தி அந்தப்பக்கம் வாங்கும்.

velji said...

இந்த 2வது சினிமா வேறமாதிரி.70MM!.

உயிரோடை said...

க‌தை ந‌ல்லா இருக்குங்க‌ அண்ணா

vinthaimanithan said...

என்ன கொடுமன்னா... எங்கூர்ல எனக்குத் தெரிஞ்சே தியாகிப்பட்டமும்.. பேருக்கு பென்ஷனும் வாங்குற பெரிசும் இருக்காரு... பண்ணுன தியாகம் உப்பு சத்தியாகெரகத்துல நடைபயணமா வந்தவங்களுக்கு ஒருவாய் தாண்ணி குடுத்தது மட்டுமே... அதச் சொல்லியே, பிரசிடெண்டு, கவுன்சிலர், ஊர்நாட்டாமை எல்லா போஸ்டிங்லயும் ஆணி அடிச்சி ஒக்காந்துட்டாரு... ஊர்ல பாதிநெலம், பண்ணைவீடு எல்லாமும்தான்....

நெஜமா அடியும், மிதியும் வாங்குனவங்க குடும்பமெல்லாம் இன்னும் அதே மாதிரிதான் இருக்கு...

முன்னாள் பெரதமரு வாஜ்பாய் என்ன தியாகம் பண்ணி ஜெயிலுக்குப் போனாருன்னு தெரியுமா? வயித்தெரிச்சல்ங்க. உங்க ப்ளாக்ல எந்த லிமிட் வரைக்கும் அரசியல் பேசலாம்னு தெரியல... அதுனால நாம் அப்புறமா அதப்பத்தி பேசுவோம்

ஆ.ஞானசேகரன் said...

இந்த பிச்சைமுத்து தாத்தா போல எத்தனை பேர்கள் இருக்கின்றார்களோ?.. மனசை பிழிய செய்யும் பகிர்வு