கம்மாயில் குளித்துவிட்டுக் கல்மண்டபத்தில் கதை பேசிக்கொண்டிருந்த போது எல்லோரும் அவரவர் தங்கைகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.கருப்பசாமி மட்டும் சுந்தரவள்ளியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான் 'ஏ ஊத்தாத அது ஒங்க சித்தி மக தான' என்று கூல்பானை சொன்னதும் பிடிகயிறு அறுந்து விழுந்ததுபோல மடேரென்று அந்தரத்திலிருந்து விழுந்தான் கருப்பசாமி.பள்ளிக்கூடம் போகிற போதெல்லாம் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு போவதும்,வாங்குகிற சத்துமாவில் முக்கால் வாசியை அவளுக்கு ஊட்டிவிட்டு வீட்டுக்கு வந்து கூல் குடிப்பதும்.அம்மா குடுத்த ஐந்து காசில் அவளுக்குப்பிடித்த குருவி ரொட்டி வாங்கிக் கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வந்து போனது.
வெறி வந்தது 'எலே அவாளுக்கு ஆனந்தனவுட நாந்தான் பிடிக்கும் என்னத்தான அண்ணேன்னு கூப்டுவா,அவன மொட்டமூக்கான்னுதான் கூப்டுவா' என்றான்.கூல்பானை அப்படித்தானோ என்று தோற்றமாதிரி முகத்தை வைத்துக்கொண்டான்.அந்த கூட்டத்தின் லீடர் பாஸ்கரன் கெக்கெக்கே என்று சிரித்துவிட்டு.எலே கருப்பா நீயி நெனக்கிறது தப்பு பாசமிருந்தா மட்டுந்தா அப்பிடி பட்டப்பேர் வப்பாக, கூடப்பெறந்தவாட்ட வசவு வாங்கணும் அதெல்லாம் ஒரு சொகம்' என்று சொன்னார்.எல்லோரும் ஆமோதிக்க கருப்பனால் ஏத்துக்கொள்ள முடியவில்லை.
'போங்கடா ஒங்க கூட வந்தம்பாரு' என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வீட்டுக்கு வந்துவிட்டான்.
நேரே வந்து கம்மம்புல் இடித்துக்கொண்டிருந்த அம்மாவிடம் போனான்
'என்ன இன்னுமா கம்பு இடிக்கல' என்று கேட்டான்.
'எனக்கென்ன பொட்டப்பிள்ளயா இருக்கு ஏண்ட வேல எடுத்தவேல செய்ய '
'நா என்ன ஒனக்கு முள்ளுத்தறிக்கலயா,தண்ணி சொமக்கலயா,கடைக்கு போகலையா,'
'ஆமா பெரிய்ய கட்டகொம்பு மஞ்சளரைச்சயா,நாத்து நட்டயா,களையெடுத்தயான்னு கேக்கவந்துட்டான்.எலே ஒனக்கு ஒரு உப்புத்தண்ணி,காப்பித்தண்ணி வக்கத்தெரியுமா ?'
என்று கேட்டுவிட்டு நெஞ்சுக் குழியிலிருந்து உருமிக்கொண்டு உலக்கையை உரலுக்குள் மொந்து மொந்தென்று போட்டாள் தரை அதிர்ந்தது.
கொஞ்சநேரம் மௌனமாக இருந்து விட்டு 'அப்ப நீ ஏ பொம்பளப்பிள்ள பெக்கல'
'அத ஙொப்பண்ட போய்க்கேளு அந்தா சீட்டு வெளாட்றார்' என்று காவேரிச் சித்தி சொல்லவும் சுத்தி நின்ற பொம்பளைகள் எல்லாம் ஓவெனச் சிரித்தார்கள்.
'பல்லப் போட்டு இளிக்காதிக எனக்கு ஏ அக்கா தங்கச்சி இல்ல'
' மயினி எதாச்சும்பண்ணு நாளைக்கே தங்கச்சி வேணுங்றான்'
'எம்மா நீ வீட்டுக்கு வா எனக்கு தங்கச்சி' வேணும் என்றான்.
'ஆமா றெங்குப்பெட்டிக்குள்ள தங்கச்சி வச்சிருக்கா போயி எடுத்துக்குடுத்தா'
மூக்காயி கெழவிசொன்னதும் வெடிச்சிரிப்புச்சத்தம் கேட்டது.
'ஏ வெவஸ்த கெட்ட பெயலே இந்தா துட்டு, போ, ஏதாச்சிலும் வாங்கித்திண்ணு' என்று அம்மா விரட்டிவிடுள்.
பிறகு விளையாட்டில் மறந்து போய் ராத்திரி சாப்பிட்டு தட்டுக் கழுவாமல் எந்திரிப்பான்,
'ஹும்ம் ஒரு போட்டப் பிள்ள இருந்தா எல்லாத்தயு கழுவி வைக்கும்' என்று அம்மா அலுத்துக்கொண்டவுடன்கருப்பசாமி மீண்டும் முருங்கை மரம் ஏறுவான். அவனது கூட்டாளிகள்எல்லோருக்கும் அக்கா தங்கைகள் இருக்கிறதும்.அவர்கள் சண்டை போட்டுக்கொள்வதையும் அம்மாவிடம் சொன்னான்.நந்தவனத்தில் பூப்பறித்தால் கொடுப்பதற்கு ஆளில்லை. சாத்தூருக்குப் போனால் கேர்ப்பின்,வளையல் வாங்கிக் கொடுக்கத் தங்கையில்லை என்று சொல்லிக்கொண்டே அழுதுவிட்டான்.இனிமேலாவது தங்கச்சிப் பாப்பா பிறக்குமா என்று கேட்டதும்.
'ஏ கூறு கெட்ட செம்பட்ட நாயி சும்மா படுத்து தூங்கு'
என்று அவனைப் பிடித்துக் கட்டிக்கொண்டாள்.முனகிக்கொண்டே படுத்திருந்தவனுக்கு தூக்கமும்,கனவும் வந்தது.
அந்தக்கனவில் ஒரு பட்டுப் பாவாடை உடுத்திய தங்கையை கைப் பிடித்தபடி கூல்பானை,தங்கராசு,முனியப்பன்,கொட்டாம்பெட்டி,கந்தசாமி,பவுலு,மாசிலான் வீடுகளுக்கு போய்ப் பெருமையடித்துக்கொண்டான்.விடிந்து எழுந்து கோரப்பாயைத் தடவிப்பார்த்தான் தங்கையும் இல்லை அம்மாவும் இல்லை.இப்படியே காலங்கள் ஓடி நான்காம் வகுப்புக்கு போனபோது பொம்பளப் பிள்ளைகள் பக்கத்தில் ஒரு ஆள் அதிகாமாகத் தெரிந்தது.பிரேமா. கோவில்பட்டியிலிருந்து பள்ளிக்கூடம் மாறி இங்கே வந்திருந்தாள்.அரக்குக்கலர் பட்டுப்பாவாடை,மஞ்சள் சட்டை,சிகப்புக்கலர் ரிப்பன்,பவுடர் முகமாக சினிமாவில் வருகிறமாதிரி இருந்தாள். பயலுகளெல்லாம் பின்னாடி அலைந்தார்கள்.இவனும் அலைந்தான் அண்ணன் முறைக்கு அப்ளிகேசன் வைத்துக்கொண்டு. இவனுக்கு கையெழுத்து அழகாக இருக்கும்.ரேங்கும் முதல் ரேங் அதனால் பிரேமாவும் இவனும் சினேகிதமானார்கள்.அவள் விஷேச நாட்களில் அவள் வீட்டிலிருந்து முறுக்கு சீடைப் பலகரங்கள் கொண்டுவந்து தருவாள்.இவன் கடலைப்பிஞ்சையில் செடி பிடுங்கி பம்புசெட்டில் தூர் கழுவி செடியோடு கொண்டுபோய்க் கொடுப்பான்.
ஒரு பங்குனிப்பொங்கலன்று பிரேமா வீட்டுக்கு பொங்கச்சோறு, தேங்காய்ச் சில்லு,திணைமாவு,வாழைப்பழம் எடுத்துக்கொண்டு பிரேமா வீட்டுக்குப் போனான்.வாசலிலேயே நிற்கவைத்து அவளது பாட்டியும்,அம்மாவும் குறுக்குக் கேள்விகள் கேட்டார்கள்.தங்கச்சிக்கு குடுக்கவந்தேன் என்று நீட்டிய எல்லாவற்றையும் புறங்கையால் ஒதுக்கிவிட்டார்கள்.'கன்னியம்மா மகந்தானப்பா நீயி நாங்க குடுக்றத நீங்க திங்கலாம்,ஒங்கவீட்டு திம்பண்டத்த நாங்க தொடக்கூடாது,ஒங்க பிரண்டு பிடிக்றதெல்லாம் பள்ளிக்கொடத்தோட வச்சிக்கொங்க'என்று சொன்னார்கள்.அப்படியே வாய் வரைக்கும் வந்த ஏன் என்கிற கேள்வியைச் சுமந்து கொண்டு வந்து அம்மாவிடம் கேட்டான்.
ஆறாம் வகுப்புக்கு புதூருக்குப்போனபோது பனிரெண்டு பெண்கள் அவனது வகுப்பில்.அங்கேயும் இன்னொரு பிரேமா இருந்தாள் மைதிலி என்கிற பெயரில்.பிரேமா வீடாவது ஓட்டு வீடு மைதிலியின் வீடு அரண்மனை மாதிர்டி இருக்கும்.இரும்புக் கதவுப்பக்கம் கூடப்போக முடியாது. ஆனாலும் வாடகைத்தங்கையோடு முன்று வருடம் படித்தான்.சாத்தூருக்கு சுற்றுப் பயணம் கூட்டிக்கொண்டு போகும்போது அங்கே பாசிமாலை வாங்கி அவளுக்குக்கொடுத்தான்.ஊருக்கு தெற்கே இருக்கும் கம்மாக்கரையில் புளியம்பிஞ்சுகள் பறித்துக்கொண்டுவந்து கொடுத்தான்.மொட்டைப்பனையில் ஏறி கிளிக்குஞ்சு பிடித்துக்கொண்டுவந்து கொடுத்தான்.
கல்லூரிக்குப்போனதும் வல்லம்பட்டி பேருந்தில் வாடிக்கையாக வரும் லச்சுமியாபுரம் சின்னத்தாயை.முறைசாராக்கல்விக்கு ஆசிரியராகப் போனபோது சாத்தூர் அக்ரஹாரத்து கிருஷ்ணவேனியை,இப்படித் தற்காலிகத் தங்கைகளை த்தெரிவு செய்தபடியே பஞ்சாயத்து யூனியன் க்ளார்க்காக மாறினான். காலங்களும்,நடைமுறைகளும் மாறிக்கொண்டே போனது என்றாலும் கருப்பசாமிக்குள்ளிருக்கிற ஏக்கம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே போனது.
இப்படித்தான் ஒருதரம் நடராஜாத்தியேட்டரில் பாசமலர் படம் பார்க்கப்போனார்கள்.சிவாஜியும் சாவித்திரியும் வருகிற காட்சியெல்லாம் பக்கத்திலிருந்த கல்லூரிப்பையன்கள் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கருப்பசாமியோ கண்ணைக்கசக்கிக் கொண்டிருந்தான்.அது நிழல்,அது ஒரு படைப்பு என்கிற அறிவார்ந்த எல்லை தாண்டி சில வசனங்கள் உலுக்கிவிடும்.எழுந்து பாதியிலேயே வீட்டுக்கு வந்துவிடுவான்.
தர்மபுரியிலிருந்து ஒரு பெண் புதிதாக அவனது அலுவலகத்துக்கு பணிக்குவந்தார்.கருப்பசாமி தான் அவளுக்கு வேலை பழகிக் கொடுத்தான். அந்தப்பெண் சரோஜா தனியாக வீடுபார்க்கிற வரை அவனதுவீட்டிலேயே தங்கவைத்தான் அவளும் குடும்பத்தோடு அண்ணி, மருமகப்பிள்ளை என்று ஒட்டிக்கொண்டாள்.ஆறுமாத அவகாசத்தில் தர்மபுரிப் பக்கமே மாறுதல் வாங்கிக்கொண்டு போய்விட்டாள். இரண்டு வருடம் கழித்து ஒரு திருமணப்பத்திரிகை வந்தது.சரோஜா தான் அனுப்பியிருந்தாள். சேலத்தில் முகூர்த்தம் அதுவும் புதன் கிழமை.ரெண்டுநாள் விடுப்பெடுத்துக்கொண்டு போனான். அலுவலகத்தில் அவனை அறக்கிறுக்கென்று பேசிக் கொண்டார்கள். வாழ்த்தி ஒருதந்தி அனுப்பலாம்,ஒரு நூறு ரூபாய் வரைவோலை எடுத்து அனுப்பலாம் என்னமோ கூடப்பிறந்த தங்கச்சி மாதிரி ரெண்டு நாள் லீவெடுத்து போகனுமா என்று கேட்டார்கள். அண்ணன் என்பது வெறும் எழுத்தோ அவார்த்தையோ இல்லை அது உறவு என்று சொல்லுவான்.முதுகுக்குப் பின்னாடி களுக்கென்று சிரிப்பார்கள். ரோஜாவே சிரித்தாலும்கூட எனக்குக் கவலை இல்லை என்று சொல்லுவான்
சுந்தரவள்ளி வீட்டுக்கு வந்திருந்தாள்.அவளது அண்ணனோடு இடப் பிரச்சினையில் சண்டையாகி பேச்சுவார்த்தை இல்லையாம்.மகளுக்கு தலைக்கு தண்ணீ ஊத்தவேண்டுமாம். தாய்மாமன் வீட்டிலிருந்து துணியும் சீரும் கொண்டு வரவேண்டுமாம். தலையைக்குனிந்தபடியே சொல்லிக்கொண்டிருந்து விட்டு. 'நீங்கதாம்னா தாய்மாமெ முற செய்யனும்' என்று சொன்னதும் கண்கள் பொங்கிக்கொண்டு வந்தது.சட்டையைப் போட்டுக்கொண்டு பால்பாக்கெட் வாங்கப்போவதாக வெளியேறிப்போனான். ஒரு சிகரெட் வாங்கி ப்புகைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திவிட்டு வீட்டுக்கு வந்தான்.
கருப்பசாமியின் அம்மா போன் பண்ணி 'பித்தள அண்டா வாங்கிருப்பா, பட்டுசேல நல்லதாப்பாத்து வாங்கிரு நீதான்னு வந்துட்டா, அவளும் நீ தூக்கி வளத்தவாதானெ என்று தினம் ஒருதரம் சொல்லிக்கொண்டே போனாள்'.
ஆட்டோ பிடித்து ஊர் நெருங்கும்போது பரவசமாக இருந்தது.வீட்டில் கொண்டு போய் சாமன்களை இறக்கி வைத்ததும் கூட்டம் கூடியது.கருப்பசாமியும் அவன் மனைவியும் பெருமிதத்தோடு உட்கார்ந்திருக்க இரண்டு நாற்காலிகள் எங்கிருந்தோ கொண்டு வந்தார்கள்.சீரை எடுத்துக்கொண்டு ஊர்வலம் வர ஒத்தையால் கொட்டு வந்திருந்தது.தாம்பூலத்தட்டு எடுத்து கருப்பச்சாமியின் மனைவி மங்களச் சாமான்களை அடுக்கிவைத்தாள்.அப்போது ஒரு வாடகைக் கார் வந்து நின்றது.சுந்தரவள்ளியின் சொந்த அண்ணன் குடும்பத்தோடு வந்து இறங்கினான்.அதைப்பார்த்த சுந்தரவள்ளி குலுங்கிக்குலுங்கி அழுதாள். கருப்பசாமிக்குத் தெரியும் அந்த அழுகையில் பிரிந்தவர் கூடும் வெளிப்பாடு. எத்தனை முறை அழுதிருக்கிறான்.
15 comments:
ஒன்னும் சொல்லத்தோனல சார்.. அப்படியே கட்டிப்போடுது எழுத்து.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல கதைய படிச்ச திருப்தி.. ரொம்ப நன்றி காமு சார்...
Arumai nanbare!
கதை அருமை. வாழ்த்துக்கள்
கருப்பசாமிகளை சுமந்துகொண்டு ஊர் சென்று வந்த உணர்வு.
வாழ்த்துகள் தோழர்
கருப்பசாமிகளை சுமந்துகொண்டு ஊர் சென்று வந்த உணர்வு.
வாழ்த்துகள் தோழர்
அண்ணா.....ரொம்ப வித்தியாசமான ஒரு பார்வை. ஒரு பதிவு.
துணை சேர்க்க வயது பெண்களை தேடி அலையும் போது இங்கே ஒருவர் தங்கை முறை உறவுக்கு
ஏங்குவது அன்பிற்கு உள்ள...குறிப்பாக உடன் பிறந்த பெண் பிள்ளைகளுடனான அன்பின் இறுக்கத்தை காண்பிக்கிறது..!
விவரம் தெரிந்த வயதில் தங்கையை வெளியில் அழைத்து போகும்போது வேற்று ஆண்கள் பார்த்தால்
கோபமாக வரும்....அப்பொழுது சகோதரிகள் இல்லாத நண்பர்களை பார்த்து ஏக்கம் கொண்ட பொழுதுகள் உண்டு....
பின்பு சிறிது காலம் போன பொழுது தெரிந்தது பெண்பிள்ளைகளுடன் பிறந்தால் எவ்வளவு கொடுத்து வைப்பதென்று....
அதற்காக பாசமலர் படத்தில் இருப்பது போல் சராசரி வாழ்க்கையில் இருப்பது சற்று கடினம்....
ஆயினும் பெண்கள்தான் சக்தி...
அதை உணர தாய் மட்டும் போதாது....சகோதரிகளும் வேண்டும்....
அருமையான பதிவு அண்ணா.
நெகிழ்வான கதை....வாழ்த்துக்கள்
இப்படி நானும் ஒரு அண்ணனுக்காக ஏங்கிருக்கிறேன் ..
கூடப் பிறக்காமல் யாரும் அண்ணனாக முடியாது ...தங்கையாகவும் கூடத்தான் ..
அருமையான சித்திரம் காமராஜ் சார் ..
நன்றி கண்ணன்.
நன்றி ஏக்நாத்
நன்றி சேது
மதுரை சரவணன்
நன்றி லெமூரியன்.நலமா ?.எழுதவே இல்லை.எழுது.பேசுவோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.இனிய தமிழ்.
பத்மா said...
//இப்படி நானும் ஒரு அண்ணனுக்காக ஏங்கிருக்கிறேன் ..//
தற்காலிகமானாலும் நிழல் நிழல்தான்.இருப்போர்க்கு ஒரு தங்கை.இல்லார்க்கு எத்தனை?ம்ம்ம். இப்டி பஞ்ச் டயலாக் சொல்லி தேத்திக்குவோம்.
ஆனாலும் இது....
நிஜம....ல்...ல
கதை.
கண்ணை கசக்க வைக்கிறதே உம்ம வேலையாப் போச்சு.
களத்துமேடு,கம்பக்காடு,காத்து கருப்பு,கரட்டாண்டி,கேடா கொம்பு, காடையுத்து,ஊர சுத்துன காத்தோடு எங்களையும் சுத்த வச்சுடீங்கனே... வாழ்த்துகள் அருமையான அம்மூறு பதிவு...
தலைப்பும் பகிர்வும் மிக அருமை அண்ணா
Post a Comment