18.9.10

தவறாகப் புரியப்படும் புரட்சியின் அர்த்தம்.

ஒரு காலத்தில் ஊட்டி,கொடைக்கானல் சென்னை என்று மினுக்கிக் கொண்டிருந்த இந்த ஆங்கிலப்பள்ளிகள் மளமளவென்று பட்டிதொட்டிகள் வரை விஸ்வ ரூபமெடுத்தது. அதற்குக் காரணம் போட்டி என்று சொல்லப் பட்டது. இருந்தாலும் தனது குழந்தை சீருடை அணிந்து , ஷூ மாட்டிக் கொண்டு , டைகட்டிக்கொண்டு போகிற அழகை கண்டு உள்ளூரப் பெருமிதம் கொள்ளும் பெற்றோரின் கனவும் சேர்ந்திருந்தது. பெருமுதலாளிகளின் குழந்தைகள், நடிகர்களின் குழந்தைகள்,மந்திரிகளின் குழந்தைகள் மட்டுமே அங்கு நுழையமுடியும் என்றிருந்த மேட்டிமை இருந்தது ஒருகாலத்தில்.அதை நீர்த்து போக வைத்து நடுச்சூரங்குடி கிராமத்து விவசாயியின் மகனும் நுழையலாம் என்று கதவும் திறந்துவிட்டது சந்தைப்படுத்தும் நடவடிக்கை.ஒருகாலத்தில் நடுத்தர வர்க்கத்தின் சொத்தாக இருந்த தொலைக்காட்சி இன்று இலவசமாக வீடுதோறும் வந்து உட்கார்ந்ததைப் போல, நினைத்துப் பார்க்கமுடியாத உயரத்தில் இருந்த தொலைபேசி இப்போது கடைகோடி கிராமத்து சித்தாளுக்கும்  செல்லப் பிள்ளையானது போல  இந்த  ஆங்கிலக் கல்வியும் வெகு லாவகமாக சந்தைப்படுத்தபட்டு விட்டது.


கொஞ்சம் நிலம், ஒருகட்டிடம், இரண்டு மூன்று பழைய்ய வேன்கள் இருந்தால் போதும் யாரும் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆகிவிடலாம் என்கிற நிலலைமையை ஏற்றுக் கொள்ளப்பழகிவிட்டோம். கடமை- உழைப்பு கருணை, அன்பு, அல்லது தொண்டு, உயர்வு இப்படியான வெற்று வார்த்தைகளை சுற்றிப்போட்டு அவர்களுக்கென தனி இலச்சினை கூட தயாரிக்க முடிந்தது. ஆனால் மாதம் துவங்கிவிட்டால் ஈட்டியைக்காட்டித் துட்டைப் பறித்துக்கொள்கிற நடைமுறையை கள்ளத்தனமாக நுழையவிட்டு கல்வியை தராசில் வைத்து விற்க அனுமதித்துவிட்டது அரசு. ஒரு மாணவனிடம் மாதம் நாலாயிரம் ஐயாயிரம் சாதாரணமாகப்பிடுங்கும் பிரபல ஆங்கிலப்பள்ளிகள் கூட அந்த மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்தால் அந்தப்பள்ளி ரொம்ப ஸ்ட் ரிக்டான பள்ளி என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கப்படும்.


கட்டணம் வசூலிப்பதில்,சம்பளம் கொடுப்பதில் எந்தவிதக்கட்டுப்பாடும் இல்லாத தம்பட்டக் காளைகளானது ஆங்கிலப்பள்ளிகள்.சீருடைகள்,நோட்டு புத்தகம், கணினி, போக்குவரத்து, ஐ டி கார்டு, அப்புறம் ஆண்டு இறுதியில் சினிமாப் பாட்டுக்கு ரெக்கார்டு டான்ஸ் ஆட சிறப்பு அலங்காரம் என அவ்வப்போது கறக்கப்படுவதை கணக்கு வழக்கில்லாமல் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டோம். வெளியே எல்லாவற்றையும் இலவசமாக சொல்லிக்கொடுத்து,உதவித்தொகை கொடுத்து கல்வி கொடுக்க ஒரு ஏற்பாடு இருப்பதை மெல்ல மெல்ல மறந்து போக பழகிக்கொண்டோ ம்.ஆனால் இதே தாய்மார்கள் தான் அன்று வடபழனியில் ஓசியாக தொலைக்காட்சிப்பெட்டி வாங்குவதற்கு மூனு மணிநேரம் வெயிலில் காத்துக்கிடந்தார்கள் இந்த விநோதம் மட்டும் புரிந்துகொள்ளமுடியாத புதிராக இருக்கிறது.


அது ஒரு புறம் கிடக்கட்டும்.


இந்த மாணவர்கள் இருக்கிறார்களே அவர்கள் தொலைக்காட்சிப்பெட்டி வெளிச்சத்திலிருந்து எழுந்து  நேரடியாக இந்த கட்டண  இருட்டறைக்குள் தள்ளப்பட்டு விடுகிறார்கள். ஆதலாம் புற உலகம் பற்றிய அவதானிப்பு .0001 சதமானம் கூட இல்லாத பந்தயக் குதிரைகளாக சீருடை தறிக்கப்பட்ட ரோபோக்களாக மாற்றப்படுகிறார்கள்.இந்த வார்த்தை கொஞ்சம் எரிச்ச லூட்டும் . இருந்தாலும் உண்மை. அறுபதுகளின் இறுதியில் கிராமத்து பள்ளிக்கூடத்தில் சத்து உப்புமா போடுவதற்கு அந்த மஞ்சள் மாவையும் டால்டாவையும் எடுத்துக்கொண்டு போன தலைமை ஆசிரியர் அதை சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொண்டு. அன்று மதியம் கம்மங்கஞ்சி ஊற்றினார். அந்த தவறை சுட்டிக் காட்டவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும்  நான்காவது ஐந்தாவது படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பத்துப்பேர் பள்ளியை கண்டித்து மதியம் மர நிழலில் நிற்க முடிவெடுத்தோம்.கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் கடந்து போயிருக்கிறது இந்த நாற்பாதாண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் வந்திருக்கிறது ஆனால் இப்போதிருக்கிற ஆங்கிலப்பள்ளி மாணவர்களுக்கு அப்படியொரு சிந்தனை இருக்கிறதா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கட்டபொம்மன், காந்தி, சுதந்திரம், சத்தியாக்கிரகம் என்கிற பாடங்கள் படித்துவிட்டு அதை ஒரு சிறிய அளவிலேனும் செய்முறைப்படுத்த இந்த ஆங்கிலப்பள்ளிகளில் அனுமதி இருக்கிறதா ? இருக்கவே முடியாது.காரணம்

போட்டி.அறையாண்டுக்குள்ளே முழு ஆண்டு பாடத் திட்டத்தை முடித்து விட்டு மாதிரித் தேர்வுக்கு தயார்படுத்துகிற போட்டி. அந்தக்குழந்தைகள் போராட அனுமதிக்க வேண்டாம் நண்பர்களே விளையாடக் கூட அனுமதிக்கப் படவில்லை என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.வெயில்,புழுதியோடு கிடைக்கிற சிநேகம்.வெளிக்காற்று,சேஷ்டை களோடுகிடைக்கிற புற உலகம் மறுக்கப்பட்ட குழந்தைகள் தார்மீக எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களாக மாறிப் போகிறார்கள்.

ஆனால் அரசுப்பள்ளிகளில்,தனியார் நிர்வாகம் நடத்தும் தமிழ்வழிப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இது ஓரளவு ருசிக்கக்கிடைக்கிறது.சின்னச்சின்ன தவறுகளுக்கெதிரான கேள்விகள் முளைக்கிறது.அதை கூர்தீட்ட உண்மை யான  ஜனநாயக அமைப்புகள் சமூக வரலாறுகள் சொல்லிக் கொடுக்கிறது. கட்டண உயர்வு, கழிப்பறை வசதி எனத்தொடங்கி, ராகிங்குக்கு எதிராக, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக, அணைவருக்கும் வேலை கேட்டு வீதியில் இறங்கும் உக்கிரமான போராட்டங்களையும் சேர்த்து ப்படிக்கிற இடமாக அரசு பள்ளிகள் திறந்து கிடக்கிறது. ஆனால் எனக்குத்தெரிந்து ஆங்கிலப்பள்ளி மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடியது புகையிலைக்கு எதிராக கூடக்கிடையாது. அவர்கள் சமூகப்புரட்சியெல்லாம் ஆண்டு விழாக் களின் மேடைகளில் போடுகிற மாறுவேடப்போட்டியோடு முடிந்துபோகிறது.

சரி கிடக்கட்டும் படிக்கிற பிள்ளைகளுக்கு எதற்கு போராட்டமெல்லாம்.

17.9.2010 அன்று தனியார் பள்ளிகள் வேலை நிறுத்தம்.

இப்போ தமிழகத்தின் தலைபோகிற பிரச்சினை என்னவென்றால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் போராடுவதும் புரட்சி பண்னுவதும்தான். எல்லா நாட்டிலும் புரட்சிக்கு ஒரு அர்த்தம். இங்கே மட்டும் வேறு அர்த்தம்.புரட்சி நடிகர், புரட்சிக்கலைஞர், புரட்சித்தமிழன்,புரட்சித்தலைவி இப்படிப் பெயர் களிலேயே புரட்சி முற்றாக செலவழிந்து போய் விட்தால் நியாயமாக எதாவது முயற்சி செய்தால் " ஆமா வந்துட்டாய்ங்கப்ப்பா " என்று கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. பாரதி கேட்ட தமிழன் கிடைக்கவே இல்லையோ. கிக்கட்டும்.


இந்த தனியார் பள்ளி சேகுவாராக்கள் ஏன் போராடுகிறார்கள்.கட்டணம் வசூலிப்பதில் வரைமுறை வைத்ததற்கு எதிராக இல்லை. அதற்கு ஆவியைக்கொடுக்க அவர்களுக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது.இருக்கிற கள்ளப்பணத்தில் இருந்து கொஞ்சம் எடுத்து புழக்கத்தில் விட்டால்போதும் வளையாத செங்கோல் களிமண்ணாகி விடும்.ஜனநாயகத் தூண்கள் ரெண்டும் தனக்குத்தானே முதுகெலும்பை உறுவிக்கொண்டு படுத்துவிடும். படுத்து விட்டது.

பின் எதற்காகப் போராடுகிறார்கள்.

இந்த தனியார் நிறுவணங்களுக்கென இஒதுக்கீடு.கட்டண வரைமுறை. ஒழுங்கு விதிகள் இருந்த போதும் அவை எதுவும் கடைப்பிடிக்கப்
படுவதில்லை. அதுபோதாதென்று உரிமம் வாங்கும்போது சில விழுக்காடுகள் ஏழைகளுக்கு இலவச உதவி செய்வதாக துணை விதிகளில் சொல்லப் பட்டிருக்கும். அப்படி தர்ம காரியங்களுக்காக ஒரு தொகை ஒதுக்கப்பட்டு அதுவும் சேர்த்து விற்கப்படுவது தான் தனியார் தர்மம்.அப்படியே ஏழைகளுக்கு உதவினால் கூட அது தன் சுய ஜாதி, சுய மத அடிமைகளுக்கு மட்டும் தான் என்பது இங்கு யாருக்கும் தெரியாத நடைமுறை.

ஒரு வாரத்துக்கு முன்னால். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில். கட்டணம் வாங்கிவரசொல்லி பள்ளிநேரத்தில் துரத்தப்பட்ட மாணவன் சுரேஷ் ( ஒரு தையல் தொழிலாளியின் மகன்). கவனம் சிதறி. வாகனத்தில் அடிபட்டு. பெற்றோரின் கனவுகளைச் சிதறடித்துச் செத்துப்போனான்.இறந்த மாணவனின் கிராமத்துக்காரர்கள் கொதித்து வந்து  அந்த ஆங்கிலப் பள்ளியை தீவைத்துக் கொளுத்திவிட்டார்கள்.சென்னையில் பல ஆங்கிலப்பள்ளிகளில் நடக்கும் கட்டணக்கொள்ளையை எதிர்த்து பெற்றோர்கள் மறியல் நடத்தினார்கள். இதையெல்லாம்  அவதானித்த தனியார் பள்ளி நிர்வாகாங்கள் போராடத் துவங்கி விட்டது. யாருக்கும் போராட்ட உணர்வு வந்து விடக்கூடடாது என்பதற்காகவும். பொது மக்கள் யாரும் தவறுகளைச் சுட்டிக்காட்டக்கூடாது என்பதற்காவும் தான்.


எருது எளச்சா, நரி  மாமன் மச்சான் உறவு கொண்டாடுமாம்

41 comments:

Unknown said...

ரொம்ப நிதானிச்சு அருமையா சொல்றீங்க. இத எல்லோரும் படிக்கணும். தனியார் பள்ளிகளில் கட்டண முறையை ஒழுங்கு படுத்தும் வரை மக்கள் அவர்களை தவிர்த்து அரசு பள்ளியில் சேர வேண்டும். தனியார்க்கு துணையா நிற்கும் அரசும் அரசுப் பள்ளியையும் குட்டிச் சுவராக்காமல் இருக்கணும்.

காமராஜ் said...

அன்பின் சேது சார் வணக்கம்.
தங்களின் பின்னூட்டம் இன்னும் ஊட்டமளிக்கிறது. நன்றி

vasu balaji said...

இது நல்லதற்கே இல்லை. இலவச அரிசி கொடுக்கிறார்களோ இல்லையோ தரமான கல்வி அவசியம். வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டது போல் பள்ளிகளும், கல்லூரிகளும் கூட மையப்படுத்தப்பட வேண்டும், தரம் குலையாமல் காக்கப்பட வேண்டும். ஸ்விஸ்ஸிடமிருந்து கிண்டர்கார்ட்டன் என்ற வார்த்தையைத் திருடியதோடு சரி. அந்தக் கல்வி முறையை காப்பியாவது அடித்தால் எங்கோ இருப்போம்.

சுந்தரா said...

//வெயில்,புழுதியோடு கிடைக்கிற சிநேகம்.வெளிக்காற்று,சேஷ்டை களோடுகிடைக்கிற புற உலகம் மறுக்கப்பட்ட குழந்தைகள் தார்மீக எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களாக மாறிப் போகிறார்கள்.//

வலிக்கிற நிஜம் :(

//எருது எளச்சா, நரி மாமன் மச்சான் உறவு கொண்டாடுமாம்//

ரொம்பச் சரியாச்சொல்லியிருக்கீங்க அண்ணா.

க.பாலாசி said...

//இந்த வார்த்தை கொஞ்சம் எரிச்ச லூட்டும்//

இதில எரிச்சலூட்ட ஒன்றுமேயில்லை.. இன்னைக்கும் ஆறுமணியானா எந்திருச்சு, குளிச்சு இன்னபிற இத்யாதிகளை முடித்து வாயில் திணிக்கப்படும் இரண்டு இட்டிலி ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டப்பாவில் பிஸ்கட் என பள்ளிக்கு புறப்படும் 3 வயது குழந்தை போறதப் பாத்தா ஒரு ரோபோ கட்டளைக்கு பணிந்து செல்வதுபோல்தான் தெரியும்.

98 களில் என் தனிப்பயிற்சி நிலைய ஆசிரியர் அடிக்கடி வருத்தப்படுவார்.. நான்லாம் கல்விய விக்கிறேன்டா... எங்கப்போயி இந்த பாவத்த கழுவப்போறேனோ தெரியலன்னு புலம்புவார்... கொஞ்சமாவது அதே நிலையை உணரும் ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

முன்பெல்லாம் முனுக்கென்றால் பள்ளிக்கூடங்களில் ஸ்ட்ரைக் நடக்கும். தண்ணீர்வரவில்லை, கழிவரை சுத்தமில்லை போன்ற அடிப்படை வசதிகளைக்கோரி.. ஆனால் இப்போது முடியுமா? வருங்காலம் இன்னும் பல கேள்விக்குரிகளோடு காட்சிதருகிறது.

VELU.G said...

//இதையெல்லாம் அவதானித்த தனியார் பள்ளி நிர்வாகாங்கள் போராடத் துவங்கி விட்டது. யாருக்கும் போராட்ட உணர்வு வந்து விடக்கூடடாது என்பதற்காகவும். பொது மக்கள் யாரும் தவறுகளைச் சுட்டிக்காட்டக்கூடாது என்பதற்காவும் தான்.
//

மிகச் சரியாக சொன்னீர்கள் சார். என் பெண்ணிற்கு 4th Std கட்டணம் 9025 ஒரு termற்கு கேட்கிறார்கள். இதுவே போனவருடம் 6000 ஆக இருந்தது. ரசீது தரமாட்டேன் என்கிறார்கள்

என்ன செய்வது என்றே புரியவில்லை

ஜோதிஜி said...

நிதானமாய் வந்த கருத்துக்களை முழுமையாக படித்து விட்டு நிறைவாய் உணர்கின்றேன்.

பாலாசி பெருமையாய் உங்களைப் பற்றி சொன்னதில் தவறில்லை.

vinthaimanithan said...

"நாம் ஆளுகின்ற லட்சக்கணக்கான மக்களுக்கும் நமக்கும் இடையே இணைப்பாகச் செயல்பட ஒரு வகுப்பினரை நாம் உருவாக்கிட வேண்டும். இந்த வர்க்கத்தினர் ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும், ரசனையில், கருத்துக்களில், நெறிமுறைகளில், அறிவில் ஆங்கிலேயர்களாகவும் விளங்கவேண்டும்."

- 1835 ல் இந்தியக் கல்வித் திட்டத்தை உருவாக்கியபோது மெக்காலே எழுதியதில் இருந்து....

இன்றும் மாறிவிடாத இந்த வாசகங்களில் கிழிகிறது இந்திய சுதந்திரத்தின் லட்சணம்...

உங்கள் இடுகையின் ரௌத்ரத்தை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்

காமராஜ் said...

பாலாண்ணா வாங்க.கருத்துக்கு நன்றி. இந்த மோசடியைப் பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வருகிறது.

காமராஜ் said...

சுந்தரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

காமராஜ் said...

Blogger க.பாலாசி said...

//98 களில் என் தனிப்பயிற்சி நிலைய ஆசிரியர் அடிக்கடி வருத்தப்படுவார்.. நான்லாம் கல்விய விக்கிறேன்டா... எங்கப்போயி இந்த பாவத்த கழுவப்போறேனோ தெரியலன்னு புலம்புவார்... கொஞ்சமாவது அதே நிலையை உணரும் ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.//

ஆமாம் பாலாஜி. அப்படி மனதளவில் சஞ்சலப்படும் மனிதர்கள் கூட இருக்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் இருக்கிறது.

காமராஜ் said...

நன்றி வேல்ஜி

காமராஜ் said...

வாருங்கள் ஜோதிஜி
வருகைக்கு நன்றி.

காமராஜ் said...

Blogger விந்தைமனிதன் said...

// "நாம் ஆளுகின்ற லட்சக்கணக்கான மக்களுக்கும் நமக்கும் இடையே இணைப்பாகச் செயல்பட ஒரு வகுப்பினரை நாம் உருவாக்கிட வேண்டும். இந்த வர்க்கத்தினர் ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும், ரசனையில், கருத்துக்களில், நெறிமுறைகளில், அறிவில் ஆங்கிலேயர்களாகவும் விளங்கவேண்டும்."

- 1835 ல் இந்தியக் கல்வித் திட்டத்தை உருவாக்கியபோது மெக்காலே எழுதியதில் இருந்து....

இன்றும் மாறிவிடாத இந்த வாசகங்களில் கிழிகிறது இந்திய சுதந்திரத்தின் லட்சணம்...//

அருமை தோழரே
நன்றி விந்தை மனிதன்

ஆரூரன் விசுவநாதன் said...

காலை எழுந்ததும் குழந்தைகள் இன்று பள்ளி விடுமுறை என்றதும் என்ன காரணமாக இருக்கும் என்று தெரியாமல் தினசரிகளை பார்த்தபின் தான் தெரிந்தது, கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளியின் பிரச்சனை, மற்றும் உயர் கல்விக் கட்டணம் காரணமாக தனியார் பள்ளிகளுக்கெதிராக பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பள்ளிகளின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமாம். கொடுமை.....

அரசுப் பள்ளிகளின் தரமும், ஆசிரியர்களின் அலட்சிய போக்கும் அரசு பள்ளிகளின் மீதான நம்பிக்கையை உடைத்தெறிந்து விட்டது உண்மை. எத்தனை அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்? அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் கூட தனியார் பள்ளிகளில் தான் படிக்கின்றன.

விளிம்பு நிலை மனிதர்களின் குழந்தைகள் மட்டுமே இன்றைய அரசுப் பள்ளிகளின் ஆதாரங்கள். அதிகாலை எழுந்து வேலைக்குச் செல்லும் தொழிளார்கள் தங்கள் குழந்தைகளுக்கான ஒரு மதிய உணவோடு நடத்தப் படும் ஒரு பகல்நேர காப்பிடமாகவே அரசுப் பள்ளிகளை பார்க்கின்றனர்.

மலைவாழ் மக்களின் நிலமை அதைவிட மோசம். அக்குழதைகளுக்காக அரசு தரும் உதவித்தொகைகளைக்கூட இவர்கள் திருடிக் கொண்டு அந்த குழந்தைகளை தவிக்கவைக்கின்றனர்.

அவசியமான பகிர்வு,.வாழ்த்துக்கள்

கல்வெட்டு said...

பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது

பலமுறை நடுச்சூரன்குடி போன்ற ஊர்ப்பிரயோகங்களைப் பார்க்கிறேன்.

நீங்கள் அந்தப்பக்கம் வாழ்பவரா?

நடுச்சூரன்குடி, கம்மாச்சூரன்குடி,புதுச்சூரன்குடி , ஒத்தேகால், மேட்டுப்பட்டி... ???


தெரிந்துகொள்ள ஆவலன்றி வேறொன்றும் இல்லை காமராஜ் :-)

காமராஜ் said...

பத்மாsaid...

சரியான ஒரு காரணத்துக்காக போராடுவதற்குத் துணிவு வேண்டும்.சரியானதில்லை எனச்சொல்லவும் துணிவுவேண்டும்.

காமராஜ் said...

காஸ்யபன் said...

சி என் என் காலத்தில் கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்டது.அவரது வழித்தோன்றல்கள் கல்வியை வியாபாரமாக்கிவிட்டார்கள்.

வேல்ஜி. said...

//தனிக்குடித்தனமும்,அதிகவருமாணமும் டீவியும் குடும்பங்களை வீட்டுக்குள் சுருக்கி விட்டது.வணிகம் பெருகி வாழ்க்கை சுருங்குகிறது//

காமராஜ் said...

vkathir said...

மிக மிக தேவையான இடுகை.கோபம் பொங்குகிற நேரத்திலெல்லாம் இயலாமையும் பொங்கித்தொலைகிறது.

ஹரிகரன் said.

அரசு ஏற்றுக்கொண்ட (தேசியமயமாக்கம்) சாராயக்கடைக்கு பதிலாக மானியமாக கல்விக்கடைகளை நடத்த அரசு ஆதரவு அளிக்கிறது.

காமராஜ் said...

வாருங்கள் தோழர் ஆரூரான் விஸ்வநாதன்.அரசு ஊழியர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டியது ஏராளம் இருக்கிறது.

அரசுப்பள்ளிகளில் இருதய சுத்தியோடு வேலை பார்க்கிறவர்கள் கம்மி தான்.இந்த சூழலுக்கு அதுவும் ஒரு காரணம் தான் தோழா.

அன்பின் கல்வெட்டு வணக்கம் இதே போன்ற ஒரு கேள்வியோடு நாம் ரொம்ப நாளைக்கு முன்னால் எதிர்ப்பட்டிருக்கிறோம்.எனக்கு அதுதான் சொந்த ஊர். மீண்டும் சந்தித்துக்கொள்வதில் மகிழ்ச்சி தோழரே.

காமராஜ் said...

அன்பின் கல்வெட்டு வணக்கம் இதே போன்ற ஒரு கேள்வியோடு நாம் ரொம்ப நாளைக்கு முன்னால் எதிர்ப்பட்டிருக்கிறோம்.எனக்கு அதுதான் சொந்த ஊர். மீண்டும் சந்தித்துக்கொள்வதில் மகிழ்ச்சி தோழரே.

கல்வெட்டு said...

//இதே போன்ற ஒரு கேள்வியோடு நாம் ரொம்ப நாளைக்கு முன்னால் எதிர்ப்பட்டிருக்கிறோம்.//

அப்படியா?

மறந்துவிட்டது.

எனக்கு அந்தப்பகுதியில் சொந்தங்கள் உண்டு.வரும்போது தொடர்பு கொள்கிறேன். மகிழ்ச்சி.

ELANGO T said...

பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அரசியல்வாதியின் அரவணைப்பிலோ அல்லது நேரடிப் பார்வையிலோதான் இயங்குகின்றன.பிள்ளைகளின் படிப்பையும் எதிர்காலத்தையும் கருதி பெற்றோர்கள் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை.இந்தியாவில் ஜாதி உள்ளவரை புரட்சியாவது புடலங்காயாவது-தி.தமிழ் இளங்கோ

Umapathy said...

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை கொளுத்துவோம் என்றான் பாரதி
இங்கு ஒரு பிஞ்சு பொசுக்கப்பட்டு உள்ளது
தன் தவறு மறைக்க அந்த தர்மவான்கள் போராடுகிறார்கள்
எத்தனை காலம் ஆயினும் இக்கொடுமை நமது அறியாமை தீரும் வரை நிலைக்க தான் போகிறது

காமராஜ் said...

கல்வெட்டு சார் உங்களின் காரசரமான பின்னூட்டங்களை பல
தளத்தில் படித்திருக்கிறேன்.

காமராஜ் said...

வாருங்கள் தமிழ் இளங்கோ.உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

ஜாதி தீரும் வரை பிர்ச்சினைகள் தீர வழியிருக்கா என்பதை ஆராய்ச்சியாளர்களை வைத்தே அணுகவேண்டும் உண்மை.

காமராஜ் said...

வாருங்கள் உமாபதி.
உங்களின் வருகைக்கும் நன்றி.
தொடர்ந்து பேசுவோம் வருங்கள்.

Unknown said...

கல்வி என்பது போகப்போக இன்னும் வியாபாரமாக மாறும் சாத்தியம் மட்டுமே இருக்கிறது .. மெல்ல அரசாங்கம் அரசுப் பள்ளிகளை குறைத்துவிடும்... அதற்க்கான காரணங்களை நாம்தான் அரசுக்கு உருவாக்கி தந்துகொண்டு இருக்கிறோம் ...

காமராஜ் said...

வாருங்கள் செந்தில்.
நீங்கள் கூறுவது 100 சதம் உண்மை.kishorebarathi

காமராஜ் said...

வாருங்கள் செந்தில்.
நீங்கள் கூறுவது 100 சதம் உண்மை.

லெமூரியன்... said...

\\பிரபல ஆங்கிலப்பள்ளிகள் கூட அந்த மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்தால் அந்தப்பள்ளி ரொம்ப ஸ்ட் ரிக்டான பள்ளி என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கப்படும்......//

கடந்த பத்து வருடங்களில் தான் புற்றீசல் போல தனியார் பள்ளிகளும் பொறியியற் கல்லூரிகளும் குவிந்துவிட்டன இங்கு.....

\\வெளியே எல்லாவற்றையும் இலவசமாக சொல்லிக்கொடுத்து,உதவித்தொகை கொடுத்து கல்வி கொடுக்க ஒரு ஏற்பாடு இருப்பதை மெல்ல மெல்ல மறந்து போக பழகிக்கொண்டோ ம்.....//
இங்கு எதன் பால் மக்கள் ஆங்கிலவழிப் பள்ளிகளின் பக்கம் சாய்கிறார்கள் என்று பார்த்தால்....
அதற்க்கு அரசு பள்ளிகளின் தரமும் அங்கு நிலவும் ஆரோக்கியமற்ற கல்விச் சூழலும்தான்........
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது....ஏனென்றால் அவர்களுக்கு மாதமானால் சம்பளம்........
சில சீர்திருத்தங்கள் கல்விக் கொள்கையில் மட்டுமல்ல..அரசு பள்ளிகளுக்கும் தேவை இப்பொழுது......

\\வடபழனியில் ஓசியாக தொலைக்காட்சிப்பெட்டி வாங்குவதற்கு மூனு மணிநேரம் வெயிலில் காத்துக்கிடந்தார்கள் இந்த விநோதம் மட்டும் புரிந்துகொள்ளமுடியாத புதிராக இருக்கிறது........//

அது இந்நகரத்தின் சாபம்......இரண்டு ஆயிரம் காசுக்காக பல நூறு உயிர்கள் மிதிபட்டு மாய்ந்ததும் இந்நகரத்தில்தான்........
ஜனநாயகத்தின் முழுப்பலனை அனுபவிக்க மக்களை கற்றுக் கொடுப்பது இங்கிருந்துதான் தொடங்குகிறது.....அதாவது மக்களை பிச்சைகாரர்களாக மாற்றும் தந்திரம் இங்கிருந்தே தொடங்குகிறது.......


\\கட்டண உயர்வு, கழிப்பறை வசதி எனத்தொடங்கி, ராகிங்குக்கு எதிராக, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக, அணைவருக்கும் வேலை கேட்டு வீதியில் இறங்கும் உக்கிரமான போராட்டங்களையும் சேர்த்து ப்படிக்கிற இடமாக அரசு பள்ளிகள் திறந்து கிடக்கிறது.......//

கண்டிப்பாக நிதர்சனமான உண்மை...!
இப்படி வீதிக்கு வந்து போராடும் மாணவர்களை கூட கேவலமான பார்வை பார்க்கத்தான் செய்கிறது ஆங்கில பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூட்டம்....
அட்டை வைதிருந்ததர்க்காக பள்ளியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்...பின்பு தந்தையுடன் வந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தே சேர்ந்தேன் மீண்டும்...

மொத்தமாக யாரையும் குறைசொல்ல முடியாத நிலை.....போனவார ஒரு அரசியல் வார பத்திரிக்கையில் ஒரு மாவட்ட ஆட்சியரின் மனைவி அரசு ஆஸ்ப்பத்திரியில் குழந்தை பெற்றது மிக பெரிய செய்தி கட்டுரையாக வந்திருந்தது.....
இதுதான் இங்கு அரசினால் நடத்த படும் எந்த நிறுவனம் அல்லது அமைப்பின் நிலை........

அன்புடன் அருணா said...

/ஆனால் எனக்குத்தெரிந்து ஆங்கிலப்பள்ளி மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடியது புகையிலைக்கு எதிராக கூடக்கிடையாது. அவர்கள் சமூகப்புரட்சியெல்லாம் ஆண்டு விழாக் களின் மேடைகளில் போடுகிற மாறுவேடப்போட்டியோடு முடிந்துபோகிறது./
இப்படி ஆங்கிலப் பள்ளி மாணவர்களை ஒரேயடியாகக் கீழே தள்ளாதீர்கள்...நிறைய உண்மைகள்
நிறைய விஷயங்கள் இருக்கு இதைப் பற்றிப் பேச.....

காமராஜ் said...

அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்கள் இந்த தேசத்தை திசை மாற்றி விட்டவர்கள்.சம்பளம் தாண்டி வருவதற்கு அதிகப்படியான ஆசிரியர்கள் முனவராதது இங்கு பெரிய சாபக்கேடுதான் லெமூரியன்.

காமராஜ் said...

வாருங்கள் அருணா மேடம்...

ஆங்கிலப்பள்ளிஆசிரியர்ககளின் உழைப்பு,
ஆசிரியர்களின் ஈடுபாடெல்லாம் குறை சொல்ல முடியாதவை.but
சமூகம் குறித்த மாணவர்களின் பார்வை என்ன என்பதை பேசனும். அந்த துறையில் இருக்கிற நீங்கள் பேசுவது ஏற்புடையதாகும்.

Unknown said...

உங்களது நிஜமான கோபம்....ஆதங்கம்...வருங்கால சந்ததிகள் குறித்த கவலை என அருமையான கட்டுரை. இது விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்... அதற்கான அருமையான களத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் மாமா!

காமராஜ் said...

நன்றி அண்டோ (மாப்பிள்ளை)..
ரொம்ப காலத்துக்கப்புறம் வலையில் தலை தெரிகிறது ?

சரி.. எழுதுங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//இருந்தாலும் தனது குழந்தை சீருடை அணிந்து , ஷூ மாட்டிக் கொண்டு , டைகட்டிக்கொண்டு போகிற அழகை கண்டு உள்ளூரப் பெருமிதம் கொள்ளும் பெற்றோரின் கனவும் சேர்ந்திருந்தது//

மறுக்க முடியாத உண்மை....

ஆ.ஞானசேகரன் said...

அனேக கருத்துகள் ஏற்புடையவை.... நாமாகவே இட்டுகொண்ட விலங்கு... மாற்றம் காண்பது எழிதாக தெரியவில்லை... பாவம் நம் குழந்தைகள்.. நம்முடைய பால்ய அனுபவம் இவர்களுக்கு கிடைக்க போவதில்லை

காமராஜ் said...

அன்பு ஞானசேகரன். வணக்கம்.
கருத்துக்கு மிக்க நன்றி என் அன்பு நண்பா.

காமராஜ் said...

இந்த இடுகையை பரவலாக்குவதற்கு தமிழ்மணத்தில் சேர்த்து உதவிய அன்பின் பாலாசி க்கு எனது பிரத்யேக நன்றி.

அழகிய நாட்கள் said...

//இந்த தனியார் பள்ளி சேகுவாராக்கள் ஏன் போராடுகிறார்கள்.கட்டணம் வசூலிப்பதில் வரைமுறை வைத்ததற்கு எதிராக இல்லை//
'இந்த சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு அநீதிக்கும் எதிராக உனது போராட்டம் இருக்குமானால் நீயும் நானும் தோழர்கள்' என்று உரைத்த சே குவேரா எங்கே? பணம் சம்பாதிப்பது மட்டுமே எனது கொள்(ளை)கை என்று செயல்படும் தனியயார் பள்ளி நிர்வாகிகள்(!)எங்கே.