4.3.11

வெள்ளந்திக்கதைகள். கொடைக்கான் வண்டியை மறித்த குத்துக்கல்.


அப்போது  கொடைக்கானல் ரோடுவேய்ஸ்,ஜெயவிலாஸ்,லயன் ஆகிய மூன்று  பேருந்துகள் தான் ஓடிக்கொண்டிருக்கும்.எனக்குத்தெரிந்து சாத்தூருக்கும் ஒத்தையாலுக்கும் இடையிலான கட்டணம் வெறும் பதினைந்து காசுகள்தான்.பேருந்தில் போய் வர சில நியதிகளும்,சில வசதிகளும் தேவைப்பட்ட காலம் அது.அதுவும் கொடுக்கமுடியாமல் நடந்துவந்த ஜனங்கள் தான் ஏராளம்.சாத்தூரிலிருந்து எல்லா ஊர்களுக்கும் குறுக்குப்பாதைகள் இருந்தன. அவை பாதசாரிகளுக்கானது.போகிற வழிகளில் ஆலமரம்,ஊருணி அல்லது கமலைத்தோட்டம் கட்டாயம் எதிர்ப்படும்.அங்குபோய் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு செத்த ஆசுவாசப் படுத்திக் கொண்டு நடையைக்கட்டுவார்கள்.

நடந்து போகையில் அலுப்புத்தெரியாமல் இருக்க பழமை பேசப்படும்.அல்லது சேதிகள் சொல்லப்படும். பயண காலமானதால் பெரும்பாலும் பேருந்துப் பயணங்கள் பற்றியே கதைகள் இருக்கும்.ஜெயவிலாஸ் பேருந்தில் மதுரை போய் திரும்பி வந்தார் பால்ராஸ் சின்னையா. அந்த ஒருநாள் கதையை கிட்டத்தட்ட ஒரு மாசம் சொல்லுவார்.அதில் நடத்துநரும்,ஓட்டுநரும் தான் பிரதானப்பாத்திரங்கள்.

ஜெயவிலாஸ் பேருந்தின் நடத்துநர் வேல்ச்சாமியைப்  பற்றியும் கொடைக்கானல் பேருந்தின் ஓட்டுனர் பற்றியும் தெரியாத சனங்கள் இருக்கவே முடியாது. கடைசி டயத்துக்கு ஊருக்குள் வரும் ஒவ்வொரு நடையைப்பற்றியும் ஒரு கதை இருக்கும்.கொடைக்கானல் வண்டியின் டைவர்ருக்கு அப்போதே அறுபது வயதுக்கு மேலிருக்கும்.அப்படித்தான் ஒருநாள் மேட்டுப்பட்டி தாண்டி வந்துகொண்டிருந்தது வண்டி சீரெங்கா புரத்துக்கும் மேட்டுப்பட்டிக்கும் நடுவில் நிறுத்தி விட்டார்.

அப்போதெல்லாம் இரண்டு ஊர்களுக்கு நடுவில் நிறுத்தி டிக்கெட்போட்டு இன்வாய்ஸ் எழுதி முடித்துவிட்டுத்தான் வண்டியெடுப்பார்கள்.அதற்காகத் தான்  நின்றுபோனதென்று சனம் நினைத்துக்கொண்டது.நல்ல ஓடைக்காடு கிய்யிருட்டு ஒதுங்கி ஒண்ணுக்கிருக்க தோதான காடு.அப்படித்தான் என்று கண்டக்டர் நினத்துக்கொண்டார்.வண்டி ஒரு அரைமணிநேரமாக நகல வில்லை. பத்துமணியானதால் பாதிப்பேர் தூங்கிப் போனார்கள். கண்டக்டரும் கூட கண்ணசந்துபோனார்.முழிச்சுப்பாத்தா வண்டி ஆணியடிச்சா மாதிரி அதே எடத்துல நிக்குது.டைவர் வட்டப்பிடிச்சமானிக்கு ஒக்கந்துருக்கார்.

’ பாழாப்போனவனே நீயுந்தூங்கிட்டியா’

 கத்தினார் கண்டக்டர்.

’வெங்காயம்,  நடுரோட்டுல ஆள் நிக்கான், ஆர்ணு கண்டா, களவானியா சாக வந்தவனா தெரியல. கையும் ஓடல காலும் ஓடல நீயி பாட்டுக்கு மயிரு போச்சினு கொறட்டவிட்டுட்டுருக்கெயே’

கருப்பையாண்ணன்.(டைவர் தான்)  கத்தினார்.

அந்தக்காலத்தில் சிப்பிபாறை கந்தசாமி என்கிற வாரண்டுக்கு தப்பியவர் காடுகளில் அலைவதாக கதைகள் இருந்தது.( மலையூர் மம்பட்டியார் போல இவருக்கும் ஒரு நாடோடிக்கதை உண்டு).இப்போது கண்டக்டர் பச்சைக் கனியண்ணனுக்கும் உதறலெடுத்தது.படாரென்று யோசனை வந்தது.நல்ல கட்டுமஸ்தான பயணிகளில் நாலுபேரைக்கூப்பிட்டு காதுக்குள் விஷயத்தைச் சொன்னார்.இறங்கி மக்காடச்சேத்துப்பிடிச்சி கையைக் காலைக் கட்டிப் போட்டுவிடுவதெனத் தீர்மானமானது. பூனை போல இறங்கினார்கள்.ஆள் அசையவில்லை.

கொஞ்சம் எட்டத்துல போனப்பிறகு கெக்கெபிக்கெவெனச் சிரித்துக்கொண்டு திரும்பி வந்தார்கள். சிரிப்புச்சத்தம் கேட்டு தூங்கியவர்கள் எழுந்தார்கள். சேதி கேட்டு அவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.காலையில மொத வேலையா ஒரு கண்ணாடி வாங்கிப்போடணும் என்றபடியே வண்டியை ஸ்டார்ட் பண்ணினார் கருப்பையா அண்ணாச்சி.ஊர் போகந்தட்டியும் குலுங்கி குலுங்கி நகர்ந்தது கொடைக்கான் வண்டி.

வேறொன்றும் இல்லை ஒரு பழய்ய மைல்கல் ஆளுயரத்துக்கு உண்டு.நீண்ட காலத்துக்குப் பிறகு அதுக்கு வெள்ளையடிச்சிருந்தான் ஹைவேய்ஸ்காரன்.

17 comments:

"ராஜா" said...

என்னுடய சின்ன வயசு ஞாபகங்கள் வந்துவிட்டது இந்த பதிவை படிக்கும் போது ... எங்கள் கிராமத்திற்க்கு முதன் முதல் வந்த ஜெயவிலாஸ் வண்டியின் பின்னாலயே தினமும் ஓடி திரிந்த ஞாபகங்கள் அவை ... ஏனோ ஞாபகங்களோடு ஒரு துளி கண்ணீரும் எட்டிம் பார்க்கிறது இன்று ...

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்லாயிருந்தது... உங்களுக்கே உரித்தான நடையும்... சொல்லழகும்...யாருக்கு வாய்க்கும் இது போலே...

இது போல கதைகள் நிறைய எழுதுங்கள் காமராஜ்...

பேரன்புடன்
ராகவன்

தினேஷ்குமார் said...

நால்லாருக்கு கடைசில சிரிப்பு தாங்கல பாஸ்

சுந்தரா said...

நல்ல சிரிப்பு :)

//பத்துமணியானதால் பாதிப்பேர் தூங்கிப் போனார்கள். கண்டக்டரும் கூட கண்ணசந்துபோனார்.//

இப்பல்லாம் பஸ் நின்னாலும் யாரும் தூங்கமுடியாது. நிமிஷத்துக்கொரு செல்ஃபோன் அடிச்சிட்டேஇருக்கும்.

பா.ராஜாராம் said...

:-))

இந்த வெள்ளந்தி கதைகளை தொடராக செய்யுங்கள் காமு மக்கா. படிக்கவே சந்தோசமாக இருக்கிறது. நம் மக்களை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல.

அன்புடன் அருணா said...

ஹாஹாஹாஹா

ஓலை said...

Ha ha arumai. Naan kooda driver iranthu vittaaronnu ninaichchen.

க ரா said...

ஹா ஹா ஹா.. நல்ல எழுத்து நடை சார்.. கொடைக்கானல் ரோடுவேஸ்லதான் என்னோட அப்பாவோட அப்பா மேனேஜர இருந்தார் சார் ...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஹா நல்லா இருக்குய்யா கதை....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஒண்ணாங் க்ளாஸ் காமராஜ்.

இப்படிக் கதைகளும் இப்படியான மொழியும்தான் நம்மைப் புதுப்பிக்கும்.

சபாஷ்.சபாஷ் என ஒரு நூறு முறை சொல்வேன்.

அந்த ஜெயவிலாஸ் பஸ்ஸில் ஒரு ட்ரைவர் உண்டு.சட்டை பித்தானை எல்லாம் திறதுவிட்டுக் கொண்டு ஊரெல்லையில் நுழையும்போது பப்பர பப்பர என்று லயத்தோடு பல்ப் ஹாரனை அடித்தபடி வரும் அந்த ட்ரைவரின் பெயரே பப்பர பப்பர என்றாகிப் போனது.

சிறுவயதில் அந்த ட்ரைவராக எதிர்காலத்தில் ஆகிவிடவேண்டுமென்பது என் லட்சியமாக இருந்தது.

ஈரோடு கதிர் said...

சூப்பருங்க!!!!:))))

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

Unknown said...

//இந்த வெள்ளந்தி கதைகளை தொடராக செய்யுங்கள் காமு மக்கா. படிக்கவே சந்தோசமாக இருக்கிறது. நம் மக்களை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல//

பா.ரா அண்ணனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்..

vasu balaji said...

=)). முடியல சாமி

தாராபுரத்தான் said...

நல்லா இருக்குங்கோ.

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார‌ கேள்விகள்

படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

க.பாலாசி said...

ஹா..ஹா... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான பயம்.. இதுல மைல்கல்வேற.. கொஞ்சம் மெரளத்தான் வேண்டிருக்கு..