19.3.11

குலசாமியும் தீராத பூசுபொடியின் வாசமும்.இத்தோடு மூன்றாவது இது அழைப்பு. பேரப்பிள்ளைகளை விசாரித்துவிட்டு,ஒரு கழிப்பறை வேண்டுமென்கிற கோரிக்கையையும் கோடிட்டுக்காட்டிவிட்டு கடைசியில் அம்மா சொன்னாள்.’எப்பிடியாச்சும் லீவு போட்டுட்டு வந்துருப்பா,பங்காளிகள்லாம் ஒன்னத்தான் கெட்டாக’. சொல்லும் போது அதே உரத்த குரல்கேட்டது. செல்போனில் மெல்லப் பேசினால் கூடப்போதுமென்கிற நுனுக்கம் அவளுக்கு இன்னும்  கைவரவில்லை.பேசி முடித்த கையோடு சுற்றியிருப்பவர்களைப் பெருமிதமாக ஒரு பார்வை பார்த்திருப்பாள். கனகமணிப்பெரியம்மையும் ,கூல்பானை பொண்டாட்டியும் எதாச்சும் கேலி பேசியிருப்பார்கள். கண்மலரும் பூசுபொடியும் மறக்காம வாங்கியாரச் சொல்லுக்கா என்று ஆரிட்டாச்சித்தி சொல்லியிருப்பாள்.அவள் தான் அந்த மத்தியான வெயிலில் தங்கு தங்குன்னு குதிப்பாள் நாக்கை த்துருத்திக்கொண்டு எனக்கு முட்டை வேணும்,சாராயம் வேணும்,ஒரு கைப்பிடி வச்ச அருவா வேணும் என்று அருவாக்குச்சொல்லச் சாமியாடுவாள்.

ஒரு பத்துப்பதினைந்து வருடங்கள் ஓடிப்போனது,ஊரோடு உட்கார்ந்து நரிக்கொறத்தி ஆட்டம் பார்த்தது.ரெட்டைஅர்த்த வசனங்களைக் கேட்டுக் கொண்டே முறைப்பெண்களைப்பார்க்கிற குறுகுறுப்பு.கிழவன் கோவிலில் சாமிகும்பிடும்போது யாருக்காவது அருள்வந்து உடலை உலுக்கி நாக்கைத் துருத்துவது. தெருச்சண்டையில் ஆம்பளையைப் பொம்பளை மல்லுக்கட்டி ஜெயிப்பது.ஊர்ப்பஞ்சாயத்தில் நல்ல நாயம் பேசுனீக நாயம் வேண்டான்னு சொன்னா தீத்து உட்ருங்க,மனசுக்கு பிடிச்சவனோட காலந்தள்ளட்டும் என்கிற குரல்கேட்டு பத்துப்பதினைந்து வருடங்கள் ஓடிப்போனது. எலே, செம்பட்டையா,  இப்படி பேர்களோடும் இன்னும் சில கெட்ட வார்த்தைகளோடும் அறியப்பட்ட காலங்கள் மாறி “தம்பி எப்ப வந்துச்சி,வாங்க வாத்தியாரய்யா என்கிற மரியாதைகளில் கொஞ்சம் தூரம் அதிகமானது.

முன்னமெல்லாம் மாசி மாதம் ஒண்ணாந்தேதி குலசாமி கும்பிட பங்காளிகள் கூப்பிடுவார்கள். அப்போது ‘ஆமா பெரிய்ய ராஜராஜ சோழன் பரம்பரை’ ஒங்க சல்வார்பட்டியான் வளசலில் பெரிய்ய பணக்காரன் வள்ளிமுத்து பெரியப்பன் மட்டுந்தான். அவனுக்குத்தான் ஓடு போட்ட வீடு இருக்கு. மத்தபடி எல்லாருக்கும் கூர வீடு. அதும் பிரிஞ்ச.கூரைய சரிசெய்ய வக்கில்லாதவங்க வளசல். இதுல என்ன என்ன கொளம் குத்துக்கல்லு சாமின்னு இப்படி எதாச்சும் சொல்லிவிட வந்தவர்கள் அதிகப் பிடிச்சவன் என்று  முனகிக்கொண்டே அங்கிருந்து வெறுப்போடு போய்விடுவார்கள்.ஆனால் ஒரு அரைமுடித் தேங்காயும்,நெய் ஊத்தாத சக்கரைப் பொங்கலும் கட்டாயம் தழுகையாக வீடு வந்துசேரும்.

பங்காளி முருகேசன் அந்தோணி கூட சண்டைபோட்டு மண்டைய ஒடச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு அலைந்தார்கள்.அந்தோணி உயிர்ச்சிநேகிதன், அந்தோணிக்கு சப்போட்டா அலைஞ்சதும் பங்காளிகளின் கோபம் கருப்பசாமி பக்கம் திரும்பியது.ஊனு கம்பைத்தூக்கிக்கொண்டு அடிக்கஓடி வந்தான் முருகேசன். அப்போது ஆரிட்டாச்சித்திதான் மக்காடச்சேந்து அவனப்பிடிச்சி கம்பைப்புடுங்கி விட்டு வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனாள். ரோஷம் வந்து திருப்பி அடிக்க எத்தனித்த கருப்பாமியின் கண்ணுக்குள் பார்த்த ஆரிட்டாச்சித்தியின் பார்வை ஆத்திரத்தை தளரவைத்தது.

இருசக்கரவாகனத்தை நிறுத்தியவுடன் எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள். நெடுநாள் பேசாமல் இருந்த நண்பனின் வீட்டுக்குள் போவதைப்போல கூச்சத்தோடு நடந்து போனான் கருப்பசாமி. காடுமுழுக்க விரவிக்கிடந்த வெயில் இனித்தது. குழந்தைகள் ஓடிப்போய் வண்டிமேல் ஏறி உட்கார்ந்து விளையாட ஆரம்பித்ததுகள்.அந்தக்கூட்டத்துக்குள்ளேதான் கருப்பசாமியின் பழய்ய நாட்கள் கிடந்தது. முருகேசச்சித்தப்பன் வந்து பையை வாங்கிக் கொண்டார்.பீடத்தைச்சுற்றி சாணி தெளிக்கப்பட்டிருந்தது.இலையில் தேங்காபழங்களை அடுக்கிவைத்துக் கொண்டிருந்த சாமிகொண்டாடி மோகன் ’பந்தல்ல ஒக்காருண்ணே, மயினி நீங்களும் போங்க’ என்றான். பொங்கல் சட்டியில் உலை கொதித்துக்கொண்டிருந்தது. ஆரிட்டாச்சித்திதான் பச்சரிசியை அரித்துக்கொண்டிருந்தாள். சட்டியை ஒருக்களித்து வைத்துக்கொண்டு அரைசி அரிப்பது அந்த லாவகத்தோடு பேசும் ஆரிட்டாச்சித்தி ஏ அரிசி வேணுமா என்று கேட்டாள்.நனைஞ்ச அரிசி திங்க எச்சிலூறியது.அரிசி,தேங்காச்சில்,வெல்லக்கட்டி சேத்து திங்கக்கொடுத்து வைக்கணும்.

பொங்கிய பொங்கலோடு குலவைச்சத்தம் காடெங்கும் ஒலித்தது.மோகன் தேங்காயை உடைத்தான்.சாம்பிராணி பத்தி சூடம்  கணத்தது. ஆளாளுக்கு அருள்வந்து சாமியாடினார்கள்.ஆரிட்டாச்சித்தி காடே அதிரும்படி கனைத்துக் கொண்டு திடீரெனக்கீழே விழுந்தாள்.எழுந்து சங்கு சங்கெனக்குதித்தாள். எல்லோருக்கும் திண்ணீறு போட்டாள். கூப்பிடு அவனை என்றாள்.கருப்பசாமி அருகே போனான் அவளுக்கு உடல் கூடுதலாய்க்குலுங்கியது.மார்புக்கு குறுக்கே இருந்த கருப்பாசாமியின் கையைப் பிடித்துக்கொண்டாள். நான் சொன்னதெல்லாம் செஞ்சயா எங்கடா பூசுபொடியென்றாள். கோதைநாச்சியார் புரத்தில் பாவாடை சட்டையோடு அலைந்த போதும் கருப்பசாமியிடம் பூசு பொடிதான் கேட்பாள். கருப்பசாமியின் கண்கள் திரண்டது. அவன் ஆத்திகனாகிக்கொண்டிருந்தான்.

5 comments:

ஓலை said...

அருமை நண்பரே! எளிமையான வாழ்வோடு சுற்று சொந்தங்களைப் பார்ப்பது அழகு தான். பூசுபொடி நல்ல சிரிப்பை வரவழைக்குது.

பா.ராஜாராம் said...

//ரோஷம் வந்து திருப்பி அடிக்க எத்தனித்த கருப்பாமியின் கண்ணுக்குள் பார்த்த ஆரிட்டாச்சித்தியின் பார்வை ஆத்திரத்தை தளரவைத்தது//

சட்டென இங்கு ஒரு மின்னல் வெட்டு. பிறகு,

// இருசக்கரவாகனத்தை நிறுத்தியவுடன் எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள். நெடுநாள் பேசாமல் இருந்த நண்பனின் வீட்டுக்குள் போவதைப்போல கூச்சத்தோடு நடந்து போனான் கருப்பசாமி. காடுமுழுக்க விரவிக்கிடந்த வெயில் இனித்தது. குழந்தைகள் ஓடிப்போய் வண்டிமேல் ஏறி உட்கார்ந்து விளையாட ஆரம்பித்ததுகள்.அந்தக்கூட்டத்துக்குள்ளேதான் கருப்பசாமியின் பழய்ய நாட்கள் கிடந்தது. முருகேசச்சித்தப்பன் வந்து பையை வாங்கிக் கொண்டார்.பீடத்தைச்சுற்றி சாணி தெளிக்கப்பட்டிருந்தது.இலையில் தேங்காபழங்களை அடுக்கிவைத்துக் கொண்டிருந்த சாமிகொண்டாடி மோகன் ’பந்தல்ல ஒக்காருண்ணே, மயினி நீங்களும் போங்க’ என்றான். பொங்கல் சட்டியில் உலை கொதித்துக்கொண்டிருந்தது. ஆரிட்டாச்சித்திதான் பச்சரிசியை அரித்துக்கொண்டிருந்தாள். சட்டியை ஒருக்களித்து வைத்துக்கொண்டு அரைசி அரிப்பது அந்த லாவகத்தோடு பேசும் ஆரிட்டாச்சித்தி ஏ அரிசி வேணுமா என்று கேட்டாள்.நனைஞ்ச அரிசி திங்க எச்சிலூறியது.அரிசி,தேங்காச்சில்,வெல்லக்கட்டி சேத்து திங்கக்கொடுத்து வைக்கணும்.

பொங்கிய பொங்கலோடு குலவைச்சத்தம் காடெங்கும் ஒலித்தது.மோகன் தேங்காயை உடைத்தான்.சாம்பிராணி பத்தி சூடம் கணத்தது. ஆளாளுக்கு அருள்வந்து சாமியாடினார்கள்.ஆரிட்டாச்சித்தி காடே அதிரும்படி கனைத்துக் கொண்டு திடீரெனக்கீழே விழுந்தாள்.எழுந்து சங்கு சங்கெனக்குதித்தாள். எல்லோருக்கும் திண்ணீறு போட்டாள். கூப்பிடு அவனை என்றாள்.கருப்பசாமி அருகே போனான் அவளுக்கு உடல் கூடுதலாய்க்குலுங்கியது.மார்புக்கு குறுக்கே இருந்த கருப்பாசாமியின் கையைப் பிடித்துக்கொண்டாள்.//

இங்கு, காட்சி துல்லியம்!

//நான் சொன்னதெல்லாம் செஞ்சயா எங்கடா பூசுபொடியென்றாள். கோதைநாச்சியார் புரத்தில் பாவாடை சட்டையோடு அலைந்த போதும் கருப்பசாமியிடம் பூசு பொடிதான் கேட்பாள்//

இங்கு, உணர்வுத் துல்லியம்!

//கருப்பசாமியின் கண்கள் திரண்டது. அவன் ஆத்திகனாகிக்கொண்டிருந்தான்//

கதை சொல்லி இங்கு சமன்படுகிறான். அல்லது ஆசுவாசம்! அதை, வாசிப்பவனாகிய நானும் உணர்கிறேன். அதாவது ஆசுவாசம் எனக்கும்!

கிரேட் காமு!

பா.ராஜாராம் said...

இப்படி அடக்க ஒடுக்கமா, புள்ளையா காரியமா ஒக்காந்து எழுதுவீரா..என்னவோ,கட்சி, சமரு, போராட்டம், தேர்தல்ன்னு?..என்னத்தக் கண்டீறு ரெண்டு பெரும்? தொண்டத் தண்ணியும், வேர்வைக் கசகசப்பும்தான் மிச்சம். எழுதும் ஓய்... உம்ம பக்கத்து வீட்டுக் காரர்ட்டையும் சொல்லும்.

ஏழ சொல்றத எரப்பாள கேக்காதாம்.. :-)

Mahi_Granny said...

கிரேட் காமு! கிரேட் பாரா !

அன்புடன் அருணா said...

வழக்கமான நடையும் உணர்வுகளும்!