18.5.11

தமிழகம் சந்தித்த மௌனப்புரட்சி.


                                                    (நிழற்படம் ஆண்டனி)

இந்தத்தேர்தல் முடிவுகள் ஒரு மௌனப் புரட்சியை உண்டு பண்ணியதாக முதிர்ச்சியான சிந்தனையாளர்கள் கூட கருத்து தெளிக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இந்த நடவடிக்கை யானை போட்ட மாலைதான். கொடுமை என்னவென்றால் இன்னும் ஒரு அஞ்சு வருஷம் கழித்து இதே யானை இதே மாலையை அதே திமுகவுக்குத்தான் போடும்.அது என்ன செய்யும்.அத்தம்பெரிய்ய யானைக்கு பாவம் இள்ளிக்கண். ரெண்டே ரெண்டு உருவம் மட்டும் தான் தெரிகிறது.இந்த யானை அதுபாட்டுக்கு ஐஜேகே என்கிற இந்திய ஜனநாயகக்கட்சிக்கு மாலை போட்டுவிடுமோ என்று பதைபதைப்பில் காத்துக்கிடந்தேன்.பரவாயில்லை அது பழையபடி தெரிந்த தலைக்கே போட்டுவிட்டது.

சரி அதைவிடுங்கள் புரட்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் தமிழகத்தில் பல பதவுறைகள், பலப்பல பொழிப்புறைகள் கிடைக்கின்றன. சிலநேரம் கழிப்பறையில் ஆண் பெண் வித்தியாசத்தைக் காட்ட படம் வரைந்து வைத்த மாதிரி ஆட்களையே கொடுவந்து முன்னால் நிறுத்தி வைத்து விடு கிறார்கள்.ஆனால் இந்த மௌனப்புரட்சி மௌனப்புரட்சி அப்படிங்கிறாங்களே அதுதான் ஒரே கொடைச்சலா இருந்தது.ஆர்வத்தில் அது என்னய்யா என்று கேட்டேன். 13 ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார் என்றார்கள்.அந்த நாளும் வந்தது.

சாயங்காலம் வரும் வழியெங்கும் மௌனப்புரட்சிக்கான அத்தாட்சி ஏதும் தென்படுகிறதா என்று தேடிக்கொண்டே வந்தேன்.அதே கருவக்காடு.அதே உச்சி வெயில். அதே அக்குவா பீனா.அதே தாசில்தார்.அதே போலீஸ்கார். அதே பத்திரப்பதிவு அலுவலகம்.அதே கந்துவட்டிக்காரன்.அதே கடை அதே விலை. இப்படி எதுவும் மாறவில்லை அப்படியப்படியேதான் தொடர்கிறது.

சலித்துப் போய் ஒதுங்கி நின்றேன்.சாக்கடை வாருகாலை முக்கி முக்கி அள்ளிக்கொண்டிருந்தார் ஒரு தோழர்.ஒங்களுக்கெல்லாம் துளுரு உட்டுப் போச்சிடா மத்தியானம் வேலைக்கு வரதப்பாரு......எனக்கெட்ட வார்த்தை கேட்டது. அதே திமிர் அதே வெள்ளைவேட்டி சட்டை. படீரென்று  பொறி தட்டியது வேஷ்டிக் கரையைப் பார்த்தேன் இடையில் வெள்ளைக்கோடு. ஆஹ்ஹா ஆமாம் மௌனப் புரட்சியைக்கண்டு பிடித்துவிட்டேன்.

அதன் பிறகு சுவர்கள்,கார்கள்,சைக்கிள்,ஆட்டோக்கள் என எல்லாவற்றிலும் புதுப்புது முகங்கள்.ஆமாம் அதே தான் மௌனபுரட்சி.வாழ்க மௌனப்புரட்சி.

4 comments:

Mahi_Granny said...

தேர்தல் முடிவுக்கு பிறகு என்ன சொல்வீர்கள் என்பதைப் பார்க்க தினம் உங்க வீட்டுக்கு வந்தேன். நீங்கள் பார்த்த மௌன புரட்சி நினைத்து எனக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் . இனி எல்லாவற்றையும் அதே விதமாக பார்க்க வேண்டியிருக்கும்.

பா.ராஜாராம் said...

:-))

வணக்கம் காமு! நலமா?

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சரிதான் காமராஜ்.

தொடர்ச்சியாக வெளிச்சாப்பாட்டில் செத்துக்கிடக்கும் நாக்கு ஊர் திரும்பியவுடன் வீட்டுச் சாப்பாட்டுக்குப் பரபரப்பது போலத்தான் இந்தப் புரச்சியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த புரட்சி மாறிமாறி நடந்தபடியே இருக்கிறது.

சாக்கடையில் நேரத்துக்குத் தூர்வாரும் மனிதருக்கான வசவுகளும் புரச்சியைத் தொடர்கின்றன.

vasan said...

நேற்றுவ‌ரை அப்பாவும் பிள்ளைக‌ளும் சிரித்துக் கொண்டிருந்தார்க‌ள்.
இன்று அம்மா அக‌லமாய் அதை செய்து கொண்டிருக்கிறார்க‌ள்.
அதே சாலை, அதே பிச்சைக்கார‌ர்க‌ள்,அதே ப‌ஸ், அதே கூட்ட‌ம்,
அதே டாஸ்மாக், அதே விலை, அதே நெரிச‌ல்.
கொஞ்ச‌ம் அதிக‌மாய் சுவ‌ரொட்டி, அடுப்பெரிக்க‌ அதைக்
கிழிக்கும் குழ‌ந்தையின் க‌ண்க‌ளில் கொஞ்ச‌ம் சிரிப்பு.