ராமநாதபுரத்தில் இருந்து வீடு திரும்பும்போது சக ஊழியர் ஒருவர் சீக்கிரம் பஸ்ஸப்பிடிச்சி ஊரு போயிருங்கப்பு எங்கனயாச்சும் பஸ்ஸ நிப்பாட்டிட்டா அவ்ளோதான் என்றார். பரமக்குடி அஞ்சு முக்குரோட்டில் வானுயர்ந்த ப்ளக்ஸ் பேனர் இருந்தது. மறுநாள் குருபூஜை என்பதால் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள். காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கவந்தவர்களைக் கூட நிக்காத போ என விரட்டிக் கொண்டிருந்தார்கள். உடன்வந்த பயணிகள் உச்சுக்கொட்டி தங்களது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொண்டார்கள். அடுத்த நாள் கடை யிருக்காது கூட ரெண்டு பால் பாக்கெட் வாங்கிவச்சுக்கொங்க என்று அருகிலிருந்தவர் போனில் மனைவிக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார். அந்த உரையாடல்களோடு பரமக்குடி இயங்கிக்கொண்டிருந்தது.
சமூகம்,உலகம்,இந்தியா,ஜாதி,பரமக்குடி
ஒரு தெய்வநம்பிக்கை இல்லாதவனாக தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு ’குருபூஜை’ என்கிற சொல்லை நானும் வெறுக்கிறேன். ஆனால் சுற்றிலும் நடக்கிற நடப்புகள் தான் அடுத்த வீட்டுக்காரனை ஆட்டுவிக்கிறது. நமக்குப் பிடித்துப்போனால் யப்பா கூட்டம் ஜேஜேன்னு இருக்கும் என்று கொண்டாடுவோம். பிடிக்காவிட்டால் ஒரே கசகசப்பு தொந்தரவு தாங்கமுடியாது என்று சபிப்போம். இப்படியான சிந்தனைகள் நமது சாதிய ரத்தத்தில் ஊறிப்போனவை. பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலுக்காக நான்கைந்துமுறை அந்தப்பகுதிகளில் பயணித்து பேட்டிகளுடன் இருந்தபோது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தலித்தல்லாத எல்லோரும் திரு.தொல்திருமாவளவன் அவர்களின் பெயர் சொல்லும் போது ஒருமையிலும் ஒவ்வாத முகத்துடனமே தங்களை நிரூபித்துக் கொண்டார்கள். எல்லாம் சகஜமாக இருந்ததாம் அவர் வந்துதான் சாதீய மோதல்களை உருவாக்கிவிட்டாராம். இதே கருத்தை ஒரு படிப்பறிவில்லாத கூலிக்கார ஆதிக்க சாதிக்காரர் தொடங்கி முற்றும் கற்ற கல்வியாளர் என்று சொல்லிக்கொள்கிறவர் வரை வைத்திருக்கிறார்கள். அதில் முற்போக்கு பிற்போக்கு எல்லாம் ஏதும் வித்தியாசம் இல்லை.
இந்திய சமூகத்தில் வேரோடிக் கிடக்கும் எல்லாத் தவறுகளுக்கும் அடிநாதமாக இருப்பது சாதி மட்டும் தான் என்பதை இனங்கண்டு அதை வேரறுக்க கிளம்பிய தலைவர்கள் எல்லோரும் பகடி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் புறந்தள்ளப் பட்டிருக்கிறார்கள் அல்லது சாதிய அடையாளம் கொடுத்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு கடவுள் அவதரிக்கவெண்டுமென்றால் கூட அவன் மேல் சாதியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. சாத்தூருக்கு அருகிலே உள்ள ஓ.மேட்டுப்பட்டி என்கிற கிராமத்தில் பகடை காளியம்மன் கோவில் என்று இருக்கிறது. சாமி இருக்கிறதா இல்லையா என்கிற விவாதத்துக்கு முன்னாள் இந்த மனிதன் தனது சாதியை எங்கெல்லாம் கொண்டுபோய் நிறுவி வைத்திருக்கிறான். பார்த்திபனூர் நுழைவுவாயிலில் பரளை என்று ஒருகிராமம் வரும் பத்தடி தூரத்தில் முஸ்லீம்பரளை என்று இன்னொரு கிராமம் வரும். அதே போலவே கடற்கரை கிறித்தவ புண்ணியத்தலமான உவரி போகும் போது, நாடார் உவரி என்று இன்னொரு ஊர் வரும்.
இப்படித்தான் இந்த தேசம் முழுக்க நானும் அவனும் ஒன்றில்லை என்கிற மூர்க்கமான குரலின் நடப்புகள் நிறுவப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு சின்னச் சின்ன பங்கம் வரும்போதெல்லாம் அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஜாதி தனது கொடூர மரண தண்டனைத் தீர்ப்பை மிகச்சுலபமாக நிறைவேற்றிக் கொள்கிறது. இவை எதுவும் வேண்டாம், வாருங்கள் சீக்கியத்துக்கு என்று அழைத்துக் கொண்டு போனார்கள்.அங்கே சரியில்லை வாருங்கள் கிறித்தவத்துக்கு என்று அழைக்க அங்கே ஓடினார்கள். அம்பேதகர் வந்து எல்லா வற்றையும் மறுதலித்து பௌத்த மதத்துக்கு கூட்டிக் கொண்டு போனார். பின்னர் மீனாட்சிபுரங்களாவது நமக்கு பூரண மனித அடையாளம் தரும் என்று நம்பி ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் முன்னாடி வழிகாட்டியவர்களை அவர்களது தலைவர் களாக வரித்துக்கொண்டார்கள். ஆனால் பாருங்கள் இந்த தலித் சமூகம் தன்னை பெரும்பான்மை மக்களில் இருந்து ஒரு இம்மியளவு கூட வித்தியாசப்படுத்தாமல் அப்படியே அச்சு அசலாக அவர்களைக் நகலெடுத்துக் கொண்டுதான் வாழ்ந்து தொலைக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த குருபூஜை.
சமீபகாலங்களில் குருபூஜை கொண்டாடாத சாதிகளே இல்லையென ஆகிப்போனது. இப்போதெல்லாம் தமிழகத்தில் புதிய புதிய சுதந்திரப் போராட்ட வீரர்களும் புதிய புதிய மன்னர்களும் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்குக்கூட ஜாதிப்பெயிண்ட் பூசி தெருமுனையில் நிறுத்தி விட்டார்கள். அப்படிப் பூசிவிடுகின்ற கூட்டங்களில் இருந்து ஒரு போதும் தலைவர்கள் உருவாவதில்லை. அவர்களை காசுபோட்டு,லாரிபிடித்து ஒருங்கினைத்து மாநாடு நடத்தி தங்கள் தொழிலையும், கருப்புப் பணததையும் காப்பற்றிக்கொள்கிறார்கள். கூடவே சட்டசபைத் தேர்தலில் தங்களுக்கான தொகுதிகளை ஒதுக்கி அப்புறம் உல்லாசங்களையும் ஒதுக்கி கொள்கிற வியாபரம் பெருகிக்கிடக்கிறது.
ஆனால் இவைகளோடு தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தையும் வரலாற்றையும் எடைபோடமுடியாது. அவர் யார்,எங்கிருந்துவந்தார்,என்னசெய்தர்,எதற்ககாகக் கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தியை தெரிந்துகொள்ளவேண்டும். நாம் நமது சொந்த ஜாதி அடையாளத்தைக் கழற்றி வைத்து விட்டுப் படித்தோமேயானல் ஏனைய சாதிய மாநாடுகளுக்கும் அவரது நினைவு தினத்துக்குமான வித்தியாசம் புரியும்.
இன்னும் போராட்டக்களத்தில் இருக்கும் மணிப்பூர் மக்களின் கொதிநிலையை மேலேற்றி விட்டவர் தோழர் மனோரமா தேவி. ராணுவச் சட்டம் afspa 1958 அமலானதால் அந்த இன மக்கள் சந்தித்த இன்னல்களை ஒன்று திரட்டியவர்.ஒரு தன்னார்வத் தொண்டர்.அந்த ஒரே காரணத்துக்காக அவர் கூட்டிக்கொண்டு போய் கற்பழித்து தெருவில் வீசியெறியப்பட்டார்.அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை அந்த பசுமையான மணிப்பூர் பிரதேசம் பற்றி எறிந்துகொண்டே இருக்கிறது. இப்படித்தான் உலகமெங்கும் தியாகிகள் இனங்காணப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு போரட்டக்காரர்தான் தியாகி இமானுவேல் சேகரன் அவரைக்கொண்டாடும் செப்டம்பர் 11 ஆம்நாள்.அது குருபூஜையல்ல. ஒரு தியாகியின் நினைவுதினம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் கற்ற கல்வி, பட்டறிவு இவற்றை செலவழித்தவர். படிப்பறிவில்லாமலும் அடிமை இருட்டிலும் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வெளிச்சம் கொண்டுவந்தவர். செருப்புப் போடக்கூடாது,நல்ல ஆடைகள் அணியக் கூடாது. படிக்கக்கூடாது,எதிர்த்துப் பேசக்கூடாது என்கிற அடக்குமுறை முதுகுளத்தூர் பகுதிகளில் அமலில் இருந்தது. விடுதலைக்குப் பிந்திய காங்கிரஸ் ஆட்சியும்,கிறித்தவ மதமும் இவற்றிலிருந்து தலித்துகளூக்கு விடுதலை கொடுத்தது. அதனாலேயே காங்கிரசுக்கு ஓட்டளிக்கக் கூடாது என்கிற மேல் அடக்குமுறையை ஏவி விட்டார்கள்.
அடங்ககமறுத்து தலித்துக்கள் எதிர்த்து நின்றார்கள். கலவரங்கள் வெடித்தது. அந்தக் கலவரங்களுக்கு முடிவுகட்ட அரசு அமைதிப் பேச்சு வார்த்தையை ஒருங்கிணைத்தது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்து சிறைசென்றவரும், பின்னர் ராணுவத்தில் பணியாற்றியவரும், திரும்பிவந்து தகப்பனார் ஆரம்பித்த தேவேந்திர வேளாளர் சங்கத்தை வழிநடத்தினார் ஒருவர். அவர் இம்மானுவேல் சேகரன். அந்த தலித் மக்களில் இருந்து மேலெழுந்து வந்து அவர்களுக்கான மூன்று பிரதிநிதிகளில் ஒருவராக 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடந்த சமாதானக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.அதனாலேயே,அதாவது ஒரு தலித்தை தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியாத மறுநாள் 11.09.1957 ஆம் தேதி கொல்லப்படுகிறார்.
இப்படித்தான் இதே ரீதியில்தான் உலகெங்கிலும் உள்ள போராட்ட வரலாறுகள் காணக்கிடைக்கிறது. எனது சந்ததிகளுக்கு எம் பெருமைகளைச் சொல்லாதே நாம் சந்தித்த அவமானங்களைச்சொல், நாம்பட்ட வேதனைகளைச்சொல், நாம் சிந்திய ரத்தத்தைப் பற்றிச்சொல் அதிலிருந்து அவர்கள் புதிய வரலாறுகளை உருவாக்குவார்கள் என்கிற கோரிக்கைகளோடே நசுக்கப்பட்ட உலக சமூகம் காத்துக்கிடக்கிறது. இந்தியாவில் அதைச்சொல்லுகிற தலித்துகள் மட்டும் கலகக்காரர்களாக, பிரிவினைக்காரர்களாக, கலவரங்களைத் தூண்டுபவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களின் அணிதிரட்டல்கள் மூர்க்கத்தனமாக கையாளப்படுகிறது. அவர்களின் கொண்டாட் டங்கள் மட்டும் அமைதிக்கு பங்கமென்கிற மாதிரி அரசாலும் ஊடகங்களாலும் திரித்துக் கூறப்படுகிறது. தோழர் ஜான்பாண்டியன் அப்படிச் சித்தரிக்கப் படுகிறவர்களில் ஒருவர். திரித்துக் கூறப்படுகிற ஒரு நிகழ்வு தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுதினம்.
தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்திய சமூகம் ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதம்,சாலைமறியல் ஆகிவற்றை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதை எதிர்கொள்ள அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது,கைதுசெய்கிறது. மிஞ்சி மிஞ்சிப்போனால் தடியடி நடத்தி அப்புறப்படுத்துகிறது. ராம் லீலா மைதானத்தில் கைதுசெய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட பாபா ராம்தேவுக்காக இந்தியா முழுமைக்கும் கொதித்து எழுந்ததுபோல பத்திரிகைகள் சித்தரித்தன. அன்னாஹசாரேவின் உண்ணா விரதத்துக்கு அனுமதிமறுக்கப்பட்ட போது இந்திய மேட்டிமை வாதிகள் ஜனநாயகம் செத்துவிட்டதென கூக்குரலிட்டது. நீதிமன்றம் தலையிட்டு உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டது.
அவற்றையெல்லாம் நேரலையாக இந்தியா பார்த்துக் கொண்டிருந்தது. நடந்து முடிந்து இன்னும் ஒருமாதம் கூட ஆகவில்லை. ஆனால் ஒரு நூற்றி ஐம்பது கிராமத்தார்கள் சாலையில் உட்கார்ந்து மறியல் செய்ததற்கு துப்பாக்கி சூடு நடந்திருப்பது இந்திய சமூகத்தில் தலித் தல்லாதவர் சந்தித்திராத கொடுமை. சமாதானம் செய்திருக்கலாம், கைது செய்திருக்கலாம், கண்ணீர்ப் புகை வீசிக் கலைத்திருக் கலாம். அத்துணையிலும் ஆத்திரம் தீரவில்லையா லத்திக்கம்பால் கூட அடி அடித்திருக்கலாம்.எதிரி நாட்டுப் படைகளைச் சுடுவது போல துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது காவல்துறை. அவ்வளவு ஆத்திரம் எங்கிருந்து வந்தது. நிராயுத பாணிகளான அப்பாவி களின் உயிரைப் பறிக்க உத்தரவு கொடுத்தது யார் ?.
ஒரு மத்திய மந்திரியைச் செருப்பாலடித்தவனைக் கூட இழுத்துக் கொண்டுபோய் சிறையில்தான் அடைத்தார்கள். நாடுகடந்து வந்து மும்பை தாஜ்விடுதியில் கண்மண் தெரியாமல் துப்பாக்கிச்சூடு நடத்திய கசாப் இன்னும் விசாரணைக் கைதியாகவே இருக்க, இந்த அதிரடித்துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் தாழ்த்தப்பட்ட்வர்கள் என்பதால் மட்டுமே. இது போன்ற சாதி ஊர்வலங்களுக்கு கொடுக்கிற எச்சரிக்கையாக அரசு இதைச்செய்ததாம்.இருக்கிற அரசியல் அழுத்தங்களைத்திசைதிருப்ப அல்லது தமிழர்களை ஒன்றுசேரவிடாமல் தடுக்க எடுக்கப்பட்ட சாணக்கியத்தந்திரம் என்றெல்லாம் நோக்கர்கள் ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். வேறெந்த சாதியின் ஊர்வலமும் இங்கே நடக்கவில்லையா ?எனில் இந்த தலித் மக்களின் ஏழு உயிர் என்ன சோதனைச்சாலைக்கு கொண்டு போகும் எலிகளின் உயிரைவிட மலிவானதா ?தாக்குண்டால் புழுக்கள் கூட தரைவிட்டுத்துள்ளி எழும் சாக்கடைப் புழுக்களா தலித் மக்கள் காரணமில்லாமல் நசுக்குவதற்கு.
ஒரு அரசுக்கே தலித் மக்கள் மீது கவிழ்ந்திருக்கும் குரோதத்தின் மிக வெளிப்படையான சாட்சிதான் இப்படியான படுகொலைகள். இது கொடியங்குளத்தில், தாமிரபரணியில் இப்போது பரமக்குடியில். இந்த அரசின் இமாலயத் தவறைச் சுட்டிக்காட்ட இப்போது மொத்த தமிழகமும் விரல் நீட்டியிருக்கவேண்டும். ஆழ்மனத்தில் தாண்டவமாடும் எக்காளத்தை முகத்தில் மறைக்க மௌனம் சாதிப்பதை நீண்ட நாள் மறைக்கமுடியாது. அதைக் கவனம் கொள்கிற பக்குவம் இங்கிருக்கும் இருபதுகோடிக்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வரும்.
அதுவரை தாங்கள் சிந்திய ரத்தத்தை கணக்கெடுத்து வைத்துக்கொள்வார்கள்.
4 comments:
இது போன்ற பதிவுகளுக்கு கூட பெரிதான பின்னூட்டங்களை நீங்கள் எதிர்பார்க்க கூடாது..!
:) :)
யதார்த்தம் அதுவே...!
:) :)
எப்படி இருக்கறீங்க அண்ணா??
:) :)
வேலைப் பளு.... வலைப் பக்கம் அதிகம் வர முடிவதில்லை
அண்ணா... நீங்கள் கூறியது முற்றிலும் சரியே.....காவல்துறை மற்றும் ஆளும் அரசுக்கு வேண்டியோர் என காட்டிக்கொள்பவர், வாக்களித்த மக்கள் ஆகியோர் மனதிலிருக்கும் சாதி வெறியே இதேர்க்கேல்லாம் மூலமாக இருக்கும்..
ஆனாலும் ஜான்பாண்டியன் பற்றிய உங்கள் பார்வையில் எனக்கு மட்டுமல்ல,யாருக்குமே உடன்பாடு இருக்காது. அவரை ஒன்றுமறியாத பாப்பாவாக எழுதி இருப்பது ஏற்புடையது அல்ல.ஜாதி சார்போடு அரசியல் செய்யலாம்...
ஆனால் ஜாதி பேரை சொல்லி கூலிக்கொலைசெய்வோரை ஆதரிக்காதீர்கள்.
கோவை தொழிலதிபர் கொலை வழக்கு மறந்து விட்டதா? இவர்களை போன்றவர்களால் தான் கி.சாமி,திருமா,இன்னும் பல தலித் அரசியல் வாதிகளையும் பொது மக்கள் ஏற்று கொள்ள தயங்குகின்றனர்.
அண்ணா... நீங்கள் கூறியது முற்றிலும் சரியே.....காவல்துறை மற்றும் ஆளும் அரசுக்கு வேண்டியோர் என காட்டிக்கொள்பவர், வாக்களித்த மக்கள் ஆகியோர் மனதிலிருக்கும் சாதி வெறியே இதேர்க்கேல்லாம் மூலமாக இருக்கும்..
ஆனாலும் ஜான்பாண்டியன் பற்றிய உங்கள் பார்வையில் எனக்கு மட்டுமல்ல,யாருக்குமே உடன்பாடு இருக்காது. அவரை ஒன்றுமறியாத பாப்பாவாக எழுதி இருப்பது ஏற்புடையது அல்ல.ஜாதி சார்போடு அரசியல் செய்யலாம்...
ஆனால் ஜாதி பேரை சொல்லி கூலிக்கொலைசெய்வோரை ஆதரிக்காதீர்கள்.
கோவை தொழிலதிபர் கொலை வழக்கு மறந்து விட்டதா? இவர்களை போன்றவர்களால் தான் கி.சாமி,திருமா,இன்னும் பல தலித் அரசியல் வாதிகளையும் பொது மக்கள் ஏற்று கொள்ள தயங்குகின்றனர்.
இப்போ தான் திருமா, கி.சாமி தமிழரசன் போன்றோர்க்கேல்லாம் வெகு ஜன ஆதரவு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இவர்களுக்கு தற்போது கிடைத்துவரும் வெற்றிகளில் பிற ஜாதியினர் பங்கு கணிசமாக இருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்த சுமூக மாற்றங்களை கெடுப்பது ஜான் பாண்டியன் போன்றோரே....
எல்லா ஜாதியிலும் ஒரு ரவுடியை சுட்டிக்காட்ட முடியும்..ஆனால் இங்கு நீங்கள் ஜான்பாண்டியனை புகழ்வது கட்டுரையின் நோக்கை திசை திருப்பக்கூடும் என நினைப்பதால் சொல்கிறேன்....
Post a Comment