13.11.11

ஆற்றாது அழுத கண்ணீர்......


தமிழ் மக்களின் மேல் கவிழ்ந்திருக்கும் நீங்காத சாபம்தான் இந்த நிகழ் அரசியலும்,சினிமாவும். ஒரு ஐந்துவருடம் மக்கள் பட்டு அழுந்திய மனக்குமுறலுக்கும் ஆயாசத்துக்கும் திமுகவுக்கு கோட்டைவாசலைத் திறந்துவிட்டது 2006 தேர்தல் . அதை மாற்றம் எனக்கணக்கிலெடுத்துக் கொண்டால் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்துக்குள் நடந்த சண்டைகளைக்கூட மாற்றம் என்று தான் புள்ளி விபரப் படுத்தவேண்டிய கேடுகாலம் வந்துபோனது தமிழகத்தில். யாருக்குமே தெரியாமல் சும்மா மதுரைக்குள் சம்பாதித்துக்கொண்டிருந்த அழகிரி யானைமாலை போட்டதுபோல மத்திய மந்திரி ஆனார்.நானென்ன இளைத்தவனா என்று தயாநிதி அழகிரியும் மத்திய மந்திரி ஆனார். இவர்களிருவரும் மந்திரியாகிறபோது நான் மட்டும் என்ன சூத்தக் கத்திரிக்காவா என்கிற கேள்வியோடு கனிமொழியும் களமிறங்கினார். தமிழக அரசியல் சூடு பிடித்துக் கொண்டது.நீங்கள் இதே சூத்திரத்தை அப்படியே தமிழ்ச் சினிமாவுக்கும் தூக்கிப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

ஒரே குடும்பத்தில் இரண்டுபேருக்குமேல் சினிமாத்துறையில் இருந்தால் மட்டுமே ஸ்டார் அந்தஸ்து பெறமுடியும் என்பதை எழுதாத சட்டமாக்கி அரசி யலைப்போல சினிமாவா? சினிமாவைப்பார்த்து அரசியல் கள்ளக் காப்பி அடிக்கிறதா? என்று கண்டு பிடிக்க முடியாமல் செய்து விட்டார்கள். சண்ட,சண்டக்கோழி, கோழிச்சண்ட,சண்டியர்,420,பருத்திவீரன்,வீரமும் ஈரமும் இப்படியான சினிமாக்களாக கொட்டிக்குவித்து இதிலிருந்து ஏதாவது ஒன்றைத்தான் நீ தெரிவுசெய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தியது தமிழ்ச்சினிமா. அதாவது நாற்பத்தேழுவருடமாக திமுக அல்லது அதிமுக மட்டும்தான் கட்சிகள் என்கிற ரெட்டைச்சாளர ஆரசியலை நிலை நிறுத்திவிட்டார்களே அதுபோல.அரசியலென்பது குறைந்தபட்சம் ஒரு டாடா சுமோவாவது
வைத்துக்கொண்டு திமிர்த்தனம் பண்ணுவது,லஞ்சம் வாங்குவது,லஞ்சம் வாங்கிக்கொடுப்பது,கட்டப்பஞ்சாயத்து பண்ணுவது மக்களை சாதிய ரீதியாக ஒன்று திரட்டுவது என்கிற பண்ணையார்த்தனங்களை ஆராதிக்கிற செயல்களாக மாற்றமானது. அதை அப்படியே கட்டமைக்கிற நடவடிக்கைகளை இந்த இரண்டு குப்பையில் ஊறிய மட்டைகளும் துள்ளியமாக நடத்தியது.

படிப்பறிவில்லாமல் வெறும் சண்டியர்த்தனத்தால் கட்சியேறி பதவிக்குவந்தவர்கள் மட்டுமே இப்படிச்செய்தார்கள் என்கிற நியதியில்லாமல் பெரும் பட்டமும், வக்கீல்கள்,டாக்டர்கள்,பேராசிரியர்கள்  உயர்படிப்பு படித்தவர்களும்  கூட இதே சாக்கடைக்குள் தான் விழுந்து புரண்டார்கள். ’ஏற்றதொரு கருத்தைச்சொல்வேன் எவர் வரினும் அஞ்சேன்,நில்லேன்’ என்கிற வரிகளைப் படித்துப் புல்லரித்தவர்கள் திமுக, அதிமுக அரியணைகளுக்குள் சிக்கிச்
செல்லரித்துப் போனார்கள். நான் கோட்டைக்குள் மட்டுமல்ல தமிழகத்தில் செருப்பே அணிவதில்லை ஏனென்றால் அம்மா ஆளும் தமிழகம் எனது கோவில்’ என்கிற உலகப் புரட்சிகரமான,திராவிடத்தனமான கருத்தை ஒரு சட்ட வல்லுநரான அமைச்சர் உதிர்க்கிறார்.அதை இந்தக்களவாணிப்பத்திரிகைகள் பெருமிதத்தோடு செய்தியாக்குகிறது.தமிழகம் படித்துவிட்டு காறித்துப்புவதை மறந்து எதிரும் புதிருமாய் உட்கார்ந்து கொண்டு நீயா நானா வென விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறது.

இந்துமதமெனும் வர்ணாசிரம கொடுங்கோண்மைக்கு எதிர்ப்புத்தெரிவித்து தம்மை வெளியிழுத்துக்கொண்டு
கலகம் செய்து ஆரம்பிக்கப்பட்ட தத்துவங்கள்  அந்நாட்களில் பௌத்தம், சீக்கியம், சூவ்பி, ஜைனம் ,சமணம், அருட்பெரும் ஜோதி,வீரசைவம்,பார்சீ யெனக்கிளம்பியவற்றின் நீட்சியாக தெற்கில் உதித்தது திராவிடம். ஒரு கருஞ்சூரியனின் அலைச்சலும் ஆற்றலும் சிந்தனையும் செயலுமான வெக்கை தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அசாத்திய அரசியல் வரலாறு. பெரியாரின் படத்தை உபயோகப்ப்படுத்துவதோடு பெரியாருக்கும் திராவிடக்கட்சிகளுக்குமான பந்தம் நின்றுபோனது. அதனால்தானோ என்னவொ அந்த தீர்க்கதரிசி போங்கடா வெங்காயங்களா நீங்களும் உங்கள் தேர்தலும் என்று மூக்கைப்பொத்திக்கொண்டு ஒதுங்கிப்போய் நின்று கொண்டார். ’கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா’ என்பது அறுபதுகளில்
நாடிநரம்புகளை சிலிர்க்கச்செய்யும் வார்த்தைகள்.இது அந்தக்காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் கஞ்சிக்கு வழியில்லாமல் பஞ்சத்திலடிபட்ட தமிழர்களை உசுப்பி விட்டது.

ஆனால் அதே வழியில்வந்த இந்த அரசு இதோ 13500 மக்கள் நலப்பணியாளர்களை வயிற்றிலடித்துத் தெருவுக்குள் தள்ளி விட்டிருக்கிறது.ஒரே காரணம் அவர்களெல்லோரும் திமுக ஆட்சிக்காலத்தில் பணியிலமர்த் தப்பட்டவர்கள் என்பது மட்டுமே. இதே போலத்தான் சென்ற முரையும் ஆடுகோழி வெட்டக்கூடாது என்று சட்டம் இயற்றியது இந்த அரசு.ஒரே கையெழுத்தில் பத்தாயிரம் சாலைப்பணியாளர்களைத்தெருவுக்கு அனுப்பியது. தெருவுக்கு வந்த குடும்பங்கள் அதைசமாளிக்கமுடியாமல் அழுதுபுலம்பியது.எண்பது தோழர்கள் இறந்து போனார்கள். நூறுக்கும் அதிகமானவர்கள் மனப்பிறழ்வுக்கு ஆளானார்கள். இறுதியில் தேர்தல் பயத்தினால் மறுபடியும் பணிக்கு அழைக்கப்பட்டார்கள். ஆனால் இறந்துபோனவர்கள் விட்டுச்சென்ற  குடும்பங்கள். அந்தக் குடும்பங்களின் கண்ணீர் அப்படியே உறைந்து போயிருக்கிறது. மனப்பிறழ்வானவர்களின் வார்த்தைகள் திரும்ப திரும்ப இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்தக்கறையே நீங்காமல் திட்டுத்திட்டா இருக்கும்போது இதோ மறுபடியும் மக்கள் நலப்பணியாளர்களை தெருவுக்கு கொண்டுவந்திருக்கிறது அரசு.

வேலையிழந்த பெண்கள் தெருப்புழுதியில் புரண்டு அழுகிற காட்சி மனம் பதற வைக்கிறது. அப்படி அவர்கள் வயிற்றிலடித்து,அவர்கள் கண்ணீரை கோட்ட வைத்து என்ன சாதிக்கப்போகிறது இந்த அரசு. தோற்றுப்போன மந்திரிகளையும்,கட்சிக்காரர்களையும் கோர்ட்டுக்கு அலைய வைக்கிற செயல்கள் சரியென்கிற ஒரே  காரணத் துக்காக அவர்களுக்கு ஓட்டுப்போட்ட சனங்களை வயிறெரிய விட்டு விட்டு மின்விசிறிகள் கொடுப்பது
எதற்கு? வெக்கையை இன்னும் விசிறிவிடுவதற்கா?.

எதிர்க்க வழுவற்ற ஏழைகள் அழுதுபுலம்பி ஆற்றாமல் சிந்தும் கண்ணீர் ஆயிரமாயிரம் கூர்மையான வாள்களுக்குச்சமம்

என்று ஜெர்மானியக் கவிஞர் குந்தர்கிராஸ் சொல்லுகிறார்.  


7 comments:

K.s.s.Rajh said...

அருமையான பதிவு

Mahi_Granny said...

' எதிர்க்க வலுவற்ற ஏழைகள் அழுதுபுலம்பி ஆற்றாமல் சிந்தும் கண்ணீர் ஆயிரமாயிரம் கூர்மையான வாள்களுக்குச்சமம். ' ஆனால் ஆட்சியாளர்களை ஒன்றும் பாதித்த மாதிரி தெரியவில்லை.விமோசனம் தான் என்ன ?

சிவகுமாரன் said...

ஆற்றாது அழுத கண்ணீர் ஆறாக ஓடினால் அதில் படகு சவாரி செய்வார்கள் அதிகாரவர்க்கத்தினர்.
கேட்க யாருக்கும் துப்பில்லை. ஓட்டுக்கு பணம் வாங்கி ஊழலில் பங்கெடுத்துக் கொண்ட மக்களுக்கு வக்காலத்து வாங்க கூட மனம் ஒப்பவில்லையே தோழரே.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தாமதித்துப் படிக்க நேர்கிறது கொதிக்கும் வார்த்தைகள் நிரம்பிய இவ்விடுகையை.

இந்த இரண்டு அரசுகளும் கடந்த நாற்பது ஆண்டுகளாய் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியவற்றைச் சரி செய்ய- இத்தனை விலைவாசியையும் பத்தாயிரங்களில் சம்பளம் வாங்கி குழந்தை குட்டிகளைப் படிக்கவைத்து வாழ்க்கையை வியர்வையும் கண்ணீருமாய்க் கடந்துபோகிறானே அவனின் சாமர்த்தியம் இருந்தால் கூட பிழைத்துவிடும் நம் எதிர்காலம்.

இரசிகை said...

varuththamaa irukku....:(

vimalanperali said...

வித்தியாசமான பார்வையையும் கோணத்தை,ஒரு இணைப்பையும் கொடுத்துச்சென்றிருக்கிற பதிவு.
எதிர்க்க வலுவற்ற ஏழைகளை முன் ஒன்று சேர்க்க முன் கையெடுப்பவன் ஜெயிக்கிறான் என்பது கூட இங்கு இல்லை தன்னை வலுப்படுத்திக்கொண்டு விட்டு விடுகிறான்.இது பெரிய சாப்க்கேடாகவும் முடியாத மெகாத்தொடராகவும்.

செந்திலான் said...

அதானே பார்த்தேன் எங்கடா முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பற்றி எதுவும் காணவில்லையே என்று. இங்கு ஊர் பற்றி எரியும் போது அமெரிக்கா பாகிஸ்தான் பிரச்சினையை பற்றி எழுதுவீர்களே தவிர தமிழ் நாட்டைப் பற்றி மட்டும் சிந்திக்க மறுப்பீர்கள் ஏனெனில் அங்கு போராடுவது "உங்கள்" தோழர்கள் என்பது தானே இது தானா சிவப்பு அயோக்கியத்தனம் என்பது ?