27.11.11

நாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.

வலைநண்பர்கள் 
அணைவருக்கும் 
நன்றி. 
இது 500 வது பதிவு.


மேகம் கருத்து ஊதக்காத்து வீசியதும் தட்டான்கள் தாளப்பறக்கும். நெய்க் குருவிகள் எங்கிருந்தோ கிளம்பிவந்து ஊர்களுக்குள் குதியாளம் போடும். மாரிக்கிழவன் புருவத்துக்குமேலே கைவைத்து சலாம் போடுகிற பாவனையில் அண்ணாந்துபார்த்து ’ தெக்க எறக்கமா இருக்கு ஓடப்பட்டி காட்டுல ஊத்து, ஊத்துனு ஊத்துது’ என்று புளகாங் கிதப்படுவான்.உடனே கலப்பையில் பிஞ்சு கிடக்கும் கைப்பிடியை சரிசெய்ய அல்லிராஜ் ஆசாரியிடம் ஓடுவான். முத்திருளாயிச் சித்தி அண்டாவைத் தூக்கிவந்து ஊர்மடத்து மொட்டை மாடியின் குழாய்க்கு நேராக வரிசை போடுவாள். அஞ்சப்பெரியன் ஓடிப்போய் காட்டில் கட்டிப் போட்டிருக்கும் எருமையை இழுத்துக் கொண்டுவந்து ஆள் புழங்காத ஓட்டைவீட்டில் கட்டிப் போடுவான். எப்படியும் ஓடப்பட்டியில் பெய்யும் மழை ஊருக்கு வந்துவிடும் என்கிற சந்தோசத்தில் ஊர்பரபரக்கும்.  இப்படித்தான் அந்த முண்டாசுக்கவிஞனும் ஆஹாவென்றெழுந்தது யுகப்புரட்சியென்று  புளகாங்கிதப் பட்டிருப்பானோ?.

கொடியில் காயும் ஒற்றை மாற்று பழுப்புநிற வேட்டியை எடுத்து மடித்து பத்திரப்படுத்தும் சூரிக்கிழவனுக்கு கூரை முகட்டைப் பார்த்து பார்த்து கலக்கம் வரும். மச்சினன் வீட்டில் போய் ரெண்டு சருகத்தாள் ஊரியாச்சாக்கு கடன் கேட்பான்.எதோ ரெண்டேக்கர் கம்மாக்கரை பம்புசெட்டை எழுதிக்கொடுக்கிற மாதிரி நெடுநேரம் யோசிப்பான் மச்சினன் யோசியப்பு. பொண்டாட்டிக்காரி எடுத்துக்கொடுத்த பிறகு தருமப்பிரபு பட்டத்தை தானாகப் புடுங்கிப் போர்த்திக் கொள்வான்.அதில் அவனுக்கொன்றும் லாஞ்சனையில்லை. தாயாருந்தாலும் பிள்ளையாயிருந்தாலும் வாயி வகுறு வேற வேற என்பதே அவனது தாரகமந்திரம். தனக்குப்போகத்தான் தானம் என்கிற சொல்லில்  மறைந் திருக்கும்  நமுட்டுச்சிரிப்புத்தான். ஆனாலும் ஊர்- சமூகம் என்பது பகிர்தலின் ஆதிப்பொதுவிலிருந்தே ஒன்றுசேர்கிறது. அரைக்கிலோ கறியெடுத்துவந்து வதக்கி ஒத்தையாளா திண்ணு ஏப்பம் விடும் ஆசாமிகள் ’எலும்புக் கொழம்பில் தான் சத்து இருக்கு’ என்கிற மாதிரி எப்போதுமே ஒரு மந்திரச்சொல்  வைத்திருப் பார்கள். அல்லது சம்பாதிக்கிற எனக்கே அதை செலவழிக்கிற தகுதியும் திறமையும் இருக்கிறதென்கிற இருமாப்புத் தத்துவம் எழுதிவைத்துக் கொள்வான். அது வெள்ளந்தி தெருக்களில் குறைவாகவும் சமத்தர்களின் பகுதியில் அதிகமாகவும் விளைந்துகிடக்கும்.

கொட்டாரத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருக்கும் சாம்பக்கோழிக்கும் தெரிந்து போகும் இன்னும் கொஞ்சநேரத்தில் மழைவந்துவிடுமென்று. கொக்கொக் என்று குஞ்சுகளைக்கூப்பிட்டுக்கொண்டு தாழ்வாரங்கள் தேடிப்போகும். கூடடையும் கோழிக்குஞ்சுகளைப் பார்த்ததும் முத்தரசி மதினிக்கு மகன் ஞாபகம் வந்து  வீடு வீடாய்த் தேடுவாள். ’நடக்கத் தெரிஞ்சுக்கிட்டு இந்த கருவாப்பய ஒருநிமிஷம் வீடுதங்க மாட்டிக்கானே அவங்க அப்பனமாதிரி’ என்று முனுமுனுத்துக் கொண்டுபோய் தீப்பெட்டிக் கட்டு ஒட்டும் சரோஜாச்சித்தி  வீட்டி லிருந்து  கருவாப்பயமகனே என்று கன்னத்தைக் கடித்துக்கொண்டே  தூக்கிக்கொண்டு வருவாள். சின்னம்மாப் பாட்டி வெளியில் வந்து ’எலே ஏ வேலவரு எங்கே போய்த்தொலஞ்சான் இந்த மூத்த பய’ என்று மகனைத்தேடுவாள். அவள் கூப்பிட்ட சத்தம் தொடர் சத்தங்களால் ஓட்டைமடத்தில் உட்கார்ந்து  திருட்டுத் தனமாய் சிகரெட் குடிக்கிற வேலவருக்கு வந்துசேரும். உருப்பிடியா ஒரு சீரெட்டுக்குடிக்க  விட மாட்டாகளே என்று ராக்கெட் விடுவதை தடுத்தமாதிரி சலித்துக்கொண்டு கிளம்புவான். ’எய்யே எங்கய்யா போன மழ இருளோ மருளோன்னு வருது. களத்துல மொளகாப் பழங் காயுது. மாட்டுக்கு கூளம் உருவிப்போடனும் நீபாட்டுக்குல போயி ஓட்ட மடத்துல ஒங்காந்தா எப்புடி’ என்று  கெஞ்சுவாள். பின்னாடி வந்த  பவுலைப்  பார்த்துக் கொண்டே அந்த ஓட்ட மடத்துல  என்னாதான் இருக்கோ என்று புலம்புவாள்.

'ஏ.... வெளங்காதவனே  ஙொப்பஞ் சீரழிஞ்சது போதாதா நீயுமா இப்பிடி படிக்கிற காலத்துல  பீடிசீரெட்டுக்குடிச்சுக் கிட்டு அலைவ இந்தா இந்தக்கோணிச்சாக்க கொண்டு போ, புதுருக்கு கடக்கிபோன மனுசன் மழையில நனைஞ்சிட்டு வருவான் கொண்டு போய்க்குடு’ என்பாள் பவுலின் அம்மா குந்தாணிப்பாட்டி. கொட்டாரத்தில் வெட்டிப்போட்ட விறகுகளைக் கட்டித் தூக்கிவந்து மழை படாத இடம் பார்த்து திண்ணையில் அடுக்கி வைப்பார் கொண்டச்சுந்தரப்ப மாமன். இத்தினிக்கானு வீட்ல ஆளுகளுக்கு கால்நீட்ட எடமில்ல வெறகக்கொண்டுவந்து அடுக்குறதப்பரு கிறுக்குப்பிடிச்ச ஆளு என்று கிண்டல் பண்ணும் சீதேவி அத்தையை அடிக்க ஓங்கிக்கொண்டே ’அங்க பாரு அடச்சுக்கிட்டு வருது சாய்ங்கால மழ, லேசுக்குள்ள விடாது, வெறகுநனஞ்சு போனா கால நீட்டியா அடுப்பெறிப்ப அறிவுகெட்ட சிறுக்கி’ என்று கடிந்துகொள்வான்.

மழைக்காலம் தொடங்கி விட்டது.இனித் தெருக்களில் கால் நீட்டிப்படுக்க முடியாது.தெருவிளக்கில் உட்கார்ந்து சீட்டு விளையாட்டு நடக்காது. நிலவொளியில் சின்னஞ்சிறுசுகள் கண்டொழிப்பான்  விளையாடாதுகள். வழக்கத்துக்கு முன்னாடியே ஊரடங்கிப் போகும். தீப்பெட்டி யாபீசுகளில் வேலை நின்றுபோகும். மூனுமாசத்துக்கு கையில துட்டு இருக்காது. காலையில் சூடாகக் காப்பிகுடிக்க பாயாசக்கரண்ணனிடம் கடன் சொல்லி வசவுவாங்க வேண்டும். சிலுவாடு சேர்த்துவைத்த காசுகள் வெளியேறி கடைக்குபோகும்.முத்துமாரி மதினி இருக்கங்குடிக்கு முடிஞ்சுவச்ச காணிக்கைத் துட்டை எடுத்து கருவாடு மொளகா வாங்கிக்கொள்வாள். மஞ்சள் துணியிடம்  மன்னிப்புக் கேட்டால் கூட மனதிறங்கி மாரியாத்தா சும்மா வுட்டுருவா.சனங்கள் தீப்பெட்டியாபீசிலிருந்து கிளம்பி வயக்காட்டு வேலைகளுக்கு மாறிக் கொள்ளும். இனிக்கூலியாக தானிய தவசங்கள்தான் கிடைக்கும்  அதைசாப்பாடாக தயார் பண்ண சாயங்கால நேரங்களில் பூமி அதிர அதிர உரல்கள் இடிபடும்.

கனகமணிஅத்தையும் ஞானசுந்தரிச்சித்தியும் காலக்கம்மம்புல்லை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே நேரத்தில்  ரெண்டு பேர் ஜோடிபோட்டு உரலிடிப்பதை பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.ஒரு அடி விட்டமுள்ள உரல்வாயில் மேல் செருகியிருக்கிற உரப்பட்டியிலும் படாமல் ஒரு உலக்கையை இன்னொன்று உரசி விடாமல் நெஞ்சாங் குழியிலிருந்து ஹ்ர்ர்ம் ஹ்ர்ர்ம் என்று உருமல்குரல் கொடுத்துக்கொண்டு நடக்கிற ஒரு விளையாட்டுப் போட்டி போலத்தெரியும். நேரம் ஆக ஆக வேகமெடுக்கிற உலக்கைகளின் குத்து அந்த பிரதேசத்தயே அதிரச்செய்யும். சற்று நிறுத்தி முகம் முழுக்க ஓடித்திரியும் வியர்வையை சேலைத்தலைப்பை எடுத்து அழுத்தித் துடைத்துக்கொள்ளும் ஞானசுந்தரிச் சித்தியின் முகத்தில் ஆயிரமாயிரம் தேவதைகள் குடியிருப் பார்கள். உள்ளங்கையில் எச்சிலைத் துப்பி இரண்டு கையையும் உரசி ஈரப்படுத்திக்கொண்டு கனமணி அத்தை கேட்கும் ’என்னவிள அவ்வளவுதானா ஓ எசக்கு’ என்றதும் உலக்கையை எடுத்து உயர்த்துவாள். ஏ இருடி இருடி என்று சொல்லிக்கொண்டே குண்டாலச் செம்பெடுத்து கம்பரிசியில் கொஞ்சம் தண்ணீர் ஊத்திவிட்டு தனது தொண்டைக்குழியில் கொஞ்சம் ஊற்றிக்கொள்வாள் கனமணி அத்தை.

இந்த ஞாயித்துக்கெழம கம்மாய்க்கு குளிக்கப்போகனும்டி,நீச்சடிச்சு குழிச்சு எம்பூட்டு நாளாச்சு என்பாள். அந்த எம்பூட்டு என்கிற கால அளவின் ஊடே மாரிமுத்துவின் உருவம் வந்துபோகும்.பதினாலு வயசிருக்கும் தண்ணிக்குள்ள தொட்டுப்பிடிச்சி விளையாண்டார்கள்.அப்போதெல்லாம் கனகமணியை யாராலும் நீச்சலில் பின்தொடர முடியாது. அதே போல மாரிமுத்து இந்தக்கரையில் முங்கி அந்தக்கரையில்  எந்திரிப்பான். இரண்டு நீச்சல் எதிரிகளை அந்த சித்திரை மாசத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் போட்டிக்கு அழைத்தது. என்னத்தொட்டுரு ஒனக்கு உள்ளாங்கையில சோறுபொங்கி ப்பொட்றேன் என்றாள். அது பழமொழி.உள்ளபடி கனகமணிக்கு வெண்ணி வைக்கக்கூடத்தெரியாது.கூட வந்ததெல்லாம் நண்டும் நசுக்கும்.கரையில் உட்கார்ந்திருந்து துணிகளுக்கு காவலிருந்த ஏஞ்சல்தான் ரெப்ரீ.

பொம்பளப் பிள்ளதானே என்று நினைத்து பின்தொடர்ந்த மாரிமுத்து திணறிப்போனான்.குளிக்கிற படித்துறை யிலிருந்து நேராகப்போனால் அக்கறைவந்துவிடும்.பக்கவாட்டில் போனால் கண்மாய் வளைகிற இடத்தில் நாணல் புதர்களும் வேலிச்செடிகளும் இருக்கும் அதைக்கடந்து போனால் படித்துறையின் பார்வையில் இருந்து மறைந்து போய்விடலாம்.விரட்டிப்போன மாரிமுத்து மிக அருகில் மடேரென்று எழுந்தாள். பதறிப்போன மாரிமுத்து சுதாரிப்பதற்குள் மறுபடி முங்கி காணாமல் போனாள்.ரெண்டு நிமிசம் கழித்து தூரத்தில் மாரிமுத்து மாரிமுத்து என்கிற சத்தம் கேட்டது.வேகமாகப்போனான் கால்ல எதோ சுத்தி இருக்கு சாரப்பாம்பா பாரு என்றாள் முங்கி அவள் காலைப்பிடித்தான் அது எதோ செடியின் தண்டு.அங்கிருந்து ஒரு மேடான பகுதிக்குப் போனார்கள். அந்தப் புதரில் தொங்கிய தூக்கணாங் குருவிகள்,. நாணல் பூக்கள், நாணலுக்குள் சலப் சலப் என்று விளையாடும் குறவை மீன்கள் எல்லாம் ரம்மியமானதாகத்தெரிந்தது அவற்றோடு மாரிமுத்துவும். ஏபிள்ள இதென்ன உதட்டுக்கீழ என்று கம்மாய்த் தண்ணீரின் சிகப்பு படிந்திருந்த நாடியைத் தடவினான். சூடாக இருந்தது.ஏவின நா ஒனக்கு நா சித்திமொற என்றாள்.’சீரெங்கபுரத்து சமியாடிபொன்னையச்சின்னையன் ஒனக்கென்ன மொற’ ’அது எங்கம்மா கூடப்பிறந்த மாமா’.’எனக்குச்சித்தப்பா, இப்பச்சொல்லு’ என்றான்.’இங்கரு தொட்ட நீதாங்கட்டிக் கிறனும்’. இதமொதல்லயே சொல்லவேண்டியதுதான என்று தண்ணீரோடு நெருங்கினான்.

அவன் கண்களில் இருந்து பீச்சியடிக்கிற காந்தத்தில் உடல் முழுக்க சூடு பரவியது. வீட்டில் யாரும் வாய் வச்சு தண்ணீர் குடித்தால் அந்த டம்ளரில் அதுக்கப்புறம் தண்ணீர் குடிக்காத சுத்தக்காரிக்கு.தனக்கெனக் கோரம்பாய், தட்டு,சீப்பு என தனித்து பதவிசு பார்க்கும் மேட்டிமைக்காரிக்கு மாரிமுத்துவின் எச்சில் ருசித்தது.சித்திரைக் கண்மாய் வெளியே வெதுவெதுவெனவும் உள்ளே குளு குளுவெனவும் ரெண்டு குணங்களில் கிடக்கும்.எச்சில் பட்ட ஒரு அரைமணிநேரம் கழிந்து போனது. திரும்பி வரும்போது இவர்களிடம் இருந்த இயல்பு தொலைந்து போயிருந்தது. எஞ்சல் மட்டும் இருந்தாள் ரெண்டுபேர் கண்ணையும் உற்றுப்பார்த்தாள். போய்ட்டு வரட்டா சித்தி தொட்டுட்டேன் நீ பந்தயத்துல தோத்துட்ட என்றபடியே சைக்கிளை எடுத்து விருட்டென்று மறைந்து போனான்.

அதற்க்கப்புறமான நாட்களெல்லாமே ஞாயிற்றுக்கிழமையை குறிவைத்தே கழிந்தது.ஒருவாரம் அவன் ஊரில் இல்லை. அடுத்த வாரம் ஒரே பெரிய பொம்பளைகள் கூட்டம். ஏ ஆம்பளப்பயக தனியாப்போங்கடா என்று அதட்டி விரட்டி விட்டாள் பன்னீரக்கா. ஒரு வெள்ளிகிழமை தீப்பெட்டி ஆபீஸ் சோதனை என்று சொல்லி பிள்ளைகளை விரட்டி விட்டிருந்தார்கள் நேரே கண்மாய்க்குத்தான் ஓடிவந்தாள். நெடுநேரம் மாரிமுத்து வரவில்லை தலை துவட்டி  பட்டன் போடும்போது வந்தான். பேசாமல் விடுவிடுவென்று போய் விட்டாள். குளிப்பதா வேண்டாமா என்கிற சிந்தனையிலேயே உட்கார்ந் திருந்தான்.கரையில் கூழாங்கற்களை எடுத்து களுக் களுக் கெனச் சத்தம் வர போட்டுக்கொண்டிருந்தான். ஒரு சாரப்பாம்பு தலை தூக்கியது சிலீரென்றது உடம்பு.அப்புறம் கனகமணியின் நினைவு வந்தது. பின்னாடி இர்ந்து பெரிய கல் விழுந்தது. திரும்பிப்பார்த்தான் கனகமணி நின்றுகொண்டிருந்தாள். என்ன வென்று கேட்டான் ஏங்கூடப்பேசாத என்றாள். பின்னர் தண்ணீருக்குள் இறங்கினாள் ஏஞ்சல் மேட்டில்போய் உட்கார்ந்து கொண்டாள். இவன் திரும்பிக்கொண்டான்.மேட்டிலிருந்து ஏ மாரிமுத்து ஒங்காளு கம்மல் தண்ணிக்குள்ள விழுந்துருச்சாம் கொஞ்சம் தேடிக்குடு என்றாள்.  ரெண்டுபேரும் தேடினார்கள். அதற்கப்புறம் ரெண்டுமூனு வாரத்தில் தண்ணீர் காலியாகி முட்டளவுக்கு வற்றிப்போனது.நிறமும் மங்கி குளிப்பதற்கு ஏதுவானதில்லாமல் போனது.மீன்பிடிக்க ஆரம்பித்தார்கள்.

கனகமணியை ரெண்டுவாரம் குச்சலுக்குள் உட்காரவைத்தார்கள். ஜன்னல் வழியே பார்த்து பார்த்து  மாரிமுத்துவைக்காணாமல் துவண்டு போனாள்.சடங்குவைத்தார்கள்.மூன்றே மாதத்தில் எலவந்தூருக்கு  வாக்கப்பட்டுப் போய்விட்டாள்.மாரிமுத்து படிப்பை நிறுத்திவிட்டு தாம்பரத்துக்கு கல்லுடைக்கப்போய்விட்டான். நான்கைந்து வருடத்தில் கனகமணி புருசனோடு திரும்ப ஊருக்கே வந்துவிட்டாள்.மாரிமுத்துவும் அக்கா மகளைக்கல்யாணம் முடித்து தாம்பத்திலேயே தங்கிவிட்டான்.

அந்த வழியாக வந்த செல்லமுத்து கம்புகுத்த வரலாமா என்று கேட்டுவிட்டு நமுட்டுச்சிரிப்பு சிரிப்பான்.அதில் ரெட்டை அர்த்தமில்லை ஒற்றை அர்த்தம்மட்டுமே என்பதை புரிந்துகொண்ட ஞானசுந்தரிச் சித்தி சும்மா
வாய்ட்ட அளக்கக்கூடாது வந்து எங்கூட ஜோடி போட்டு இடிச்சிட்டு அப்புறம் பேசனும் என்றதும்  பாஞ்சாம் புலியாட நடையை கூட்டிவிடுவான் செல்லமுத்துச் சின்னையன். ஞானசுந்தரிச்சித்தி ஏதோ சொல்ல மொங்கு மொங்கென்று சிரித்து விட்டு சும்மா கெட பிள்ள அது எனக்கு தம்பி மொற என்பாள். அந்த வழியே அழுதுகொண்டு போகிற சின்னத்தாயின் மகனைக் கூப்பிட்டு மூக்கைப்பிடித்து துடைத்துவிட்டு,கையில் ஒருகைப்பிடி கம்பரிசியை உருண்டை பிடித்துக்கொடுப்பாள் கனகமணி அத்தை. அந்த நேரத்தில்  சொட்டு சொட்டாய் இறங்கும் மழையை முந்திக்கொள்ள வேகமாக இடிபடும் உரல்.இடித்த அரிசியை அள்ளி குத்துப் பெட்டியில் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக ஓடினார்கள்.ஒவ்வொருமழையும்,எட்திர்ப்படுகிற
கண்மாய்களும் மாரிமுத்துவையே ஞாபகப்படுத்தியபடி கழிந்தது. இந்தமுறை கட்டாயம் கண்மாய்நிறையும் என்று ஆளாளுக்குச் சொல்லும் போதெல்லாம் நாணல்புதர் செழித்து வளருவதுப்போல் நினைவுகளும் வளரும்.   வீட்டுக்கு வந்தாள் அங்கே புருசன் கண்ணுச்சாமி உட்கார்ந்திருந்தான்.

ஏம்மா இந்த வருசம் ஒரு குண்டு வயக்காட்ட வாரத்துக்கு பிடிச்சி நெல்லுப்போடுவமா  என்றுகேட்டான்.  ஒத்துக் கொண்டாள். நாணல் புதருக்கு எதிர்த்தாப்போல வயக்காடு கிடைத்தது. சங்கிலியைக்கழட்டி அடகுவைத்து நெல் நட்டார்கள். மூணு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அடிக்கடி வயக்காட்டுக்குப் போனாள். அந்த மாசிமாசம் மாரிமுத்து தங்கச்சி மகளுக்கு காது குத்துக்கு ஊருக்கு வந்திருந்தான். குளிப்பதற்கு வீட்டுக்காரியைக்  கூட்டிக் கொண்டு கம்மாக்கரைக்குப் போனான். கொண்டுவந்த துணிகளை எடுத்துக்கொண்டு நாணல்புதர் பக்கம் போனார்கள்.அங்கேயே ஒரு கல்லெடுத்துப் போட்டு துவைத்தார்கள். வயக்காட்டைப்பார்க்க வந்த கனகமணிக்கு நாணல்புதர் பக்கம் ஆள்சத்தம் கேட்டது. கம்மாக் கரையேறினாள்.அது மாரிமுத்துவின் சத்தமேதான். நானும் எம்பிரண்டும் போட்டிபோட்டு முங்குநீச்சடிச்சு இங்கவந்துதான் விளையாடுவோம் என்று மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவள் சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். நாணல்புதருக்குள் குறவைமீன்கள் சலப் சலப் என்று சத்தமிட்டுக்கொண்டு ஒன்றையொன்று விரட்டிக்கொண்டலைந்தன.

14 comments:

vasu balaji said...

முதல் வாழ்த்து என்னுடையது. 500வது இடுகை மழை மாதிரியே இருக்கு. சில்லுன்னு, மண்வாசனை கிளப்பி திணறடிச்சிண்டு பரம சுகம்.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் காமு சார் ! அழகான இடுகை :)

க ரா said...

அருமை காமு சார்...

kashyapan said...

காமரஜ் அவர்களே! வாழ்த்துக்கள்.---காஸ்யபன்

நிலாமகள் said...

ம‌ழை இனிது! கார்த்திகை மாச‌க் க‌ன‌ம‌ழையிலும் ந‌னைந்து துளிர்த்து உயிர்த்துக் கிட‌க்கும் கிராம‌த்து ம‌னுச‌ங்க‌ளின் அக‌ம் அழ‌கு! அந்த‌ ம‌ழை கிள‌ப்பிய‌ ம‌ண்வாச‌னை வெகு அழ‌கு! ஐநூறாவ‌து இடுகையும் அழ‌குதான் ச‌கோ... ஊரைப் பிரிந்து க‌ப‌டுசூழ் ந‌க‌ர‌த்தில் கிட‌ந்தாலும் அப்ப‌ப்ப‌ உங்க‌ளைப்போன்ற‌வ‌ர்க‌ளின் த‌ய‌வில் எழுத்து வாக‌ன‌மேறி வாழ்ந்து வ‌ர‌ முடிகிற‌தே...

இரசிகை said...

vaazhthukal...

க.பாலாசி said...

என்ன அசலான எழுத்து.. ஒரு சூழலை அப்படியே கொண்டுவர்ர கைங்கர்யம்.. கனகமணியும், மாரிமுத்துவும் மனதில் சம்மணம் போட்டு உட்காருகிறார்கள்.. அசத்தலான கதை..

500வது பதிவிற்கும் வாழ்த்துக்கள்..

hariharan said...

வாழ்த்துக்கள் அண்ணா. இன்னும் நிறைய எழுதுங்க....

அன்புடன் அருணா said...

500க்கு 500 பூக்கள் கொண்ட பூங்கொத்து!

ஓலை said...

500 vaazhthugal.

Mahi_Granny said...

500 க்கு வாழ்த்துக்கள். முதல் பத்தியிலே அடைமழை வரப் போகிறதென்று தெரிந்து கொள்ள முடிந்தது. இத்தனை உறவுகள் ஒரு கிராமத்திற்குள். அருமையாய் இருந்தது. வாழ்த்துக்கள் இன்னும் பல 500 களுக்கு .

கிச்சான் said...

500 வது பதிவு மிக சிறப்பான பதிவாக இருக்கிறது அண்ணா
வாழ்த்துக்கள்
சீக்கிரமாக 750 அடிங்க
சாரி
எழுதுங்க
வாழ்த்துக்கள் அண்ணா !!!!!!!


அன்புடன் கிச்சான்

காமராஜ் said...

பாலாண்ணா,
நேசன்,
கரா
தோழர்காஷ்யபன்
நிலாமகள்
ரசிகை
பாலாசி
ஹரிகரன்
அருணா
மஹி அக்கா
சேதுசார்
அன்புத்தம்பி,
...........
எலோருக்கும் நன்றி.

Anonymous said...

அருமையான மொழி நடை... வாழ்த்துகள் மாமா....