2006 ஆம் ஆண்டு bwu இதழில் வெளியான சொற்சித்திரம் கண்விழிக்கிற போது சுப்ரபாதம், குளித்து தலைதுவட்டுமுன்னால் ஆவி பறக்கிற இட்லி, நெரிசல் இல்லாத பேருந்தின் நடுவில் ஜன்னலோர இருக்கை, பார்வை படுகிற வெளியெங்கும் பசுமை சந்தோசம். கடன் தட்டாத கதவினைப்பூட்டிக்கொண்டு சிரிப்புத் துணுக்குகளை தொலைக்காட்சியில் பார்க்கிற கனவுப் பட்டியலின் அட்டவனை எல்லோருக்கும் தேவையாயிருக்கிறது. இந்த மொன்னை ஆண்டினைத்தான் வேறு வேறு பெயரிட்டு காலண்டரும் பஞ்சாங்கமும் தயாரிக்கிறார்கள். ஆனால் காலம் யாரையும் எதையும் லேசில் தூங்கவிடாது. அதோ வாகன நெரிசலின் மத்தியில் கையையும் காலையும் அதீதமாக வீசி ஒரு கராத்தே வீரனின் கலை நயத்தோடு காற்றைத்துவம்சம் செய்கிறவனைப்பற்றி நமக்கு கவலை இல்லை. அவன் ஒரு எம் எஸ் சி பிசிக்ஸ் படித்தவனாக இருக்கலாம். இந்தியாவுக்கு ஏவுகலன்களை உற்பத்தி செய்து அதன் மூலம் விவசாயமும் தொழிலும் செழிக்கச்செய்ய வேண்டுமென்கிற கனவை வெறியாக்கியவனாக இருக்கலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேலி மண்டிக்கிடக்கிற எதார்த்தத்தின் மூஞ்சில், அவனது ஒவ்வொரு குத்தும் விழுகிறது. பேருந்து நிலைய வாசலின் எதிரே அந்தச் சிலை நிழலில் நின்று கொண்டு பிடதியில் மடேர் மடேரென்று சாத்துகிற கைகளும், அடிபடுகிற தலையும் அவனுக்கே சொந்தம். அடிபடுகிற இடத்தில் அதிர்ந்தபடியே இருக்கிற சிறு மூளைக்குள் என்ன என்ன புதைந்து கிடக்கிறது என்று யாருக்குத்தெரியும். துருவித் துருவித்தோண்டியதில் கிடைத்தது அவன் ஒரு முசல்மான் என்கிற அனுவிலும் குரைச்சலான தகவல்மட்டுமே. ஊரின் வடகோடியில் உள்ள காளி கோயிலையும், தென்கோடியில் உள்ள மசூதிக்கோபுரத்தையும் பார்த்த மாத்திரத்தில் நிமிடத்திற்கு நூற்றி இருபது முறை தனது பிடதியிலே அடித்து முடிவில் சோர்ந்து சுருங்கித் தூங்கிப்போவான். அவனுக்குப்பினால் ஒரு காண்டிக்ட் காமிராவை நகர விட்டாலும் அதன் புள்ளியிலிருந்து மறைந்து போகிற அவனது தலை மறைவை. நாம் இயற்கை என ஒதுக்கிவிடுவோம். அனுமார் கோவில் விளக்கு மாடத்தைப்போல எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய கால் சராயும், சட்டையும் இனி எந்தத் தீயிலும் பற்றாத கெட்டியாயிருந்தது. அவன் கண்கள் எது குறித்தும் சுருங்குவதுமில்லை, விரிவதுமில்லை. யாழினும் இனிய குழந்தையும், ஐஸ்வரியா ராயினும் குளுமையான குமரியும் கூட அதன் குவி வடிவில் அடங்கவில்லை. ஏனெனில் அது கண்ணின் தகவமைப்பைத் தாண்டிய வல்லமை பெற்றிருந்தது. அவனது பற்களில் இந்தியக் கடவுள்களின் தத்துவங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அவனை உலக மகா ரவுடியும், போலீசும் கூட நெருங்க முடியாது. தூக்கித் தூக்கிப்போட்டு அடித்தாலும் சாம்பல் கூட பெயராது. கண் தெரியாதவர்களின் இசைக்குழுப் பாடல்கள், பீரங்கிச் சத்ததை தோற்கச்செய்யும் ஆளும் கட்சி மேடைப்பேச்சு, பேனா விற்கிற நூற்பாலைத் தொழிலாளி எல்லோரையும் கடந்து போகிற அவன், ஒரு கோர விபத்தைக்கூட இது ரொம்பச் சாதாரணம் ஏன்று ஒதுக்கித் தள்ளிப் போய்க்கொண்டிருந்தான். அழகு - கோரம், சந்தோசம் - வேதனை, இப்படி எந்த அதிர்வும் தாக்காத மன வலிமை குறித்து துணுக்குற வேண்டிய நேரம் இது. காலம் காலமாக சினிமா நமக்குப் போதித்தது அதிர்ச்சியை அதிர்ச்சியால் மீட்டு வரலாம் எனும் மூட அறிவியல் அவனிடம் செல்லாது. எதனால் என்கிற சிறிய உறுத்தல் தேங்கி நின்று நெடுங்காலமாகி விட்டது. அவனுக்கு மொழியிருக்கிறதா எனும் சந்தேகம் உறுதியானது. அவன் பிரயோகித்த ஒரு வார்த்தையைக் கூட இன்றைய இந்தியாவும், ஏனைய உலகமும் கேட்கவில்லை. ஒரு வேளை குஜராத் மாநிலத்து நகரத்தில் அவனது சிதிலமடைந்த கனவு இல்லத்துப் பக்கத்தில் தேடினால் ஏதாவது தென்படும். அவன் தொலைத்த வாழ்க்கையும் - நம்பிக்கையும். |
அவனைப்போல் யாரும் இருக்கக் கூடாது
16 comments:
மனதை பாரமாக்கிச் செல்கிறது இந்த அருமையான இடுகை..!
மனதை அழுத்தும் வரிகள்
கவனத்தை திருப்பும் பதிவு!
இடிபாடுகளைப் பற்றி பேசுவது போல்..,ஒரு மனிதன் இடிந்து கிடப்பதென்பது சாதாரணமான விஷயமில்லை என்று முடிக்கிறார் மனுஷ்யபுத்திரன் ஒரு கவிதையில்.
//ஒரு வேளை குஜராத் மாநிலத்து நகரத்தில் அவனது சிதிலமடைந்த கனவு இல்லத்துப் பக்கத்தில் தேடினால் ஏதாவது தென்படும். அவன் தொலைத்த வாழ்க்கையும் - நம்பிக்கையும்.//
வலிக்க செய்யும் வரிகள்
//அந்தச் சிலை நிழலில் நின்று கொண்டு பிடதியில் மடேர் மடேரென்று சாத்துகிற கைகளும், அடிபடுகிற தலையும் அவனுக்கே சொந்தம். அடிபடுகிற இடத்தில் அதிர்ந்தபடியே இருக்கிற சிறு மூளைக்குள் என்ன என்ன புதைந்து கிடக்கிறது என்று யாருக்குத்தெரியும்//
வலியினை வலிக்க வைக்கும் வரிகள்...இந்த இடுகையில் புதைந்துள்ள அர்த்தங்கள் மிக அதிகம்...கொஞ்சம் புரிந்துகொள்ளதான் சிரமமாய் இருக்கிறது. இருமுறை படித்தப்பிறகுதான் எனக்கு புரிந்தது...எனது அறியாமையின் சிறப்பு...
நன்றி சந்தனமுல்லை,
வணக்கம், நன்றி கதிர்.
வேல்ஜி...ஆம் நானும் அந்தக் கவிதையைப் படித்திருக்கிறேன்.
வாருங்கள் தாரணி நீண்ட நாட்களுக்குப்பின் வலைப்பக்கம்
வருகிறீர்கள் பல்புகள் இல்லாமல் வலையுலகம் மந்தமாக இருக்கிறது.
ரொம்ப நன்றி பாலாஜி.
இது கொஞ்சம் கடினமான மொழி என்று நண்பர்கள் சொன்னார்கள்.
நீங்கள் ஒன்றும் அப்படியில்லை என்பதை உங்கள் பின்னூட்டங்கள் சொல்லுகின்றன.
இப்படிப் பட்ட சிதறல்கள் வாழவின் மூலை முடுககெல்லாம் நிறைந்து கிடக்கின்றன காமராஜ்......
உண்மைகள் எப்போதும் வார்த்தைகளின் இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டேதான் இருக்கின்றன. கிடைக்கின்ற வெளிச்சமும் காகிதங்கள் எரிப்பதற்கு மாத்திரம் உபயோகித்தால் எந்த வார்த்தைகளை பத்திரப்படுத்தி மிச்சம் பிடிக்க முடியும்!
கதறி அழ வைக்கிறது....
வாருங்கள் அருணா மேடம்.
உண்மைதான், செருப்பில் சகதிபட்டாலே
ஒரு நாள் முழுக்க அந்த ஈரம் மனதுக்குள் கிடக்கையில்.
வாழ்க்கையே அதற்குள் தேடும் அவர்கள்
எப்படியாவது கண்ணில் பட்டுவிடுகிறார்கள்.
வாருங்கள் சென்ஷி சார்.
//உண்மைகள் எப்போதும் வார்த்தைகளின் இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டேதான் இருக்கின்றன. கிடைக்கின்ற வெளிச்சமும் காகிதங்கள் எரிப்பதற்கு மாத்திரம் உபயோகித்தால் எந்த வார்த்தைகளை பத்திரப்படுத்தி மிச்சம் பிடிக்க முடியும்//
அற்புதமான பின்னூட்டம்.
வா மாது,
இப்போதுதான் மதுரையிலிருந்து வந்தாயா ?
Post a Comment