24.9.09

ரஜினிகாந்தும் ஒரு குவளைத் தேனீரும்

உலர்ந்த செடிகளில் கால்பதிப்பது தெரியாமல் பூனைபோல நடந்து, பின் சீறிப்பாய்ந்து, விரட்டி, சிதறியோடும் மான் கன்றுகளைத் தனிமைப்படுத்தி இறையாக்கும், நாட் ஜியோ. பட்டாம் பூச்சி பிடிப்பதுபோல விஷப் பாம்புகளை, மலைப் பாம்புகளைப் பிடிக்கும் வைல்டு அனிமல்ஸ் காட்சிகள் பார்க்க பிடிக்கும். அதுபோலவே விஜய் தொலைக் காட்சியில் குற்றம் நடந்தது என்ன பகுதியில் நேற்று காண்பித்த ரஜினி, இமயமலை, பாபாஜி - தொடர் பார்த்தோம்.


இமயமலையிலிருந்து கீழிறங்கும் கங்கை ஆவிபறக்கப் பொங்கிப் பிராவகமெடுக்கும் ஹரித்துவார். மனிதக் கைகள் தடம் போட்ட சாலைகள் தவிர்த்து ஒரு சிறு குண்டுமணி அளவுகூட இடைவிடாத பசுமை. நமது வாயிலிருந்து வெளியேறும் காற்றின் வெப்பம் கூடக் கண்ணுக்குத் தெரிகிற குளிர் சீதோஷ்ணம். அடைமழை பெய்தால் மட்டுமே ஓடையிலும், வைப்பாற்றிலும் தண்ணீர் வரும் கருசக்காட்டு மனிதர்களுக்கு இமயமலை, வியப்பும், வினோதமும் கலந்து நினைவூட்டுகிற இந்தியாவின் இயற்கைவளம். எட்டு நாளைக்கொரு தரம் கூட குழாயில் தண்ணீர் வருமா வராதா என்று காத்திருக்கிற எங்களுக்கு அந்த ஹரித்துவாரும் இந்தியா தானா என ஏங்கவைக்கும் நீர்வளம்.


அந்த இடம் நடிகர் ரஜினிகாந்தை கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. பரபரப்பில்லாத, மாசுபடியாத இதுபோன்ற ரம்யமான சூழல் கிடைக்கிற யாரும் பரவசமாவார்கள். ஏகாந்தம் தொற்றிக்கொள்ள தங்களின் அன்றாடமெனும் மன அழுத்தம் குறைத்துக் கொள்ளும் வாய்ப்புதான் சுற்றுலா. இது மேலை நாடுகளில் கட்டாயமான ஒன்று. சாமான்யர்களை விடப் பிரபலங்களுக்கு அதிகப்படியான தேவை இந்த ஏகாந்தம். அதை அப்படியே நூறு சதவீதம் அனுபவிக்கிறவர் நடிகர் ரஜினிகாந்த் அவ்வளவுதான்.


" ரஜினிகாந்த் இந்த இடங்களில்தான் மக்களோடு மக்களாக உட்கார்ந்து தேனீர் அருந்தினார் " என்று பரவசமாகி, அருள் வந்து, உடல் குலுக்கிச் சொல்வது போலச் சொல்லுகிறார்கள். தேனீர்க் கடையில் மக்களோடு மக்களாகத் தேனீர் குடிப்பதென்ன அவ்வளவு பெரிய சாகசச்செயலா ?. இப்படித்தான் பிரபலங்களின் காலைத் தரையில் பாவ விடாமல் தொடர்ந்து இந்த ஊடகங்கள் தங்கள் கைகளில் தாங்கி அவர்களை தனிமைப்படுத்தி விடுகிறார்கள். அதோடு நில்லாமல் கிடைக்கிற வர்ணத்தை வைத்து அவர்களின் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போட்டு விடுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் இந்த திரையுலகில் நுழைந்த போது அவர் பட்ட அவமானங்களையும் ஒதுக்குதலையும் ஒரு பத்திரிகையும் எழுதவில்லை.


சின்னச் சின்ன பாத்திரங்களில் நடித்து தனைத்தானே மெருகேற்றிக்கொண்ட போது எத்தனை நடிகைகள் ஜோடியாக நடிக்க மறுத்தார்கள். இதே ஊடகங்கள் என்னவெல்லாம் எழுதின. பிரபலமான பின்னர் அவர் எங்கோ போய்விட்டார், அவருக்கு பிறழ்வு ஏற்பட்டுவிட்டதென குசுகுசு எழுதவில்லையா?. இவ்வளவு ஏன் சமீபத்தில் கூட மேலை நாட்டில் கையில் சரக்கோடு ஓய்வெடுத்தாரே அதைச் சர்ச்சையாக்கியதும் இந்த ஊடகங்கள் தானே. இதையெல்லாம் இந்த உலகம் மறந்துவிட்டதென நினைத்துச் சரடு திரிக்க ஆரம்பிக்கிறார்கள். செய்திகளை விற்றுத் தீர்க்க பரபரப்புக்களை வைத்துப் பக்கம் நிறப்புவது மட்டும் தான் ஊடக தர்மம் என்று மாறிவிட்டது.


எனக்கு ஆரம்ப கால ரஜினியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். கதாநாயக பிம்பங்களை உடைத்தெறிந்து விட்டு ஒரு புது அத்தியாயம் எழுதியவர். கதாநாயகன் அப்பழுக்கற்றவனாகக் கட்டமைக்கப்படும் தூதன் இல்லை. எல்லா நன்மை தீமைகளும் நிறைந்த சாமான்யன் என்று நிலை நிறுத்தியவர். அவள் அப்படித்தான் படத்தில் ஸ்ரீபிரியாவிடம் அடிவாங்குவார். தப்புத்தாளங்களில் விபச்சாரியை மணந்துகொள்வார். மதுக்குடிப்பார், பீடா போடுவார், மூக்குப்பொடிகூட, கோபம் வந்தால் அடிப்பார். வேலைபறி போய்க் கையும் பறிபோய், கட்டியமனைவியும், சொந்தங்களும் சொல்கேளாமல் தன்னை விட்டுப்போக அநாதராவாக நிற்பார். அந்த ரஜினி எனக்கு மட்டுமல்ல அப்போது இந்த சினிமா கொஞ்சமாவது உருப்படுமா என்று ஏங்கிக் கிடந்த எல்லோருக்கும் பிடிக்கும்.


நானும் எனது சின்னவயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் " ஏசு வருகிறார், ஏசு வருகிறார்" என்று எழுதிப்போட்டுஏமற்றியது போலவே இந்த ரஜினிகாந்தையும் " இதோ அரசியலுக்கு வருகிறார், வருகிறார் " என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். வந்தால் இப்போதிருக்கும் ரசிகர்மன்றச் செயலாளர்கள் தலைவர்களுக்கு சட்டமன்றத்திற்குள் செல்லும் வாய்ப்புக்கிடைக்கும். அப்புறம் அயல்நாட்டுக்கார், அயல்நாட்டு மது, அயல்நாட்டு வங்கிக்கணக்கு எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும், இதுதானே நடக்கும்.


எதையோ தேடிப்போனார் எதையோ தேடிப்போனார் என்று பல்பொடிபோட ஆரம்பிக்கிறார். அடர்ந்த மலையில் தேடிப்போனால் மூலிகைகள் கிடைக்கும், அதையும் தாண்டிப்போனால் ஆதிவாசிகள் கிடைப்பார்கள், அதையும் தாண்டிப்போனால் மிருகங்கள் கிடைக்கும். இதைத்தான், டிஸ்கவெரி, நாட் ஜியோ, வைல்ட் அனிமல் சானல்கள் இதுவரை கண்டுபிடித்திருக்கின்றன. மிருகங்களோடு மிருகங்களாக வாழ்வுகடத்தும் மலை மனிதர்கள் காலமெல்லாம் அதே குகைக்காட்டுக்குள் தான் குடியிருக்கிறார்கள் அவர்களையெல்லாம் விட்டு விட்டு ரஜினிக்கும் மட்டும் தான் தெரிவேன் என்று சொன்னால் அந்த மஹா அவதாருக்கும் ஓரவஞ்சனை வண்டி வண்டியாய் இருப்பதுப்போல தெரிகிறது.

18 comments:

velji said...

படிக்க ஆரம்பிக்கும் போது ரஜினி பற்றிய விமர்சனமா எனற ஆயாசம் இருந்தது..அப்படியில்லை! யதார்த்தத்தை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்!

ஈரோடு கதிர் said...

நம் வரவேற்பரையில் மீண்டும், மீண்டும் நிகழ்த்தப்படும் ஊடக வன்முறையை கொஞ்சம் தோலுறித்திருக்கிறீர்கள்

மண்குதிரை said...

ungkal parvai enakku pitiththirukkiRathu sir.

சந்தனமுல்லை said...

சூப்பர்!!ரொம்ப நல்லா சொல்லிட்டீங்க!

எனக்கும் அந்த பழைய ரஜினி பிடிக்கும்...தில்லுமுல்லு என்னோட ஆல் டைம் ஃபேவரிட்!! :-)

ஆரூரன் விசுவநாதன் said...

நண்பா என்றழைப்பதா? தோழா என்றழைப்பதா? ......எப்படி யழைப்பது உங்களை?

இரண்டு வார்த்தைகளுக்குமே இப்பொழுது சாயம் பூசப்பட்டுள்ளது.

தோழா, என்றழைப்பது கொஞ்சம் சுகமாகத்தான் இருக்கிறது......


உங்கள் கோபம் நியாயமானதுதான். கோபத்தை வெளிப்படுத்தும் விதமான வார்த்தை வீச்சுக்கள் அருமை.

ஊடகங்கள்,சினிமா, ஏன் மேடைப்பேச்சாளர்கள் கூட மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று, நினைத்துக் கொண்டு அவ்ர்களாகவே மக்கள் ரசனையை முடிவு செய்கிறார்கள். இதை முழுவதும் தவறு என்றும் சொல்லிவிடமுடியாது.


உங்களைப் போன்றோர் பணி, விமர்சனங்களால் முடிந்து போவதில்லை. அதைத் தாண்டி, நல்ல விசயங்களை, ரசிக்கச் சொல்லித்தர வேண்டியுள்ளது.

வட்டார வழக்குகளை, வட்டார காலாச்சாரத்தை, சார்ந்த சமூகத்தின் சிறப்பம்சங்களை, அதன் மூட நம்பிக்கைகளை வெளிக் கொணருங்கள்.

உங்கள் எழுத்து நடையை, பரவலாக்குங்கள். எழுத்தில் மிகச் சுலபமானது, வலியைச் சொல்வது. ஏனெனில் எப்படி எழுதினாலும் வலி பரவும், உங்களை பாதித்த அதே அளவு, உங்கள் எழுத்தைப் படித்தவரும் பாதிப்புக்குள்ளானாரா? என்பது சந்தேகத்திற்குரியதுதான்.

நிறைய எழுதுங்கள். காடு,மேடு, கடல், வாண், கூட்டம், கோவில், கூட்டங்கள், திருவிழா, இப்படி எங்கெங்கெல்லாம், நீங்கள் போகும் போதும், வாசகனையும் கை பிடித்து இழுத்துச் செல்லும் வகையிலான எழுத்து உங்களுடையது. அதைச் சரியாக பயன் படுத்துங்கள்.

ரொளத்திரம் பழகுவோம். நிதானமிழப்பது, தோல்வியின் முதல் படி. இயலாமையின் வெளிப்பாடு.

(என் இந்த கருத்து உங்களுக்கு ஏதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் அதற்காக வருந்துகிறேன். பொருத்தருள்க).

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

க.பாலாசி said...

//மிருகங்களோடு மிருகங்களாக வாழ்வுகடத்தும் மலை மனிதர்கள் காலமெல்லாம் அதே குகைக்காட்டுக்குள் தான் குடியிருக்கிறார்கள் அவர்களையெல்லாம் விட்டு விட்டு ரஜினிக்கும் மட்டும் தான் தெரிவேன் என்று சொன்னால் அந்த மஹா அவதாருக்கும் ஓரவஞ்சனை வண்டி வண்டியாய் இருப்பதுப்போல தெரிகிறது.//

என் வீட்டு வரலாறுகளை தோண்டிப் பார்த்தாலே ஆயிரமாயிரம் பக்கங்கள் இருக்கும்... ஆயினும் நான் அடுத்தவீட்டில் புதைந்திருக்கும் புதையலைதானே விரும்புகிறேன். அதிலிருக்கும் ஒரு தேடல் என்னைச்சுற்றி உள்ளவற்றில் இல்லையே...இதைதானே ஊடகங்களும் செய்கின்றன.

இப்போதுள்ள எல்லா ஊடகங்களும் சினிமா என்கிற கவர்ச்சி மழையில் நனைந்து காய்ச்சலில் கிடக்கின்றன. எப்போதாவது எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் விழலுக்கிரைத்த நீராக வீணாகத்தான் போகின்றன. என்ன செய்வது.

//அவர் பட்ட அவமானங்களையும் ஒதுக்குதலையும் ஒரு மயிரானும் எழுதவில்லை.//

உங்களின் ஆதங்கம் இந்த வார்த்தையினில் தெரிகிறது. ஆயினும் வெளிக்கொணர்ந்த வார்த்தையதில் வல்‘லினம்’ தெரிகிறது.

எங்கோ ஆரம்பித்த உங்களின் எழுத்து இறுதியில் ஒரு சாட்டையடியில் முடிகிறது. நல்ல பதிவு...பகிர்வு...

காமராஜ் said...

வணக்கம் வேல்ஜி நன்றி.

காமராஜ் said...

ஆமாம் கதிர்தோழா நன்றி.

காமராஜ் said...

வணக்கம் மண்குதிரை நன்றி.

காமராஜ் said...

//எனக்கும் அந்த பழைய ரஜினி பிடிக்கும்...தில்லுமுல்லு என்னோட ஆல் டைம் ஃபேவரிட்!! :-)//

ஆமாம் சந்தனமுல்லை

தம்பிக்கு எந்த ஊரு, தில்லுமுல்லு,
தனிக்காட்டுராஜா( 20 முறை பார்த்தேன்)
இப்படி நீண்டுகொண்டே போகிறது.

எப்டி இருந்த ரஜினி

காமராஜ் said...

வணக்கம் தோழர் ஆரூரான்.
அன்பு மிகுதியில் எப்படிவேண்டுமானாலும் அழைக்கலாம்
அதிலென்ன கேள்வி.

//ரொளத்திரம் பழகுவோம். நிதானமிழப்பது, தோல்வியின் முதல் படி. இயலாமையின் வெளிப்பாடு.//

ஏதும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேனா ?

///உங்களைப் போன்றோர் பணி, விமர்சனங்களால் முடிந்து போவதில்லை///

நீங்கள் சொல்லுவது 100 சத உண்மை.
அசாமியப்படங்கள் அளவுகூட நாம் வளரவில்லை.

காமராஜ் said...

வாங்க பாலஜி..

//வெளிக்கொணர்ந்த வார்த்தையதில் வல்‘லினம்’ தெரிகிறது. //


பதிவேற்றிவிட்டு கவனித்தேன்.
கொஞ்சம் ஓவர் மாதிரித்தெரிந்தது. பிழைதான்.
இன்னும் நிதானித்து எழுதுவேன். நன்றி.

அன்புடன் அருணா said...

/அதோடு நில்லாமல் கிடைக்கிற வர்ணத்தை வைத்து அவர்களின் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போட்டு விடுகிறார்கள்/
பின்னர் தலைக்கனம் வந்துவிட்டது எனக் கூசசலிடுவதும் அவர்களேதான்....எனக்கும் பதிவில் வல்லினம் உகந்ததல்ல .....

பாசகி said...

//..எப்டி இருந்த ரஜினி...//

அவர் அப்படியே தாங்க இருக்காரு.

காமராஜ் said...

வணக்கம் மேடம். நன்றி

வாருங்கள் பாசகி..
வணக்கம்.

Pradeep said...

Very Nice Sir

காமராஜ் said...

வாருங்கள் ப்ரதீப், வருகைக்கு நன்றி.

காமராஜ் said...

அருணா மேடம், வேல்ஜி...

'வல்லிணம்'

தங்கள் இருவரின் கருத்துக்கு நன்றி.