8.2.10

நிலாப்பாட்டு - நிழற்படநினைவுகள்

எங்கு இலக்கியக்கூடம் நடந்தாலும் நானும் அவனும் கடைசிப் பெஞ்சில் உட்கார்ந்தி ருப்போம். மதுரை, திருநெல்வேலி எனக் கணக்குக் கிடையாது. நினைத்த மாத்திரத்தில் கிளம்புகிற சிலாக்கியத்தை அந்த வாலிபம் கொடுத்திருந்தது. சிட்டுக் குருவியைப் போல விட்டு விடுதலையாகி எங்களிடம் காதலும் கோபமும் குவிந்து கிடந்தது . ஆயிரம் பேர் கூடுகிற கூட்டத்தில் எங்கள் மூச்சுக்காற்று கூடத் தனித்திருந்தது. தனலட்சுமி தியேட்டரில் சினிமாப் பார்ப்பதைவிட கடைசிப் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் எங்கள் விமர்சனத்தைக் கூட்டம் கூர்ந்து கவனித்தது. மாதுவுக்கு அப்போது நல்ல கத்தை முடி. அவனது உயரமும் அவன் இழுத்து விடுகிற சிகரெட் புகையும் பெண்கள் கவனிக்கிற அலாதி அம்சங்கள். அவன் காதல் கொண்டிருந்தான். அதற்காக மெனெக்கெடவில்லை. நானும் கூட காதல் வயப்பட்டிருந்தேன் அது என்னை இருபத்து நாலு மணி நேரமும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

சென்னைக்கு அழைத்துப்போய் எனக்கு அம்முவை அறிமுகம் செய்துவைத்தான். என்னுடன் சுகந்தியப் பார்க்க சினிமாவுக்கு பாட்டுக்கசேரிக்கு வளையல் கடைக்கெல்லாம் வருவான். ஒரு நாள் ஜப்பான் ஸ்கூலில் கண் தெரியாதவர்களின் பாட்டுக்கச்சேரி நடந்தது. அவள் கட்டாயம் வருவாள் என்ற கனவுத்தேடலோடு போயிருந்தேன் மாதுவும் என்னோடு வந்திருந்தான். எல்லா பாட்டுக் கச்சேரியைப்போல இறைவணக்கம் பாடாமல், எடுத்த எடுப்பிலே கண்ணில் என்ன கார்காலம் என்கிற சினிமாப் பாட்டு பாடியது எங்கள் இருவருக்குமே பிடித்திருந்தது. அந்தப் பாட்டு பாடும் போது ரெண்டுபேரும் அழுதுவிட்டோ ம். சோகமும் வலியும் நிறைந்த அந்த ராகம் அதன் இசைச்சேர்க்கை அதன் வரிகள் என்னவோ அந்த ப்ளைண்ட் ஸ்கூல் மாணவர்களுக்காக படைக்கப் பட்டது போலிருந்தது. அதன் பிறகு அந்தப்பாடல் எங்கு எப்போது கேட்டாலும் இரண்டு வித உணர்வுகள் நினைவுகள் மேலெழுந்து வரும். ஒன்று எனது மனைவியின் ஞாபகம், இரண்டு  42 B எல் எப் தெரு.

 ஒரு முடுக்குத்தெருவின் மாடியில் மூன்று அறை அதில் நடுவில் உள்ள அறையில் தான் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் ºí¸ «ÖÅĸõ. அங்கு நான் மாது மூர்த்தி பெருமாள்சாமி அழகப்பன் எல்லோரும் தங்கியிருந்தோம். பக்கத்து இரண்டு அறைகளிலும் எங்கள் வங்கி தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் நிறையப்பேர் தங்கி இருந்தார்கள். மூன்று அறைகளின் பின்வாசலும் ஒரு வராண்டாவில் சந்திக்கும் அங்கே தான் இரண்டு கழிப்பறையும் ஒரு குளிப்பறையும் இருக்கும். சாயங்கால நேரங்கள் எல்லோரும் கூடிக் கும்மாளம் அடிக்க, கோடைக்காலங்களில் தண்ணீர் தெளித்து குளிரப்பண்னி படுக்க, சனி ஞாயிறு ஆள் குறைவாக இருக்கும்போது  கதவைபூட்டிக்கொண்டு கள்ளத்தனமாக பீர் குடிக்க, தோதுவான இடமாக இருந்தது. ஆனால் எல்லா நேரங்களுமே சமூகம் சார்ந்த பேச்சுகளும் சிந்தனைகளூமே நிறைந்திருந்தது.

 இருக்கிறவன் தலைக்கு நெருப்பாக வா இல்லாதவன் காலுக்குச் செருப்பாகவா என்று கவிஞர் கந்தர்வன் கவிதைகள் காதுவழியாக நுழைந்து நாடி நரம்புகளுக்குள் ஓடிய காலம். மார்க்சிம் கார்க்கியின் தாய் அந்தச்சிவப்பு ருஷ்யாவிலிருந்து புத்தகம் வழியாக பயணமாகி செங்குளியிலும், சூரங்குடியிலும் வந்து குடியேறத்துவங்கிய நாட்கள். கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் பாடல்கள் கேட்டுக்கிளர்ந்த உணர்வுமாக அலைந்த காலம்.   ஓடுகிற பாம்பை மிதிக்கிற அந்த வயசில் சமூக சீர்கேடுகளை மிதிக்க கால் பரபரப்பாக இருந்தது.


நினைவுகள் அழிவதில்லை படித்துவிட்டு ஒவ்வொருவரும் உட்கார்ந்து அழுத போது மூர்த்தி தனக்கு சிறுகண்டன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டான். அவன் ஒவ்வொரு இரவும் வாட்டர் கலர் வாங்கி ஏதாவது ஒரு ஓவியம் வரைவான். விடிகிற போது என்னிடமும் மாதுவிடமு0ம் காட்டிவிட்டுத்தான் காலைக்கடன் பற்றிச்சிந்திப்பான். நாங்களும் நல்லா இருக்கிறது என்று சொல்லி வைப்போம். அண்ணன் ஜீவா தான் அவனைப்படாத பாடு படுத்துவார். ''மூமா எல்லா பெயிண்டிங்கையும் எடுத்து வை ஒரு கண்காட்சி வைக்கலாம், எப்படி ஓவியம் எப்படி இருக்கக்கூடாதுன்னு பொதுஜனங்க படிச்சுக்குவாங்க'' என்று கேலி பண்ணும் ஜீவா அண்ணனை யாரும் கோபிக்க மாட்டார்கள். ஜீவா அண்ணன் கேலி பண்னமாட்டாரா என்று மனது கிடந்து அலைகிற அளவுக்கு அவரது கேலிகள் பிரசித்தம்.   எல்லோரும் கக்கூசுக்கும் குளிப்பத்றகும் வரிசையில் நிற்கும் அந்தக் காலை நேரத்தில் கைலி ஒதுங்க தூங்கிக்கொண்டிருப்போம் நானும் மாதுவும்.

சாத்தூரில் கோடைக் காலங்களை எதிர்கொள்வது என்பது ஒரு பெரிய சாகசம். குளிப்பதற்காக வைப்பாத்தில் உறைக்கிணறு தேடிப்போய் கூட்டத்தோடு குளித்து திரும்புகிற அவர்கள் எங்களைப்பார்த்து இவர்களை எந்த தண்னிக்கஷ்டமும் பாதிக்காது எதுக்குன்னா அவங்கதான் குளிப்பதில்லையே என்றொரு நாள் சொன்னது சென்னையில் நண்பர்கள் கூப்பிட்டு விசாரிக்கும் அளவுக்குப் போய்விட்டது. அதோடு நில்லாமல் வக்கீல் மாரிமுத்துவோடு கூட்டணி வைத்துக்கொண்டு எங்கள் பெயரையே குளிக்காதவங்க நம்பர் ஒன் டூ என்று மாற்றிவிட்டார்கள். யாராவது எங்கள் இருவரைத்தேடி வந்து கேட்டால் யாரு அந்தக்குளிக்காத ஜோடியா என்று தான் மானத்தை வாங்குவார். மரிமுத்து வக்கீல் தினம் தினம் சாயங்காலம் எங்கள் ரூமுக்கு வருவார் எல்லொரும் உட்கார்ந்து உலக இலக்கியம் பேசுவோம். அவரவர் படித்த புத்தகங்களை சினிமாவைப் பேசுவோம்  சீட்டு ஆடுவார் மாதுவோடு  செஸ் விளையாடுவார் .அப்படித்தான் செஸ் விலையாட்டில் பிரியமான ஒரு நபரை அவர் கூட்டிக்கொண்டு வந்தார் குள்ளமான கருப்பு தலை வழுக்கையான அவர் பற்றி கொஞ்சம் அலட்சியமாக இருந்தபோது அவர் ஒரு அரசு மருத்துவர் என்று சொன்னதும் தூக்கிப் போட்டது.

பெரும்பாலும் மருத்துவர்களை டீக்கடை, சினிமா தியேட்டர், அரட்டைக்கச்சேரிகளில் காண்பது அரிது.  முதல் நாளே செஸ்ஸில் எல்லோரையும் வீழ்த்தி விட்டார். அடுத்த முறை வரும்போது நிறைய்ய இலக்கிய செய்திகளோடு வந்தார். இப்படி ஒவ்வொரு தரம் வரும் போதும் அவருடன் ஒரு ஆச்சரியம் வரும். ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார். பெருமாள் கோவில் தெருவில் ஒரு சாதா வீடு. மூனு பத்தி , மாடியில் ஒரு அறையும் இருந்தது. அந்த எளிமை அவர்மேல் நிறைய மரியாதையைக் கொண்டு வந்தது. மாடி அறைக்கு எங்களைக் கூட்டிக்கொண்டு போய் ஆலிசின் அற்புத உலகத்தைக் காண்பிப்பது போல அவரது புல்லாங்குழல், அவரது கீ போர்டு, மோர்சிங், கேரம் போர்டு, செஸ்போர்டு, ஸ்நூக்கர் போர்டு என ஒவ்வொன்றாக எங்களுக்குக் காண்பித்தார்.

எங்களோடு அப்போது ராஜாராம் வருவார் ராஜாராம் மின்சார வாரியத்தில் தறகாலிக கூலியாளாக வேலை செய்துகொண்டிருந்தார். அவரும் நானும் புல்லாங்குழலை எடுத்து ஊதுவோம். மாது புஸ்தகங்களை நோண்டுவான். மெல்ல மெல்ல மருத்துவர் வல்லபாய் எங்களுக்கு மிக நெருங்கிய நண்பராகினார். தினமும் சாயங்காலம் அவரது கிளினிக்குக்கு போனோம் போகாத நேரங்களில் ஆள்விட்டு கூப்பிட்டுவிடுவார். ஆனால் எங்களுக்கு அவர் டாக்டர் வல்லபாய் என்பது மட்டுமே தெரிந்திருந்தது. மதுரைக்குத் தெற்கே மிகச்சில அறுவை சிகிச்சை நிபுனர்களில் அவர் ஒருவர் என்பதும் அவர் ஒரு முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உருப்பினரின் மகன் என்பதும் கேள்விப்பட கேள்விப்பட அவரின் உருவம் உயர்ந்து கொண்டே போனது.

பொதுவாகவே பார்த்த மறுநாளே ஜாதி விசாரிக்கும் மரபு இந்திய மரபு, அதில் படித்தவர்களும் அரசாங்க ஊழியர்களும் கில்லாடிகள். ஆனால் நண்பர்களின் பூர்வாசிரமம் பற்றிக்கவலைப்படாதவர்களாக ஒரு கூட்டம் இருக்கிறது. அது இந்தியாவில் ரொம்பச்சின்னக் கூட்டம்.  ஜாதி என்கிற ஒன்றைத்தவிர ஆயிரம் ஆயிரம் விசயங்களும் ரசனைகளும் சிந்தனைகளும் ஒரேதடத்தில் இருப்பதை அந்தக்கூட்டத்தில் இருப்பவர்கள் அடையாள ம் காண்பார்கள். அந்தத்தடத்தில் எங்களோடு டாக்டர் வல்லபாய் இணைந்து கொண்டார். எங்கள் நட்புகிடையில் அவரது மருத்துவப் பாட்டமும் அவரது குடும்பமும் தடையாக இருந்ததில்லை. அதைவிட இன்னொரு விநோதம் நடந்தது அவரது கிளினிக்கில் வைத்து எங்கள் மூவருக்கும் பரிணாம வளர்ச்சியின் வரலாறு குறித்துப் பாடம் நடத்தினார். உடனடிக் கவிதைப் போட்டி வைத்து என்னை ஜெயிக்க வைத்தார், பிறகு ஒரு நாள் அங்கேயே புல்லாங்குழல் எடுத்து நிலாவே வா என்னும் பாட்டு இசைத்தார்.

நிலா வரும் காலங்களில்,பழைய்ய டிஎம்மெஸ் பாடல்கள் கேட்கிற எல்லா நேரங்களிலும் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு அவர் பாடும் நிலாப்பாடல்களின் வரிசை என் முன் ஊர்வலமாக வந்துபோகும்.

27 comments:

pavithrabalu said...

very nice to read in the morning

vijayan said...

படிச்சஉடனே மனசு குளுந்து போச்சு .உங்க மனசு எப்பவும் இப்படியே ஈரத்துடன் இருக்கட்டும் காமராஜ். விஜயன்.

நேசமித்ரன் said...

நிறைவா இருக்குங்க காமராஜ் கொஞ்சம் மீள் நினைவுகளின் கிளர்வும்

உயிரோடை said...

ந‌ல்ல‌ ப‌திவு

சந்தனமுல்லை said...

இந்த இடுகை இன்னமும் மனதில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது, அண்ணா!

/சனி ஞாயிறு ஆள் குறைவாக இருக்கும்போது கதவைபூட்டிக்கொண்டு கள்ளத்தனமாக பீர் குடிக்க, தோதுவான இடமாக இருந்தது. /

ஓஹோ..ஹோ! :-)

இனிமே 'நிலாவே வா' பாட்டு கேட்டா, தனலஷ்மியோடு இந்த இடுகையும் நினைவுக்கு வரும்!

மாதவராஜ் said...

தோழனே, திரும்பத் திரும்ப படித்துக்கொண்டே இருக்கிறேன். நாம் வாழ்ந்த காலங்கள்தான். எல்லாம் நாம் பேசிக்கொண்டதுதான். ஆனாலும் பரந்த வெளியில், கத்திக்கொண்டெ ஓடித் தீர்க்கணும் போல இருக்கு.

மீளாமல் கிடக்கிறேன்.......

ஜிஎஸ்ஆர் said...

நாம் பார்த்த உடனே ஒருவரை குறித்து தெரிந்துகொள்ள முடியாது இந்த நேரத்தில் என் நண்பனை பற்றி பகிர்ந்து கொள்வதில் சந்தோசம்

” அவன் பெயர் கே.ஜெயமுத்து சாதரணமாக அவனை அழைப்பது கோவிந்தா அவனை கானும் போது யாருமே யோசிப்பார்கள் இவனுக்கு என்ன தெரியுமென்று அவனை பற்றி தெரியாத நன்பர்கள் அவனிடம் பேச தொடங்கினால் அறிவியல் பொருளாதாரம், விளையாட்டு, பொது அறிவு மெக்கானிக்கல், இப்படி எந்த துறையை பற்றி கேட்டாலும் அவன் அறிவுத்திறமையை கண்டு அதிசியக்காமல் இருக்க முடியாது இதையெல்லம் வைத்து பெரிய படிப்பு என்றென்ன வேண்டம் வெறும் பத்தாம் வகுப்புதான் ஆனால என்ன எல்லா திறமையும் இருந்து பயன்படுத்துவதில்லை ஆனாலும் கொடுத்து உதவுவதில் அவன் வள்ளல் தான்”


வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

கண்ணகி said...

நல்லா இருக்கு....நல்லா இருக்கு....

அன்புடன் அருணா said...

ஒரு பழைய போட்டோ ஆல்பம் பார்த்த உணர்வு!

கிரகம் said...

நல்லா இருந்தது.

- கிரகம்

அம்பிகா said...

மனதின் ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் நினைவுகளை அசை போடுவது ஒரு சுகமான அனுபவம் தான்.
:-}}}}}

Deepa said...

ரொம்ப அழகாய் மீட்டெடுத்திருக்கிறீர்கள் பசுமையான நினைவுகளை!

// ஜீவா அண்ணன் கேலி பண்னமாட்டாரா என்று மனது கிடந்து அலைகிற அளவுக்கு அவரது கேலிகள் பிரசித்தம். //

//குளிக்காத ஜோடி// :))

உங்கள் நட்பு நீடுழி வாழட்டும்

காமராஜ் said...

வாருங்கள் பவித்ரா பாலு.
அன்புக்கு நன்றி.

காமராஜ் said...

வணக்கம் விஜயன்.
வருகைக்கும் அன்புக்கும் நன்றி.

காமராஜ் said...

நன்றி நேசமித்ரன்.

காமராஜ் said...

நன்றி லாவண்யா.

முல்லை வணக்கம். அந்த ஸ்பீட்ல கவனிக்கமாட்டீங்கன்னு நெனச்சேன்.

காமராஜ் said...

தோழனே வா.

காமராஜ் said...

//அவனிடம் பேச தொடங்கினால் அறிவியல் பொருளாதாரம், விளையாட்டு, பொது அறிவு மெக்கானிக்கல், இப்படி எந்த துறையை பற்றி கேட்டாலும் அவன் அறிவுத்திறமையை கண்டு அதிசியக்காமல் இருக்க முடியாது//

ஆமாம். ஜி எஸ் ஆர்., இதுபோல பலர் விளம்பரமில்லாத 100 சதவீத பரோபகாரிகளாக நிறைய்ய இருக்கிறார்கள்.

காமராஜ் said...

வாங்க கண்ணகி.
உங்கள் வலைப்பக்கம் போனேன்.
நிதானமாக எல்லாப்பதிவும் படிக்கனும்.
படிப்பேன்.

காமராஜ் said...

ஸ்ஸ்ஸ்..ரொம்பப் பழைய்ய ஆல்பமில்லை அருணா.
மாது ,அம்மு, எல்லாம் அடுத்தவீட்டிலே இருக்காங்க.
வலையும் பார்ப்பார்கள்.

காமராஜ் said...

நன்றி கிரகம்.

நன்றி அம்பிகா.

காமராஜ் said...

ஆமாம் தீபா,
தேனடையில் கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டாக சேகரித்து வைக்கப்பட்ட நினைவுகள் அவை.

எல்லோரும் சினிமாவுக்கும் பீச்சுக்கும் பரபரத்துக் கிளம்பிய போது ரெண்டுபேரும் சாகசக்காரார்களைப் போல உங்கள் வீடிருக்கும் தெருவுக்கு வந்தோம்.

Nathanjagk said...

நெகிழ்ச்சி! ​தொடரும் தோழமையின் ​தைரியத்தில்தான் தற்கொலைகள் தள்ளிப் போடப்படுகின்றன. பால்ய நினைவுகள் சஞ்சாரத்தில்தான் வாழ்க்கையை மீட்டெடுக்க முடிகிறது.

Unknown said...

அட.. நம்ம ஊரு!

ரொம்ப இயல்பா..அருமையா சொல்லிருக்கீங்க! ரசிச்சி படித்தேன்!

/டாக்டர் வல்லபாய்/ கேள்விபட்டதே இல்லையே.. அதுசரி நம்ம எங்க ஊருல இருந்தோம்... ;(

காமராஜ் said...

வாங்க பாபு வணக்கம். அட நம்ம ஊரா.
ரெட்டிப்பு சந்தோசம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மருத்துவர் வல்லபாய் 1988 க்குப்ப்பிறகு சாத்தூரில் இல்லை.
அதற்கு முன்னாள் டாக்டர் ரெங்கநாயகி,டாக்டர் மகேந்திரசேகர்ராகியோரோடு சாத்தூர் அரசு மருத்துவமனையில் வேலைபார்த்தவர்.மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்,இலக்கியவாதி,இசைக்கலைஞன்,செஸ் வீரர் அஞ்சு ரூபாய்க்கு மேல் பீஸ் வாங்காத ( சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தபோது)
இளகிய மனிதர் = தோழர்.

சுந்தரா said...

ஞாபகப்பக்கங்களைப் புரட்டிப்பார்த்துப் புதுப்பித்துக்கொள்ளுகிற பதிவு...

ரொம்ப நல்லாருக்கு.

க.பாலாசி said...

மிக..மிக...அழகாக இளவயது உணர்வுகளை பகிர்ந்திருக்கிறீர்கள்... ஒவ்வொருவருக்குள்ளும் இதுபோன்ற நினைவுகள் அவ்வப்போது எழுந்து நடமாடிக்கொண்டே இருக்கும்...சாகும்வரையும்....