15.2.10

சுவர் இல்லாத சமுத்திர வீடாக,வரப்புகளே இல்லாத பெரும் வயலாக....

கேரளா மாநில கள்ளிக்கோட்டை மாநாட்டுக்குத்தான் முதன்முதலாகப் போனேன்.அப்போது கூட மாது என்கூடவரவில்லை எனக்கும் அவனுக்கும் அப்போது அறிமுகமில்லை.சாத்தூரிலிருந்து மூன்று வேன்களில் போனோம்.
அப்போதுகூட இதே போல ஒரு உஷ்ணமான சூழல்தான் இருந்தது. ஆம் அந்த போராட்டங்கலின் மூலமாக பாண்டியன் கிராம அவங்கி ஊழியர் சங்கம் மெல்ல மெல்ல எல்லைகள் தாண்டிப்பிரபலமானது.  இந்த வங்கியில் அப்போது வேலைபார்த்த எல்லோரும் முதல் தலைமுறையாக அரசுப்பணிக்கு வந்தவர்கள்.பெரும்பாலும் அடித்தட்டிலிருந்து வந்தவர்கள்.அவர்களிடம் தழல் வீரம் குறையாத கோபம் கனன்று கொண்டிருந்த காலம் அது.சூழ்ச்சி அரசியல் ஏதும் அறிமுகமாகத காலமுமாகவும் அது இருந்தது. அது எவ்வளவு பெரிய கொடுப்பினை. அதனாலேதான் நாங்கள் வங்கி அரங்கில் நினைத்துப் பார்க்கமுடியாத,44 நாள் வெலை நிறுத்தம் எனும் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கினோம். அப்போது அலுவலர் ஊழியர் எனும் பேதமிலா ஒரே சங்கமாக இருந்தோம். போராட்ட குரலெடுத்துப்பாடும் பா.கிருஷ்ணகுமார் என்கிற மகுடிக்காரனின் தலைமை இருந்தது. ஆறடி உயரமும்,
வசீகரிக்கிற குரலும்,தோளில் லாவகமாகப் புரளும் கைகளும்,எல்லாம் ஒருங்கிணைந்த தோழமையும் அவருக்கென அளவெடுத்து தைத்தது போல அமைந்தவை.

ஒரு காங்கிரஸ் குடும்பத்தின் பேரன்,ஒரு நிலச்சுவான்தார்,ஒருகவிஞன், ஆளுங்கட்சிக்காரன்,ஒரு தீவிர கம்யூனிஸ்ட்,ஒரு திமுக மொழிப்பற்றாளன்,ஒரு வலது கம்யூனிஸ்ட் எல்லோரையும் இணைக்கிற சரடும்,அதை இழுத்து கரைசேர்க்கிற வல்லமையுங்கொண்ட மனிதனாக பா.கிருஷ்ணகுமார் அந்தச்சங்கத்தை வழிநடத்தினார்.அவரையும் வழிநடத்த  ஒரு இசம் இருந்தது அப்போது யாருக்கும் தெரியாது.சினிமாக்கவிஞர் வைரமுத்து சொன்னது போலல்ல, நமுத்துக்கிடந்த லௌகீக வாழ்க்கையிலிருந்து உருவி வெளியிலெடுத்து எங்களை உஷ்ணக்காரர்களாக்கியது தோழர் பீ.கே கிழித்துப்போட்ட சில தீக்குச்சிகள்.அது பிழைக்கத்தெரியாதவர்கள் என்கிற இன்னொரு பட்டத்தையும் தூக்கி வைத்தது.

நாங்கள் தொழிற்சங்கவாதிகளாக மாறி இதோ ஒரு கால் நூற்றாண்டுகள் கடந்துபோய்விட்டது.நூற்றுக்கணக்கான செயற்குழுக்கூட்டங்கள்,பல போராட்டங்கள்,பேரணிகள்,வேலைநிறுத்தங்கள் என ஓடிக்கொண்டே இருக்கிற காலங்களை உற்சாகப்படுத்துகிற தருணாமாக இந்த மாநாடுகள்.''இலைகள் பிண்ணி இணைவதனால் ஏற்ற சேலை கிடைக்குது,வண்ணங்களின் கூட்டுறவால் வானவில் கண்பறிக்கு 'தெனும் பாடலின் சாறுகிடைக்கிற மாநாடுகள்.
காம்பவுண்ட் சுவர் இல்லாத சமுத்திர வீடாக,வரப்புகளே இல்லாத பெரும் வயலாக நிறைந்துகிடக்கும் தோழமையின் ருசி பருகும் நாட்கள் அந்த மாநாடுகள்.

எத்தனையோ அகில இந்திய மாநாடுகள் நடந்தபோதும் இயக்க ரீதியாகவும்,உணர்வுரீதியாகவும் ஒரு பெரிய மைல்கல்லாக விளங்குவது கட்டாக் மநாடுதான். இந்தியாவின் தென்கோடியிலிருந்து 48 பேர் கல்ந்துகொண்டோ ம்.எங்கள் ஓவியங்கள் அந்த மாநாடு முழுக்க பேசுபொருளானது.அப்போதுதான் 9 நாள் வேலை நிறுத்தம் நடத்தி வெற்றியோடு போனோம். இன்னும் சொல்ல நிறைய்ய இருக்கிறது. அதைவிட அழுத்தமானது  கட்டாக் நகர வீதியில் தேசம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஆயிரக் கணக்கான தோழர்களின் பேரணியில்,இன்குலாப்,வொர்கெர்ஸ் யுனைட்டி, ஒக்கிலோ பாரதீய கிராமினா பேங்க் கர்மாச்சாரி சங்க்,எனும் கோஷங்களோடு கடந்து
போகையில் அவரவர் அவரவர் மொழியில் கோஷம் போடுகிற திருப்பம் வந்தது. மஹா கவி பாரதியின் பாடலைக் கோஷமாக்க வேண்டுமென மாதுவிடமும் கிருஷ்ணகுமாரிடமும் கேட்டேன். ஆஹா அதை நீயே போடு என்றார்கள்.

இப்படித்தான் ஒரு கவிதையை,ஒரு சிறுகதையை,சின்னச்சின்ன வேலைகளை அங்கீகரித்துப் பாராட்டுகிற மிகப்பெரும் பலம் மாதுவிடமும்,பீகேவிடமும் உண்டு.அது அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல அந்த இயக்கத்துக்கும் உறுப்பினர்களுக்கும் கிடைத்த பேறு. நான் கோஷம் போட்டேன் ஒட்டுமொத்த பேரணியையும் திரும்பிப்பார்க்கவைத்த பாடலாகியது அது.மராத்தி, பஞ்சாபி, குஜாரத்தி எனும் வெவ்வேறு மாநிலத் தோழர்கள் சூழ்ந்து கொண்டு எங்களோடு அச்சமில்லை,அச்சமில்லை,அச்சமென்பதில்லையே என்று இணைந்து கோஷமிட்டார்கள்.பசி,வறுமை,அடிமைத்தனம்,உழைப்பு எல்லாவற்றிற்கும் உலகம் முழுக்க இருக்கும் ஒரே மொழியாக,ஒரே இசையாக ஒன்றுசேர்ந்து ஒலித்தது உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை,அச்சமில்லையென்று.

சங்கச் சுற்றறிக்கையை,மாநாட்டு பேச்சை,எங்கள் போராட்டங்களை,அதன் வலிகளை இலக்கியமாக்கினோம் எதிர்ப்புகளுக்கிடையில். எங்களது அரட்டைகளை அர்த்தமுள்ளதாக்கினோம்.எல்லோருக்கும் பிடித்துப் போகிற
நிறமாகச் சிகப்பு நிறத்தை மாற்றும் அணில் முயற்சியைக் கையிலெடுத்தோம்.அகில இந்திய மாநாடுகளின் பயணங்களை கலகலப்பாக்க பாடுவதும், ஆடுவதும் பரஸ்பரம் உணவு, தண்ணீரைப் பறிமாறுவதுமான சந்தோசங்களை அந்த பெட்டி முழுக்கப் பரவவிடுவோம்.எப்படியாவது ஒரு ராணுவவீரர் சிக்கிவிடுவார் பிறகென்ன உற்சாகம் கரைபுரளும்.இடையில் கடந்துப்போகும் நிலம்,ஆறுகள், மனிதர்கள், பாஷைகள்,விறைப்போடு கவனிக்கவரும் ஆயுதமேந்திய காவலாளிகள்,வியாபாரிகள்,பிழைப்பேந்தி வருவோர் எல்லோருக்குள்ளும் லயம் மாறாமல் ஜிகுஜிகுவெனும் இசையும் எங்கள் ஸ்நேகமும் கலந்திருக்கும்.

இந்த இருபத்தைந்து வருடப் பயணத்தில் யாரோடும் சில்லறைச்சண்டை போட்டதில்லை என்பது இப்போது வந்து
எழுதச் சொல்லுகிற நினைவாகிறது.இடமிருந்தால் உட்காரவைப்போம் இல்லாவிட்டாலும் பகிர்ந்துகொள்வோம்,
ரயிலிலும் வாழ்விலும்.இந்த நினைவுகளோடே எங்கள் அகில இந்திய மாநாட்டுக்கான பயணம் இன்று தொடங்குக்கிறது.சென்ற கயா மாநாட்டில் மாது வந்தான், நாங்கள் இயக்கிய 'இரவுகள் உடையும் ஆவணப்படம்' திரையிடப்பட்டது,என்பது போன்றவை இல்லாத ஒரு பயணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு உச்சச்தாயியில் ஒலிக்கும் அவனது சுனாமிச்சிரிப்பைக் கேட்டகமுடியாது. இரண்டு வாரங்களுக்கு தொலைபேசி அழைப்பையும்,சில அன்புக் கட்டளைகளையும் வைத்துக்கொண்டு அவள் காத்திருப்பாள்.இரண்டுவாரங்கள் வலை நண்பர்களின்
எழுத்துக்களைப் படிக்க இயலாத இழப்பும் உடன் சேர்கிறது.

எனினும் வடகரைவேலனுக்குப் பிறகு இரண்டாவதாக ஒரு வலை நண்பரை நேரில் பார்க்கப்போகிறேன்.
நாக்பூரில் இருக்கும் முதுபெரும் தோழர் எழுத்தாளர் காஸ்யபன்  செவ்வணக்கம் சொல்ல ரயில் நிலையம்
வருகிறார்.எனினும் பயணம் எல்லாவற்றையும் சரிசெய்யும் புதிய அனுபவங்களைக் கொண்டு வந்துசேர்க்கும்.

அறிவினை விரிவுசெய்,
அகண்டமாக்கு,
விசாலப் பார்வையால்
விழுங்கு மக்களை,
அணைந்துகொள்,
மானிடசமுத்திரம்
நானென்று கூவு.

19 comments:

na.jothi said...

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை,அச்சமில்லையே

எப்பொழுது கேட்டாலும் உடல் சிலிர்க்கின்ற வரிகள்

மாநாடு சிறப்புற வாழ்த்துக்கள் அண்ணா

க.பாலாசி said...

//ஒரே இசையாக ஒன்றுசேர்ந்து ஒலித்தது உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை,அச்சமில்லையென்று.//

நினைத்துப்பார்க்கும்போதே மெய்சிலிர்க்கிறது....அந்த உணர்ச்சிப்பொங்கலை கற்பனைக்கப்பால் உங்களின் எழுத்தினூடே வரைந்துப்பார்க்கிறேன்...பிரமிப்பே தெரிகிறது...

இந்தப்பயணமும் இனிமையாய் அமையட்டும்....

அன்புடன் அருணா said...

/எனினும் பயணம் எல்லாவற்றையும் சரிசெய்யும் புதிய அனுபவங்களைக் கொண்டு வந்துசேர்க்கும்/
பயனங்கள் எப்போதும் புது அனுபவங்களையே கொண்டு வந்து சேர்க்கும்....இப்போதும் சேர்க்கும்!

சந்தனமுல்லை said...

ஒரு கணம் கண்முன் அந்த ஊர்வலத்தை கண்டாற் போலிருந்தது. மெய் சிலிர்த்தது. இந்த வருடமும் இனிய பயணமும் நினைவுகளும் வாய்க்கட்டும். /இடமிருந்தால் உட்காரவைப்போம் இல்லாவிட்டாலும் பகிர்ந்துகொள்வோம்,/ சக மனிதரிடம் நேசம் பகிரும் தங்கள் முகம் இதில் தெரிகிறது. வாழ்த்துகள் அண்ணா...

உயிரோடை said...

உண‌ர்வுபூர்வ‌மான‌ ப‌கிர்வு

சுந்தரா said...

பயணம் இனியதாக அமையட்டும் அண்ணா!

Deepa said...

//சங்கச் சுற்றறிக்கையை,மாநாட்டு பேச்சை,எங்கள் போராட்டங்களை,அதன் வலிகளை இலக்கியமாக்கினோம் எதிர்ப்புகளுக்கிடையில். எங்களது அரட்டைகளை அர்த்தமுள்ளதாக்கினோம்.எல்லோருக்கும் பிடித்துப் போகிற
நிறமாகச் சிகப்பு நிறத்தை மாற்றும் அணில் முயற்சியைக் கையிலெடுத்தோம்.//உங்களை, மாது அங்கிளை எல்லாம் நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது அங்கிள்.

//.எப்படியாவது ஒரு ராணுவவீரர் சிக்கிவிடுவார் பிறகென்ன உற்சாகம் கரைபுரளும்//
இந்த‌ இடம் ஒரு ஜெர்க் தந்து வாய் விட்டுச் சிரிக்க வைத்தது! :))

//அறிவினை விரிவுசெய்,
அகண்டமாக்கு,
விசாலப் பார்வையால்
விழுங்கு மக்களை,
அணைந்துகொள்,
மானிடசமுத்திரம்
நானென்று கூவு. //
ஆஹா! என‌க்கு மிக‌வும் பிடித்த வ‌ரிக‌ள் இவை.

உங்க‌ள் ப‌ய‌ண‌ம் இனிதே அமைய‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்.

குப்பன்.யாஹூ said...

போராட்டங்களும் ஊர்வலங்களும் சிறக்க வாழ்த்துக்கள்.

ஆனால் என்று கம்ம்யுனிச கட்சிகள் பாரதிய ஜனதாவுடனும் (வி பி சிங்க் காலத்தில் என்று நினைக்கிறேன்) , காங்கிரசுடனும், அதிமுக வுடனும் கூட்டணி வைத்ததோ அன்றே கம்ம்யுனிச கட்சிகள், தொழிற் சங்க இயக்கங்கள் மீது என் போன்ற சாமனியனுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது.

அதுவும் சில தொழிற் சங்கங்கள் ஊழியர் நியமனத்திற்கு கூலி (லஞ்சம்) வாங்க தொடங்கியதும் (உதாரணம் பெரம்பூர் ரயில்வே, மதுரா கொத்ஸ் , ஸ்பிக் ), தொழிற் சங்கங்கள் இளைஞர்களை விட்டு வெகு தூரம் போய் விட்டன.

ஒரு கோணத்தில் பார்த்தால், இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட், peராட், எச் சி எல், google , Hyundai, ICICI , HDFC banks போன்ற நிறுவனங்களின் வெற்றிக்கு காரணம் கூட தொழிற் சங்கங்கள் இல்லாமல் இருப்பதாக கூட இருக்கலாம்.

தொழிற் சங்கமே இல்லாத நிறுவனங்களான பேராட் சிஸ்டமே (Perot systems) , வேலை செய்வதற்கு மிகவும் மகிழ்ச்சியான நிறுவனம் என்ற விருது பெற்று உள்ளது.
என்னிடம் ஒரு துணை வேந்தர் சொன்ன கருத்து இது- தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் வெற்றிக்கு கூட அங்கு தொழிற் சங்கங்களும், ஆசிரியர் கூட்டமைப்பு போராட்டங்களும் இல்லாமல் இருப்பதே.

pavithrabalu said...

உயிரோட்டமான, உணர்வு பூர்வமாக தொழிலாளர்கள் / ஊழியர்கள் நலனுக்காக போராடக்கூடிய பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன.. நேரடியாக நிர்வாகத்தின் கோரமான தாக்குதல்களை எதிர்கொண்டவர்களுக்கு தான் தொழிற்சங்கம் எத்தனை தேவையானது என்பது புரியும்...
டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து டீ குடிக்கும் வரை அரசியல் பேசுபவர்களுக்கு தொழிற்சங்கத்தின் தேவை புரியாது...

தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் எத்தனை கொடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பதை உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும்...

சங்கம் எத்தனையோ அப்பாவி தொழிலாளிகளின் குடும்பங்களை வாழ வைத்துள்ளது..

survival of the fittest நம்பிக்கை உள்ளவர்கள் தொழிற்சங்க உணர்வை உள்வாங்க முடியாது

Unknown said...

Saw u r write up.My eyes became wet. Iremember a hindi couplet.It is about the flowers pleading with the gardener.Oh! gardener, u r colecting us.Make agarland of us and adorne the neck of lord Siva.But we wanted to lie on the thorny and bushy path of the strugling working people so that the thorn and bushes will not hurt them. we are not happy on the neck of lord Siva.Gardner! pl allow us to lie on the path.Comrade
this withered flower came on the path of Kaamaraj,Aunto and others
to cheer u.LALL SALAM...Kashyapan.

☼ வெயிலான் said...

// வடகரைவேலனுக்குப் பிறகு இரண்டாவதாக ஒரு வலை நண்பரை //

நம்ம சந்திப்பை / என்னைப் பார்த்ததை மறந்திட்டீங்களாண்ணே?

veligalukkuappaal said...

காமராஜின் நினைவலைகளுக்கு மூத்த தோழர் காஷ்யபனின் பின்னூட்டம் அற்புதம். சிவபெருமானிடம் மலர்களின் வேண்டுதல் அர்த்தமுள்ளது... இந்த நேரத்தில் எனக்கு தோன்றுவது இதுதான்.. கடவுள் இல்லை என்று கூறும் கடவுள் மறுப்பாளர்கள் வழிபாட்டுத்தலங்களை இடித்ததாகவோ கடவுளரை இழிவுபடுத்தியதாகவோ நான் படித்ததில்லை... அவர்கள் வேலையும் அதுவல்ல. அவர்கள் மனிதர்களை நம்புகின்றார்கள், சமூகத்தை நம்புகின்றார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து நாடெங்கிலும் ஒரு ரத்த ஆற்றை ஓடச்செயதவர்கள் தங்களை அன்பே உருவான கடவுளை வழிபடுபவர்கள் என்று கூறிக்கொள்வதுதான் வேடிக்கை! தோழர் காஷ்யபன், நீங்கள் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்று வந்தபின் எழுதியது இப்போதும் நினைவில் உள்ளது. "ராமனுக்காக நாடெங்கிலும் கலவரத்தை உருவாக்குபவர்களின் அலுவலகத்தில் ராமனின் படம் ஏதும் இல்லையே" என்று நீங்கள் வினவ, "அன்பே உருவான ராமன் இங்கே எங்களுக்கு தேவை இல்லை" என்று அங்கே இருந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கூறியதை நீங்கள் பதிவு செய்திருந்தீர்கள். தோழர் காஷ்யபன், நீங்கள் உதிர்ந்த மலரல்ல, என்றும் நிழல் தரும் மரமாய், எம் போன்ற, காமராஜ் போன்றவர்கள் ஆதரவாய் உரிமையாய் வந்து இளைப்பாறி உற்சாகம் பெறும் விருட்சமாய் உயர்ந்து நிற்கின்றீர்கள்... அனுபவச் சுரங்கமாய் அடக்கத்துடன் நிற்கின்றீர்கள்... வாழ்க நலமுடன்.
இக்பால்

VijayaRaj J.P said...

நல்ல அனுபவங்களுடன் திரும்பி
வாருங்கள்

வாழ்த்துக்கள்

Unknown said...

International Labour organisation(ILO)is there under U.N.Indian Labour conference(ILC) is there by GOI.Management,governament,and lobour combined tripartite conclave is there.The latest manage ment concept is a responsible Trade Union is amust for corporate wellbeing....the Melanmai Alosakar Sri.Kuppan Yahoo it seems will have to learn more...kashyapan.

ராம்ஜி_யாஹூ said...

Kaashyab-

My question is why labour unions can not bring the following:

1.a happy work environment
2. low labour turnover

Another question is why can not labour union take place in TCS, Infosys, Cognizant, Accenture, HDFC Bank & ICICI Bank. (95% of the staff also do not want to form a labour union there, why it is so?).

ராம்ஜி_யாஹூ said...

Kashyab- even let me go further-

why SFI, DYFI can not enter into (can not get the attention of students) the colleges like SRM, Jappiyar, Prince Tangavel engineering, medical colleges.

Unknown said...

To kuppan Yahoo,Why China crossed Macmohan line? ther canot be a one word answer for this.A pwd Lasker who was promoted as a surveyar cannot decide the boundry between two grear countries and civilisation. the bloddy Tibetian lamas have not accepted that' Shiang ke shick has not accepted that leave alonePRC> Ican talk to u and convince u on DYFI,SFI and TUs.Dear I am a native of Nellai.Iam planning to go over.If u give me u r address i will try to meet U.Fine comrade..kashyapan.

காமராஜ் said...

நண்பர்களுக்கு வணக்கம்.

கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை சுயபுராணம் சொல்லி விட்டேன். இருந்தும் இத்தனைபேர் கருத்துச்சொன்னது எனக்கு
பேருபகாரம்.
அவை எல்லாம் அன்பில் கோர்த்துவைத்த ஆபரணம்.

முதல்முறையாக வந்த எங்கள் முன்னத்தி ஏர் தோழர் காஸ்யபனுக்கு அன்பும் வணக்கமும்.

வெயிலான் ஒரு ப்ளாக்கர் மட்டுமல்ல அதுக்கும் மேல.

வழக்கம் போல எனக்கு அன்புகாட்டும் சகோதரிகள் எல்லோருக்கும் திரும்பத் திரும்ப நன்றியே சொல்வேன்.,

☼ வெயிலான் said...

// வெயிலான் ஒரு ப்ளாக்கர் மட்டுமல்ல அதுக்கும் மேல //

:)