அவர் இந்த தமிழ் மக்களின் நெஞ்சத்தில் கூடு கட்டினார்.
அப்புறம் அந்த மக்கள் அவருக்கு கோயில் கட்டினார்கள்.
கொஞ்சகாலம் கழித்து சுந்தர்சியைக் கட்டிக்கொண்டார்.
இப்படியான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஓடுபாதை நடிகைகளுக்கென போடப்பட்டிருக்கிறது.அதன் வழக்கமான தடமாக தொலைக்காட்சித் தொடர்கள் வந்தது. அங்கே கலாச்சாரம் மாறாமல் குடும்ப கௌரவம் குரையாமல் போராடும் பெண் பாத்திரங்கள் அவருக்கு காத்திருந்தது.அப்போது இந்த தமிழகம் தாங்கள் காலங்காலமாய் வடிவமைத்த ஒரு பெண்ணின் விளம்பர சாயலாக அவரை ஏற்றுக்கொண்டது. அவரே மணியம்மை பாத்திரமேற்று நடித்தபோது கொஞ்சம் எதிரும் புதிருமான விமர்சனங்கள் கிளம்பிவந்தது.மதவாதிகள் உஷாரானார்கள்,அதுவரை கண்டுகொள்ளப்படாத பூர்வோத்ரம் பேசப்பட்டது. இந்த நிலையில் கல்யாணத்துக்கு முன்னாள் உறவு வைத்துக்கொள்வது குறித்த அவரது பேட்டி பெருத்த ஊடக கவனத்துக்கு ஆளானது. சமூகம் கட்டியிருந்த பல பிரம்மைகள் உடைந்துபோனதாக நினைத்து அவர்மேல் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதோ அவர் அரசியலுக்கு வந்து விட்டார். இதுவரை அவரைக் காபந்து பண்ணிக்கொண்டிருந்த ஜெயா டீவியிலிருந்து அதன் நேரெதிர் முகாமான கலைஞர் டீவியின் கம்பெனி ஆளாகவும்,திமுக வின் அரசியலின் அடிப்படை உறுப்பினராகவும் உருமாறுகிறார்.கழுதை கெட்டா குட்டிச்சுவரு என்கிற பழமொழியை நானிங்கு உபயோகப் படுத்தப் போவதில்லை.அது கழுதை குறித்தும் அரசியல் குறித்தும் வைத்திருக்கும் என் அறியாமையின் சாயலாக மாறிப்போகும்.
ஒரு தினத்தந்திப் பேப்பரின் தலைப்பைக் கூடப் படிக்கத் தெரியாதவர்களே இங்கு தமிழ் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிக்கிற பாத்திரமேற்று நடிக்கிறார்கள்.அவர்களுக்கு பூசப்படும் உதட்டுச்சாயம்,அரிதாரம்,அரைகுறை ஆடை போலத்தான் தமிழும்.தமிழ் தெரியாததால் நடிக்கவரக் கூடாதென்கிற வாததமல்ல இது.அந்நிய தேசத்திலிருந்து வந்த கான்ஸ்டாண்டி நோபிள்,கார்டுவெல் ஜியு போப் இன்னும் எத்தனையோபேர் இந்தத் தமிழுக்குச் செய்திருக்கிற கொடை பெரிது.ஆனால் நீங்கள் சுதந்திர மற்றும் பொங்கல் தினங்களில் ஒளிபரப்பப்படும் பேட்டிகளைக் கவனியுங்கள்.பெண்கள் விரித்துப்போட்ட தலைமுடி ஒதுக்குவதும்,ஆண்கள் எங்கப்பா அந்தக் காலத்தில் என்று தத்துப்பித்தென்று பேசுவதைத் தவிர்த்து வேறு எதுவும் இருக்காது. நாலு அறிவுக்குமேல் தாண்டி யாரும் வருவதில்லை என்பது தெளிவாகும். திரைப்படத்துக்கும் அதுதான் நோக்கம். யாருக்கும் அறிவு வளரக்கூடாது என்கிற மையக்கதை தான் நூறாண்டுகால இந்திய சினிமாவின் கொள்கை. பெரும்பாலான கதைகள்,நடிக நடிகையர்கள் சினிமாவுக்கென வடிவமைக்கப்பட்டவை அவ்வளவுதான். நாசர்,பிரகாஷ்ராஜ் இன்னும் சொற்ப படங்களை நீங்கள் சுட்டிக்காட்டலாம். அவை விதிவிலக்குகள்.விதிவிலக்குகள் பொதுவிதியாகது எப்போதும்.
குஷ்பூவோ,தமண்ணாவோ,விஜய்யோ,அஜித்தோ அரசியலுக்குள் வருவதில் எந்தவிதமான விமரிசனமும் இல்லை.கடந்த காலத்தில் அரசியலுக்குள் வந்த சினிமாப் பிரபலங்களும் சரி,இப்போது அரசியலுக்குள் புழங்குகிறவர்களும் சரி,இனிவரப்போகிறவர்களையும் சேர்த்துக் கணக்கிலெடுத்தால் பெருவாரியான நடிப்புத் துறை சார்ந்தவர்கள் ஆளுங் கட்சியைக் குறிவைத்தே தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள்.அப்புறம் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் ஆளுங்கட்சியாகிவிடுகிறார்கள். திசைகாட்டும் கருவியைப்போல குண்டிகுப்புற வைத்தாலும் கிழக்குப்பக்கமே காட்டுகிற நூதன அறிவியல் அவர்களுக்குள் பொதிந்து கிடக்கிறது. அந்த அறிவியலுக்கு சமீபத்திய உதாரணம் உயர்திரு.எஸ்வி.சேகர் அவர்கள். 'மறந்து கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு' என்று எழுதி வைத்துவிட்டுப் போன சரித்திரவியலார் 'எரிக் ஹோப்ஸ்வாமின்' எழுத்து காலங்கடந்தும் புதுக்கருக்கு மாறாமல் அப்படியே ஜொலிக்கிறது.இந்த மறதியெனும் புதைசேற்றை மூலதனமாக்கிக்கொண்டு சம்பாதிக்கும் வியாபாரத்தையும் அதை சமர்கொண்டு எதிர்க்கிற தத்துவங்களையும் நாம் அரசியல் என்றே பெயரிடுகிறோம்.
'மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே அது மாறுவதெப்போ தீருவதெப்போ' என்றும் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்றும் சாட்டை சுழட்டிக்கிளம்பிய எம்ஜியாரிலிருந்து 'ஏழை எங்கள் வாழ்வில் இவனே எங்கள் உதயம்' என்று இப்போது பட்டி'தொட்டிகளில் தூள்'கிளப்பிக் கொண்டிருக்கும் விஜய் வரையிலான எல்லா கதாநாயகர்களும் தங்கள் மீது ஒரு புரட்சிச் சாயம் பூசிக்கொள்வதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னாள் முதல்வர் எம்ஜியார் ஜார்ஜ் கோட்டை நாற்காலியில் உட்கார்ந்தவுடன் இந்த நாற்காலியின் முன்னிரண்டு கால்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு சொந்தமானதென்று சொன்னாராம்.அவரே கம்யூனிஸ்ட்டுகள் எந்தக்காலத்திலும் ரெண்டு சீட்டுக்கு மேலே வந்துவிடக் கூடதென்கிற புரட்சிகொள்கையை( hiden agenda வை) சாகிற வரை பாதுகாத்துவந்தார் என்பது செவிவழிச்செய்திகள் அவர் சொன்னதற்கு ஆதரமில்லை,ஆனால் நடைமுறைக்கு என்ன ஆதாரம் வேண்டும்.
கிராமத்தில் பெரும்பாலும் ஒருவருக்கு ரெண்டு ஜதை உடைகள் தான் இருக்கும்.வச்சிக்கிட ஒன்னு,போட்டுக்கிட ஒன்னு.அது இல்லாதவர்களின் கொடுமை.கலையும் இலக்கியமும் காலத்தின் கண்ணாடியென்பதே வாழ்வியலின் தத்துவம்.அப்படிப்பட்ட கண்ணாடி காட்டவேண்டியவற்றை நிஜத்தைத் திரிப்பதும்.கலைஞர்கள் ரெட்டைச்சாயம் பூசிக்கொள்வதும் தான் திரைத்துறையின் சாபக்கேடு.அங்கிருந்து அரிதாரமற்ற நிஜமான மனிதர்களும், உண்மையான மக்கள் தலைவர்களும் வருவதில்லை.இருக்கிற கள்ளச் சொத்துக்களை பாதுகாக்கிற நிப்பந்தத்தில் அவர்கள் திமுகவில் சேர்ந்தாலென்ன,பாமக வில் சேர்ந்தாலென்ன,அமெரிக்காவின் லேபர் பார்ட்டியில் சேர்ந்தாலென்ன ?
22 comments:
மதுரை அமிர்தம் திரை அரங்கில் குஷ்பூ வின் அரு படங்கள் நூறு நாட்கள் ஓடிய போதே, தீப்பொறி ஆறுமுகம் சொன்னார். நாளை ஒரு வேலை ஜெயலிதா போல இவர் கூட முதல் அமைச்சர் ஆகலா, நான் அவரையும் எதிர்த்து மீடிங்கில் பேச வேண்டுமோ என்று.
தீப்பொரியாரின் அரசியல் அனுபவ கூற்று எவ்வளவு உண்மை ஆகிறது இன்று.
அண்ணாதுரை, நாஞ்சிலார், வைகோ வரிசையில் மாநிலங்கள் அவையில் குஷ்பூ வின் திராவிட குரல் ஒலிக்கட்டும்.
சீக்கிரம் வெளுத்துப் போகும் ..
//கள்ளச் சொத்துக்களை பாதுகாக்கிற நிப்பந்தத்தில்//
பாதுகாக்க மட்டுமா.. பெருக்கவும் தானே
:(
இதைவிட இன்றைய அரசியல் நிலையை சிறப்பாக எழுதிவிட முடியாது என்றே எண்ணுகிறேன்...
குட்டிச்சுவர்களை இப்பொழுது கழுதைகள் மட்டும் நாடுவதில்லை...
நல்ல கருத்துள்ள இடுகை...
என்னமோ போங்க.:(
நல்ல பகிர்வு காமராஜ் அண்ணா. ஒழுங்கமைக்கப்பட்ட ஓடுபாதை என்ற பதத்தை மிக ரசித்தேன்.
பட்டுக்கோட்டைப் பாட்டால் பாதி தூரம் கோட்டைக்கு வந்தவர்
வாழவைத்தது, அன்றைய சாராய சக்கரவர்த்திகளையும், தனியார்
பல்கலை கழக விற்பன்னர்களையும், ஸ்டார் ஹோட்டல் முதலாளிகளைத்தானே!
`எங்கள் தங்கம்`, `மக்கள் திலக`முன்னு அவருக்காக் உழைச்சி ஓட்டுப்போட்ட ரிக்சாகாரர்களுக்கும், சேரி, குடிசை மக்களுக்கும் அவர் செய்திருக்க வேண்டியதைச் செய்யவில்லை.
அதிகார துஷ்பிரயேகத்தை வெளிப்படையாய் செய்தவர். (அப்போ,கலைஞர் இலைமறைவு,
காய் மறைவாய்) கட்டாய நிலவிற்பனை /ஆக்கிரமிப்பு(ஆஸ்பத்திரி மற்றும் மூர் மார்கட்)முன்னோடி.இதை 14 வருசம் அனுபவிச்சிட்டும், இன்னும் நம்ம திருந்தாம, ரஜினி, கமல், அஜீத், விஜய், குஷ்பு,எஸ்வீ சேகர், சிம்புன்னு ரசிகர் மன்றமும் கோவிலும் கட்டிக்கிட்டு இருந்தா, அரசியலுக்கு அவர்களைத்தான் ஆரத்தி எடுத்து அழைப்பார்கள். மக்கள் சிந்தனை உதயமூர்த்தி,இலங்கை விசயத்தில் கட்சி செயல்பாடு பிடிக்காமல் கட்சி/பதவியை துறந்த தமிழருவிமணியன் போன்றவர்களா நாட்டுக்குத் தேவை? நாம் எப்போது தவறை சுட்டும் ஆண்மை பெற்று, திரைபிம்பங்களின் நிழல்களின்
நிஜம் காண்கிறோமோ, அப்போதுதான் அரசியலுக்கு இது போன்ற போலி பிரபலங்கள் வராமல்
புலக்கடைப் பக்கம் போவார்கள்.
நல்ல பதிவு.
* சோனியா காந்தி என்னமா தகதகன்னு மின்னுறாங்க? *
* ஜெயலலிதா எவ்ளோ செவப்பா இருக்காங்க! *
பேச்சுக் கவர்ச்சிக் காலம் முடிந்து நிறக் கவர்ச்சி தலையெடுத்துவிட்ட காலம்.
அதிகாரப் போட்டியில் வெற்றிபெற ஒப்பந்த முறையில் குஷ்புவை ப்ராண்ட் அம்பாஸிடராக நியமித்திருக்கலாம்.
எனது அனுமானம் பொய்த்து அரசியலில் நல்ல பெயரெடுக்க குஷ்புவுக்கு என் வாழ்த்துகள்.
சாயங்களில் நிலமல்லவா சேதம்?
அருமை.
//சாயங்களில் நிலமல்லவா சேதம்//
ராஜ நடராஜனின் வார்த்தை அட்சரலட்சம் பெறும்.
ஆகா.. தேசம்..வர்ணா..சிரமம்.. பொன்..மனம்
நீங்கள் திருப்பூர் பக்கமா?
(:
ரோம்பவே அலுத்து கொள்ளதீர்கள்.உங்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி போட்டால் குஷ்பு பிரச்சாரம் செய்வார் சிபிஎம் கட்சிக்கு ஆதரவாக. அப்போது உன் ஆதரவு தேவை இல்லை என்று உங்கள் கட்சி சொல்லுமா
நல்லதொரு பகிர்வு சார்.
உங்கள் கேள்விகளுக்குத்தான் பதிலில்லை.
....திரையிலிருந்து வெளிவரும் சாயங்கள் /
ஒரு பெரிய பட்டியலே போடலாமே. தமிழகத்தின் சாபக்கேடு.
/அது கழுதை குறித்தும் அரசியல் குறித்தும் வைத்திருக்கும் என் அறியாமையின் சாயலாக மாறிப்போகும்./
நச்! ஹா..ஹா..ஹா..!!
//இருக்கிற கள்ளச் சொத்துக்களை பாதுகாக்கிற நிப்பந்தத்தில் அவர்கள் திமுகவில் சேர்ந்தாலென்ன,பாமக வில் சேர்ந்தாலென்ன,அமெரிக்காவின் லேபர் பார்ட்டியில் சேர்ந்தாலென்ன ? //
:)சரியாச் சொன்னீங்க அண்ணா.
என்ன சொல்லி என்ன... எதுவும் மாறப் போவதில்லை!!
:(
எங்க எம்.எல்.சி யைப் பற்றி எழுதுன பதிவு நல்லாத்தான் இருந்துச்சு. - சிவா
Post a Comment