ஊருக்குள் நுழைந்த போது ஆறு ஏழு காவலர் வாகனங்கள், இரண்டு அதிரடிப்படை வாகனங்கள் நின்றிருந்தது. ஊர் மடத்தில், வாகனத்தில் பாதையில் எங்கும் ஆணும் பெண்னுமாக காக்கிச்சட்டைகள் நிறைந்திருந்தது. தெருவுக்குள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரண்டு மூன்று பெண்கள் இன்னும் அதிர்ச்சி மீளாத கண்களோடு உட்கார்ந்திருந்தனர். சென்ற முறை போனபோது கான்க்ரீட் சாலை போடப்பட்ட தெருக்களில் ஆங்காங்கே கம்பு, சோளம், கேழ்வரகுக்கதிர்கள் காயப்போடப்பட்டிருந்தது. இந்த முறை அந்தத் தெருவெங்கும் கற்கள் தாறுமாறாகக் கிடந்தது. பெட்டிக்கடைகள், டீக்கடைகள் எல்லாமே பூட்டிக்கிடந்தது. மருந்துக்கூட ஒரு ஆணைப்பார்க்க முடியவில்லை. பெரும்பாலான வீடுகள் மண் சுவரால் கட்டப்பட்டு, மேல்கூரையாக தகர ஷீட் போடப்பட்டிருந்தன.
தெருவின் ஆரம்பத்தில் அப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குள் நுழைந்த போது இரண்டு பிளாஸ்டிக் குடங்கள், ஒரு தகரப்பெட்டி, ஒரு சின்ன மரப்பெட்டி, ஒரு பழைய புகைப்படச் சட்டம், அவ்வளவுதான் கோழிக்கூட்டைப் போலுள்ள அந்த வீட்டின் மொத்த சொத்து. அவையெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. அடுத்த வீடு அங்கிருந்து ரொம்பத் தள்ளி இருந்தது. அங்கே சாகப்போகிற வயசில் ஒரு பாட்டி நின்று கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் நிலையும் கதவும் சரிந்துகிடக்க வீட்டுக்குள் இரண்டு ஈயச்சட்டிகள் நெளிந்து கிடந்தது. சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஒரு பூனைக்குட்டி கூட இல்லாத அந்த மூதாட்டியின் எலிப்பொந்து போன்ற அந்த வீடு ஒரு தீவிர வாதியின் வீட்டைச் சூரையாடுவதைப் போல சூரையாடப்பட்டிருந்தது. விநோதமாக இருந்தது. அந்த வீடு தாக்கப்பட்டதற்கு என்ன காரணம் இருக்கும் என்று பலகோணத்தில் துருவித் துருவிக் கேட்டதில் எந்த அனுமானத்திற்கும் வரமுடியவில்லை. ஈரம் வீரம் ஏதுமற்ற குரூரம் மட்டுமே மிதமிஞ்சித்தெரிகிறது. பிரதானத்தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் தாக்கப்பட்டிருந்தன. தேடுதல் வேட்டை என்கிற பெயரில் இது போல தாக்குதல் நடந்திருக்கலாம் என்று அது குறித்து விசாரித்த போது சொன்னார்கள். காவல் துறை தெருவுக்குள் வரும்போது எந்த ஒரு ஆணும் இல்லை என்று பதில் சொன்னார்கள்.
உத்தப்புரம் காலணிப்பகுதி, «ங்கு தான் 6.05.2008 அன்று தீண்டாமைச்சுவரின் ஒரு சிறு பகுதி இடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அறுபது வீடுகள் துவம்சப்படுத்தப்பட்டிருந்த பகுதியும் அதுதான். அங்குதான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதன்முதலாகக் கட்டப்பட்ட தலித்துகளின் ஒரு சில சிமிண்ட் வீடுகள் இருக்கின்றன. அங்குதான் கெட்டிப்படுத்தப்பட்ட தீண்டாமை குண்டழுக்கின் மீது கேள்விகளைப் பாய்ச்சுகிற இளைஞர்கள் இருக்கிறார்கள். அங்குதான் ஒரு வீடு விடாமல் காவல் துறையின் உயர்மிராண்டித்தனம் நுட்பமாக இன்னொரு முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.(மிருகங்களும், காட்டுமிராண்டிகளும் நேயம் மிகுந்தவர்கள் அவர்களை அக்கிரமங்களுக்கு உதாரணம் சொல்லுவது சூது நிரம்பிய சிந்தனை). மின்விசிரிகளின் இறக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டுக் கிடக்கிறது. கோíÌ மரக்கதவுகள் அரிவாள்கள் கொண்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. தலைமுறையாய்க் கண்ட சின்னச்சின்னக் கனவுகள் சின்னாபின்னப் படுத்தப்படுக் கிடக்கிறது உத்தப்புரம்.
உத்தப்புரம் இன்று தீண்டாமைச் சுவரால் அறியப்படுகிறது.மேற்குத்தொடர்ச்சி மலை சூழ்ந்த அழகிய நிலப்பரப்புதான். கரும்பும் நெல்லும் விளைகிற வளமான பூமிதான். கலாசாரத்தொன்மை வாய்ந்த மண்ணும் மக்களும் நிறைந்த பூமிதான். எல்லாம் அவரவர் ஜாதிக்குள்ளும் அதிகபட்சம் அவர்களுக்கு இணையான சாதிக்குள்ளும் தான். தலித்துக்கநளைப்பொறுத்த மட்டில் ஏனைய எல்லாரும் மேலிருந்து கீழ்நோக்கித்தான் பார்க்கிறார்கள். அது கிட்டத்தட்ட எல்லா மேல் சாதியினரின் குழந்தைகளுக்கு சேனைத் தண்ணீரோடு சேர்த்துப் புகட்டப்படுகிறது. தமிழகத்தில் பெருவரியானவர்கள் அங்கு நடக்கிற சாதிப்பிரச்சினை அப்பகுதியிலுள்ள கள்ளர்களுக்கும் தலித்துகளுக்கும் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். விபரம் தெரிந்தவர்கள் என்று நம்பப்படுகிறவர்கள், எதோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலம் கொண்டு கொடுத்து சௌஜன்னியமாக இருந்த இரண்டு சாதிகளையும் அரசியல் ஆதாயத்துக்காக தூண்டிவிடுகிறார்கள் என்றொரு மூட நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அவமானங்கள் சகித்துக்கொள்ளப்படும் வரை எல்லாம் சுமூகமாகத்தெரிகிறது.
பள்ளிக்கூடம் விட்டுத்திரும்புகிற போது, நகரப்பேருந்தில், கூட்ட நெரிசலில், கைபட்டுவிட்டதற்காக கட்டி வைத்து அடித்த சமூகம் உத்தப்புரத்தில் அந்தச்செழுமையான வயல் வெளிகளில் செருக்கோடு வளர்ந்து கிடக்கிறது. தன்னையொத்த பள்ளி மாணவனை அண்ணே என்று சொன்னதற்காக வெகுண்டு எழுந்து "" நீ என்ன எங்கப்பனுக்கா பெறந்த என்னப்போயி அண்ணன்னு கூப்புடுற " என்று கட்டி வைத்து அடித்த கதைகள் பழங்கதைகள் அல்ல இதே கண்ணினி யுகத்தில் தான் நடந்துகொண்டிருக்கிறது.
ரணம் கோர்த்த வலிகள் நிறைந்த கதைகள் ஆயிரம் ஆயிரமாய் உத்தப்புரத்து தெருப்புழுதிகளில் கிடக்கிறது. இன்னும் சொல்லப்படாத அவமனச் சரித்திரங்கள் மண்ணின் அடிஆழத்தில் மக்கிப் போய்க்கிடக்கிறது. கானாமல் போன ஆடு, மாடுகளைத் தேடி தெருவுக்குள் நுழைகிற உத்தப்புரத்து தலித் அங்கிருக்கிற நாட்டாமையிடம் அனுமதி கேட்காமல் நுழையமுடியாது. கட்டணக் கழிப்பிடத்துக்குப் போகிற அவசர அனுமதியெல்லாம் அங்கே கிடையாது. அவர் தனது நாட்டாமைப் பெருமையை நிலை நாட்ட கால் மணி அல்லது அரை மணி நேரம் காக்க வைப்பார். அதற்கப்புறம் பூர்வாங்கமாக விசாரணை செய்துவிட்டுத்தான் அனுப்புவார். ஊர்மடத்தில் உட்கார்ந்து கொண்டு கீழ்சாதிக்காரனை விசாரிக்கிற வக்கிரம் எந்த ஊடகம் வழியாகவும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை. அவையெல்லாம் சொல்லில் அடங்காத அவமனங்கள். அதற்கெல்லாம் அடங்கிப்போனப்பிறகும் கூட ஒரு வேளை அனுமதி கிடைக்கவில்லை என்றால் தனது மனைவியே கானாமல் போனாலும் திரும்பித்தான் வர வேண்டும்.
ஊர் எல்லையில் எழுமலை போகிற சாலையின் இடது பக்கத்தில், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில், தலித்துகள் தெருவுக்கு போகிற வழியில் தான் செல்லியாரம்மன் கொழுவிருக்கிறாள். கோவிலுக்கு நாற்பது செண்ட் நிலத்தை விட்டுக்கொடுத்திருக்கிறது அரசு. அதற்கு அருகிலேதான் பேருந்து நிறுத்தம் ஆறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசிக்கிற பகுதிக்கென இன்னமும் பத்துக்கு ஆறு அடியில் ஒரு நிழற்குடை கட்ட முடியாத தெம்மாடியாகிப்போயிருக்கிறது அரசு. இப்டியாப்பட்ட அரசுகள் சேர்ந்து தான் வாலைத் தூக்கிக்கொண்டு வல்லரசாகத் துடிக்கிறது.
கோவிலில் எங்களுக்கும் கும்பிடு பாத்தியதை இருக்கிறது என்று தலித்துகளில் சிலர் சொல்லிக்கொண்டிருந்தாலும். இப்பொழுது உடனடித்தேவை அங்கு ஒரு நிழற்குடை, அதற்குத்தடையாக இருக்கிறது செல்லியரம்மன் கோவில் மதில் சுவர். அந்த மதில் சுவரின் மறைவுக்குள்ளே தான் காலங்காலமாக தலித் பகுதியைச்சேர்ந்த சிறுவர்களும், இளைஞர்களும், ஆண்களும் கட்டிவைத்துச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு வெள்ளையடிக்கிற போது சில இளைஞர்கள் இது பிரச்சினைக்குரிய இடம் இதில் வெள்ளை அடிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதுகூடப் பொறுக்கமுடியாத உயராதிக்க வெறி, ஆயுதங்களோடும், நாட்டுவெடிகுண்டுகளோடும் ஆட்டம்போட்டிருக்கிறது. எதிர்த்து தாக்கியதைத் தாங்கமுடியத காவல்துறை நிர்வாகம் ஆதிக்க வெறியர்களோடு சேர்ந்து உத்தப்புரம் தலித் பகுதிக்குள் நடத்திய உயர்மிராண்டித்தனத்தின் மிகச்சுருக்கம் தான் மேற்சொன்னது.
சுவர் இடிக்கப்பட்டதிலிருந்து புதுப்புது பிரச்சினைகள் உருவாகி இருக்கிறது.திறந்துவிடப்பட்ட பாதைவழியே ஆட்டோ வில் போக்கக்கூடாது,இருசக்கரவாகனத்தில் போகக்கூடாது என்கிற புதிய சட்டங்கள் அமலில் இருக்கிறது.நாடாளுமனற உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் நிதியிலிருந்து தொகை ஒதுக்கி நிழற்குடை அமைக்க பரிந்துரைத்தபோதிலும் இன்னும் அங்கு நிழற்குடை அமைக்க முயற்சிகள் எடுக்கவில்லை. இடிக்கப்பட்டது வெறும் செங்கல்சுவர்தான். தீண்டாமை என்கிற உலகமகா சாபக்கேட்டுச் சுவர் இடிபடாமல் அப்படியே தொடர்கிறது.இது வரை ஏழு எட்டு முறை தாக்குதல் நடத்தியிருக்கிற அரசபயங்கரவாதம் ஒரே ஒருதிசையில் தான் பயனித்திருக்கிறது.தீண்டாமைக்கு எதிராக 26 வகையான சட்டப்பாதுகாப்பு இருக்கிறது.அது புதையுண்டு போன நாகரீகச்சின்னங்கள் போல வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.
இவைகளின் மேல் கேள்வி எழுப்பிய தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தலைவர்களை,அறப்போராட்டம் நடத்திய பொதுமக்களை 12.7.1010 அன்று மதுரையில் தாக்கியிருக்கிறது அரசு.இதைத்தான் நாம் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்
8 comments:
ஒரு பக்கம் பொன்முத்து, மிசா பாண்டியன், டி ஆர் பாலு, ச தங்கவேலு, தமிழரசி என எல்லா சாதியினரும் கட்சி, ஆட்சி மேடைகளில் ஒற்றுமையாக உள்ளனர். இன்னொரு பக்கம் இரு வேறு சாதிகளுக்கு இடையே வேறுபாடு பாகுபாடு.
பிரகாஷ் கரத்தும் தீ ராஜாவும் கோவை செம்மொழி மாநாட்டின் பொழுது முதல்வரை சந்தித்தார்களே அப்போது இதை பற்றி பேசினார்களா.
சாதி தீண்டாமைக்கு எதிரான தங்களது பங்களிப்புகளுக்கு வாழ்த்துக்கள். உங்களது சட்டமன்ற முன்னாள் தலைவர் திருப்பூர் எம்.எல்.ஏ வை நேற்று முன்தினம்தான் கருணாநிதியை பாராட்ட போகிறார் என்பதற்காக நீக்கியதாக அறிந்தேன். இச்செய்தி உண்மையானால் அவரை நீங்கள் சட்டமன்ற தலவைர் பொறுப்பிலிருந்து நீக்கிய அன்றே அல்லவா கட்சியிலிருந்தும் நீக்கி இருக்க வேண்டும்.
ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்கு தவறின் தன்மை பற்றிய பீரியாரிட்டியில் தெளிவு இருப்பது அவசியம்.
எந்த குற்றம் முதன்மையானது (அதாவது கட்சியை விட்டு நீக்குமளவிற்கு) கருணாநிதியை பாராட்டி விழா நடத்துவதா அல்லது 25 இலட்ச ரூபாய் முதலாளிகளின் சார்பில் வசூலித்து தொழிலாளிகளின் எட்டு மணி நேர வேலையை அதிகரிக்க சட்டபூர்வ அங்கீகாரம் கோரி முதல்வரை சந்தித்து கையளித்த்தா...
பெரியார் பிறந்த மண் என்று பெருமைப் பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டில் இன்னும் பல வடிவங்களில் தீண்டாமை நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்க விரும்புகிற அரசாக/ ஆட்சியாக இருந்தால் இப்படிப்பட்ட போராட்டங்கள் நடப்பதற்கு முன்பே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கியிருப்பார்கள். ஆனால் அரசு இயந்திரத்திற்கே தீண்டாமையை முடிவுகட்ட மனதில்லையே.
அரசிடம் ஒரு கோரிக்கை மட்டும் வைக்கிறேன்.
உங்கள் பாடநூலில் உள்ள
“ தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல் “
என்பதை நீக்கிவிடுங்கள்.
தங்களின் கையாலாகா தனத்தை கவனமாக மறைத்துகொள்ளும் அரசுதான் தற்பொழுது உள்ள அரசாங்கம்....!
இதில் விளம்பரங்களுக்கு எப்பொழுதும் குறைகாஹல் இருக்காது....
அவருக்கு ஜீரண கோளாறு காரணமாக அவர் சாப்பிடாமல் இருந்தால் அது உண்ணாவிரதம்...
அந்த உண்ணாவிரதத்திற்கு செவிசாய்த்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்ப்பட்டது என்று ஒரு காமெடியும் நடந்தேறியது...
அதே போலதான் இங்கே சாதி பிரச்சினைகள் ஏதும் இல்லையென்று விளம்பரங்கள் எங்கும்....
நிதர்சனமான நிலையோ இங்கே ரொம்ப கொடூரமானது......
ஓட்டு வங்கியாக மட்டும் அம்மக்கள் இருக்கும்வரை இது போன்ற கொடூரங்கள் தொடர்கதையாக போவதுதான்.....
கிட்டத்தட்ட 25 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகின்ற பிரச்சினை இது.
தமிழக அரசால் மிகச்சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு பிரச்சினையை அரசியல் உறுதி இல்லாத காரணத்தாலும் ஆதிக்க சக்திகளின் வாக்குகளை பெறுவதற்காக
மட்டுமே பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறது. உத்தமபுரமாக திகழும் என தான் சட்டசபையில் பேசியதை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாத இவர் உலகத் தமிழர்களின் தலைவராம். பல புயல்கள் இன்று தன்னிடம் அடங்கிப்
போய் தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல் இலங்கைத்
தமிழர்களை வைத்து அரசியல் செய்கிற போது மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தீண்டாமை குறித்து நடத்துகின்ற இயக்கங்கள் கலைஞருக்கு
நெருஞ்சி முள்ளாய் உறுத்துகிறது. அடக்குமுறை மூலமாக மவுனமாகி விடுவார்கள் என்று மனப்பால் குடிக்கிறார், அடக்குமுறையையும் அராஜகத்தையும் சந்தித்தே வளர்ந்த இயக்கம் இதற்கெல்லாம் சளைக்காது. சில துரோகிகளை தம் வசம்
இழுத்ததன் மூலம் பலவீனப்படுத்தலாம் என்ற எண்ணமும் பலிக்காது. நாளை
சிதம்பரத்தில் நடைபெறவுள்ள நந்தன் பாதை வழியே நடராஜர் ஆலயம் நுழையும் போராட்டம் செங்கொடியின் உறுதியை அவருக்கு மீண்டும் புரியவைக்கும்.
அரசு தரப்பு அறிக்கை பார்த்ததும் குமட்டிக்கொண்டு வந்தது.உங்கள் விவரணை உலுக்கிப் போடுகிறது.இதோ இல்லாத சுதந்திரத்தைக் கொண்டாடப் போகிறோம்.
/தீண்டாமைக்கு எதிராக 26 வகையான சட்டப்பாதுகாப்பு இருக்கிறது.அது புதையுண்டு போன நாகரீகச்சின்னங்கள் போல வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.//
சத்தியமான வார்த்தை.
title and content portays the real scenario. shame on humans.keep writing up.
///அடிமைத்தனம் பொறுத்துக்கொள்ளும் வரை அமைதியாகத்தான் தெரியும்.
///////////
பதிவின் தொடக்கத்தில் தலைப்பில் தெறிக்கிறது வலியின் வீரியம் ஒவ்வொன்றும் வார்த்தைகளாக . உலகத்தின் மனித இனத்தில் மட்டும்தான் இதுபோன்ற கேவலமான செயல்கள் எல்லாம் . மிருகங்களிடம் இருக்கும் சிறந்த பண்பு இந்த ஆறறிவு மனிதனிடம் இல்லாது போனதுதான் மிகவும் வறுத்தம் தரும் ஒன்று . பகிர்வுக்கு நன்றி !
Post a Comment