20.6.11

சிறுநீரகத்தைப் பறிகொடுத்த ஆந்திரப் பெண்களும், வாழ்வைப் பறிகொடுத்த உபி பெண்களும்

                                             ( நன்றி: டெக்கான் கிரானிக்கல்)


இரண்டு நாட்களுக்கும் மேலாக ஏதும் யோசிக்கத் தோன்றாமலே இருண்டு கிடக்கிறது சிந்தனை.வடிவேலுவின் நகைச்சுவையின் ஊடாகக்கூட அவளைப்பற்றியதான விசனம் தொற்றிக் கொண்டுவிடுகிறது.இது என்ன தேசம் இது எதனாலாஅன தேசம் என்கிற சிந்தனை வந்து வந்து குழப்புகிறது.ஆந்திரமாநிலம்  பகுதியில் தங்கள் வறுமையையும் கடன் சுமையையும் விரட்ட சொந்த சிறுநீரகத்தைப் பிடுங்கிக்கொடுத்த பெண்களும். உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு தலித் பெண் முதல்வராக இருந்தும் கூட தங்களின் கற்பைக்காப்பாற்றிக் கொள்ள த்ராணியற்றுச் செத்துப்போன அந்த இரண்டுபேரும் வந்து வந்து அலைக்கழிக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் உள்ள பெண்கள் தங்களின் கடனைத் திருப்பிக் கொடுக்க சிறுநீரகத்தைப் பிடுங்கிக் கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கு 9000 ரூபாய் தருவதாகச் சொல்லி நான்கு நாட்கள் ஆய்வுக்கூடத்தில் அடைத்துவைத்து திருப்பி அனுப்பியிருக்கிறது ஒரு ஆங்கில மருந்துக் கம்பெனி. ஆனால் இதே தேசத்தில் இதே காலத்தில் லஞ்சமாகப் பரிமாறப்பட்ட தொகையின் பூஜ்ஜியங்கள் எழுதுகிற தாளைவிட்டுத் தாண்டி வெளியே போகிறது.நாட்டை விட்டு வெளியில் கிடக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பைக் கேட்டால் தலை சுற்றுகிறது.அந்தக் கறுப்புப் பணத்தை காப்பற்றச் சொல்லிப் போராடும் சன்னியாசியின் சொத்து மதிப்பைக் கேட்டால் பயமாக இருக்கிறது. சாய்பாபவின் அறைக்குள் கிடந்த ரொக்கப்பணமும் நகையும் சாமியார்கள் மேலிருக்கிற கொஞ்சநஞ்ச அனுதாபங்களையும் துடைத்தெறிகிறது. அதை அலுங்காமல் குலுங்காமல் எடுத்துக்கொண்டுபோய் சாய்பாபா அறக்கட்டளைக் கணக்கில் சேர்த்த அரசின் பரிவை நினைத்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அவலங்களில் நமது தேசத்திற்கான அடையாளம் எது என்கிற கேள்வி வந்து பதிலற்றுத் திரும்புகிறது.

கடந்த ஒரு வாரத்தில் உத்திரப்பிரதேசத்தில் ஆறு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.அதில் இரண்டு பெண்கள் வெறும் பதினாறு பதினைந்தே வயதான தலித் சிறுமிகள்.கடைசியாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபெண் ( இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு மணிநேரத்து ஒரு வன்கொடுமையோடு பாலியல்பலாத்காரம் நடைபெறுவதாக அரசப்புள்ளிவிவரமே ஒத்துக் கொள்கிறது. எனவே அது கடைசியாக நடந்த கொடூரமாக இருக்காது ) ஐந்து பேர்களால் தூக்கிக்கொண்டுபோய் கொடுமைப் படுத்தப் பட்டிருக்கிறாள்.தான் கட்டிய மனைவியின் சம்மதமில்லாமல் கூடுவதையே குடும்ப வன்முறை என்று கணக்கிலெடுத்துக்கொள்கிற இந்த யுகத்தில் ஒரு பெண்ணை ஐந்துபேர் தூக்கிக்கொண்டு போக முடிந்தது எந்த தைர்யத்தில்.ஒரே ஒரு தைர்யம் ஆண், அதுவும் செருக்குத் திமிர்படைத்த சாதிய ஆதிக்கம் மண்டிக்கிடக்கும் ஆண் என்கிற தைர்யம்.

காதல் காமம் சிருங்காரம் ஆலிங்கணம் உறவு உடலுறவு இனவிருத்தி ஆசை இச்சை எனப்பட்டியலிட்டு அதைப்பேச பாட எழுத தீராது
காலங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.அதைப்பற்றிப்பேசும் போதும் கேட்கும்போதும் நரம்புகளில் இனிப்பு ரத்தம் ஓடுகிறது. குருவிகள் இலைமறைவில் உட்கார்ந்து கொண்டு அலகுரசிக்கொள்ளும் போது பார்க்கிற நமக்கு கிலேசம் உண்டகிறது.அப்படிப்பட்ட ஒன்றை வல்லூட்டியமாக பறிக்கிற சிந்தனை எங்கிருந்து கிளம்பியிருக்க முடியும்.ஆதிக்கம்,ஆதிக்கமேதான்.

ஆநிறைகவர்தலோடு பெண்களையும் கவர்ந்து கொண்டு போவதே வீரம் என்றிருந்த கற்காலம் தொடங்கி இந்தக்கணினியுகம் வரையில் நலிந்த பெண்களுக்கு பாலியல் பாதுகாப்பு என்பதும் கூட கைக்கெட்டாத ஆடம்பரப் பொருளாகவே  இருக்கிறது. எனக்குத்தெரிந்த வரையில் மிருகங்கள் கூட கூட்டுக் கற்பழிப்பிலும் வன்புணர்ச்சியிலும் ஈடுபடுவதில்லை.தவிரவும் அவைகள் இன்னொரு உயிரை பசிக்குத்தவிர வேறு எதற்காகவும் கொல்லுவதில்லை.கயர்லாஞ்சி கூட்டுப் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சுரேகா போட்மாங்கே அவளது மகள் ப்ரியங்கா போட்மாங்கே இந்த இரண்டு பெயர்கள் இந்தியாவின் கவனத்தைப்பெறாமல் போனது.மராட்டிய மாநிலத்திலும் உபியிலும் மட்டுமே அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டன.அது தவிர்த்த வேறெந்த மாநிலத்திலும் அப்படிச் சம்பவம் பற்றிச் சொல்லப்படவே இல்லை.அதற்கு முந்தைய நிதாரி தொடர் கொலைகளில் கொல்லப்பட்ட பதினைந்து பெண்குழந்தைகள் பற்றிய செய்தியும் பெரிதாக ஊடகங்களின் பரபரப்பை ஈர்க்கமுடியவில்லை. காரணம் ரொம்ப ரொம்பப் பழமையானது.பாதிக்கப்பட்ட உயிர்கள் எல்லாமே விளிம்பு நிலை மக்களின் உயிர்கள்.

நடந்தவைகளைக் குற்றம் என்று ஒப்புக்கொள்ளவே இந்த மேல்ஜாதி இந்தியாவுக்கு மனம் வரவில்லை.மாறாக நடந்த கொலைகளுக்கு புதிய விதிகள் எழுதப்படுகிறது அவை மநுவின் ஆங்காரம் அடங்கிய தடித்த பக்கங்களில் பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்படுகின்றன.
கயர்லாஞ்சி சம்பவத்தைக் கூட்டுப்பாலியல் பலாத்காரம், மற்றும் வன்கொடுமை எனச்சொல்லுவதற்குப் பதிலாக நடத்தை கெட்ட குடும்பத்துக்கு பஞ்சாயத்து கொடுத்த தண்டனை என்று ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டது.அதே போல உயர்சாதிப் பெண்ணைக்  கல்யாணம் செய்தவன் படுகொலை செய்யப்பட்டான் அது கருணைக்கொலை என்கிற சொல்லால் பூசிமெழுகப்பட்டது.

ஆக எதவதொரு வழியில் எங்காவது தவறு நடந்தால் அதற்குப் பின்னாடி ஆதிக்கம் தனது நாக்கைத் துருத்திக்கொண்டுதான் நியாயம் பேசுகிறது. ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஏதாவதுநேர்ந்தால் உடனே ஆகாயவிமானத்தில் ஏறி அங்குபோய் இறங்கத்தயாராய் இருக்கிறது வெளியுறவுத்துறை. பூஜா பேடியை தரக்குறைவாகப் பேசியதற்காக ஒட்டுமொத்த ஊடகமும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. இப்படியாகத் தராசின் ஒருபக்கம்தான் எப்போதும் இழுத்துக்கொண்டே இருக்கிறது.

மீதமுள்ள இன்னொரு தட்டில் கணம் சேர்க்கும் நியாயங்கள் கிடைக்கவே கிடைக்காதோ என்கிற சலிப்பும் இது யாருடைய தேசம் என்கிற கேள்வியும் துளிர்த்துக்கொண்டே இருக்கிறது. அவ்வப்போது எழும் சின்னசின்னக் கண்டனக் குரல்களில் இந்த கேள்விகள் கருகிப்போக மீண்டும் மீண்டும் எதாவது நிகழும் என்கிற ஒரு தேடல் ஒரு கனவு நீண்டு கொண்டே போகிறது.
ஒரு நிரந்தரமான நம்பிக்கை,எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்க நெடிய பயணம் தேவை.

அதுவரை அதுவரை கொண்டு வாருங்கள்  பாரதி கேட்ட எரிதழலையும் காந்திகேட்ட  பற்களும் நகங்களும், பாட்டாளிவர்க்கம் கேட்ட தெருவில் கிடக்கும் கற்களும்.எனதருமைத் தோழிகளே  இவையெல்லாம் எங்கே போயின ?


8 comments:

ஓலை said...

sariyaana kelvigal.

"ராஜா" said...

Sir arumai. Vilimbu nilai manitharkal elllam intha nattil manitharkalakave parkapaduvathillai. Oottu urimai irukkum mirukangal endra alavileye avarkal mathikkapadukirarkal. Endru vidiyum nam nadu?

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வேதனையாக இருக்கிறது. தொலைகாட்சி செய்திகளை கேட்டாலோ , செய்தித்தாட்களை படித்தாலோ இருதய நோய் வந்து விடும்போல் இருக்கிறது. அவ்வளவும் மனசை உலுக்க வைக்கும் செய்திகள். நாம் மனிதர்களிடையே இருக்கிறோமா அல்லது காட்டு மிராண்டிகளிடையே இருக்கிறோமா என தெரியவில்லை.
Is Government functioning or dead?

நிலாமகள் said...

நமது தேசத்திற்கான அடையாளம் எது ?

த‌ன‌க்கான‌ அடையாள‌மாக‌ க‌ல்வியையும் க‌லாச்சார‌த்தையும் முக்கிய‌மாக‌ ம‌னித‌த்தையும் ஒவ்வொருவ‌ரும் கைக்கொள்ளும் த‌ருண‌ம் வாய்த்தால்... வெட்கித் த‌லைகுனியாம‌ல் இத‌ற்கான‌ ப‌தில் தேட‌லாம்.

ப‌திவின் க‌ன‌மும் எழுதிய‌ ம‌ன‌தின் க‌ன‌மும் அமிழ்த்துகிற‌து துய‌ர‌த்தின் பெருஞ்சேற்றில்.

சக்தி கல்வி மையம் said...

வழிகள் நிறைந்த பதிவு..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எழுத்தின் கொதிநிலை கடந்த பதிவு காமராஜ்.

அடிக்கடி இப்படியான பதிவுகளை எழுதவைத்து காமராஜின் அழகியல் ததும்பும் பதிவுகளை இழக்க நேருகிறது.

எந்த ஒரு கேள்விக்கும் பதில் இல்லை என்பதிலிருந்து எத்தனை போலியான சமூகத்தில் காலம் தள்ளுகிறோம் என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

vijayan said...

நம் ஏழை திரௌபதிகளின் மானம் மற்றும் உயிரை காக்க எந்த கிருஷ்ணனும் {நான் உட்பட} இல்லை.எல்லோரும் ஆண்மையற்று ,அறக்கோபம் இல்லாத பெட்டைகளாய் வீணுக்கு உயிர் வாழ்கிறோம்.

hariharan said...

தீடீரென்று முழைத்த ‘லோக்பால்’ மசோதாவுக்காக திரள்கிற மத்தியதர மனிதர்கள், பேசுகின்ற ஊடகங்கள் சமூகத்தில் அடித்தட்டு மக்கள் இன்னல்களைக் கண்டுகொள்வதில்லை. தினந்தோரும் லோக்பால் பற்ரிய செய்தி இல்லாத நாளே இல்லை. எதை மறைப்பதற்காக இந்த செய்திகள் முந்துகிறதோ தெரியவில்லை.