11.12.11

பாரதி எனக்கு நினைவுகள் கொண்டுவரும் தூதுவன்.


செய்யுள்களை மதிப்பெண்களுக்காக மணப்பாடம் செய்த பள்ளி நாட்களில் அந்தப்பாரதியின் மீசையும்,முண்டாசும் கொடூரமாய்த்தெரியும்.எங்கள் பள்ளிகூடத்து பெரிய சார்.( தலைம ஆசிரியர் திரு சுப்பையாபிள்ளை )  அறிமுகப் படுத்திய தேசியத் தலைவர்களில் சிவாஜிக்கும் திப்புசுல்தானுக்கும் வித்தியாசம் தெரியாது  ரெண்டு பேரும் தலைநிறைய்யத் துணிசுற்றி வைத்திருப்பார்கள்.அவர்களைப் பற்றிச் சொல்லிய கதைகளை குலசாமி  கதை களைக் கேட்பது போலக்கேட்டோம்.அப்போதெல்லாம் தமிழ் இலக்கியம் என்றால் மனப்பாடம்  செய்யுள் மட்டும்தானே.

சுதந்திரத்தினத்துக்கு கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பார்களே அன்று கொடியேற்றியவுடன் தாயின் மணீக்கொடி பாரீர் என்கிற பாட்டைப் படிக்க தேர்வுசெய்யப்பட்ட போது நடுக்கமும்,சந்தோஷமும் குழைந்து கிடைத்து.எழுதிவைத்து உட்கார்ந்து ரவ்வாப்பகலா மணனம் செய்து ஆகத்து 15ல் அரைகுறையாய்ப்  படித்தாகி விட்டது. அப்போதும்கூட  பாரதியைப்பற்றித் அலாதியாகத் தெரியவில்லை. சுதந்திரத்துக்காகப் போராடினால் கட்டாயம் தலப்பாக் கட்டியிருக்கணும் போல என்று நினைத்துக் கொண்டேன்.அந்த வருடம் தொடக்கம் சுமார் ஐந்து வருடங்களாக எனக்கே சுதந்திரநாளில் கொடிக்குண்டான சவரட்ணைகள் அணைத்தும் செய்கிற வேலைகள் ஒதுக்கப்பட்டது.

ஆயிரவைசிய மேநிலைப்பள்ளியில் எங்கள் தமிழாசிரியர் தணுஷ்கோடி ராமசாமிதான் கண்களை உருட்டி உருட்டி பாரதிபோல ஜாடை செய்து பேசுவார். அவரின் நாடகத்தனமான பேச்சும் செய்கையும் பாரதிமேலன்றி அவர்மேல் பாசம் வரச்செய்தது. அவரது இல்லத்தில் வைத்திருக்கும்தாடியோடும் தடியோடும் நிற்கும் பாரதியின் மேல் ஈர்ப்பு வர ஆரம்பித்தது. என்பத்தி நான்காம் ஆண்டுக்கப்புறம் எங்கள் தோழர் கிருஷ்ணகுமாரோடு அலைந்த போதுதான் பாரதியிமேல் காதல் மலர்ந்தது. கழுதையைக் கட்டிப் பிடித்துக் கொண்டலைந்தார். மீசையை  முறுக்கிக் கொண்டார்,கனகலிங்கத்துக்கு பூணூல் மாட்டினார்,கடன்வாங்கிவந்த அரிசியைத்தூக்கி குருவிகளுக்கு படையல்செய்தார்,கஞ்சாக்குடித்தார்,கண்ணம்மாவின் மேல் பித்துப் பிடித்தலைந்தார்,சென்னைவந்த  காந்திக் கெதிரே கால்மேல் கால்போட்டுக்கொண்டு உட்கார்ந்து ’விளையாட வருகிறாயா’ என்றுகேட்பதுபோல கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா என்றுகேட்டார்,கைதானார்,தப்பியோடி புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார் இப்படியே ஆயிரமாயிரம் தகவல்களைச் சொல்லிக்கொண்டே போவார்.

அப்போதும் கூட பிரம்மிப்பில் பாரதியின்  புத்தகங் களைப் படிக்கவில்லை. ஏன் படிக்கவேண்டும். தோழர் bk சொல்லுகிற தகவல்களைக்  கேட்டுக் கொண்டி ருந்தாலே போதும்.பாரதிமேல் அப்படியொரு குருட்டு  பக்தி யிருந்தது அதனாலே தான் எங்கள் சங்கக் கையெழுத்துப் பத்திரிகைக்கு அக்கினிக்குஞ்சு எனப்  பெயரிட் டோம். எனது முதல் மகனுக்கு கிஷோர் பாரதியெனப் பெயரிட்டோம், ரெண்டாவது பையனுக்கு  சூரியபாரதி யெனப் பெயரிட்டோம். அதன் பிறகு எனது சுற்றத்தார் அணைவரது குழந்தைகளும் பெயரின் பின்னாடி  பாரதி யைச் சேர்த்துக் கொண்டார்கள்.தொண்ணூ றுகளில் தோழர் bk எங்களிடமிருந்து தூரமானார்.மூன்று  இரண்டானது. அப்போதுதான் ஒரு பாரதியின் படைப்புகளடங்கிய புத்தகம் வாங்கினேன்.

ஒரு பொருளும்,இடமும்,சப்தமும்,வாசனையும் அதனதன் இருப்பை மட்டும் உணர்த்துவதில்லை.அந்த  பொருட் களுடனான நினைவுகளையும் கொண்டுவரும். இதோ இந்த பாரதிகவிதைகள் புத்தகத்தைப்  பார்க்கும்  போதெல் லாம் 42 பி எல் எஃப் தெரு நாட்கள் ஓடிவந்து உட்கார்ந்துகொள்ளும். யாராவது ஒருவர்  வரத்தாமத மானாலும் காத்திருந்து மாதுவுடனும் bk யுடனுமாக மூன்றுபேரும் ஒன்றாகச் சாப்பிடுவது,  ஒரேநேரத்துக் குத்தான்  உறங்கப் போவது.அன்றுவாங்கிய பேனாக்கதை முதல் அவளுக்காக அலைந்த கதைகள் வரை  பேசிக் கிடந்தது என நட்பின் உச்சானிக்கொம்பில் இருந்த நாட்கள் அவை. அவற்றயும் சேர்த்து நினைவுகூறக் கிடைத்தது இந்த பாரதி நினைவுநாள்.

5 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தால் தயவு செய்து எனக்கு தகவல் சொல்லுங்கள். உங்களை நேரில் சந்திக்கிறேன். எனது தொலைபேசி எண். 94434 27128 // 04563 262380
நன்றி.

venu's pathivukal said...

நட்பின் நினைவுகள்
எப்போதும் கண்ணீரின் ஈரத்தால் பாதுகாப்பாக இருப்பவை....

தோழமையின் தூரத்தை
நெருக்குவதும் தொலைவாக்குவதும்
சமூகத்தின் சித்து விளையாட்டு!

புதிய தாராளமய உலகில்
மனிதர்கள் ஒற்றை ஒற்றையாகப் பிளக்கப்படுகிறார்கள்
என்று பொருளாதார மேதை
பிரபாத் பட்நாயக் சொல்லிக் கொண்டே இருக்கிறார்
நாம் நிரூபித்துக் கொண்டே கிடக்கிறோம்.

பாரதி
எத்தனையோ அவமதிப்புகளையும், புறக்கணித்தலையும்
ருசிக்க நேர்ந்தவன்-
அவனது காலத்தின்
சோதனைகளை அவனது கவிதை மனம்
தணித்துக் கொடுத்தது -
எழுத்தின் வலு
அவனை காலகாலத்திற்கும் நினைக்க வைத்துவிட்டது.

வாழ்த்துக்கள் தோழா..அருமையான நினைவுகூறலுக்கு


எஸ் வி வேணுகோபாலன்

அன்புடன் அருணா said...

/அவற்றயும் சேர்த்து நினைவுகூறக் கிடைத்தது இந்த பாரதி நினைவுநாள்./
இப்படி ஏதாவது ஒன்றச் சாக்காக வைத்து நட்புகளை நினைத்துக் கொள்ளலாம்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பாரதியின் முண்டாசின் பின்னால் எத்தனை அற்புதமான உன்னதமான நினைவலைகள்? நிறைவான வாசிப்பனுபவம் காமராஜ்.

இரசிகை said...

//கடன்வாங்கிவந்த அரிசியைத்தூக்கி குருவிகளுக்கு படையல்செய்தார்//

//சென்னைவந்த காந்திக் கெதிரே கால்மேல் கால்போட்டுக்கொண்டு உட்கார்ந்து ’விளையாட வருகிறாயா’ என்றுகேட்பதுபோல கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா என்றுகேட்டார்//

ithu irandume yenakkum yeppavum ninaivil irukkum..

nallathoru pathivu..